Latest News

பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே 10 மணிக்கெல்லாம் பிரதமர் மோடி ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்தி சொன்னது மிகப்பெரிய மோசடி! 570 கோடி ரூபாய் எதற்காக வங்கியிலிருந்து மாற்றப்பட்டது? கண்டெய்னர் சீலிடப்பட்டதா?  இந்தியா முழுவதும் புயல் வீசக்கூடிய போராட்டத்தை நடத்தி விளக்கம் கேட்போம்? தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் தி.மு.கழகம் வெற்றி பெற்றுவிடும் என்பதால் தேர்தலையே ரத்து செய்துவிட்டீர்கள்! அயோக்கியத்தனமானஒரு தேர்தல் ஆணையத்தை வைத்துக்கொண்டு தேர்தலை நடத்துவதா? சென்னை மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெறுகிற எழுச்சிமிக்க இந்த மாபெரும் மக்கள் திரளைத் திரட்டி, என்னுடைய 93-வது பிறந்த நாள் விழா - மாபெரும் பொதுக்கூட்டத்தை எழுச்சியோடு நடத்திக்கொண்டிருக்கின்ற மாவட்டக் கழகத்தினுடையச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. அவர்களே, முன்னிலை ஏற்றுள்ள கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே, என்றும் என் இனிய நண்பராக - நான் போற்றும் கழகத்தின் தலைவர்களிலே ஒருவராக விளங்குகின்ற பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் அவர்களே, கழகத்தின் முதன்மைச் செயலாளர் தம்பி துரைமுருகன் அவர்களே, கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி ஆகிய கழக மாமணிகளே, வரவேற்புரையாற்றிய மதன்மோகன் அவர்களே, நன்றியுரை ஆற்ற இருக்கின்ற அன்புதுரை அவர்களே, மேடையிலே வீற்றிருக்கின்ற கழகத்தின் ஆதரவாளர்களே, முன்னோடிகளே, பெரும்திரளாக குழுமி யிருக்கின்ற என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே, இன்று மாலை நேரம் நம்முடைய மகத்தான சொற்பொழிவாளர்களால் பெருமைபெற்றிருக்கிறது. இந்த விழாவிலே என்னை பாராட்டுவதற் காகவும் நான் இன்னும் சில காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துவதற்காகவும், நீங்களெல்லாம் இங்கே குழுமியிருப்பதை பார்க்கும்போது, இந்த நாட்டில் இனியும் இவ்வளவு பிற்போக்குத் தன்மை ஏற்பட்டுள்ளதா, கொண்ட கொள்கைகளையெல்லாம் குழித் தோண்டிப் புதைத்துவிட்டு, இந்த நாட்டுத் தமிழர்கள், இவ்வளவுக்கும் பிறகும் இதை எல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு, இன்னும் நான் நீண்ட காலம் வாழ வேண்டுமா? என்ற கேள்விதான் என்னை துளைத்தெடுக்கிறது. ஆனால் என்னுடைய கெழுதகை நண்பர்கள், தம்பிமார்கள், தங்கைமார்கள், இவர்களெல்லாம் விரும்புகின்ற அந்தக் காலம், நீண்ட காலம் நான் இன்னும் வாழ வேண்டும் என்று விரும்பினால், நீண்ட காலம் வாழ்வதற்கு நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும்? எத்தகைய பணிகளை ஏற்க வேண்டும். அண்ணா சொன்னதைப் போல எப்படி கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு இவைகளை போற்றவேண்டும் என்பனவற்றை தயவு செய்து எண்ணிப்பார்த்து அந்த கடமையும், கண்ணியமும், கட்டுப்பாடும் நம்முடைய கழகத்தை நடத்துவதற்கு உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு, நீங்கள் உறுதுணை யாக இருந்து, கழகத்தை வளர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். கழகம் ஏன் வளர வேண்டும்? இது ஒரு அரசியல் இயக்கமாக மாத்திரம் இருந்திருந்தால் எத்தனை இடங்களை பிடித்தோம்? எவ்வளவு பேர் எம்.எல்.ஏ. க்களாக ஆனோம்? எவ்வளவு பேருக்கு எம்.பி. பதவி கிடைத்தது?என்ற அந்த எண்ணிக்கையோடு நாம் அவைகளை விட்டுவிடலாம். ஆனால் நம்முடைய இயக்கம் தொடங்கப்பட்டது, அந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் எண்ணிக்கையை மாத்திரம் அடிப்படையாக வைத்து அல்ல. நாம் இந்த இயக்கத்தை தந்தை பெரியார் அவர்கள் வழியில், பேரறிஞர் அண்ணா அவர்கள் நெறியில் தொடங்கி ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகாலமாக திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரிலே விளங்கி, இன்றைக்கும், ஏன் எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது (பலத்த கை தட்டல்) என்கின்ற அளவிற்கு வலிமைப் பெற்றிருக்கிறது என்றால், இப்படி வலிமை பெற்ற ஒரு இயக்கத்தை நாம் விட்டுவிடுவோமோ? அல்லது விட்டுவிட்டு வேறொரு இயக்கத்தின் கொள்கைகளைப் பின்பற்றவோ போவதில்லை. அப்படி போனாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. ஏனென்றால் நாம் கம்யூனிஸ்டுகளுடைய இயக்கத்தை, நாம் பொதுவுடமை யாளர்களுடைய இயக்கத்தை, நாம் அத்தகைய சமதர்மவாதிகளுடைய இயக்கத்தை நடத்துவதற்காகத்தான் இந்த இயக்கத்தை தொடங்கினோம். ஏழை - எளிய மக்கள், இங்கே பேசிய நம்முடைய கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் குறிப்பிட்டதைபோல, தி.மு.கழக ஆட்சியிலேதான் கை ரிக்ஷாக்களை ஒழித்து, அதற்கு பதிலாக சைக்கிள் ரிக்ஷாக்களை வழங்கினோம். தி.மு.கழக ஆட்சியிலேதான் கைம்பெண்கள் உருவாவதைத் தடுக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டோம். தி.மு.கழக ஆட்சியிலேதான் பிச்சைக்காரர்களுக்குக் கூட மறுவாழ்வு அளிக்கின்ற அந்தத் திட்டத்தை நிறைவேற்றித் தந்திருக்கிறோம். தி.மு. கழக ஆட்சியலேதான் குடிசைகளையெல்லாம் கோபுரங்களாக ஆக்கினோம். தி.மு.கழக ஆட்சியிலேதான் ஏழை எளியவர்களே இருக்கக் கூடாது . எல்லோரும் சமத்துவம் பெற்ற மக்களாக வாழ வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தோம். தி.மு.கழக ஆட்சியிலேதான் சாதி - மத பேதங்களை ஒழிக்க பாடுபட்டோம் - சட்டங்கள் இயற்றினோம். ஆகவே எந்த பொது நோக்கமானாலும், அவைகளை யெல்லாம் நிறைவேற்ற சாத்தியமாக்கக் கூடிய ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்தது. அதை வீழ்த்த வேண்டுமென்பதற்காக இன்றைக்கு ஏதேதோ சூழ்ச்சிகளைச் செய்கிறார்கள். அவர்களுடைய சூழ்ச்சிகள் எந்த அளவுக்குப் போயிருக்கின்ற என்றால், நான் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகிறேன். உங்களுக்குத் தெரியும். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, இந்தியாவின் பிரதமர் மோடி அவர்களே, காலை சுமார் பத்து மணிக்கெல்லாம், ஜெயலலிதா அம்மை யாருக்கு வாழ்த்துச் செய்தி கொடுக்கிறார் என்றால், இது எவ்வளவு சூது? எவ்வளவு பெரிய மோசடி? டெல்லியிலே உள்ள பிரதமர் மோடி அவர்களாலேயே நடத்தப்பட்டிருக்கிறது என்பதை நான் வெளிப்படையாக, பகிரங்கமாகக் குற்றஞ் சாட்டுகிறேன். இந்தக் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி அவர்களின் பதில் என்ன? இந்தக் குற்றச்சாட்டுக்கு டெல்லியிலே உள்ள மோடி கட்சிக்காரர் களுடைய விளக்கம் என்ன? எப்படி பத்து மணிக்கெல்லாம் முதல் இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, ஜெயலலிதா வின் வெற்றியைத் தெரிந்து கொண்டு வாழ்த்துத் தந்தி கொடுக்க முடிந்தது? அப்படியானால் வாக்குகளை நீங்கள் அதற்கு முன்பே எண்ணிப் பார்த்து விட்டீர்களா? இந்தக் கேள்விக்கு மாத்திரம் அவர்கள் பதில் சொன்னால் போதுமானது. பத்து மணிக்கெல்லாம் அம்மையார் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தந்தி பறக்கிறது டெல்லியிலே இருந்து! அதன் உள் ரகசியம் என்ன? நான் இவர்களிடம் மற்றொன்று கேட்க விரும்புவது - 570 கோடி ரூபாய் - மூன்று கன்டெய்னர்களில் பிடிபட்டது என்று சொல்கிறார்கள். அது யாருடையது என்றால், பதினெட்டு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றப்பட்டது என்று சொன்னார்கள். அவ்வளவு பெரிய தொகை, 570 கோடி ரூபாய் எதற்காக மாற்றப்பட்டது? என்ன பாதுகாப்பு போடப்பட்டது? கன்டெய்னர் சீலிடப்பட்டதா? என்ற இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்கப்பட்டு விட்டதா? இந்தக் கேள்விகளை யெல்லாம் வாங்கி வைத்துக் கொண்டு, அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் இருக்கின்ற மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் அளிக்கப் போகின்ற தீர்ப்பு என்ன? மக்கள் உடனடியாக தீர்ப்பு அளிக்காவிட்டாலும், ஒரு போராட்டம் மூலமாக இந்தியா முழுவதும் புயல் வீசக் கூடிய போராட்டமாக, ஒரு போராட்டத்தை நடத்தி, இதற்கு நாம் விளக்கம் கேட்க விருக்கிறோம். (கைதட்டல்) நிச்சயமாகக் கேட்போம். அதற்கு மத்தியிலே இருக்கின்ற அரசாங்கம், மோடி அரசாங்கம் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும். அப்படி பதில் சொல்லாவிட்டால், அவர்களே இந்தக் குற்றத்தை ஒப்புக் கொண்டவர்களாக ஆகி விடுவார்கள் என்று தான் பொருள். அடுத்து தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல்கள்! இந்த இரண்டு தொகுதி களிலும் முதலில் ஏதோ காரணங்களைச் சொல்லி தேர்தல் சில நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் இப்போது திடீரென்று, அந்த இரண்டு தொகுதி களிலும் தேர்தலே ரத்து செய்யப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள். ஒத்தி வைக்கப்பட்டதற்கும், பிறகு ரத்து செய்யப்பட்டதற்கும் உள்ள வேறுபாடு என்ன? ஒத்தி வைக்கப்படுவதென்றால், குறிப்பிட்ட சில நாட்களில் மறுபடியும் அந்தத் தேர்தல் நடைபெறும், நடத்துவோம் என்று தான் பொருள். இப்போது ஒத்தி வைக்கப்பட்டு விட்டதை ரத்தே செய்து விட்டோம் என்று சொல்வதற்கு காரணம், அந்தத் தேர்தல்கள் நடந்தால் அ.தி.மு.க. மாநிலங்களவை தேர்தலில் நான்கு இடங்களில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து கொண்டுதான், ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல்களை ரத்து செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கிறார்கள். ஆகவே அரசியல் நிபுணர்கள் கணித்துப் பார்த்து உண்மையை உலகத்துக்கு உணர்த்த வேண்டும். அப்படி உணர்த்துகின்ற கடமையை நாங்கள் செய்வதற்காகத் தான், நம்முடைய பேராசிரியர் அவர்கள் இங்கே குறிப்பிட்டதைப் போல, இதைக் கட்டளையாக யாரும் எடுத்துக் கொள்ளாமல், இதை ஒரு அறிவிப்பாக எடுத்துக் கொண்டு, நம்முடைய தோழர்கள், நம்முடைய கிளைக் கழகங்கள், வட்டக் கழகங்கள், நம்முடைய செயல்வீரர்கள் அத்தனை பேரும் ஒன்று கூடி யோசித்து, இந்த இரண்டு தொகுதிகளிலும் ஏன் தேர்தல்களை நடத்தவில்லை என்ற இந்தக் கேள்வியை ஓங்கி ஓங்கி ஒலிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றால், திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று விடும் என்ற அந்தப் பயத்திலே தான் தேர்தலை ஒத்தி வைத்திருக்கிறார்கள். அது மாத்திரமல்ல; அதன் பின்னர் அந்தத் தேர்தல்களை ரத்தே செய்திருக்கிறார்கள். தேர்தல்களை திடீரென்று ரத்து செய்ய இவர்கள் யார்? உண்மை உணராமல் செயல்பட இவர்களுக்கு யார் அந்த அதிகாரத்தைக் கொடுத்தது? கேட்டால் சில தவறுகள் நடைபெற்று விட்டன, சில பேர்வழிகளால் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது, அது எல்லாம் எங்களுக்குத் தெரிந்து விட்டது, எனவே தேர்தல் ஒத்தி வைத்திருக்கிறோம் என்று முதலில் சொன்னார்கள். அதற்குப் பிறகு திடீரென்று அவ்வாறு ஒத்தி வைத்த தேர்தல்களை ரத்து செய்ய இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ஒத்தி வைக்கப்பட்ட தேர்தல்களை ரத்து செய்தவர்களுக்கு புத்தி புகட்டுகின்ற அளவுக்கு நாம் பாடம் கற்பிக்க வேண்டும். அந்தப் பாடம் தான், அந்தத் தேர்தல் களில் நாம் பெறுகின்ற வெற்றியாக இருக்க முடியும். அதற்கான திட்டங்களை அந்தப் பகுதிகளிலே உள்ள தோழர்கள், நம்முடைய செயல்வீரர்கள் இப்போதே யோசித்து, அதற்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இதற்குக் காரணமான தேர்தல் கமிஷனுக்கு நாம் புத்தி கற்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். தேர்தல் கமிஷன் என்றால் ஏதோ புனிதமானது, ஏதோ தர்ம நியாயங் களுக்குக் கட்டுப்பட்டது, அதை யாரும் அசைக்க முடியாது என்றெல்லாம் பேசுகின்றவர்களின் பேச்சுக்கு இப்போது மதிப்பில்லாமல் போய் விட்டது. தேர்தல் கமிஷன்களிலும் ஒரு சிலர் அயோக்கியர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு வேறு எடுத்துக்காட்டுத் தேவையில்லை. தேர்தல் கமிஷனிலே உள்ளவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு எப்படி குந்தகம் செய்யலாம் என்பதை ஒவ்வொரு நாளும் சிந்தித்து, சிந்தித்து அதை நிறைவேற்றியிருக்கிறார்கள். எனவே அவர்களை நம்பி திராவிட முன்னேற்றக் கழகத்திலே உள்ள நாம் ஏமாந்து விடக் கூடாது. நமக்கு நாமே (கைதட்டல்) என்ற அந்த உறுதியோடு நடைபெற இருக்கின்ற அந்தத் தேர்தல்களையும் சந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, அதையும் ஒத்தி வைத்து விட்டால் ஜனநாயகம் என்ன ஆவது, எப்படி சீரழிய இருக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஜனநாயகத்தில் நடைபெறும் சீர்கேடுகளை, ஜனநாயகத்திற்கு ஏற்படுகின்ற உடைசல்களை, ஜனநாயகத்திற்கு விளைகின்ற இத்தகைய குந்தகங்களை, ஜனநாயகத்தில் இப்படி மூடி மறைக்கின்ற இந்தச் செயல்களை தி.மு. கழகத்தை ஒழித்துக் கட்ட வேண்டுமென்ற திரைமறைவு சூழ்ச்சிகளைச் செய்கின்ற தேர்தல் ஆணையத்திற்கு தகுந்த பாடம் நாம் கற்பிக்க வேண்டும். இதைத் தவிர வேறு மார்க்கமில்லை. தேர்தல் ஆணையம் என்பது பெரியார் அவர்கள் அடிக்கடிப் பயன்படுத்துகின்ற தடித்த வார்த்தையிலே சொல்ல வேண்டுமேயானால், """"அயோக்கியதனமானது தேர்தல் ஆணையம்"" என்று திட்டவட்டமாகச் சொல்லலாம். அயோக்கியத்தனமான ஒரு தேர்தல் ஆணையத்தை வைத்துக் கொண்டு தேர்தலை நடத்துகிறார்கள். அந்தத் தேர்தலை எதிர்பாருங்கள் என்று சொல்கிறார்கள். அந்தத் தேர்தலுக்கும் தேதி குறிக்க மறுக்கிறார்கள். அந்தத் தேர்தலையும் வரவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். எப்படியும் அவர்களே வெற்றி பெற வேண்டும், அதற்கு என்ன வழி என்று பார்க்கிறார்கள். அப்படி கருதினால், அந்தக் கருத்துக்கு அவர்களுடைய எண்ணத்திலே மண்ணைப் போட்டு தமிழர்களாகிய நாம், நமக்கு தன் மானம் உண்டு, நமக்கு வீரம் உண்டு, நமக்கு வெற்றி பெறுகின்ற மார்க்கம் எப்படி என்று தெரியும், நம்முடைய தினவெடுத்த தோள்களுக்கு வேலை கொடுக்க, அந்தத் தேர்தல்கள் வரும்போது நம்முடைய கழகத் தோழர்கள், தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் உள்ள நம்முடைய தோழர்கள் எல்லாம் கட்டுப்பாட்டோடு, கடமை உணர்வோடுப் பணியாற்றி அங்கே வெற்றி பெற வழி வகுக்க வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, அந்த வெற்றி தான், அந்த இடைத் தேர்தல்களில் பெறுகின்ற வெற்றி தான் திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது பெற்றுள்ள இடங்களை மேலும் மேலும் உறுதிப்படுத்துவதாக அமையும், அமையும் என்று உங்களுக்கெல்லாம் கூறி, அந்தப் பணியைத் தேர்ந்தெடுங்கள் என்று கேட்டுக் கொண்டு, இந்த அளவில் என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.

