வாக்கை நிறைவேற்றும் வாய்மையோ, மனச்சாட்சியோ இல்லை! (கலைஞர் பதில்கள் 4.2.2016)

வாக்கை நிறைவேற்றும் வாய்மையோ, மனச்சாட்சியோ இல்லை! (கலைஞர் பதில்கள் 4.2.2016)

கேள்வி :- அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் வெளிவந்த அறிவிப்புகளால் தற்காலிகப் பணியாளர்கள் பீதி அடைந்திருப்பதாக “தினமலர்” செய்தி வெளியிட்டிருக்கிறதே?


கலைஞர் :- இந்தச் செய்தியை வெளியிட்ட அதே “தினமலர்” நாளேட்டிலேயே, “தமிழகச் சட்டசபைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்  என்ற நிலையில், அரசின் பல துறைகளில், காலியிடங்களை நிரப்பும் பணி அவசர கதியில் நடக்கிறது.  அண்ணா பல்கலையில் 130 காலி இடங்களை நிரப்ப,  ஜனவரியில் மட்டும் 10 அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.   குறுகிய கால இடைவெளியில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆட்களைத் தேர்வு செய்யும் பணி தினமும் நடக்கிறது. இதேபோல உதவிப் பேராசிரியர்களைத் தேர்வு செய்யும் பணியும் அவசர கதியில் நடக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

இதே அண்ணா பல்கலைக் கழக நியமனங்களில் நடைபெறும் அளவற்ற முறைகேடுகள் பற்றி 24-1-2016 அன்று நான் விரிவாக ஓர் அறிக்கை வெளியிட் டிருந்தேன்.  அந்த அறிக்கையில், எவ்வாறு அவசர அவசரமாக பல்வேறு பணி இடங்களை நிரப்ப ஆட்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது பற்றியும், அதிலே நடைபெறும் வசூல் கொள்ளைகள் குறித்தும்,  அதிலே யார் யார் ஈடுபட்டிருக்கிறார்கள் என்றும் சுட்டிக்காட்டியிருந்தேன்.   ஆனால் இந்த ஆட்சியினர் அதிலே எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது அண்ணா பல்கலைக் கழகத்திலே மட்டுமல்ல.   தமிழக அரசில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள காலி இடங்களை நிரப்புவதிலே அமைச்சர்களும் அதிகாரிகளும் வெகு வேகமாக ஈடுபட்டு, ஒவ்வொரு பதவிக்கும் இத்தனை இலட்ச ரூபாய் என்று வசூல் வேட்டை கனஜோராய் நடைபெறுகிறதாம். சுகாதாரத் துறையில் மட்டும் 1,200 பேரைத் தேர்ந்தெடுக்கிறார்களாம். கால்நடைத் துறையிலும் இதுபோன்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. செய்தித் துறையில் மக்கள் தொடர்பு அலுவலர்களாக நேரடி நியமனம் செய்வதற் கான வசூல் வேட்டையும் நடைபெற்று வருகிறதாம். இந்த வசூல் வேட்டையில் யாரும் பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம்.  ஏனென்றால் அடுத்து வரும் ஆட்சியில் இவ்வாறு செய்யப்படும் நியமனங் களின் கதி என்ன ஆகுமோ?  ஒரே வரி ஆணையில்  இந்த முறைகேடான அவசர கால நியமனங்களை ரத்து செய்ய வாய்ப்பு ஏற்படலாம் அல்லவா?கேள்வி :- நெல் கொள்முதல் நிலையங்களில் ஆண்டுதோறும் 150 கோடி ரூபாய் வரை ஊழல் நடப்பதாக விவசாயிகள் சங்கத்தினர் கூறியிருக்கிறார்களே?

