ஜெயலலிதா அரசின் செயல்பாட்டுக்கு சில உதாரணங்கள்

ஜெயலலிதா அரசின் செயல்பாட்டுக்கு சில உதாரணங்கள்

அமைச்சரவைக் கூட்டம் நேற்றைய தினம் நடைபெற்று இடைக்கால நிதிநிலை அறிக்கை பற்றி விவாதித்துள்ளது.  ஆனால் அமைச்சரவைக் கூட்டம் என்பதே கடந்த சில மாதங்களாக நடைபெறவே இல்லை.  கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21ஆம் தேதி அன்று அமைச்சரவைக் கூட்டம், வெறும் 20 நிமிட நேரமே நடைபெற்ற பிறகு தெரிந்தவரையில் ஆறு மாத காலமாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றதாகத் தெரியவில்லை.மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை அதிகாரிகளின் கூட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவே இல்லை.

 

முதலமைச்சர் ஜெயலலிதா அன்றாடம் காணொலிக் காட்சிகள் வாயிலாக ஏதாவது ஒரு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதாக, புகைப்படம் எடுத்து ஏடுகளுக்கு விநியோகம் செய்வதைத் தான் முதலமைச்சரின் பணி என்று கருதப்படுகிறது.  ஆட்சி முடிகிற போது, அடிக்கல் நாட்டு விழா நடத்தினால், அது எப்போது பயன்பாட்டுக்கு வரும்?  தமது ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது என்று சொல்லிக் கொள்வதற்காகத்தான் இதைச் செய்கிறார்கள்.

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையக் கழகத்துக்கு பத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களை நியமிக்காமல் காலம் கடத்தப்பட்டு, தற்போது ஆட்சி முடியப் போகிறது என்றதும் அவசர அவசரமாக 11 பேரை தேர்வாணையக் கழக உறுப்பினர்களாக இன்று நியமித்திருக்கிறார்கள். அதிலும் பாதி பேர் அ.தி.மு.க. வழக்கறிஞர்கள்.  செய்தித் துறையிலே தற்போது செயலாளராக இருப்பவர், கடந்த நான்கரை ஆண்டுகளாக அ.தி.மு.க. அமைச்சர்களில் ஒருவரைப் போல பணியாற்றியவரை, நன்றிக் கடனாக தேர்வாணையக் கழகத்தில் நியமித்திருக்கிறார்கள். ஆளுங்கட்சியில் இதுவரை இருந்த சட்டப் பேரவை உறுப்பினரே, இந்த ஆட்சியில் அமைச்சர்களும், அதிகாரிகளும் கூட்டுக் கொள்ளை அடிக்கிறார்கள் என்று பொது நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார். அவர் அவ்வாறு பேசியதற்காக அவர் வீடும், காரும் நள்ளிரவிலே தாக்கப்பட்ட நிகழ்ச்சி. அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் போராட்டம் -  செவிலியர்கள் போராட்டம் - சத்துணவுப் பணியாளர்கள் போராட்டம், இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்!