Read More

தேர்தல் கமிஷனா? தில்லுமுல்லு செய்யும் கமிஷனா? கலைஞர் கடிதம்

சட்டப் பேரவைக்கான  பொதுத் தேர்தல் பணிகள் தொடங்கிய  நாளிலிருந்து   தமிழகத்தில்  தேர்தல் ஆணையத்தின் பணிகள் எவ்வாறு  இருந்தன  என்பது குறித்து  திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும்,  மற்ற கட்சிகளின் சார்பிலும்தொடர்ந்து  முறையிட்டு வந்ததை அனைவரும் அறிவர்.   இதுபற்றி தனியாக ஒரு விசாரணைக் கமிஷன் அமைத்து விசாரித்தால் கூட  பல உண்மைகளைத் தெரிந்து கொள்ள முடியும்.     தேர்தல் முடிந்த பிறகும்,  தமிழகத் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் நின்றபாடில்லை. உதாரணத்திற்குச்சொல்ல வேண்டுமேயானால், தஞ்சை, அரவக்குறிச்சியில் தேர்தலை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்து அறிவித்தார்கள். காரணம் என்ன சொன்னார்கள் என்றால், “பணம் பட்டுவாடா” என்றார்கள்.   பணம் பட்டுவாடா நடைபெற்றதற்காக தேர்தலைஒத்திவைப்பது என்றால், தமிழ்நாட்டில்  பல தொகுதிகளிலும் ஒத்தி வைத்திருக்க வேண்டும்.   தமிழ்நாட்டில் உள்ள பல தொகுதிகளிலும், ஆளுங்கட்சி பணம் பட்டுவாடா செய்தது  தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா என்ன?  பணம் பட்டுவாடாசெய்யப்பட்டது பற்றி பதினைந்து நாட்களாக ஏடுகளில் வராத செய்திகளா?     கடந்த 24-4-2016 அன்று “தினமலர்” நாளிதழின்  முதல் பக்கத் தலைப்புச் செய்தி என்ன தெரியுமா?   “வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பதுக்கிய 250 கோடிரூபாய் பறிமுதல்  -  45 இடங்களில் சோதனை”  என்பது தான்!   அந்தத் தலைப்பின்கீழ் வந்த செய்தியில்,              “தமிழக சட்டசபை தேர்தலில்,  பணப் பட்டுவாடாவைத் தடுக்க, ஒவ்வொரு  மாவட்டத்திலும்,  வருமான வரித் துறை துணை  இயக்குனர் தலைமையில்,  ஒரு உதவி கமிஷனர்,  ஐந்து ஊழியர், ஆறு ஆய்வாளர் இடம் பெற்ற படை அமைக்கப்பட்டுள்ளது.   இவர்கள் சில வாரங்களாக,  பண நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனர்.   கரூரில்,  அ.தி.மு.க.அமைச்சர்களுக்கு நெருக்கமான, அன்புநாதன்   என்பவர் வீட்டில், நேற்று முன்தினம்  வருமான வரித் துறை அதிகாரிகள்அதிரடி சோதனை நடத்தினர்.   இந்தச் சோதனையில் 10.30 இலட்சம் ரூபாய் ரொக்கம்;  ஒரு ஆம்புலன்ஸ் வாகனம்;  ஒருடிராக்டர்;  ஒரு கார்; 12 பணம் எண்ணும்  மிஷின்கள் பறிமுதல் செய்யப்பட்டன என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது.  ஆனால்,  நேற்று ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியானது.   கரூரில் அன்பு நாதன் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்டது,  இந்தியதேர்தல் வரலாற்றில், இது வரை இல்லாத அளவு பணம் என்று கூறப்பட்டது.   இதுபற்றி, கரூர் போலீஸ் வட்டாரங் களில் விசாரித்த போது,“அன்புநாதன் வீட்டில் சிக்கியது, 250 கோடி ரூபாய் அளவுக்கு  இருக்கும்” எனத் தகவல்கள் கிடைத்தன” என்று “தினமலர்” செய்தி வெளியிட்டு  எத்தனை நாட்கள் ஆகிறது?               இன்று எங்கே போனார் அந்த அன்புநாதன்?   அவரிடமிருந்து கைப்பற்றிய உண்மையான பணம் எவ்வளவு?  தேர்தல்கமிஷன் அதுபற்றி என்ன நடவடிக்கை எடுத்தது?  ஏன் மூடி மறைத்தது?    அதே இதழில் வெளி வந்த மற்றொரு செய்தியில், “தமிழகம் முழுவதும்  பணம் பதுக்கி வைக்கப்பட்டதாகச்  சந்தேதிக்கப்பட்ட  இடங்களில் நேற்று சோதனை நடந்தது. மொத்தம், 45 இடங்களில், 500 வருமான வரித் துறை அதிகாரிகள்சோதனை நடத்தினர்.   தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறும் போது,“கரூரில்  பணம் மட்டுமின்றி,  ஏராளமான சொத்துஆவணங்கள், வேட்டி,  சேலை மற்றும் பரிசுப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.   சென்னையில்  ஒரு நகைக்கடையில்  சோதனை நடத்தப்பட்டு பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.   கரூரில்  பணம் பறிமுதல்செய்யப்பட்ட வீட்டில், பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு   கேமராவை, வருமான வரித் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர்.  அதில் பணம் கொண்டு வந்து இறக்கப்பட்ட காட்சிகள், பதிவாகி இருப்பதாகக் கூறப்படுகிறது.  இந்தக் காமரா,வருமான வரித் துறையினர் வசம் சிக்காமல் இருக்க, போலீஸ் உயர் அதிகாரிகள் முயற்சித்ததாகவும், தகவல்வெளியாகியுள்ளது” என்று தெரிவித்தார்களே;  என்ன ஆயிற்று?  எங்கே அந்த காமரா?  அதிலே சிக்கிய அமைச்சர்கள் யார்? ஏன் அந்தக் காமரா மறைக்கப் பட்டது?   தேர்தல் கமிஷன் அதுபற்றி ஏதாவது  நடவடிக்கை எடுத்ததா?  தேர்தல் கமிஷன் என்றஒன்று தமிழகத்திலே செயல்பட்டதா?               இந்தத் தகவல்கள் “தினமலர்”  நாளிதழில் வந்ததைப் போலவே, வேறு பல நாளேடுகளிலும் வந்துள்ளன.  இந்தத் தகவல்கள் வருமான வரித் துறை அதிகாரிகளும், தேர்தல் அதிகாரிகளும் கூறியதாக உள்ளன.    செய்திகள் வந்து பலநாட்கள்  ஆகியும்,  தமிழக அரசின் சார்பிலோ, தேர்தல் கமிஷன் சார்பிலோ இதற்கு ஏன்  விளக்கம் அளிக்க வில்லை?       நாளேடுகளில்  வந்த செய்திகளில்,“அமைச்சர்கள் சிலரின் நெருக்கடியால், தேர்தல் பிரிவில் உள்ள உள்ளூர் விசுவாச அதிகாரிகள் தரப்பிலிருந்து அன்புநாதன்  தரப்புக்கு விஷயம் கசிந்துள்ளது.  அவர்கள் சுதாரித்து, இரவே பல கோடி ரூபாயைவேறு இடங்களில் பதுக்கியதாகவும் தெரிகிறது.  அன்பு நாதன் குடோனில் இருந்து 10.33 இலட்சமும்,  வீட்டிலிருந்து   4.77கோடி ரூபாயும் பறிமுதல் செய்யப்  பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.  ஆனால் 250 கோடி ரூபாய் அளவுக்குரொக்கப் பணம் கைப்பற்றி  தேர்தல் கமிஷனின் கவனத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்”  என்றும் உள்ளது.  குறிப்பாக  இந்தஅன்புநாதன்  ஒருசில  முக்கிய அமைச்சர்களின் பினாமி என்றும்,  அந்த அமைச்சர்கள் அவரது இல்லத்திற்கு வந்ததெல்லாம்காமராவில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், அதனால் தான் அந்தக் காமராவைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் சிலர்ஈடுபட்டிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.   அதுபற்றி இந்நாள் வரை தேர்தல் கமிஷன் எதுவும் சொல்ல வில்லையே, ஏன்?                 அன்புநாதன் மூலமாக இரண்டு முக்கிய அமைச்சர்கள்  தங்களது லஞ்ச, ஊழல் பணங்களை பல இடங்களுக்குஅனுப்பினார்கள் என்றும், ஊரின் பெயரை  தன் பெயருக்கு முன்னாள் வைத்துள்ள அமைச்சர் ஹாங்காங் அருகே தீவேவைத்திருப்பதாகவும்,  அமைச்சரின் “பாஸ்போர்ட்டை”  சோதனையிட்டாலே அவர் பயணம் செய்த விவரத்தை அறியலாம்என்றும்,  நடிகைகள் பற்றியும் பக்கம் பக்கமாக வந்த செய்திகள்  இன்று வரை அமைச்சர்களாலோ, முதல்வராலோமறுக்கப்படவில்லையே;  ஏன்?                வருமான வரித் துறை அதிகாரிகள், அன்புநாதன் வீட்டில் சோதனை முடித்ததும்,  மாலையில் வேலாயுதம்பாளையம்அருகே  அன்புநாதனின் நண்பர் மணிமாறன் என்பவரின் தொழிற்சாலையிலும் சோதனை செய்திருக்கின்றனர்.    இந்தநிலையில் தமிழகக் காவல் துறையினரின் பார்வையிலிருந்தும், வருமான வரித் துறையினரின் பிடியிலிருந்தும்அன்புநாதன் மாயமாகியிருக்கிறார் என்றால் அதற்கு மூல காரணம் யார்?  அவரைத் தப்ப விட்ட புனிதர்கள் யார்?  தமிழகஅரசின் மூத்த அதிகாரிகள்  துணையின்றி, அமைச்சர்களின் உதவியின்றி அவரால் எப்படி தப்ப முடியும்? சி.பி.ஐ. விசாரணைவேண்டுமென்று எதிர்க் கட்சிகள் எல்லாம் வைத்த கோரிக்கை என்னவாயிற்று?  இதை யெல்லாம் தேர்தல் ஆணையம்கவனத்தில் கொண்டதா?   இதற்கெல்லாம்  பதில் என்ன?                அன்புநாதன் வீட்டில்  சோதனை நடத்திய  எஸ்.பி.,  வந்திதா பாண்டேவை  உயர் போலீஸ் அதிகாரிகள்  மிரட்டியதாகச்செய்தி வந்ததே?  அவரைக் கொலை செய்யவே முயற்சி நடைபெற்றதாக ஏடுகள் கூறினவே?  என்ன ஆயிற்று?  எப்படிமறைத்தார்கள்?  எங்கே தேர்தல் ஆணையம்?   கரூர் மாவட்டம், புன்னம்சத்திரத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மணி மாறன்  வீடு, பேக்டரி, குடோன் உள்ளிட்டவற்றில் சோதனை நடத்தப்பட்டதே, தற்போது அவர் அமெரிக்காவில் இருப்பதாகக் கூறப்படுகிறதே;  தேர்தல்ஆணையம் என்ன செய்தது?              கரூரில் நத்தம் விசுவநாதன் நண்பர் வீட்டில் இந்தச் சோதனை என்றால்,  அதற்கு மறுநாளே  சென்னையில்  அமைச்சர்வைத்திலிங்கத்தின் நண்பர் வீட்டில்  சோதனை நடைபெற்றதாகவும்,  ஐந்து கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும்செய்தி வரவில்லையா?  தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இவர் என்றும்,  தஞ்சை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத்தில்முக்கிய பொறுப்பில் உள்ளவர் என்றும் அந்தச் செய்தியில் கூறப் பட்டிருந்ததே, இது உண்மையா இல்லையா?  இதற்குதேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்ததா? தமிழகத்தில் இதுவரை எத்தனையோ தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றனவே, எந்தத் தேர்தலிலாவது  இந்த முறைபோல பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதா?  ஐந்து மாநிலங்களில் மொத்தம்  133 கோடி ரூபாய் பறிமுதல் என்றால், அதிலேதமிழகத்தில் மட்டும் சுமார் 100  கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.  அது அ.தி.மு.க. அரசுக்கு மற்றொரு இழிவு அல்லவா?   தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு  நெருக்கமானவர்கள் மற்றும்அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறதா இல்லையா?  8-4-16 அன்று கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரி அன்புசெல்வம்,அப்பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்  காரைச் சோதனை செய்ததில்  ரூபாய் பத்து இலட்சத்தை பறிமுதல் செய்து, அந்தத்தகவலை மாவட்டக் கலெக்டர் ராஜேஷ் கவனத்துக்குக் கொண்டு சென்றார்.   ஆனால் அவர்,  வேட்பாளரை விடுவிக்கவும்,பணத்தைத் திருப்பிக் கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.   தன்னிடம் வீடியோ ஆதாரம் இருப்பதாக அன்புச் செல்வம் கூறியும்கலெக்டர் அவரை மிரட்டியதாகச் செய்தி வந்தது.               22-4-2016 அன்று டி.எஸ்.பி. ராமச்சந்திரன் வாகன சோதனை நடத்திய போது ஒரு சொகுசு காரிலிருந்து  58 இலட்சத்து 30ஆயிரத்து 500 ரூபாய் பணம் பறிமுதல் செய்துள்ளார்.  கோவை மாநகராட்சி 9வது வார்டு அதிமுக கவுன்சிலர்  வக்கீல் ராஜேந்திரன்  வீட்டில்,  தேர்தல் பிரிவு அதிகாரி  மோகனசுந்தரம், வருமான வரித் துறை துணை ஆணையாளர் ராணி காஞ்சனா ஆகியோர் சோதனைநடத்தியிருக்கிறார்கள்.  என்னென்ன சிக்கியது என்ற விவரத்தை வெளியிட மறுத்துள்ளார்கள்.     ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரது நிதி நிறுவனத்தில்  வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி கணக்கில் வராமல் வைத்திருந்த 11 இலட்சம் ரூபாயைப் பறிமுதல் செய்துள்ளார்கள்.                அதே நாளில், பொள்ளாச்சி தொகுதி தேர்தல் அலுவலர் அனுபியாஸ், கோவை மண்டல வருமான வரித் துறை  துணைஆணையாளர் ராணி காஞ்சனா  ஆகியோர் தலைமையில், பொள்ளாச்சி ஜெயராமனின் நெருங்கிய உறுவினரும், நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் நண்பருமான டாக்டர் மகேந்திரன் என்பவரின் பண்ணை வீட்டில் வாக்காளர்களுக்குபணம் விநியோகம் செய்வதாக வந்த புகாரைத் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது.  சோதனை முடிவில் 2 பெரியசூட்கேஸ்கள் வெளியே எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்டது..  ஆனால் என்னென்ன சிக்கியது என்பதை அதிகாரிகள்தெரிவிக்க மறுத்து விட்டார்களாம்.   அ.தி.மு.க. வினருக்குச் சொந்தமான  இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு  பல கோடிரூபாய்  கைப்பற்றப்பட்டும்,  எந்த நிகழ்விலும் முதல் தகவல்  அறிக்கை கூடப் பதிவு செய்யப்படவில்லை  என்பதும்,  யாரும்  இதுவரை  கைது செய்யப்படவில்லை என்பதும்  நாட்டின் சட்ட விதிமுறைகளையே நசுக்கும் நாசச் செயல்.                 தமிழகத்திலே இவை மட்டுமா நடந்தன?   முதலமைச்சர் ஜெயலலிதாவின் சிறுதாவூர் மாளிகையில் கன்டெய்னர்கள்நிறுத்தப்பட்டிருந்ததை, புகைப்படம் எடுத்து ஏடுகள் வெளியிடவில்லையா?   அதுபற்றி எவ்வளவு செய்திகள் வந்தன? தேர்தல் ஆணையம் ஏதாவது நடவடிக்கை எடுத்ததா?   அது மாத்திரமா?  திருப்பூர் அருகே 3 கன்டெய்னர்களில் 570 கோடி ரூபாய்  பணம் கடத்தப்படவில்லையா?  அதற்குமுன்பே 5 கன்டெய்னர்களின் கடத்தப்பட்டு விட்டன என்றும், அவை பிடிபடவில்லை என்றும்,  ஆனால் இந்த 3கன்டெய்னர்கள் பிடிபட்டு விட்டன என்றும் கூறப்பட்டது.  அது பற்றி எவ்வளவு செய்திகள் வந்தன?  அத்தனையும்  வங்கிக்குச்சொந்தமான பணம் என்று கூறி மூடப்பட்டு விட்டன.  அதிலே  தேர்தல் ஆணையம் ஏதாவது  செய்ததா?  எதற்காக தேர்தல் ஆணையம்?                தமிழகம் முழுவதிலும் அத்தனை தொகுதிகளிலும் பணம் பட்டுவாடா நடைபெற்றிருக்க இரண்டு தொகுதிகளில் மட்டும்ஒரு வாரத்திற்கு தேர்தல் ஒத்திவைப்பு என்று தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்தது.   தற்போது அதையும் தாண்டி ஏதோபா.ஜ.க., பா.ம.க., நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தது என்ற காரணத்தைக் கூறி, தேர்தல் ஆணையம் மூன்றுவாரங்களுக்கு  விசாரணை  நடத்துவதாகக் கூறி,  அந்த இரண்டு தொகுதி களிலும் 3 வாரங்களுக்குத் தேர்தலை ஒத்திவைத்திருப்பதாக அறிவிக்கிறார்கள் என்றால் என்ன நியாயம்?   இரண்டு தொகுதிகளில் பணப் பட்டுவாடா பற்றி விசாரிக்கமூன்று வாரங்கள் தேவையா?  அதுபற்றி  அங்கே தேர்தலில் போட்டி யிடும் முக்கிய  கட்சிகளின் கருத்துக்களை அறிந்திடவேண்டாமா?  பா.ம.க., வும், பா.ஜ.க.வும்  நீதி மன்றத்தில் மனு கொடுத்தார்கள் என்றால், அவர்கள் எந்த நோக்கத்தோடு வழக்குதொடுத்தார்கள்?  யாருடைய துhண்டுதலின் பேரில் வழக்கு தொடுத்தார்கள்?  அதற்காக இரண்டு தொகுதிகளின்  தேர்தல்களைமூன்று வாரங்களுக்குத் தள்ளி வைப்பதா?  இவைகள் எல்லாம் யாரை ஏமாற்று கின்ற காரியம்?  இதற்காகவா ஒரு தேர்தல்ஆணையம்?   தேர்தல் ஆணையம் என்றால் பாரபட்சமற்று நடக்க வேண்டாமா?   முதலமைச்சர் காலிலே விழுந்துவணங்குவது தான் பாரபட்சமற்ற நடவடிக்கையா?   இப்படிப்பட்ட தேர்தல் ஆணையங்கள் இருக்கின்ற வரை  நியாயம்கிடைக்காது, வெற்றி கிடைக்காது,  நீதி கிடைக்காது,  நீதியே  நீ இன்னும் இருக்கின்றாயா?  நீயும் அந்தக் கொலைக் களத்திலேவிழுந்து மாண்டு விட்டாயா  என்று தான் கேட்க வேண்டும்.