கலைஞர் :- ஏதோ ஒரு துறையில் ஊழல் என்று செய்தி வந்தால் அதைப் பற்றிக் கூறலாம்.  அனைத்துத் துறைகளிலும்  போட்டி போட்டுக் கொண்டு சுருட்டியது வரை இலாபம் என்ற நோக்கில் ஊழல்கள் நடைபெற் றால் என்னதான் செய்ய முடியும்! அதைத்தான் ஆளுங்கட்சியில் உறுப்பினராக இருந்த திரு. பழ.கருப்பையா அவர்களே, அமைச்சர்களும் அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து கொள்ளை அடிப்பதாகக் குறிப்பிட்டார்.  “கூட்டுறவு” இந்த அளவுக்கு வளர்ந்து விட்டது கண்டு நெஞ்சம் பதைக்கிறது!கேள்வி :- “நவம்பர்-டிசம்பர் திங்களில் சென்னை மாநகரில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது,  தமிழக அரசு தாமதமாக நடவடிக்கை எடுத்தது” என்று மத்திய அரசின் அமைச்சகம்  கூறுவதாக “எகனாமிக் டைம்ஸ்” ஆங்கில நாளிதழ்  2-2-2016 அன்று எழுதியிருக்கிறதே?

கலைஞர் :- உண்மைதான்; “TN Response to Flood was Slow, says Central Report”என்ற தலைப்பில் இதுபற்றிய செய்தி வந்துள்ளது.  அந்தச் செய்தியில், “An analysis by the Union Ministry of Earth Sciences has revealed that floods in the City  were because of “poor drainage systems and overflow of dam water, not only because of excessive rains”.   It has also noted that the Ministry had issued warnings predicting heavy  rainfall to the State Government over 48 hours before the disaster:  The study of the floods by a group of scientists and officials has said, the floods could have been avoided,  if the disaster response of Tamil Nadu had been as quick as Odisha or Gujarat” என்று முன் பகுதியில் கூறப்பட்டுள்ளது.  அதாவது, சென்னை நகரத்திற்குள் வெள்ளம் வருவதற்குக் காரணம் பெருமழை மாத்திரமல்ல; கழிவு நீர் அகற்றுவதில் உள்ள கோளாறும், அணைக்கட்டு நீர் அதிக அளவில் வெளியானதும்தான் என்றும்;  மத்திய அமைச்சரவையின் இந்தத் துறை மாநில அரசாங்கத் திற்கு, அதிக மழை பெய்யும் என்று இந்த நாசம் ஏற்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பே எச்சரிக்கை செய்ததாகவும், ஒடிசா மாநிலத்தைப் போலவோ, குஜராத் மாநிலத்தைப் போலவோ தமிழக அரசு வேகமாகச் செயல்பட்டிருந்தால், வெள்ளத்தைத் தவிர்த்திருக்க முடியும் என்று விஞ்ஞானிகளும் அதிகாரிகளும் தெரிவித்திருப்பதாகவும் மத்திய அரசின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது.

இந்த வெள்ளத்திற்கும், அதனால் ஏற்பட்ட நாசத்திற்கும்  தமிழக அரசு பொறுப்பல்ல என்று தமிழகச் சட்டப் பேரவையில் அமைச்சர் பன்னீர்செல்வமும், முதலமைச்சர் ஜெயலலிதாவும் ஆளுநர் உரை விவாதத்தின் போது நீண்ட நேரம் உரையாற்றினார்களே, மத்திய அரசின்  இந்த அறிக்கைக்கு அவர்களுடைய பதில் என்ன என்பதை மத்திய அரசுக்கும், நாட்டு மக்களுக்கும் தெளிவுபடுத்துவார்களா? தெளிவுபடுத்த மாட்டார்கள்;  ஏனென்றால் நெருடலான கேள்விகளுக்கு நெஞ்சைத் திறந்து பதிலளித்துப் பொதுக் கடமையாற்றி அவர்களுக்குப் பழக்கம் இல்லை!

கேள்வி :-  ஐந்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில்  விலைவாசி குறைந்து விட்டதா? முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதா?  என்ன நிலைமை?

கலைஞர் :-  இதுபோன்ற கேள்விகளுக்கு நான் பதில் அளிப்பதற்கு முன்பு “வாட்ஸ்-அப்” பகுதியில் சமூக அக்கறையுள்ள ஒரு நண்பர் தெரிவித்துள்ள பதிலையே உங்களுக்குத் தெரிவிக்கலாம் என்று கருதுகிறேன்.    அவர் தெரிவித்த செய்தி :-

