இலங்கை புதிய அரசமைப்புச் சட்டமும், தமிழர்களை ஏமாற்றுகிறதே! தலைவர் கலைஞர் அறிக்கை

இலங்கை புதிய அரசமைப்புச் சட்டமும், தமிழர்களை ஏமாற்றுகிறதே! தலைவர் கலைஞர் அறிக்கை

இலங்கையில்  புதிய அரசியலமைப்பு மன்றம் அதாவது அரசியல் நிர்ணய சபை புதிதாக அமைக்கப்பட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையில் செயல்படுகிறது.  ஸ்ரீலங்கா அரசியலமைப்புச் சட்டம் முதன் முதலாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காலத்தில் 1948ல் அப்போது சிலோன் அரசின் கவர்னர் ஜெனரலாக இருந்த சோல்பரி வடிவமைத்தார்.   இந்த அரசியல் சட்டத்தின்படி பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறையை ஒட்டி, செனட், மக்களவை ஆகிய இரண்டு அவைகளைக் கொண்ட அமைப்பு நடைமுறையில்  இருந்தது.     இலங்கை விடுதலைக்குப் பின்னர்  பண்டாரநாயகா காலத்தில் முதல் குடியரசு அரசியல் சட்டம் வகுக்கப்பட்டு “சிலோன்"" என்பது “ஸ்ரீலங்கா"" என்று மாhற்றிப்  பெயரிடப்பட்டது.  22.5.1972 அன்று பிரகடனப்படுத்தப்பட்ட இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலம்  கூட்டாட்சி மற்றும் சமஷ்டி அமைப்பு இல்லாமல்,  ஒற்றையாட்சி முறையை பண்டார நாயகா நடைமுறைக்குக்  கொண்டு வந்தார்.  இதில் இலங்கையின் பூர்வ குடி மக்களான தமிழர்களுடைய உரிமைகள் அங்கீகரிக்கப்படாமல் அப்படியே  காவு வாங்கப்பட்டன.  பல மொழி பேசுவோர் உள்ள இலங்கையில் அவர்கள் அனைவரையும் இரண்டாந்தரக் குடி மக்களாக ஆக்கிடும் வகையில்  சிங்கள மொழியே ஆட்சி மொழி என அறிவிக்கப்பட்டது. பல்வேறு மதங்களைச் சார்ந்தோர் வாழ்ந்து வரும் இலங்கையில்  புத்த மதம் நாட்டின் மதமாக  பிரகடனப்படுத்தப்பட்டு, மதச் சார்பு நாடானது.     ஸ்ரீமாவோ பண்டாரநாயகாவுக்குப் பின் 1979ல் ஜெயவர்த்தனே காலத்தில் இரண்டாவது அரசியலமைப்புச் சட்டம்  பிரான்ஸ் நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு வகுக்கப்பட்டது.  அனைத்து  அதிகாரங்களும் அதிபருக்கே என்று  அதிகாரங்களையெல்லாம்  ஜெயவர்த்தனே கைப்பற்றிக் கொண்டார். தமிழினத்திற்கு எந்த வகையில் எல்லாம் கேடு செய்ய முடியும் எனத் தேடித் தேடிப் பார்த்து இன  அழிவுக்கு வழி வகுத்தார்.    ரஷ்ய நாட்டின்   14ஆம் லுhயி மன்னன்  போன்று நானிலமே நான்தான்  என்ற போக்கில் ஜெயவர்த்தனே சர்வாதிகாரச் சதுராடினார்.   நீதித்துறை அதிகாரங்களிலும் ஆக்கிரமிப்பு அரங்கேறியது.   ஜெயவர்த்தனே வகுத்தளித்த  இரண்டாவது  அரசியல் சட்டம் 1979லிருந்து இன்றுவரை நடைமுறையில் இருந்து வருகிறது.   இந்த இலங்கை அரசியலமைப்புச் சட்டம் தொடர்ந்து ஸ்ரீமாவோ பண்டாரநாயகா, ஜெயவர்த்தனே, ராஜபக்ஷே போன்ற அதிபர்களுக்கு தமிழர்களை ஒடுக்கவும்  ஒழிக்கவும்  பயன்பட்டது.