Read More

அதிர்ச்சி தரும் அய்யம்பாளையம் சம்பவத்தில் தொடர் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதா? தலைவர் கலைஞர் கண்டனம்

அ.தி.மு.க வைச் சேர்ந்த மின் துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் முதலமைச்சரும்; தற்போதைய நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமாக இருப்பவரும், அவர்களுடைய அனைத்து விவகாரங்களையும் உடனிருந்து கவனித்து வருபவருமான கரூர் - அய்யம்பாளையத்தைச் சேர்ந்த அன்புநாதன் என்பவரின் வீடு மற்றும் கிடங்கு ஆகியவற்றில் சோதனை நடத்தியவர் கரூர் மாவட்டக் காவல் துறை பெண் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே என்பவராவார். அவர் நடத்திய சோதனையின் தொடர்ச்சியாக அதிர்ச்சியூட்டும் பல்வேறு தகவல்கள் வெளியாயின. இதுவரை மறைத்து  வைக்கப்பட்டிருந்த இப்படிப்பட்ட தகவல்கள் வெளியுலகக் கவனத்தை  ஈர்ப்பதற்கு அடிப்படைக் காரணமாக இருந்தவர் வந்திதா பாண்டே என்ற பெண்மணி ஆவார். ரெய்டுக்குப் பிறகு அவருக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வந்து கொண்டிருந்ததாக ஏற்கனவே செய்திகள் வெளி வந்திருக்கின்றன.   இந்த நிலையில் நேற்று(26-04-2016) கரூர் எஸ்.பி. அலுவலகத்திற்கு ஒருவர் வேகமாக ஓடி வந்து எஸ்.பி.யைப் பார்க்க வேண்டுமென்று அவசரப்பட்டிருக்கிறார். மிகுந்த பதற்றத்தோடு  காணப்பட்ட அவர், எஸ்.பி.யின் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். அந்த நபர் எஸ்.பி.யிடம் கொடுத்த பையில் துப்பாக்கி ஒன்று இருந்திருக்கிறது. அப்போது எஸ்.பி.யிடம் அந்த நபர், “உங்களைச் சுட்டுக் கொல்லும்படி முகமூடி அணிந்திருந்த இரண்டு பேர் தெரிவித்தனர். எஸ்.பி.யைச் சுட்டுக் கொன்றால் பத்து லட்சம் ரூபாய் தருகிறோம்; அப்படிக் கொல்லாவிட்டால் உன்னைச் சுட்டுக் கொன்றுவிடுவோமென்று மிரட்டினர். அதனால் நான் பயந்துவிட்டேன். என்னைக் காப்பற்றுங்கள்” என்று கூறி எஸ்.பி.யிடம் அந்த நபர் கதறி அழுததாகவும், அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் இன்று நாளேடுகளில் செய்தி வெளியாகியிருக்கிறது.   மேலும் எஸ்.பி. வந்திதா பாண்டே நேர்மையுடனும் துணிச்சலாகவும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் அவரைச் சுட்டுக் கொல்ல அனுப்பிய அதே நேரத்தில், வந்திதா பாண்டே தற்கொலைக்கு முயன்றதாக அன்புநாதனின் ஆதரவாளர்கள் திட்டமிட்டு வதந்தி ஒன்றைப் பரப்பியிருக்கிறார்கள்.   கரூர் - அய்யம்பாளையத்தில் ஏற்கனவே நடைபெற்ற சம்பவமும், நேற்று கரூர் எஸ்.பி.யைச் சுட்டுக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் சாதரணமான நிகழ்வுகள் அல்ல. அய்யம்பாளையம் சம்பவம் இந்திய தேசக் கவனத்தை ஈர்த்திருக்கிறது. எஸ்.பி.யைக் கொல்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தமிழக காவல் துறைக்கு, தனி நபர்கள் சிலரால் விடப்பட்டிருக்கும் மிகப் பெரிய சவாலாகும். எனினும் இந்த நிகழ்வுகளில் இதுவரை யாரும் கைது செய்யப் படாமல் இருப்பது வேடிக்கையாகவும் விநோதமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.   மது விலக்குப் பிரச்சாரம் செய்ததற்காக, பாடகர் கோவனைக் கைது செய்து சிறையில் அடைத்ததோடு, அவர் மீதும், மேலும் “மக்கள் அதிகாரம்” என்னும் அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர் மீதும் தேச விரோத வழக்கு தொடர்ந்திருக்கும் ஜெயலலிதா அரசு; தொடர்பில்லாத சிலரிடமிருந்து எழுத்துப் பூர்வமான புகார் வந்திருப்பதாகச் சொல்லி, முதல் தகவல் அறிக்கை கூடத் தாக்கல் செய்யாமல், குற்றமேதும் புரியாதவர்களைக் கூட அவசரம் அவசரமாக, கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஜெயலலிதா அரசு; அய்யம்பாளையம் சம்பவத்தில் இதுவரை யாரையும் கைது செய்யாமல், கடும் குற்றவாளிகள் வெளியே சுதந்திரமாக உலா வருவதற்கும், குற்றங்கள் சம்பந்தமான ஆதாரங்களைக் காவல் துறையில் உள்ள சிலருடைய உதவியோடு மறைப்பதற்கும் அழிப்பதற்கும் அனுமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். இந்திய நாட்டின் பொருளாதாரத்தையும் அதன் சட்ட விதி முறைகளையும் கேலிப் பொருளாக்கும் அய்யம்பாளையம் சம்பவம் போன்றவற்றின் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருந்து வரும் தேசிய அமைப்புகளின் அணுகுமுறை வேதனை அளிப்பதாகும். இந்தச் சம்பவங்கள் அனைத்தையும் பார்த்து அறிந்துகொண்டிருக்கும் நாட்டு மக்கள், உரிய நேரத்தில் தக்க தீர்ப்பினை வழங்குவதற்குச் சிறிதும் தயங்கமாட்டார்கள்; தயங்கவும் கூடாது!