“இன்றிலிருந்து சரியாக ஐந்து வருடங்களுக்கு முன்பு அதாவது 2011 ஜனவரியில், இதே தமிழகத்தில் ஒரு லிட்டர் பால் விலை 16 ரூபாய்;  இன்றைக்கு 46 ரூபாய்;  அன்று  ஒரு கிலோ பருப்பு 68 ரூபாய்;  இன்று  180 ரூபாய்;  பேருந்துக் கட்டணம் அப்போது பத்து ரூபாய்;  இன்றைக்கு 23 ரூபாய்;  மின்சாரக் கட்டணம் அப்போது 500 ரூபாய்; இன்றைக்கு 1,400 ரூபாய்;  மாதச் சாமான்கள் ரூபாய் 2,000 என்பது, புது “வாட்” வரியால் 2,800 ரூபாய்;   அப்போது மணல் ஒரு லோடு  3,500 ரூபாய்;  இன்றைக்கு 7,200 ரூபாய்.   அப்போது  ஐந்து பேர் உள்ள குடும்பத்தின் மாத பட்ஜெட்  6,000 ரூபாய்.  இன்றைக்கு அதே குடும்பத் தின் மாத பட்ஜெட்  14,000 ரூபாய்.  அப்போது  தமிழக அரசின் கடன் 98,000 கோடி ரூபாய்.   இன்றைக்கு அது 2 லட்சத்து  10 ஆயிரம் கோடி ரூபாய்.

சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒவ்வொரு குடும்பத்தின் மாதச் செலவும்  120 சதவிகிதம்  அதாவது  ஒரு மடங்குக்கும் அதிகமாகக் கூடியுள்ளது.  அதே சமயம்  தமிழகத்தின் கடன் சுமையோ  இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

இத்தனைக்கும் சாலைகள், பாலங்கள், மெட்ரோ-ரெயில் போன்றவை, கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள்,  கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்கள், புது மின் உற்பத்தித் திட்டங்கள், புதிய தொழில்பேட்டைகள், நதி நீர் இணைப்புத் திட்டங்கள் என்று  எதுவுமே  இந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் உருவாக்கப்படவே இல்லை.   விலைவாசி மக்கள் தலையில் ஏற்றப்பட்டிருக்கிறது. புதுத் திட்டங்களும் இல்லை.  ஆனாலும்  கடனும், அதற்கான கூடுதல் வட்டியும்  இரண்டு மடங்காகி விட்டது.   இதற்கு எது காரணம்? யார் காரணம்? விலைவாசி குறையு மென்றுதானே வாக்களித்தோம். உட்கட்டமைப்பு வசதிகள் இன்னும் அதிகமாக மேம்படுத்தப்படுமென்று தானே வாக்களித்தோம்.  சாலைகளின் தரம் இன்னும் மேம்படுத்தப்படும் என்று நம்பித்தானே வாக்களித்தோம். தமிழகக் கடன் குறையுமென்றுதானே வாக்களித்தோம்.   க்ஷதாழிற்சாலைகளும் புதுப் புது வேலைவாய்ப்புகளும் கூடுதலாக உருவாகும் என்று நம்பித்தானே வாக்களித்தோம்.

செயின் திருட்டு பல மடங்கு அதிகரித்து விட்டது. வன்முறைக் கலவரங்கள் வெடித்திருக்கின்றன.  சாதிக் கலவரங்கள் உச்சம் தொட்டுவிட்டன.  சாதிச் சண்டைகளால் கொலைகள் பல அரங்கேறி யிருக்கின்றன. அனைத்துத் துறைகளிலும் லஞ்சம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

கூடங்குளம் தடுத்து நிறுத்தப்பட்டதா?   தனி ஈழம் மலர்ந்து விட்டதா? கடைசியாக ஜல்லிக்கட்டாவது நடந்ததா? காவிரியில் தண்ணீர் வந்ததா?   வழக்கமான கொத்துச்சாவுகள், குறிப்பாக செம்பரம்பாக்கச் சாவுகள் தான் நடந்தேறியிருக்கின்றன.

ஐந்து வருடத்திற்கு முந்தைய நமது வாழ்க்கைத் தரம், அந்த நிலையில் இருந்து முன்னேறிக்கூட இருக்க வேண்டாம்;  ஏன்?  அதே நிலையிலேகூட தொடர்ந்து இருக்க வேண்டாம்; ஆனால் ஐந்தாண்டுகள் பின்தங்கிப் போய் இருக்கிறோமே?