 


ஒற்றை ஆட்சி முறை, ஒரே மொழி,  ஒரே மதம்  -  என்று  ஜனநாயகப் போர்வையில்  சர்வாதிகாரம்  கோலோச்சி வந்த இலங்கையில்   மைத்ரி பால  சிறிசேனா தலைமையில் இயங்கும் இன்றைய இலங்கை அரசில் மூன்றாவது அரசியலமைப்புச் சட்டம்  இயற்றிட வழி வகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.    தமிழர்களுக்குச்  சம உரிமைகளுடன் கூடிய  சக வாழ்வுக்கான  வாய்ப்பு கிடைத்திட வேண்டும் என்ற  விருப்பமும், எதிர்பார்ப்பும்  அனைத்துத் தரப்பிலும் எழுந்தன.    ஆனால் இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேனா புதிதாக ஏற்கப்படும் அரசியலமைப்புச் சட்டத்தில் சமஷ்டி அமைப்புக்கு இடம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் மைத்ரி பால சிறிசேனா இவ்வாறு கூறியிருக்கிறார். சமஷ்டி அமைப்புக்கான கதவுகளைத் திறந்து அதன்படி  உரிய அதிகாரங்கள் பரவலாக்கப்படவில்லையென்றால், இலங்கைத்  தமிழர்கள் நிம்மதியாகவும், கண்ணியத்தோடும்  சம உரிமைகளோடு எப்படி  வாழ முடியும்? சமஷ்டி அமைப்புக்கே வழி இல்லை என்று மைத்ரி சிறிசேனா அறிவித்திருப்பது  வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் ஆகும்.
இலங்கையில் தமிழர்கள் வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடையறாத  பீதியை உண்டாக்கும் ராணுவத்தைத்  திரும்பப் பெறவேண்டும். தமிழர்களிடமிருந்து  அபகரித்த நிலங்களை  உரிமையாளர்களிடம் திரும்பவும்  ஒப்படைக்கவேண்டும். மாகாண கவுன்சிலுக்கு உரிய அதிகாரங்கள் குறிப்பாக காவல்துறையை நிர்வகிக்கும் உள்ளக நிர்வாக அதிகாரம், நில நிர்வாக அதிகாரம், மீன்பிடித் தொழில் தொடர்பான அதிகாரம் போன்றவற்றைப்  பிரித்து வழங்கவேண்டும்.  காணாமல் போன தமிழர்களைக் கண்டறிய  உண்மையான முயற்சிகளை  மேற்கொள்ள வேண்டும். 2009ஆம் ஆண்டு  போர்க்காலத்தில் கைது செய்யப்பட்ட தமிழர்களை விடுதலை செய்யவேண்டும். வடக்கு,  கிழக்கு தமிழர்வாழ் பகுதிகளில் முழுமையான  அமைதி  நிலைமை திரும்ப வேண்டும்.    இவற்றுக்கெல்லாம் திறந்த மனதோடு  வழிவகுக்கக்கூடிய புதிய அரசியலமைப்புச் சட்டம் இலங்கையில் உருவாகி நடைமுறைக்கு வந்தால்தான் தமிழினம் உரிமைகளைப் பெற்ற குடிமக்களாகத்  திகழ்ந்திட  முடியும்.  ஆனால் இன்றைக்கும்  சிங்கள அரசாங்கம்,  தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தி, அவர்களுடைய மொழியையும், கலாச்சாரப் பண்பாட்டையும்  சிதைத்துச் சிறுமைப்படுத்தியே  தீரும் என்ற எண்ணம்தான் பெருவாரியான தமிழ் மக்கள் மனதில் பதிந்துள்ளது.  ஆழ வேரூன்றியிருக்கும்    இந்த அச்சத்தைப் போக்கக் கூடிய வகையில் தமிழர்கள் மத்தியில் அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வுக்குச்  சர்வதேச கண்காணிப்போடு பொதுவாக்கெடுப்பும் போர்க் குற்றங்களை விசாரிக்க சுதந்திரமான, நம்பகமான  சர்வதேச விசாரணையும் வேண்டுமென்று தமிழர்கள் தொடர்ந்து உலக அரங்குகளில் வலியுறுத்தி வருகின்றனர்.     தமிழர்களின் கோரிக்கைகள் ஈடேறி, புதிதாக ஏற்றுக்கொள்ளப்படும் அரசியலமைப்புச் சட்டத்தில்  தமிழர்களும் சம உரிமையோடும் சுயமரியாதையோடும் வாழ வகை செய்தால்தான் புதிய  அரசியல் சட்டத்தை  அங்குள்ள தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.  நசுக்கப்பட்டுப் புண்பட்டிருக்கும்   இனத்திற்குப்  புதிய அரசியலமைப்புச் சட்டம் என்ற வெறும் களிம்பு தடவி ஏமாற்றாமல்,  தீவிர சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில், பாரம்பரியம் மிக்க இனம் என்பதால் உரிமைகளும், கவுரமும்  தரப்பட வேண்டும் என்ற எண்ணம் இயல்பாகவே  இருந்தால்தான் இலங்கையின்   சிக்கலான பிரச்சினைகளுக்குத்  தீர்வு காண முடியும்.   இவற்றைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் புதிய அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்திடத் தேவையான  வழி காட்டுதலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்  இலங்கை அதிபருக்கு  வழங்கி அழுத்தம் தர வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.