Read More

கடலூரில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை

 கடலூரில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:- கடலூர் மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர்களே! கழகத்தின் சார்பிலும் தோழமைக் கட்சிகளின் சார்பிலும் உதயசூரியன் உள்ளிட்ட அவரவர்  சின்னங்களிலே போட்டியிடுகின்ற  என்னுடைய  அன்புத் தம்பிமார்களே! என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே! கடலூர் மாவட்டக் கழகத்தின் செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர்கள் சிறப்பாக  உரையாற்றி இங்கே போட்டியிடுகின்ற நண்பர்களையெல்லாம் அறிமுகம் செய்கின்ற பணியை நான் ஆற்றுவேன்  என்று  குறிப்பிட்டிருக்கின்றார். நேற்று முதல் தமிழ்நாட்டில்  தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலே பேசுகின்ற வாய்ப்பைப் பெற்று அங்கெல்லாம் நம்முடைய கழக வேட்பாளர்களும், தோழமைக்  கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலைகள் பிரகாசமாகத் தெரிவதை என்னால் காண முடிந்தது.   (கைதட்டல்) அதைப் போலவே இங்கேயும்   ஒளி பொருந்திய  கடலூர் கூட்டத்தை நான் பார்க்கின்றேன். (கைதட்டல்) கடலூரில் நான் பேசுவது என்பது புதிதல்ல; தென்னாற்காடு மாவட்டம் என்ற பெயர் பெற்றிருந்த அந்தக் காலத்திலே இருந்து இந்த கருணாநிதி இது போன்ற கூட்டங்களில்  இங்கே உங்களை எல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பை பெற்றிருக்கின்றேன். கடலூர் என்றாலே எனக்கு என்னுடைய அருமை நண்பர் மறைந்த இளம்வழுதியினுடைய பெயர்தான் பசுமையாக என்னுடைய உள்ளத்திலே தோன்றும்.  அவரை இளம் வயதில் பறி கொடுத்து கடலூர் மக்களும் நானும் பட்ட துன்பம் சாதாரணமானது அல்ல. இன்றைக்கு அவருடைய மகன் இள. புகழேந்தி,  மாணவர் அணியைக் கட்டிக் காத்து, மாணவர் அணியின் சார்பிலே அவர் பல்வேறு தொண்டுகளை ஆற்றிக்கொண்டிருக்கிறார். அத்தகைய புகழேந்தியும் அவரோடு  சேர்ந்துள்ள நம்முடைய கழக உடன்பிறப்புகளும் இந்த தேர்தலிலே கடலூர் மாவட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக உங்களை எல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பை நான் பெற்றிருக்கின்றேன். குறிஞ்சிப்பாடியிலே தம்பி எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர்களும், புவனகிரியிலே துரை. கி.சரவணன் அவர்களும், நெய்வேலியில் சபா. ராஜேந்திரன் அவர்களும், விருத்தாசலத்தில் பாவாடை கோவிந்தசாமி அவர்களும், திட்டக்குடியில் வெ. கணேசன் அவர்களும், சிதம்பரத்தில் செந்தில்குமார் அவர்களும் போட்டியிடுகின்றார்கள்.  இவர்களுக்கு எல்லாம் உதயசூரியன் சின்னம்.  காட்டு மன்னார் கோவிலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் டாக்டர் மணிரத்தினம் போட்டியிடுகின்றார்.  அவருக்குக் கை சின்னம்.  தமிழ்நாடு விவசாயிகள்  தொழிலாளர் கட்சியின் சார்பில் தம்பி பொன். குமார் அவர்கள் பண்ருட்டியிலே போட்டியிடுகின்றார்.  அவருக்கும்  உதயசூரியன் சின்னம். இவர்களை எல்லாம் வெற்றிபெறச் செய்ய வேண்டியது உங்களுடைய கடமை, உங்களுடைய பொறுப்பு என்பதை நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.   நாட்டில் நல்லாட்சி நடைபெற வேண்டும் என்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நோக்கம் நாங்களே ஆளவேண்டும் என்று கருதுகின்றவர்கள் அல்ல.  திராவிட முன்னேற்றக் கழகம்  தேர்தலுக்காக இருக்கின்ற  ஒரு அரசியல் கட்சி அல்ல. இன்னும் சொல்லப் போனால் இது அரசியல் கட்சி மாத்திரம் அல்ல.  ஒரு சமுதாய புரட்சி இயக்கம், சமுதாயத்திலே அடிமட்டத்திலே இருக்கின்றவர்களைக் கைதூக்கி விடுகின்ற இயக்கம்;  பின்தங்கிய மக்களின்  முன்னேற்றத்திற்காகப் பாடுபடுகின்ற  பாட்டாளியின் இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். இந்தக் கழகத்தை தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் சமுதாயத்திலே சாதி வேற்றுமை, சாதிக் கொடுமை இவைகள் எல்லாம் நீங்கி எல்லோரும் சமம் என்ற  ஒரு நிலையை உருவாக்க வேண்டும்  என்பதற்காக பல்லாண்டுகாலமாக பாடுபட்டு வருகின்ற இயக்கம். ஆனால் அதிலே  இடையிடையே தலையிட்டு அவர்களுடைய கொள்கைகளுக்கு பெரியாருடைய எண்ணங்களுக்கு, பேரறிஞர் அண்ணாவினுடைய கருத்துகளுக்கு மாறாக ஏதேதோ நாட்டில் நடைபெறுகின்றன,  என்னென்னமோ செய்கின்றார்கள். நான் வருகின்ற வழியிலே கேள்விப்பட்டேன் என்னுடைய நண்பர்களும் சொன்னார்கள், காலையிலும் மாலையிலும் வந்த பத்திரிக்கைகளிலும் பார்த்தேன்.  இன்றைக்கு நாட்டிலே கொள்ளையடிப்பவர்கள், திருடுபவர்கள், வஞ்சகம் செய்பவர்கள், பணம் சம்பாதிப்பதற்காக எதைவேண்டு மானாலும் செய்யக் கூடியவர்கள் நிறைந்து விட்டார்கள். அவர்களையெல்லாம் வீழ்த்தி ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்க திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு பாடுபட்டு வருகின்றது.  இது ஒரு அரசியல்  இயக்கம் மாத்திரம் அல்ல, சமுதாய இயக்கமும் கூட. நாங்கள் இந்த நாட்டில் சாதி வேறுபாடு இருக்கக்கூடாது;   மத மாச்சரியங்களுக்கு இடம் இருக்கக்கூடாது;  எல்லோரும் சமம்; என்ற அந்த நிலையில் பாடுபட்டு வருகின்றோம்.  அதற்கு மாறாக எது நடந்தாலும் அவர்களை எல்லாம் தூக்கி எறிய வேண்டும் என்ற அந்த உத்வேகத்தோடு திராவிட முன்னேற்றக் கழகத்திலே நாங்கள் இன்றைக்கு பணியாற்றுகின்றோம்.  அப்படிப்பட்ட சூழ்நிலையில் எங்களுக்கு பொது மக்களாகிய நீங்கள் - திராவிட மக்களாகிய நீங்கள், தமிழ் மக்களாகிய  நீங்கள் - எங்களுடைய கைகளை பலப்படுத்த  துணை புரிய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளத்தான், தேர்தலிலே எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்க மாத்திரமல்ல; அதன் மூலம் எங்களை பலப்படுத்துங்கள்,  நாங்கள் பலப்பட்டால், தமிழ்  நாட்டிலே உள்ள சாதி பேதங்களை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கின்ற சூழ்நிலைகளை எல்லாம்  அகற்ற  எங்களால் முடியும். அதற்கு எங்களுக்கு நீங்கள் ஆதரவு தாருங்கள் என்று கேட்டுத்தான் நாங்கள் பாடுபட்டு வருகின்றோம்.  பணியாற்றி வருகின்றோம்.   அப்படிப்பட்ட எங்களுக்கு;  நீங்கள் எங்களை எல்லாம் உங்களுடைய சகோதரர்களாகக் கருதி,  உடன் பிறப்புகளாகக் கருதி எங்களை கைவிடாமல், எங்களுக்கு என்றென்றும் தோன்றாத் துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளத்தான் கடலூருக்கு வந்திருக்கின்றேன்.  கடலூரில் எவ்வளவு நாசகாரியங்கள் நடைபெற்றன, வெள்ளத்தாலும், புயலாலும்  எந்த அளவிற்கு நீங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டீர்கள்.  எந்த அளவுக்கு கடலூர் மக்கள் கதியற்றவர்களாக  நின்று புலம்பினார்கள்.  அந்த நேரத்திலே ஆளுகின்ற பொறுப்பிலே உள்ள முதலமைச்சர்  உங்களை வந்து பார்த்தாரா? உங்களுக்கு தேவையான வற்றை செய்து கொடுத்தாரா? உங்களுடைய கண்ணீரைத் துடைக்க கை நீட்டினாரா? அவர்கள் கை நீட்டியது எல்லாம் அவர்கள்  கருணை வடிய  பேசியது எல்லாம் மேலும் மேலும் சம்பாதிக்க, பணம் திரட்ட, இந்த காரியங்களைத்தான் பார்த்தார்கள்.  ஆனால் நாங்கள் உங்களோடு தோழர்களாக நின்று எந்த நேரத்திலும் ஏழை எளிய மக்கள், சாதாரண சாமானிய மக்கள், அவர்கள்தான் எங்களுக்கு தோழர்கள் என்ற அந்த உணர்வோடு பாடுபட்டு வருகின்ற இயக்கத்திற்கு சொந்தக்காரர்கள் நாங்கள்.  நாங்கள் தியாகத்தை மதிப்பவர்கள், நாங்கள் எந்த நேரத்திலும் உங்களுக்காக உதவக் கூடியவர்கள். அதை மறந்துவிடாதீர்கள்.   திராவிட முன்னேற்றக் கழகம் என்றால் திராவிட சமுதாயத்தினுடைய நன்மைகளுக்காக திராவிட சமுதாயம் முன்னேறுவதற்காக பாடுபடுகின்ற ஒரு இயக்கம்.  திராவிட என்ற அந்த சொல்லே சிலபேருக்கு பிடிப்பதில்லை.  ஆனால் அவர்களும் திராவிடர்கள்தான் என்பதை உணருகின்ற காலம் விரைவில் வரும்போது தான்,  அந்த திராவிடர்களுக்காக பாடுபடுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.  இந்த கழகத்தின் சார்பிலே போட்டியிடுகின்ற நம்முடைய நண்பர்களை எல்லாம் நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.  