கடந்த தேர்தலில் வாக்களிக்க ஒவ்வொருவரும் தேர்ந்தெடுத்த காரணங்கள் ஒவ்வொன்றையும்  சற்றுச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.  நாம் அளிக்கும்  வாக்குக்கு நியாயமான மரியாதை இருக்க வேண்டும்.  இருந்தால் தான் வாழ்க்கை வசப்படும்!”

எப்படிப்பட்ட ஆட்சி தமிழகத்திலே நடைபெறுகிறது என்பதற்கு இதை விடவா விளக்கம் வேண்டும்?

கேள்வி :- அ.தி.மு.க.வின் சாதனைகளைக் கூற 36 நாட்கள் தேவைப்படும் என்று ஜெயலலிதா  சொல்லியிருக்கிறாரே?

கலைஞர் :- உண்மைதான்; அ.தி.மு.க. ஆட்சியில் என்ன சாதனை, ஏதாவது சாதனை செய்யப்பட்டதா  என்பதையெல்லாம்  யோசித்துத்தானே சொல்ல முடியும்!   அது பற்றி யோசிக்க 36 நாட்களே போதாது!    சாதனைகளைச் சொல்ல ஜெயலலிதாவுக்கு  36 நாட்கள் போதாது என்றால், அவருடைய ஆட்சியில் மக்கள் படும் வேதனைகளைச் சொல்ல 365 நாட்களும் போதாது!  ஆனால் இந்த வேதனைகளுக்கெல்லாம்  தகுந்த விடையளித்திட வாக்குச் சாவடியில் ஒரு நிமிடம் போதுமே!

கேள்வி :-  2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளையெல்லாம் நிறைவேற்றி விட்டதாக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் கூறியிருக்கிறாரே?

கலைஞர் :- “5 ஆண்டு கால ஆட்சி......தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றிவிட்டாரா முதல்வர்?”  என்ற தலைப்பில்  ஜூ.வி. இதழ் ஒரு கட்டுரை தீட்டியுள்ளது. அதில், “அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகள்  அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாக ஜெயலலிதா சொன்னது, வெற்று வீர வசனம் மட்டுமே!   90 சதவிகித வாக்குறுதிகள் பஞ்சராகிப் போயின.   தேர்தல் காலத்தில் கொளுத்திப் போட்ட கலர் மத்தாப்புகள்  புஸ்வாணமாகி விட்டன”  என்று தொடங்கி, என்னென்ன வாக்குறுதிகள் தரப்பட்டன, அவை என்ன கதிக்கு ஆளாயின என்று விரிவாக வெளியிடப்பட்டுள்ளது.  அ.தி.மு.க.வுக்கு வாக்கை நிறைவேற்றும் வாய்மையும் இல்லை;  மக்கள் பணியை நிறைவேற்றும் மனச்சாட்சியும்  இல்லை என்பதை அனைவரும் அறிவர்!

கேள்வி :- தி.மு. கழக ஆட்சியில் கட்டப்பட்ட நீர்த் தேக்கங்கள் பற்றி?

கலைஞர் :- சிலவற்றை மட்டும்  கூறுகிறேன்;

மணிமுத்தா நதி நீர்த் தேக்கம்; சின்னார் நீர்த் தேக்கம்; ராஜாத் தோப்புக் கிணறு நீர்த் தேக்கம்;  மோர்தானா நீர்த் தேக்கம்; செண்பகத் தோப்பு நீர்த் தேக்கம்; வரட்டாறு நீர்த் தேக்கம்;  ஆண்டியப்பனூர் மேடை நீர்த் தேக்கம்; மஞ்சளாறு நீர்த் தேக்கம்; சித்தாறு 1 நீர்த் தேக்கம்;  சித்தாறு  2 நீர்த் தேக்கம்;  கடனா நதி நீர்த்தேக்கம்; ராமா நதி நீர்த் தேக்கம்;  பிளவுக்கல் பெரியார் நீர்த் தேக்கம்;  பிளவுக்கல் கோயிலார் நீர்த் தேக்கம்;  கருப்பா நதி நீர்த்  தேக்கம்;  அணைக்குட்டம் நீர்த் தேக்கம்;  நம்பியாறு நீர்த் தேக்கம்;  பொய்கையாறு நீர்த் தேக்கம்;  பரப்பலாறு நீர்த் தேக்கம்;  பெரும் பள்ளம் நீர்த் தேக்கம்; குதிரையாறு நீர்த் தேக்கம்; நொய்யல் ஆற்றுப் பாலம் நீர்த் தேக்கம்;  நீராறு மேலணை நீர்த் தேக்கம்; பெருவாரிப்பள்ளம் நீர்த் தேக்கம்;  சோலையாறு நீர்த் தேக்கம்; நங்கஞ்சியார் நீர்த் தேக்கம்; நல்லதங்காள் ஓடை நீர்த் தேக்கம்;   பொன்னணி ஆறு நீர்த் தேக்கம்; உப்பாறு நீர்த் தேக்கம்;