உதயசூரியன் சின்னமானாலும், நம்முடைய  தோழமைக் கட்சிகளுடைய  சின்னங்களானாலும், அந்த சின்னங்கள் எல்லாம் வெற்றி பெற்றால்தான் எதிர் காலத்திலே இந்த சமுதாயத்தை சீரோடும், சிறப்போடும், செழிப்போடும் நாம் வாழவைக்க முடியும் என்று  உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கின்றேன். இன்றைக்கும், நாளைக்கும் நான் வெகு தூரம் பயணம் செய்து  தமிழ்நாட்டு மக்களை சந்திக்கின்ற பொறுப்பிலே இருக்கின்றேன்.  இந்தப் பொறுப்பை என்னுடைய மகன் தம்பி மு.க.ஸ்டாலின் (கைதட்டல்)  பகிர்ந்து கொண்டு நிறைவேற்றி வருகின்றார்.  அப்படி நிறைவேற்றி வருகின்ற  ஸ்டாலினுக்கு நானும் கை கொடுக்கிறேன்.  நீங்களும் கைகொடுத்து  வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.   நான் வருகின்ற வழியிலே என்னுடைய நண்பர்களோடு பேசிக் கொண்டு வந்தேன்.  ஒரு மாலைப் பத்திரிக்கையிலே என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்று பார்த்தேன்.  தமிழ்நாட்டிலே ஒரு நாலு, ஐந்து அமைச்சர்கள் சம்மந்தப்பட்ட விவகாரம் அது.  இன்றைய மாலைப் பத்திரிக்கையில் அப்பட்டமாக வெளிவந்திருக்கிறது.   ஒரு மந்திரி தன்னுடைய களியாட்டங்களுக்காக, தன்னுடைய ஆரவாரங்களுக்காக, தன்னுடைய சுகவாழ்வுக்காக என்ன என்ன காரியங்களைச் செய்தார் என்பதை அந்த பத்திரிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது.  அவர்களுடைய பெயரையெல்லாம் பச்சையாக அந்த பத்திரிகை வெளியிட்டிருக்கிறது.  நான் அந்த பெயர்களைக்கூட சொல்ல விரும்பவில்லை.  முதலமைச்சராக """"ஆக்டிங்’ முதலமைச்சராக இருந்தவர்.  அவர் எவ்வளவு உல்லாசங்களிலே  ஈடுபட்டார், அவர் எந்தளவுக்கு பணம் சம்பாதித்தார்,  பணம் சம்பாதிக்கின்ற வழிவகைகளையெல்லாம் கண்டுபிடித்தார்.  அதை அனுபவித்தார் என்பதெல்லாம் அந்த பத்திரிகையிலே வெளிப்படையாக எழுதியிருக்கின்றார்கள்.   அந்த பத்திரிகை என்ன எழுதியிருக்கிறார்களோ அதைப்பற்றி  அவர்கள் நடவடிக்கை எடுக்கிறார்களோ  இல்லையோ நான் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றேன்.  அரசாங்கத்திலே இன்றைக்கு இருப்பவர்கள் நேர்மையானவர்களாக இருந்தால், நீதிக்கு தலை வணங்குபவர்களாக இருந்தால்,  நாளைக்கே அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுத்து சிறைச்சாலையிலே போட வேண்டிய  அப்படிப்பட்டவர்கள் மந்திரிகளாக இருந்திருக்கின்றார்கள்.  அப்படிப்பட்டவர்கள் நமது மக்களோடு பழகிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.  சிறையிலே இருக்க வேண்டியவர்கள்  நாங்கள் இவ்வளவு  கோடி ரூபாய் சம்பாதித்தோம் என்று சொல்லுகின்ற  அளவிற்கு தைரியம் உள்ளவர்களாக, நெஞ்சழுத்தக்காரர்களாக இருக்கின்றார்கள்.   மந்திரியாக இருந்தவரும்,   """"ஆக்டிங்’’ மந்திரியாக இருந்தவரும்  எவ்வளவு கொள்ளையடித்தார்கள்  என்ற அந்த விவரத்தை வருமான வரித்துறை கண்டுபிடித்து அவர்களுடைய எத்தனையோ ரகசியங்கள்  வெளிப்படையாக மக்களுக்கு தெரிகின்ற அளவிற்கு பத்திரிகைகளிலே  செய்தியாக வெளியிட்டிருக்கிறார்கள்.   செய்தியாக வெளியிட்டால் போதுமா?  அவர்கள் மீது நடவடிக்கை வேண்டாமா?  அந்த நடவடிக்கையை இன்றைக்கு இருக்கின்ற அரசு எடுக்க வேண்டாமா? ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் ஒவ்வொரு கட்சியும் நாங்கள் ஒரு குழு போடுவோம்;  அந்த குழுவைக் கொண்டு யார் யார் என்ன என்ன தவறுகளை செய்தார்கள் என்பதைக் கண்டுபிடித்து, அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுப்போம் என்று வாய்ச்சவடால் வீசிவிட்டால் மட்டும் போதுமா? என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.   ஒரு அமைச்சருக்கு தமிழ் நாட்டிலே  உல்லாசம் அனுபவித்தால்  போதாது என்று வெளிநாட்டிலே உள்ள தீவுக்கே  அழைத்துச் சென்று   உல்லாசம் அனுபவித்தால்  தான் அந்த அமைச்சருக்கு திருப்தியாம்!     இது நாடா அல்லது காடா என்பதை தயவுசெய்து எண்ணிப்பாருங்கள். இந்த நாட்டில் இன்றைக்கு மணற்கொள்ளை பெருகி இருக்கிறது.  அது மாத்திரமல்ல, அந்த மணற்கொள்ளை எதற்காக? இந்த தேர்தலிலே  பணத்தினை கொடுத்து வாக்குகளை வாங்குவதற்காக;   உங்கள் கைக்கு தரப்படுகின்ற பணம், நாளைக்கு வந்தால் அந்தப் பணம் கொள்ளையடித்தப் பணம் என்பதை மறந்து விடக்கூடாது.  ஆகவே கொள்ளை யடித்தவர்கள், இன்னமும் கொள்ளையடிக்கத் துணிந்தவர்கள் தமிழ்நாட்டிலே ஆட்சிக் கட்டிலிலே அமர்ந்திருக்கின்றார்கள், அவர்கள் மீது யாரும் இதுவரையிலே செய்த தவறுகளுக்காக எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்க அஞ்சுகின்றார்கள், காரணம், இவர்களே  நடவடிக்கைக்கு உள்ளாகக்கூடிய அளவிற்கு  குற்றங்களை விளைத்தவர்கள் தான் இந்த நாட்டை ஆண்டுக்கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்திலே பெருந்தலைவர் காமராஜர் ஆண்டார், பக்தவச்சலம் ஆண்டார், அண்ணா  ஆண்டார்,   நாங்கள் ஆண்டோம். ஆனால் இன்றைக்கு ஜெயலலிதா ஆட்சியில் லஞ்சம் - லாவண்யம் இதுதான் பெருகியிருக்கின்றது. அவர்களுக்கு பணம் சம்பாதிப்பதை தவிர, வேறு எதுவும் தெரியாது.  அவர்களுக்கு மக்களை ஏமாற்றுவதைத் தவிர,  வேறு  காரியம் எதையும் கற்றதில்லை.    இந்தக் காலத்திலே  இவர்களுடைய சக்தியை எப்படியெல்லம் தடுக்க வேண்டும் என்பதை யோசித்து  அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்று சாதாரண, சாமானிய, ஏழை எளிய மக்களை யெல்லாம் நான் கேட்டுக் கொள்கின்றேன்.  உங்களையெல்லாம் கேட்டுக் கொள்ள எனக்கு உரிமையிருக்கிறது.  ஏனென்றால்  நானும் உங்களோடு சேர்ந்து கஷ்டப்பட்டவன் தான், (கைதட்டல்) நானும் உங்களுக்காக பாடுபட்டவன் தான். (கைதட்டல்)  பாடுபட்டுக் கொண்டிருப் பவன்தான்.   (கைதட்டல்)   இன்னும் பாடுபடப்போகிறவன் தான். (கைதட்டல்) எனவே உங்களுக்காக பாடுபடுகின்ற, உங்களுக்காக உழைக்கின்ற, உங்களுக்காக அனுதினமும் பேசிக் கொண்டிருக்கின்ற,  உங்களுக்காகவே கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்ற உங்கள் தம்பிகளிலே ஒருவன் நான் என்பதை மறந்து விடாதீர்கள்.  உங்கள் பிள்ளைகளிலே  ஒருவன் நான் என்பதை மறந்து விடாதீர்கள். நான் சொல்வது ஏதோ பிரச்சாரத்திற்கு வந்தோம்.  எதையோ பேசினோம் என்பதற்காக அல்ல.  உணர்ச்சியோடு பேசுகிறேன்.   (கைதட்டல்)  உள் உணர்வை வெளிப்படுத்தி பேசுகிறேன். (கைதட்டல்)  என்னுடைய ஆர்வத்தை வெளியிடுகின்றேன்.  இந்த நாடு வாழ வேண்டும்.  இந்த மக்கள் வாழ வேண்டும்.  என்னுடைய மக்கள் எல்லோரும் அனுதினமும் அண்ணா, தம்பி என்று அழைக்கின்ற அந்த மக்களுக்கு எந்த வித துன்ப துயரங்களும்  வரக்கூடாது.  அவர்களை காப்பாற்ற வேண்டும்.   அப்படி காப்பாற்றுகின்ற பொறுப்பை தமிழ்நாட்டிலே உள்ள ஒரு சில கட்சிகள் தான் இன்றைக்கு ஏற்றிருக்கின்றன.  அந்த கட்சிகளிலே ஒன்றுதான் திராவிட முன்னேற்றக் கழகம்.  அந்த கழகத்தை நீங்கள் வெற்றி பெறச் செய்தால் திராவிடர்கள் உயர்வார்கள்.  திராவிடர்கள் உயர்ந்தால், திராவிட நாடு உயரும், திராவிட நாடு உயர்ந்தால், திராவிட மக்களுக்கு  நல்ல வாழ்வு கிடைக்கும். அந்த வாழ்வு கிடைப்பதற்கு அருள் கூர்ந்து நீங்கள் எல்லாம்  அனுதினமும் பாடுபடுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.   இப்பொழுது உங்களுடைய வாக்குகளை எங்களுக்கு கொடுங்கள் என்று நான் கேட்பதற்கு காரணம் ஓட்டு வேட்டை அல்ல.  ஓட்டு வேட்டை என்ற பெயரால் தமிழ்நாட்டு மக்களுடைய வரிப் பணத்தையெல்லாம் வாரி சுருட்டிக் கொண்டிருக்கின்ற சில வன்கணாளர்கள்,  வஞ்சகர்கள் ஆகியோருக்குப்  பாடம் கற்பிக்க  நீங்கள் உங்களுடைய வெற்றி முழக்கத்தை இன்று முதலே தொடங்குங்கள் என்று கேட்டுக் கொண்டு, உங்களுடைய அன்பான வரவேற்பிற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்து, வெல்க உதய  சூரியன், வாழ்க உதயசூரியன், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றியைத் தாருங்கள்.  காங்கிரஸ் இயக்கத்திற்கு - இந்த கூட்டணிக்கு வெற்றியைத் தாருங்கள்,  கை சின்னத்திற்கு வெற்றியைத் தாருங்கள், உதயசூரியனுக்கு வெற்றியைத் தாருங்கள்  என்று கேட்டு விடைபெறுகிறேன். இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள்  உரையாற்றினார்.

Read More

மயிலாடுதுறையில் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை

மயிலாடுதுறை தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலே க. அன்பழகனையும், பூம்புகார் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினுடைய வேட்பாளர் ஷாஜகானுக்கு ஏணி சின்னத்திலும் சீர்காழி தொகுதியில் கிள்ளை ரவிந்திரனுக்கு உதயசூரியன் சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெறச்செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.   இன்று நான் காலையிலே இருந்து வழியெல்லாம் பல்லாயிரக்கணக்கான  தமிழ்ப்பெருங்குடி மக்களைச் சந்தித்து அவர்களுடைய ஆதரவை தி.மு.கழகத்திற்கும், தோழமைக் கட்சிகளுக்கும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்ற பெரும் பொறுப்பை  ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.   இங்கே பேசியவர்கள் எல்லாம் தி.மு.கழக ஆட்சியிலே ஏற்பட்ட நன்மைகளை, சமுதாயத்திற்கு ஏற்பட்ட ஆதாயங்களை யெல்லாம் எடுத்துச் சொன்னார்கள்.    இன்றைக்கு நாட்டில்  கடந்த ஐந்தாண்டு காலமாக நடைபெறுகின்ற அ.தி.மு.க. ஆட்சியில் உள்ள கோளாறுகளை நீங்கள் அனுபவத்திலே உணர்ந்திருக்கிறீர்கள். இவைகள் எல்லாம் நீங்கி நாம் உண்மையான சுதந்திரத்தை அனுபவகிக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்க வேண்டுமேயானால் அதற்கு அந்த வாய்ப்பை உருவாக்குபவர்கள் இளைஞர்கள்தான் என்பதை நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.   இது இளைஞர்களுடைய காலம், அவர்கள் எண்ணியது நடக்கும், நான் நேற்றைக்குகூட நடைபெற்றக் கூட்டத்தில் இளைஞர்கள், தமிழ்ப் பணியாற்ற, சமுதாயப் பணியாற்ற முன் வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன்.  அந்தப் பணிகள் சிறப்பாக நடைபெறவேண்டுமேயானால் நீங்கள் தி.மு.கழகத்தினுடைய வரலாறு என்ன?  என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் நான் தி.மு.கழகத்திலே 1949-ஆம் ஆண்டுக்குப் பிறகு எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை, எவ்வளவு தியாகங்களைச் செய்கின்ற ஒரு இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டு தமிழ்நாட்டு மக்களுடைய நலன்களைக்  பேணிப்  பாதுகாக்கின்றப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.  நான் 13-வது முறையாக தேர்தலிலே இப்போது உங்களையெல்லாம் சந்திக்கிறேன், வெற்றிபெறுவேன் என்று சொன்னார்கள்.  அப்படிச் சொன்னதற்கு காரணம், அவர்கள் என்மீது கொண்டுள்ள அன்பின் காரணமாகத்தான், என்மீது கொண்டுள்ள அக்கறையின் காரணமாகத்தான் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.     நம்முடைய மக்கள் வாழவேண்டுமேயானால் நம்முடைய தமிழ்நாடு வாழ வேண்டுமேயானால், தமிழ்நாட்டிலே சொந்தமாக சிந்திக்கக்கூடிய தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்றவர்களிடம் பாடம் கற்றவர்கள், ஆட்சிப் பொறுப்பில்  இருந்தால்தான் அவர்களால் ஒரு நல்ல நிலையை தமிழ்நாட்டிலே உருவாக்க முடியும்.  உங்களையெல்லாம் நான் மேலும் கேட்டுக் கொள்கிறேன், இந்தக் கூட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் இருக்கிறீர்கள், இளைஞர்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம். நீங்கள் தான் இந்த நாட்டை வாழ வைக்க வேண்டியவர்கள், நீங்கள்தான் இந்த சமுதாயத்தை வாழ வைக்க வேண்டியவர்கள், ஆகவே இளைஞர்கள்  அமைதியாக இருந்து இந்தக் கூட்டத்தை சிறப்போடு நடத்தித் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். (மேடையின் முன் தொடர்ந்து ஆரவாரம், முழக்கங்கள் எழுப்பியவாறு இருந்தார்கள்) இளைஞர்களால் ஆகாதது ஏதும் இல்லை.  இளைஞர்கள்தான் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். இளைஞர்கள் தான் ஒரு நாட்டை உருவாக்க முடியும், வாழ வைக்க முடியும் என்ற நம்பிக்கையும்  இளைஞர்களுக்குத்தான் உண்டு.  எனவே நாங்கள்  இளைஞர்களை நம்பித் தான் இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டி ருக்கிறோம்.   என்னைப் பொறுத்தவரையில் நான் ஒரு காலத்திலே இளைஞனாக இருந்து இன்றைக்கு வயோதிக பருவத்திலே இருப்பவன், (கைதட்டல்) 92 வயதை தாண்டியவன்.  இன்னமும் நான் மக்களுக்காகப் பாடுபடுகிறேன் என்றால், இளைஞர்களை தயார்படுத்துவதற்காகத்தான் இந்தப் பணியை நான் ஆற்றுகிறேன். ஏனென்றால் அவர்கள் இல்லாமல் எந்தக் காரியத்தையும் வெற்றிகரமாக நாம் நடத்த முடியாது.  எனவேதான் அந்த இளைஞர்களாக இருக்கிற நீங்கள், இங்கு வந்து அமர்ந்திருக்கிற நீங்கள் அமைதியாக இருந்து இந்தக் கூட்டத்தை நடத்திக் கொடுப்பீர்களேயானால், இளைஞர்களால் எல்லாம் ஆகும், இளைஞர்களால் முடியாதது எதுவும் இல்லை என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. (பலத்த கைதட்டல், ஆரவாரம்)   உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன், தி.மு.கழகம் ஒரு  அரசியல் கட்சி என்று சொல்வதை விட, ஒரு சமுதாய இயக்கம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். தி.மு.கழகத்தினுடைய கொள்கைகள் சாதி, மதம் இவைகளுக்கு அப்பாற்பட்டு எல்லோரும் நம்மவர்கள்தான் என்ற நிலையிலே இன்றைக்கு இயங்குகிற இயக்கம் தி.மு.கழகம். எல்லோரையும் அரவணைத்துச் செல்கின்ற இயக்கம் தான் தி.மு.கழகம். அந்தக் கழகத்தினுடைய இந்தப் பெருங்கூட்டம் இன்று மாயவரத்திலே - மயிலாடுதுறையிலே நடைபெறுகின்றது என்றால் நான் உள்ளபடியே சொல்கிறேன். (தொடர்ந்து திரண்டிருந்த கூட்டத்தினர் ஆரவாரம் செய்தவாறு இருந்தனர்)   கொஞ்சம் அமைதியாக இருந்தால்தான்  சில கருத்துக்களை உங்களுக்குச் சொல்ல முடியும்! தயவு செய்து இளைஞர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நீங்களும் பேசி, நானும் பேசினால் யார் பேசியதும் புரியாமல் போய் விடும்.ஆகவே இளைஞர் சமுதாயம்தான் ஒரு நாட்டை வாழ வைக்கக் கூடிய இனிய சமுதாயம்.  அந்த பெரும்பொறுப்பை இங்கே உள்ள இளைஞர்கள் நிறைவேற்றித் தர வேண்டும். நேற்றைக்கு நான் பேசியக் கூட்டங்களில் எல்லாம் குறிப்பாக பாண்டிச்சேரியிலே நான் பேசியபோது இளைஞர்களுடைய முக்கியத்துவம் என்ன என்பதை எடுத்துச் சொன்னேன். அதையே இன்றைக்கும் சொல்கிறேன் இளைஞர்கள் இல்லாமல் எந்த காரியமும் நடைபெறாது, இளைஞர்களால் தான் ஒரு நாட்டை முன்னேற்ற முடியும்.  (மீண்டும் நீண்ட நேரம் முழக்கங்களையும், ஆரவாரங்களையும் எழுப்பிக் கொண்டே இருந்தனர்) கடந்த ஐந்தாண்டு காலமாக ஒரு ஆட்சி, ஆட்சி என்றப் பெயரால் காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியினால் ஏற்பட்டுள்ள அவலங்கள் என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.  வருகிற வழியிலே விவசாயப் பெருங்குடி மக்கள் கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்தேன், அந்த விவசாயப் பெருங்குடி மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து, அதை செய்வதற்கு இந்த ஆட்சி தயாராக இல்லை.     கழக ஆட்சி இன்றைக்கு நடைபெற வில்லை, ஆனால் அண்ணாவின் பெயரைக் கட்சிக்கு  வைத்துக்  கொண்டிருக்கும்  ஒரு கட்சியின் ஆட்சி  இங்கே நடந்து கொண்டிருக்கிறது.  அண்ணா குண சீலர், அண்ணா சமாதானப் பிரியர், அண்ணா எதையும் தாங்கும் இதயம் படைத்தவர், அந்த அண்ணாவின் பெயரால் நடைபெறுகின்ற ஆட்சி எந்த முறையில் நடைபெறுகிறது என்பதை தயவு செய்து நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்றைக்கு காலையிலும், மாலையிலும்  வந்திருக்கிற சில பத்திரிகைகளிலே பார்த்தால் முதலமைச்சராக தற்போது பொறுப்பிலே இல்லாவிட்டாலும், """"ஆக்டிங்’’ முதலமைச்சராக இருந்த  ஒருவர் செய்த அநியாயங்களை அந்தப் பத்திரிகைகள் பெரிய அளவில் வெளியிட்டிருக்கிறது.   அது மாத்திரமல்ல, அவரோடு  வேறு சில மந்திரிகளும் சேர்ந்து கொண்டு என்னென்ன காரியங்களை செய்தார்கள், செய்து கொண்டு இருக்கிறார்கள், எவ்வளவு பொருள் ஈட்டியிருக்கிறார்கள்  என்ற இந்த கணக்கு வழக்குகளும் அந்தப் பத்திரிகைகளிலே வெளியிடப்பட்டிருக்கிறது.   நான் கேட்கிறேன், இவைகளுக்கெல்லாம் என்ன நடவடிக்கை, யார் நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள், இதையெல்லாம் பார்த்து தமிழ்நாட்டு ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா? அல்லது  டெல்லியிலே இருப்பவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை விரைவிலே தெரிந்து கொள்ளலாம்.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தலுக்காக வேட்பாளர்கள் ஆங்காங்கே தயாரான நிலையிலே நிறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் என்ன நடக்கிறது, எவ்வளவு அபத்தங்கள் நடக்கின்றன? எவ்வளவு அநியாயங்கள் நடக்கின்றன? பத்திரிகைகளிலே வந்திருக்கிற செய்திகளைப் பார்த்தால் கோடிக்கணக்கான ரூபாய் பதுக்கப்பட்டு அவைகள் எல்லாம் தேர்தல் நேரத்திலே வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக சேகரிக்கப் பட்ட பணம் என்று சொல்லப்பட்டு அதை விசாரித்த வகையிலே இவைகள் எல்லாம் உண்மைதான் என்று நமக்கே தோன்றுகின்ற வகையில் அவ்வளவு பணம் கோடானுக் கோடிக் கணக்கிலே சேர்க்கப்பட்டிருக் கிறது.   இவைகளையெல்லாம் யார் தடுப்பது, இவைகளை  எல்லாம் யார் கேட்பது, நாம் தான் கேட்க வேண்டும், நாம்தான் இதைப்பற்றி யோசிக்க வேண்டும், இப்போது நடப்பது ஒரு காட்டாட்சி (பலத்த கைதட்டல்) ஜெயலலிதா பாஷையிலே சொல்ல வேண்டுமேயானால் ஒரு கண்காட்சி. காட்சியும் கண்காட்சியும் வேண்டாம்.  நமக்கு நல்லாட்சிதான் வேண்டும் (பலத்த கைதட்டல்) என்று நாம் இன்றைக்கு பாடுபட்டு கொண்டிருக்கிறோம்.  நல்லாட்சி என்பது என்ன?  மனித சமுதாயத்தில் அமைதி, பொறுமை, கண்ணியம், கட்டுப்பாடு, இவைகள் எல்லாம் காப்பாற்றப்படுகின்ற அளவிற்கு சமுதாயம் சீர்திருத்தப் படவேண்டும்.   தி.மு.கழகத்தைப் பொறுத்தவரையில் நான் பல இடங்களிலே சொன்னதைப் போல இது ஒரு அரசியல் கட்சியல்ல, அரசியலாக இருந்தாலும்கூட, தி.மு.கழகம் ஒரு சமுதாயப் பேரியக்கம்.  சமுதாயத்தை சீர்திருத்த வேண்டும், சமுதாயத்திலே உள்ளவர்கள் நல்லவர்களாக, வல்லவர்களாக வாழ வேண்டும் என்பதற்காக ஏற்பட்ட இயக்கம் தி.மு.கழகம்.    