போதுமா பட்டியல்!  நீர் மேலாண்மை பற்றியும், வேளாண்மை மேம்பாட்டின் முக்கியத்துவம் பற்றியும் அறிந்து கொண்டிருப்பதால்தான், கழக ஆட்சியில்  அடுக்கடுக்கான இந்தத் திட்டங்கள்!

கேள்வி :- தேர்தல் நெருங்க நெருங்க  பல்வேறு பணிகளுக்கு “டெண்டர்”கள் அவசர அவசரமாகக்  கோரப்படுகிறதாமே?

கலைஞர் :- தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்று அமைச்சர்கள் இப்போதே யூகித்துக் கொண்டு, அதற்குள் தங்கள் துறைகளின் வாயிலாக உள்ள பணிகளுக்கு  டெண்டர் விட்டு, அதன் வாயிலாக பெரும் ஆதாயம் தேட எண்ணிச் செயல்படுகிறார்கள் போலும்!   இதுபற்றி நாளேடு ஒன்று வெளியிட்ட செய்தியில்,

“சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் நாளில் இருந்து நடத்தை விதி அமலுக்கு வருவதால்,  புதிய பணிகளைச் செய்ய முடியாது; டெண்டர் வெளியிடவும் முடியாது.  இதனால் அரசுத் துறைகள் ஒவ்வொன்றும்  தங்கள் துறையில் உள்ள பணிகளுக்கு விரைவாக டெண்டர் கோரும் நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றன.  ஜனவரியில் மட்டும் மின் வாரியம் 90 பணிகளுக்கும், உணவுத் துறை 25 பணிகளுக்கும்  டெண்டர் கோரியுள்ளன.  இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, டெண்டரில், பல நிறுவனங்கள் பங்கேற்றாலும், அரசியல் சிபாரிசுடன் செல்வாக்கு உடையவருக்கு மட்டும்தான் பணி ஆணை வழங்கப் படுகிறது. இதற்கு கணிசமாகக் கமிஷன் பெறப்படு கிறது.  தேர்தல் காரணமாக தற்போது கமிஷன் சதவிகிதம் மேலும்  உயர்ந்துள்ளது என்று தெரிவித்திருக்கிறார்கள்” என்றே அந்த ஏடு  தெரிவித்துள்ளது.

தேர்தலில் வாக்களிக்கப் போகும் தமிழக மக்கள் இதையெல்லாம் மனதிலே கொள்வார்கள் என்றே நம்புகிறேன், மனதிலே கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி :-  லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர் மீது வழக்குப் போட கட்டுப்பாடு விதித்து  தமிழக அரசு புதிதாக அரசாணை ஒன்று பிறப்பித்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளதே?

கலைஞர் :- ஆமாம்; 2-2-2016 அன்று பிறப்பிக் கப்பட்ட அந்த அரசாணையில், குறிப்பாக, “அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் எந்தப் பதவியில் இருந்தாலும், அவர்கள் மீது  இலஞ்ச ஒழிப்புப் பிரிவு இயக்குனரகத்திற்குப்  புகார் வந்தால் அந்தப் புகார் விஜிலன்ஸ் கமிஷனுக்கு அனுப்பப்படும்.  விஜிலன்ஸ் கமிஷன் அந்தப் புகாரை அரசுக்கு அனுப்பும்.   அரசு அந்தப் புகாரைப் பரிசீலித்து  இலஞ்ச ஒழிப்புப் பிரிவு  இயக்குநரகத்திற்கு உரிய உத்தரவு பிறப்பிக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் மட்டுமல்லாமல்,  கடைநிலை ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை, அவர்கள் மீது எந்த இலஞ்சப் புகார் வந்தாலும்,  அரசின் அனுமதி பெறாமல் வழக்குப் போட முடியாது என்பதுதான் இந்த அரசாணையின் பொருளாகும்.