இந்த கழகத்தில் இருந்து கொண்டு, கலாம் விளைவித்து ஏதாவது செய்ய வேண்டுமென்று எண்ணினால் அவர்கள் தோற்றுத்தான் போவார்கள் என்பதை எடுத்துச்சொல்ல விரும்புகிறேன்.  (பலத்த கைதட்டல்) தி.மு.கழகத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் தங்களுடைய பணிகளை மக்களுக்காகச் செய்பவர்களாக இருக்க வேண்டும். சமுதாயத்திற்காக செயல்படுபவர்களாக இருக்க வேண்டும் அப்படி செய்தால்தான் இந்த இயக்கத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். இல்லையேல் மக்கள் மறந்து போய்விடுவார்கள்.  மக்கள் இயக்கத்தை நடத்த விடமாட்டார்கள். இதைப் புரிந்து கொண்டு நான் ஆரம்பத்திலே சொன்னதை மறந்து விடாமல்,  இளைஞர்களால்தான் ஒரு நாட்டைக் காப்பாற்ற முடியும், இளைஞர்கள் தான் இந்த நாட்டைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களுடைய முக்கியமான வேலை, தாங்கள் திருந்திக் கொண்டு மக்களையும் திருத்த வேண்டும்.    இளைஞர்களால் திருத்த முடியாவிட்டால் மக்களை திருத்த முடியாது.  எனவே மக்களை திருத்துகின்ற பணியிலே தி.மு.கழகத்தில் உள்ள இளைஞர்கள் எல்லாம் வரிசை வரிசையாக, அணி அணியாக புறப்பட்டு வரவேண்டும் என்று அவர்களையெல்லாம் அழைக்கின்றேன்.  அத்தகைய சூழ்நிலை தமிழ்நாட்டிலே ஏற்பட்டால் தமிழகத்தை வளப்படுத்தக்கூடிய சூழ்நிலை ஏற்படுமேயானால், தமிழகத்திலே மண்டிக்கிடக்கின்ற கள்ளிச் செடிகளையெல்லாம் அழித்து ஒழித்து ஒரு புதுமையை ஏற்படுத்தவேண்டுமேயானால், அறிஞர் அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவைகளை ஏற்றுக்கொண்டு அந்த வழியிலே நடைபோட வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.   தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டு மக்கள் வாழ வேண்டும் என்று சிந்தித்தார். தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் ஏகப்பட்ட சுதந்திரம் வேண்டும்  அவர்களுடைய ஜாதி வேற்றுமை களையப்பட வேண்டும்; அவர்களுடைய மனித நேயம் ஓங்க வேண்டும் என்று பெரியார் போன்றவர்கள் பாடுபட்டார்கள்.   நாம் அந்த கொள்கைகளையெல்லாம் நிறைவேற்றவும், அந்தக் கொள்கைகளுக்கு வலு சேர்க்கவும், நாம் நம்முடைய பணியைத் தொடரவேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன். அப்படி கேட்டுக் கொள்கின்ற நேரத்திலே இப்போது வந்திருக்கின்ற இந்தத் தேர்தலில் என்னென்ன காரியங்கள் நடைபெறுகின்றன என்பதை எண்ணிப் பார்த்தால், வாக்காளர்களை பணம் கொடுத்து அணுகுகிறார்கள். ஓட்டுக்களுக்கு பணம் கொடுப்பதற்காக பல்லாயிரக் கணக்கான ரூபாய்களை செலவிடுகிறார்கள். அப்படி செலவிடுவதற்காக தங்களுடைய வீட்டிலே  ஏராளமான  பொருள்களையெல்லாம் சேர்த்து வைக்கிறார்கள்.  அதுமாத்திரமல்ல, தி.மு.கழகத்தை வேறு சில கட்சிகளை அழித்து ஒழித்துவிட வேண்டும், பிறகு நான்தான் ராஜா என்ற முறையிலே வாழ வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவர்கள் நடத்துகின்ற ராஜலீலைகள் சாதாரணமானதல்ல. இவைகளையெல்லாம் எதிர்த்து தோற்கடித்து நாம் நம்முடைய கலையை, நம்முடைய வீரத்தை, நம்முடைய நாகரீகத்தை காப்பாற்ற நாம் எடுக்கக்கூடிய முடிவுதான் தி.மு.கழகம், தோழமைக் கட்சிகள்;   இவர்கள் எல்லாம் சேர்ந்த இந்த இணைப்பு வெற்றி பெறவேண்டும் என்பதுதான்.  அந்த வெற்றியைப் பெற நீங்கள் பாடு பட வேண்டும். வெற்றியைப் பெறுவது வெறிக் கூச்சல்களால் முடியாது.  வெற்றியைப் பெறுவதற்கு வெறியாட்டம் போட்டால் முடியாது, வெற்றியைப் பெறுவதற்கு விடாத கூச்சல் போட்டால் முடியாது, வெற்றியைப்பெற வேண்டுமேயானால் அமைதி வேண்டும்.  புத்தர்  இருந்தார் - அமைதியாக இருந்தார் - அமைதியாக சிந்தித்தார் அந்த புத்தனுக்கு வெற்றி கிடைத்தது.   எல்லோருக்கும் வெற்றி கிடைக்கும், நிச்சயமாக கிடைக்கும். அப்படி கிடைக்கின்ற வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் இன்றைக்கு கடைப்பிடிக்கின்ற இந்த கொள்கைகளை ஏழை எளிய மக்களுக்காக, பாட்டாளி மக்களுக்காக, பாடுகின்ற  மக்களுக்காக பயன்படுத்த வேண்டும்.   இந்தத் தொகுதியைப் பொறுத்தவரையில் நான் வருகின்ற வழியிலே பார்த்தேன், இது விவசாயிகளுடைய மாவட்டம்.  வேளாண்மைத் தொழிலிலே உள்ளவர்களுடைய மாவட்டம். இந்த மாவட்டத்தில் வாழுகின்ற மக்கள் மேலும் வளமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் தி.மு.கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையில் விவசாயிகளை உயர்த்த நாங்கள் எங்களுடைய தேர்தல் அறிக்கையிலே விவசாயிகளுக்காக பெரும்பாலான இடத்தை ஒதுக்கி இருக்கிறோம்.     விவசாயிகளுக்கு என்று தனி பட்ஜெட் தி.மு.கழகம் சார்பிலே போடப்படும் என்று அறிவித்திருக்கிறோம். (பலத்த கைதட்டல்) அப்படி போடப்படுகின்ற  பட்ஜெட்டில் விவசாயிகளுடைய வாழ்வு ஏற்றம் பெற, மேலோங்க அவர்களுடைய தொல்லைகள் தீர, அவர்களுடைய கவலைகள் தீர, அவர்களுக்கு இருக்கின்ற வேதனைகள் எல்லாம் களைய நாம் எண்ணற்ற திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறோம்.  தேர்தல் அறிக்கை என்பது சாதாரணமானதல்ல.  மக்களுடைய உணர்வுகளை பிரதிபலிக்கின்ற ஒரு அறிக்கைதான் தி.மு.கழகத்தினுடைய தேர்தல் அறிக்கை. அந்த அறிக்கையைத்தான் நாங்கள் தயாரித்திருக்கிறோம். அந்த அறிக்கையை தி.மு.கழகத்தின் சார்பிலே தந்தாலும்கூட அது உங்களுடைய அறிக்கை.  நீங்கள் தயாரித்த அறிக்கை, நீங்கள் என்னென்ன வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்களோ அவைகளையெல்லாம் விசாரித்து, அவைகளையெல்லாம் பொருட்படுத்தி, அவைகளைப்பற்றியெல்லாம் பரிசீலனை செய்து நீங்கள் வைத்த கோரிக்கைகளையெல்லாம் இணைத்திருக்கிறோம். அந்த இணைப்புதான் தி.மு.க. தேர்தல் அறிக்கை . அந்த அறிக்கையை வெற்றிகரமாக செயல்படுத்துவோம், அந்த அறிக்கையை விரைவில் செயல்படுத்துவோம், அந்த அறிக்கையின்படி விவசாயிகளுடைய நெல்லுக்கு, விவசாயிகளுடைய கரும்புக்கு, அவர்கள் எதிர்பர்த்த  விலை தரப்படும் என்பதை சொல்லிக் கொள்கிறேன். (பலத்த கைதட்டல்)   இன்றைக்கு தமிழ்நாட்டிலே இருக்கின்ற பெரிய பிரச்சினை மது விலக்கு.  அந்த மதுவிலக்கு பிரச்சினையைப் பொறுத்தவரையில் தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்குதான்.  (பலத்த கைதட்டல்) ஏனென்றால் மது அருந்துகின்ற காரணத்தால் எத்தனை மனிதர்கள் இன்றைக்கு வீணாகப் போகிறார்கள்.  எத்தனை வாலிபர்களுடைய உயிர் போயிருக்கிறது. எத்தனை பெண்களுடைய கற்புக்கு இந்த மதுவினால் சோதனை ஏற்பட்டிருக்கிறது? இதையெல்லாம் களையத்தான் மது வேண்டாம் என்று அன்று உத்தமர் காந்தியடிகள் சொன்ன அந்த கொள்கையை நாங்கள் 1974-ஆம் ஆண்டிலேயே தி.மு.கழக ஆட்சியிலேயே  மது விலக்கைக் கொண்டு வந்தோம்.  சில பேர் கேட்கிறார்கள்?  மது விலக்கைக்  கொண்டு வந்தீர்கள், மறுபடியும் மதுவை வியாபாரம் செய்தீர்களே அது எப்படி நியாயம்? என்று கேட்கிறார்கள்.  ஆமாம். நான் இல்லை என்று சொல்ல வில்லை, மது விலக்கை தற்காலிகமாக -  ஒரு ஸ்டாப் என்பார்களே அதைப் போல ஒரு மூன்று நான்கு ஆண்டிற்கு மது விலக்கை ஒத்தி வைத்து நாங்கள் தமிழ்நாட்டிலே அரசுக்கு  வரவேண்டிய வரவு, செலவு;  அதைக் கணக்குப் பார்த்து  ஏற்படுகின்ற நஷ்டத்தை ஈடுகட்ட, மது விலக்கு திட்டத்தை ஓரிரு ஆண்டு காலம் ஒத்தி வைத்தது உண்மை.  அப்படி ஒத்தி வைக்கப்பப்பட்ட அந்த திட்டத்தை மீண்டும் 1974-ஆம் ஆண்டு அமலுக்கு கொண்டு வந்து மதுவிலக்கை அமல்படுத்தினோம்.  யாரும் இனிமேல் கடைகளிலே மது விற்கக்கூடாது என்று சட்டத்தை வேகமாக ஆக்கி திட்டவட்டமாக அறிவித்து அதற்குரிய தண்டனைகளையெல்லாம் தந்து மதுவிலக்கு திட்டத்தை 1974-ஆம் ஆண்டு தீவிரமாக ஆக்கியது தி.மு.கழக அரசு.   அதற்குப் பிறகு வந்த ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி. அந்த ஆட்சியிலே ஊருக்கு ஊர்  சாராயம்.  கள். பிராந்தி. என்ற முறையிலே மது பெருக ஆரம்பித்தது.  இன்னும் சொல்லப் போனால் சர்க்காரே மது வியாபாரத்தில் ஈடுபட்டது. ஜெயலலிதா அவர்களுடைய  உடன்பிறவாச் சொந்தங்களே மது வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.  இல்லை என்று மறுக்க முடியாது.  ஆனால் இன்றைக்கு நான் பார்த்தேன் மெல்ல மெல்ல, படிப்படியாக நாங்கள் மதுவிலக்கை கொண்டு வருவோம் என்கிறார்கள். அது என்ன படி படி? எனக்கு புரியவில்லை.  படி படி என்றால் எப்போது மரக்கால் மரக்காலாக செய்யப்போகிறார்கள்?  இப்போது படிப்படியாக மதுவிலக்காம்.  அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை, ஒரே அடியாக மதுவிலக்கு.  யாரும் மது அருந்தக்கூடாது, அது அருந்தினால் தண்டனை, மது அருந்தி நம்முடைய வீட்டிலே உள்ள குழந்தை குட்டிகளையெல்லாம் கொலை செய்தோ, அல்லது அவர்களே கொலைக்கு ஆளாகிற நிலை ஏற்படுவதை பார்க்கிறோம்.     மது அருந்துவதைவிட விஷத்தை அருந்தலாமே என்று சொல்லுகின்ற அளவிற்கு மது பழக்கத்தினால் தமிழ் நாட்டு மக்கள் கெட்டுப்போய்விட்டார்கள். அதை மறப்போம், அதை தடுப்போம், (பலத்த கைதட்டல் - ஆரவாரம்) என்னுடைய இந்த முழக்கத்தை ஆதரித்து கைதட்டுகின்ற இளைஞர்களை பார்க்கிறேன், முதலில் வாலிபர்கள், இளைஞர்கள்தான் திருந்த வேண்டும். அவர்கள்தான் இந்தக் காரியத்தை செய்ய வேண்டும் ஆகவே இனி தமிழ்நாட்டிலே தி.மு.கழக ஆட்சி ஏற்பட்டால் முதல் கையெழுத்து - முதல் நாள் நான் போடுகின்ற கையெழுத்து மதுவிலக்குத் திட்டம்தான்.   (கைதட்டல்)  எனவே அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று இளைஞர்களையெல்லாம் கேட்டுக் கொண்டு, வாலிபர்களையெல்லாம் கேட்டுக் கொண்டு நாம் மதுவிலக்கில் தீவிரமாக இருப்போம், மனிதர்களை வாழ வைக்க மதுவிலக்கு, அதுதான் இந்த உலகத்தை வாழவைக்கும்.      ஆகவே மதுவை ஒழிப்போம். மதியை வளர்ப்போம். மனதை பண்படுத்துவோம். அடக்கத்தைக் கற்போம். தி.மு.கழகத்தை ஒரு சமுதாய இயக்கமாக ஏற்போம். நம்முடைய தோழமைக் கட்சிகளாக இருக்கின்ற இந்திய யூனியன் முல்லிம் லீக் கட்சியாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, இந்தக் கட்சிகளையெல்லாம் ஒருங்கிணைத்து தமிழ்நாட்டை வளப்படுத்துவோம். தமிழ்நாட்டை மேலும், மேலும் உயர்த்துவதற்குப் பாடுபடுவோம் என்று கேட்டுக் கொண்டு நீங்கள் காட்டிய அமைதிக்கும், ஆர்வத்திற்கும்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

Read More

பொய் முகத்தை அடையாளம் காட்டு; நமது புதிய ஆட்சி தானாகப் பூக்கும்! வெற்றி நமதே!

முதலமைச்சர் ஜெயலலிதா, மதுவிலக்கு பற்றி அவருடைய கேள்விகளுக்கு நாம் என்னதான் எவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்கமாக பதில் அளித்தபோதிலும், மதுவிலக்கு பற்றிப் பொய் பேசுவதை அவர் நிறுத்துவதாக இல்லை. தற்போது கழகத்தின் தேர்தல் அறிக்கையில், "தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும். மதுவிலக்கை அமல்படுத்தும் நடைமுறையை மேற்கொள்வதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய உரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு மாநில விற்பனைக் கழகம் (டாஸ்மாக்) கலைக்கப்பட்டு, இந்த விற்பனைக் கழகத்தின் மூலம் தற்போது செய்யப்பட்டு வரும் மதுபான விற்பனை முற்றிலும் நிறுத்தப்படும்""என்று கூறப்பட்டுள்ளது.   ஆனால் மதுவிலக்குப் பிரச்சினையில், தமிழகச் சட்டப்பேரவையில் இந்தத் துறையின் அ.தி.மு.க. அமைச்சர் படிப்படியாகக்கூட மதுவிலக்கைக் கொண்டு வர இயலாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்து, அது அனைத்து நாளேடுகளிலும் வந்தது. அதற்குப் பிறகு தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா பேசும் போது, அமைச்சர் பேரவையில் தெரிவித்ததற்கு மாறாக, தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கைக் கொண்டு வரப் போவதாக அறிவித்தார். அப்படி அரைகுறை எண்ணத் தோடு அறிவித்தவர்தான், தற்போது தி.மு. கழகத் தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும் என்றுதானே உள்ளது, ஏன் பூரண மதுவிலக்கு என்று குறிப்பிடவில்லை, முதல் கையெழுத்து போடப்படும் என்று ஏன் வாக்குறுதி அளிக்கவில்லை, மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் எண்ணமே தி.மு.க.வுக்குக் கிடையாது என்றெல்லாம் ஏதோ கற்பனை செய்து கொண்டு, கேட்டுத்தான் வைப்போமே என்பதற் காகப் பேசியிருக்கிறார். இவ்வாறு அவர் பேசியிருப்பதில் இருந்தே, அவர் மக்களை ஏமாற்றவும் திசை திருப்பவும் திரும்பத் திரும்ப என்ன பாடுபடுகிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. "தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும். மதுவிலக்கை அமல்படுத்தும் நடைமுறையை மேற்கொள்வதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய உரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்"" என்று தெளிவாக தி.மு. கழகத் தேர்தல் அறிக்கையில் கூறிய பிறகும், படிப்படியாக மது விலக்கைக் கொண்டு வரப்போகிறேன் என்று பொதுத் தேர்தலுக்காக வேறு வழியின்றிப் பேசியிருக்கும் ஜெய லலிதா, மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் எண்ணமே எனக்குக் கிடையாது என்று இல்லாத ஒன்றை இட்டுக்கட்டித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசியிருக் கிறார். எப்படியோ? நாம்தான் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமரப் போகிறோம் என்பதை ஜெயலலிதாவே புரிந்துகொண்டு விட்டார் என்பது நன்றாகவே புரிகிறது! மேலும் ஜெயலலிதா பேசும்போது, "என்னைப் பொறுத்தவரை பூரண மது விலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் எனது கொள்கை. ஆனால் பூரண மதுவிலக்கை ஒரே கையெழுத்தில் கொண்டு வருவது என்பது இயலாது"" என்றும் கூறியிருக்கிறார். பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் அவரது கொள்கை என்றால், கடந்த ஐந்தாண்டு காலமாக ஆட்சியிலேதான் ஜெயலலிதா இருக்கிறார். அனைத்து அதிகாரமும் அவர் கையில்தானே இருக்கிறது! பூரண மதுவிலக்குக்காக, படிப்படியாகவாவது அதைக் கொண்டு வர, ஒரு துரும்பையாவது கிள்ளிப் போட்டாரா? தியாகி சசிபெருமாள் மரணமடைந்த போதும், டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லிப் பெண்கள் போராட்டம் நடத்தியபோதும் அவற்றை ஜெயலலிதா வேடிக்கை பார்த்துக் கொண்டு தானே இருந்தார்! மதுபானம் தயாரிக்கும் "மிடாஸ் தொழிற்சாலை" யாருடையது? அது யாருடைய பெயரில் இருக்கிறது? அதன் இயக்குநர்களாக யார் யார் இருந் தார்கள் - இப்போது இருக்கிறார்கள்? கடந்த ஐந்தாண்டு காலத்தில் அந்த நிறுவனத்திலிருந்து மட்டும் எந்த அளவுக்கு மது பானங்கள் வாங்கப்பட்டன? அதனால் இலாபம் அடைந்தவர்கள் யார்? "பார்""களுக்கு நேரடி யாகவே அந்த நிறுவனம் மது விற்பனை செய்வதாகச் செய்திகள் வருகின்றனவே! இதற்கான பதில்களை முதலமைச்சர் ஜெயலலிதா தன்னுடைய அடுத்த பிரச்சாரக் கூட்டத்தில் சொல்லத் தயாரா?  "தி.மு.க. தனது 2006ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி விட்டதாக கருணாநிதியும், தி.மு.க. வினரும் பொய் சொல்லி வருகின்றனர்" என்றும் ஜெயலலிதா பேசி, அவர்களது கட்சி இதழில் வெளிவந்துள்ளது. 2006 தேர்தல் அறிக்கை பற்றி பத்தாண்டுகள் கழித்து இப்போது என்ன அவசியம் ஏற்பட்டது? இருந்தாலும் நான் பேசியதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். 2006 தேர்தல் அறிக்கையில் நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பத்திற்கும் நிலம் வழங்குவோம் என்று தி.மு.க. வாக்குறுதி அளித்ததா? இல்லையா? அதைச் செய்யவில்லையே என்று ஜெயலலிதா கேட்டிருக் கிறார். 1 இலட்சத்து 79 ஆயிரத்து 2 நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் குடும்பங் களுக்கு 2 இலட்சத்து 12 ஆயிரத்து 995 ஏக்கர் இலவச நிலம் கழக ஆட்சியில் வழங்கப் பட்டது. இது தமிழகத்திலே உள்ள விவசாயிகள் - விவசாயத் தொழிலாளர்கள் அனைவர்க்கும் தெரியும். அந்த உண்மை ஜெயலலிதாவுக்குத் தெரியவில் லையா? அல்லது அதைப்பற்றியும் ஒரு பொய்யைச் சொல்லி வைப்போம் என்று கூறுகிறாரா? ஆனால் கழக ஆட்சிக்குப் பிறகு இந்த ஐந்தாண்டுகளில் அ.தி.மு.க. ஆட்சியில் எத்தனை விவசாயிகளுக்கு எவ்வளவு ஏக்கர் நிலம் இலவச மாக வழங்கப்பட்டது என்று ஜெயலலிதா சொல்லத் தயாரா? ஜெயலலிதா தி.மு.கழகத் தேர்தல் அறிக்கை பற்றி கேட்டதால், 2006 தேர்தல் அறிக்கையில் திராவிட முன்னேற்றக் கழகம் சொன்னது என்ன, செய்தது என்ன என்ற புள்ளி விவரத்தையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். > ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வீதம் மாதம் 20 கிலோ அரிசி வழங்குவதாகச் சொன்னோம். அவ்வாறு வழங்கியதில் 1 கோடியே 85 இலட்சம் குடும்பங்கள் பயன் பெற்றன.  > 22 இலட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்களுக்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி;  > 2006க்குப்பின் கழக ஆட்சியில் 35 இலட்சத்து 54 ஆயிரத்து 721 விவசாயிகளுக்கு 8 ஆயிரத்து 477 கோடியே 56 இலட்சம் ரூபாய் பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டன.  > மீண்டும் புதுப்பொலிவுடன் 117 உழவர் சந்தைகள்; மேலும் புதிதாக 45 உழவர் சந்தைகள் அமைப்பு; > பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 2006இல் 50 சதவீத காப்பீட்டுத் தொகையை அரசே மானியமாக வழங்கி, ஊக்கப்படுத்தியதால் 9 இலட்சத்து ஆயிரத்து 643 விவசாயிகளுக்கு 974 கோடி ரூபாய் இழப்பீடுத் தொகை வழங்கப்பட்டது;  > ஆதிதிராவிட விவசாயிகள் ‘தாட்கோ’ நிறுவனத்தின் மூலம் 31.3.2006 வரை பெற்ற கடன் தொகை வட்டியுட்பட 5 கோடியே 25 இலட்சம் தள்ளுபடி;  > மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை இணைக்கும் புரட்சிகரமான திட்டத்தின்கீழ் 189 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம்; > 369 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம்; > விவசாயிகளைச் சுய உதவிக் குழுக்களாக ஒருங் கிணைத்து சுழல்நிதி வழங்கும் திட்டத்தின்கீழ் 27 ஆயிரத்து 294 குழுக்கள் அமைக்கப்பட்டு, 27 கோடியே 29 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் சுழல்நிதியாக வழங்கப்பட்டு, 32 ஆயிரத்து 940 குழுக்களுக்கு 402 கோடியே 56 இலட்சம் ரூபாய் பயிர்க் கடனாகவும் அளிக்கப்பட்டுள்ளது.  > விவசாயத் தொழிலாளர் நல வாரியம் உட்பட 34 அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியங்களில் 2 கோடியே 11 இலட்சத்து 55 ஆயிரத்து 525 உறுப்பினர்கள் சேர்ப்பு;  > 20 இலட்சத்து 75 ஆயிரத்து 512 அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு 995 கோடியே 78 இலட்சத்து 48 ஆயிரத்து 815 ரூபாய் உதவித் தொகை; > 3742 கோடியே 42 இலட்சத்து 59 ஆயிரம் ரூபாய்ச் செலவில் ஒரு கோடியே 62 இலட்சத்து 59 ஆயிரத்து 526 குடும்பங் களுக்கு இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டன. > 661 கோடி ரூபாய்ச் செலவில் 29 இலட்சம் குடும்பங்களுக்கு எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகள் வழங்கப்பட்டன;  > 8 இலட்சத்து 29 ஆயிரத்து 236 ஏழைக் குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டாக்கள்;  > காமராஜர் பிறந்த நாளில் """"கல்வி வளர்ச்சி நாள்"" என பள்ளிகளில், கல்வி விழா;  > 73 இலட்சம் குழந்தைகள், மாணவ மாணவியருக்கு சத்துணவுடன் வாரம் 5 நாட்களும் முட்டைகள்; சாப்பிடாத குழந்தைகளுக்கு வாழைப் பழங்கள்;  > 11 இலட்சம் மாணவ, மாணவியருக்கு 10, 12ஆம் வகுப்புகளின் அரசுத் தேர்வுக் கட்டணங்களும் ரத்து.  > 2010-2011 முதல் எம்.ஏ., எம்.எஸ்ஸி., வகுப்புகளுக்கும் படிப்புக் கட்டணங்கள் ரத்து.  > ஆண்டுதோறும் 24 இலட்சத்து 82 ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கும், 4 இலட்சத்து 35 ஆயிரம் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ்; > தொழிற்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ரத்து. > "மாவட்டத்திற்கொரு மருத்துவக் கல்லூரி"" கோட்பாட்டின்படி விழுப்புரம், திருவாரூர், தருமபுரி, சிவகங்கை, பெரம்பலூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்; > பத்தாம் வகுப்புவரை பள்ளிகளில் தமிழ்மொழி கட்டாயப் பாடமென சட்டம்; > நூறாண்டுக் கனவை நனவாக்கிச் "செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்"" சென்னையில் அமைப்பு.  > 4724 திருக்கோவில்களில் 523 கோடி ரூபாய் செலவில் திருப்பணிகள் செய்து குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளன;  > ஏழைக் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தலா 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி திட்டத்தின்கீழ் 25 இலட்சத்து 76 ஆயிரத்து 612 ஏழை மகளிர்க்கு மொத்தம் 1389 கோடியே 42 இலட்சம் ரூபாய் நிதியுதவி;  > 50 வயது கடந்து திருமணமாகாமல் வறுமையில் வாடும் 12 ஆயிரத்து 904 ஏழைப் பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை; > "அவசர கால மருத்துவ ஊர்தி 108 சேவைத் திட்டம்"" தமிழகம் முழுவதும் நடைமுறை; 8 இலட்சத்து 8 ஆயிரத்து 907 பேர் பயன்;  > அரசு ஊழியர்களுக்கு "மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்""; > " உயிர்காக்கும் உயர்சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம்"" நடைமுறை; 1 கோடியே 34 இலட்சம் குடும்பங்கள் பதிவு; இதுவரை 2 இலட்சத்து 55 ஆயிரத்து 744 ஏழை மக்களுக்கு 667 கோடி ரூபாய்ச் செலவில் உயிர்காக்கும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன; > ஏறத்தாழ 2 இலட்சத்து 35 ஆயிரத்து 464 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் 62 ஆயிரத்து 349 கோடி ரூபாய் முதலீட்டிலான 27 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்; 24 அரசாணைகள் மூலம் 51 புதிய தொழிற்சாலைகள் அமைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளில் இதுவரை 12 தொழிற்சாலைகள் திறப்பு;  > ஏறத்தாழ 5 இலட்சத்து 5 ஆயிரத்து 314 இளைஞர் களுக்கு அரசு அலுவலகங்களில் புதிய வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன;  > வடசென்னை மீஞ்சூரில் கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் > 2006க்குப்பின் 26 இலட்சத்து 94 ஆயிரம் மகளிர் உறுப்பினரைக் கொண்ட 1 இலட்சத்து 75 ஆயிரத்து 493 புதிய மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப் பட்டு; 1068 கோடி ரூபாய் அளவுக்கு பொருளாதாரக் கடன்கள் வழங்கப்பட்டது. > 2,81,883 மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்ட சுழல் நிதி 281 கோடியே 88 இலட்சம் ரூபாய். > ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக நிலை உயர்த்தப்பட்டது.  > அரியலூர், திருப்பூர் புதிய மாவட்டங்கள் உதயம்; > இஸ்லாமியர் சமுதாயம் மேன்மை பெற 3.5 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு; > அருந்ததியர் சமூகத்தின் அவலம் தீர 3 விழுக்காடு தனி உள் ஒதுக்கீடு;  > அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்க ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள 145 பெரியார் நினைவு சமத்துவபுரங்களுடன் மேலும் 95 சமத்துவ புரங்கள்.  > சென்னை கோட்டூர்புரத்தில் உலகத் தரத்திலான 181 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான """"அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்"" 15.9.2010இல் திறப்பு;  > ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைத்திட 910 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு; புதிய சட்டமன்ற - தலைமைச்செயலக வளாகம் திறந்து சாதனை;  > ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கி நிதி உதவி யுடன் 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் """"மெட்ரோ ரயில் திட்ட"" அமைப்புப் பணிகள்  > 1929 கோடி ரூபாய் மதிப்பீட்டில், """"ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம்;""  > 630 கோடி ரூபாய்ச் செலவில், "இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம்"" நிறைவேற்றம்; > 2 இலட்சத்து 12 ஆயிரத்து 981 சத்துணவுப் பணியா ளர்கள் பயன்பெற காலமுறை ஊதியம்; ஓய்வூதியம்;  > ஆண்டுக்கு 5 ஆயிரத்து 155 கோடியே 79 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவில் அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் 6வது ஊதியக்குழு பரிந் துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.  > 21 இலட்சம் குடிசை வீடுகளை 6 ஆண்டுகளில் கான்கிரீட் வீடுகளாக மாற்றும் "கலைஞர் வீடு வழங்கும் திட்டம்"" என்னும் புரட்சிகரமான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்படி அடுக்கடுக் காகச் சொல்லிக் கொண்டே போகும் அளவுக்கு எண்ணற்ற உறுதிமொழிகள் தி.மு.க. அரசால் நிறைவேற்றப்பட்டன. சொன்னதைச் செய்தோம்; செய்ததை, ஜெயலலிதா கேட்பதால், சொல்கிறோம்! ஆனால் 1. ஜெயலலிதா 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 41 வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்று அ.தி.மு.க. உறுதி அளித்தது. அவை எதுவும் நிறைவேற்றப்பட வில்லை. அந்தத் தேர்தல் அறிக்கையின் கதி என்ன?  2. 2011ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் ஜெயலலிதா இதுவரை எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார்? அவற்றின் விவரம் என்ன?  3. சட்டமன்றத்தில் 110வது விதியின் கீழ் ஜெயலலிதா 20-2-2016 வரை 187 அறிக்கைகளைப் படித்தாரே, அவற் றில் குறிப்பிடப்பட்ட எத்தனை அறிவிப்புகளை இதுவரை நிறைவேற்றியிருக்கிறார்? அவற்றின் விவரம் என்ன? 2006ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதிகள் பற்றி ஜெயலலிதா கேட்ட கேள்விகளுக்கு நான் இங்கே விரிவாகப் பதில் அளித்திருக்கிறேனே; இதைப் போல நான் கேட்டிருக்கும் இந்த மூன்று கேள்விகளுக்கு ஜெயலலிதா பதில் அளிக்க வேண்டும். பொய்களையே முதலீடாக வைத்து, பொய் அரசியல் நடத்தி, பொய்களை மட்டுமே உற்பத்தி செய்து, அவற்றை வினியோகித்து, அப்பாவித் தமிழ் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றி வரும் ஜெயலலிதா, அரசியலில் பொய் சொல்வதில் "கின்னஸ்" சாதனையை ஏற்படுத்தலாம் என்ற எண்ணத்தைக் கை விட்டு; "தமிழகத்தில் வசந்தம் வீசுகிறது" - "நீங்கள் கனவு காணும் ஆட்சியை நான் வழங்குவேன்"" என்பன போன்ற "நகைச்சுவைகளைத்" தவிர்த்து விட்டு; இப்போதாவது பொய்கள் சொல்வதை நிறுத்தி, இதுவரை சொன்ன பொய்களுக்குக் கழுவாய் தேடிக் கொள்ள முயற்சிப்பது சாலவும் சிறந்தது. உடன்பிறப்பே, ஜெயலலிதா கேட்ட கேள்விகளுக்காக மாத்திரம் இவ்வளவு தகவல்களையும் திரட்டி நான் எடுத்துரைக்கவில்லை. இவற்றையெல்லாம் நமது வாக்காளர்களிடம் எடுத்துக் கூறி தெளிவுபடுத்திடவும், ஜெயலலிதாவின் பொய்களைத் தோலுரித்துக் காட்டவும் பயன்படும் என்பதால்தான் இங்கே சொல்லியிருக்கிறேன். ஜெயலலிதா அள்ளி வீசி வரும் பொய்களிலிருந்தும், அவற்றின் தீய விளைவுகளிலிருந்தும் நமது மக்களைக் காப்பாற்றிட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அந்தக் கடமையைச் சிறப்பாக ஆற்றுவாய் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பொய் முகத்தை அடையாளம் காட்டு; நமது புதிய ஆட்சி தானாகப் பூக்கும்! வெற்றி நமதே!

Read More