இந்த அரசாணை குறித்து கருத்துக் கூறிய மூத்த வழக்கறிஞர் கண்ணதாசன், “ஊழல் செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்ற நிலையில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த அரசாணையால் தங்களுக்கு வேண்டப்பட்டவர்கள், வேண்டப்படாதவர்கள் என்ற பாரபட்சமும், ஒரு தலைப்பட்சமான முடிவும் எடுக்க வாய்ப்புள்ளது.   ஊழல் வழக்கில் முன் அனுமதி தேவையில்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.   இதனால், அரசுக்கு வேண்டப்பட்ட அதிகாரிகளும், ஊழியர்களும் தப்பிவிட வாய்ப்பு உள்ளது. அரசியல் கட்சிகள் சார்பில் நியமிக்கப்படும் அரசு நிறுவன நிர்வாகிகள், எம்.எல்.ஏ., எம்.பி.க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் பதவியில் இருக்கும் காலங்களில் அரசு ஊழியர்களாகவே கருதப்படுவார்கள்.   இதனால் அவர்கள் மீது கொடுக்கப்படும் புகார்களும் கிடப்பில் போடப்படவும், நிராகரிக்கப்படவும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படும். எனவே முன் அனுமதி இல்லாமல் ஊழல் புகார்களில் வழக்குப் பதிவு செய்வதுதான் சரியான நடைமுறையாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார். வழக்கறிஞர் திரு.கண்ணதாசன் அவர்களின் கருத்து சரியானதென்றே தோன்றுகிறது.

அ.தி.மு.க. அரசு புதிதாக இப்படியொரு அரசாணை பிறப்பித்திருக்கும் இந்த நேரத்தில், 1973ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12ஆம் தேதியன்று தி.மு. கழக ஆட்சியில் சட்டப்பேரவையில் அறிமுகம் செய்யப்பட்ட மசோதாதான் என் நினைவுக்கு வருகிறது. “பொது வாழ்வில் ஈடுபட்டோர் லஞ்ச ஊழல் குற்றத் தடுப்பு மசோதா” என்று அதற்குப் பெயர். அதன்படி பொது வாழ்வில் ஈடுபட்டிருப் போர் மீது சாட்டப்படும்  லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க உயர் நீதி மன்ற நீதிபதி அந்தஸ்தில் உள்ள ஒரு நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்.  லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் பொது வாழ்வில் ஈடுபட்ட அவருக்கு 7 ஆண்டுக் காலம் வரை சிறை தண்டனை விதிக்க மசோதா வகை செய்தது.   பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்கள் யார் என்று கூறும்போது முதலமைச்சர், முன்னாள் முதலமைச்சர்,  முன்னாள் - இந்நாள் அமைச்சர்கள்,  சட்டப்பேரவை, மேலவை முன்னாள் - இந்நாள் உறுப்பினர்கள், மேயர், துணை மேயர், முன்னாள் மேயர்கள், நகராட்சித் தலைவர்கள், பஞ்சாயத்து யூனியன் தலைவர்கள், மாநகராட்சி முன்னாள், இந்நாள் உறுப்பினர்கள் ஆகியோர் அடங்குவர்.

பொது வாழ்வில் ஈடுபடும் அரசியல்வாதிகளே ஊழல்வாதிகளாகி விடக் கூடாது என்பதற்காக கழக ஆட்சியில் தீட்டப்பட்ட மசோதாவையும்,  பொது வாழ்வில் ஈடுபடுவோருக்குக்  கீழே பணியாற்றும் அலுவலர்களுக்குப் பாரபட்சமான பாதுகாப்பு அளிக்க அ.தி.மு.க. அரசு அவசரம் அவசரமாகப் பிறப்பித்திருக்கும் அரசாணையையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்காகவே இந்த நீண்ட விளக்கம்.