கண்ணின் வலியா? கழகத்தின் வலிவா? எதில் கவனம் செலுத்துவது? தலைவர் கலைஞர் கடிதம்

கண்ணின் வலியா? கழகத்தின் வலிவா? எதில் கவனம் செலுத்துவது? தலைவர் கலைஞர் கடிதம்

 

இன்று  நான் உனக்கு எழுதும் கடிதத்தில்,  1953ஆம் ஆண்டு நான் சந்தித்த கார் விபத்து பற்றியும்அதனால் என்னுடைய ஒரு கண் பாதிக்கப்பட்டது பற்றியும்,  அந்தப் பாதிப்பு இன்று வரையில் என்னைத் தொல்லைப்படுத்தி வருவதைப் பற்றியும் விவரிக்க விரும்புகிறேன்.

 

1953ஆம் ஆண்டு முகவை மாவட்டத்தைச் சேர்ந்த பரமக்குடியில் எனக்கு ஒரு பாராட்டு விழாப் பொதுக் கூட்டம். அதில் கலந்து கொள்ள சென்னையில் மாலை மூன்று மணிக்குக் காரில் புறப்பட்டேன்.  குறித்த நேரத்தில் பரமக்குடி போய்ச் சேர வேண்டுமே என்பதற்காக கார் சற்று வேகமாகச் சென்று கொண்டிருந்தது.  திருச்சி அருகில் சென்று கொண்டிருந்த போதுகொம்பு நீளமாக உள்ள ஒரு கொடி ஆடு காரின் ரேடியேட்டரில் பாய்ந்ததால்கார் பழுதாகிவேறொரு வாடகைக் கார் எடுத்துக் கொண்டு பரமக்குடிக்குப் புறப்பட்டேன்.   என்னுடன் காரில் அன்பில் தர்மலிங்கம்திருச்சி பராங்குசம்திருவாரூர் தென்னன் ஆகியோர் வந்தார்கள்.  மேடைக்குச் செல்லும் வரை மதுரை முத்து கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார். நான் போனதும் பேசத் தொடங்கி,  இரவு ஒரு மணிக்குக் கூட்டம் முடிவுற்றது. மறுநாள் திருச்சி தேவர் மன்றத்தில் சிறப்புக் கூட்டம்.  திரும்பும் போது அசதியின் காரணமாக நானும்நண்பர்களும் கண்ணயர்ந்து விட்டோம்.  வாடகைக் காரை ஓட்டிய தோழரும் சற்றுக் கண்ணயர்ந்து விட்டார். அதனால்  திருச்சி வரும் வழியில் திருப்பத்தூர் பயணிகள் விடுதிக்கு அருகில் கார் மைல் கல்லில்  மோதிமைல் கல்லும் உடைந்துபயணிகள் விடுதியின் முன்புற வாயில் கதவில் போய் மோதிக் கொண்டு நின்றது.  இதற்கிடையே காருக்குள் இருந்த நாங்கள் உருண்டோம்.  நண்பர்களுக்கு காயம் எதுவும் இல்லை. ஆனால் என் மூக்குக்குள்ளேயிருந்து ரத்தம் "குபு குபு" எனக் கொட்டியது.  முதல் சிகிச்சை செய்து கொண்டு திருச்சி வந்து சேர்ந்தோம்.   மறுநாள் காலையில் முகமே வீங்கிஎன்னுடைய இடது கண்ணில் வலி தொடங்கியது.  

 

வலியோடு திருச்சி நிகழ்ச்சியிலும்கன்னியா குமரி மாவட்ட நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சென்னை திரும்பிநண்பர் முல்லை சத்தி பிடிவாதமாக என்னை வேலூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கேதான் மருத்துவர் கண்ணிற்குள் ஒரு சிறு நரம்பில் கீறல் ஏற்பட்டிருப்பதாகவும்குறைந்தது ஆறு மாத காலத்திற்காவது  எழுதவோகூட்டங்களில் பேசவோபடிக்கவோ கூடாது என்று கூறினார்.  பொது வாழ்வில் ஈடுபட்ட எனக்கு அதையெல்லாம் கடைப்பிடிக்க முடியுமா என்ன?

 

அரசியலிலும்கலை உலகிலும் எனக்கு மிக நெருங்கிய நண்பர்களான இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.,  நடிகமணி டி.வி.நாராயணசாமி ஆகியோரின் விருப்பத்தை நிறைவேற்றசென்னையில் ஓட்டல் ஒன்றில் "மணிமகுடம்" நாடகத்தின் கடைசி காட்சிகளை எழுதிக் கொண்டிருக்கும் போதுதிடீரென்று என் இடது கண்ணில் ஒரு ஈட்டி பாய்ந்தது போன்ற வேதனை! கையில் இருந்த பேனாவையும்தாளையும் வீசி எறிந்து விட்டு, "அய்யோ" என்று அலறினேன்.   

 

எப்படியோ வீடு வந்தேன்.   வீட்டார் என்னைப் பார்த்துக் கதறினார்கள்.  இடது கண் பெரிதாக வீங்கி விட்டது.  குத்தல் வலி உயிரைப் பிளந்தது.  தாங்க முடியாத வேதனை. சென்னையில் மிகச் சிறந்த மருத்துவர் முத்தையா வந்து பார்த்து விட்டுஉடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டுமென்றார். கண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன்.  அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.  பன்னிரண்டு முறை அறுவைச் சிகிச்சை நடத்தினார்.

 

1953-54ஆம் ஆண்டிலிருந்து அந்தக் கண் பாதிக்கப்பட்ட நிலையிலேயே வேதனைகளைத் தாங்கிக் கொண்டு அரசியல் பயணத்தைத் தொடர்ந்தேன்.  1967ஆம் ஆண்டு செப்டம்பரில் மீண்டும் ஏற்பட்ட பயங்கரக் கார் விபத்து ஒன்றில் நான் சிக்கிகண்ணில் ஏற்கனவே இருந்து வந்த வலி மேலும் அதிகமாயிற்று. அவ்வப்போது மருத்துவர்கள் முத்தையாஆப்ரகாம்,  இராமலிங்கம்மதுரை வெங்கடசாமி போன்றவர்கள் சிகிச்சை அளித்து வந்தபோதிலும்கண்ணில் ஊசியால் குத்துவது போன்ற வேதனை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.  ஏன்அந்த வலி இன்றும்  என்னை வேதனைப்படுத்திக் கொண்டுதான் உள்ளது.

 

இதற்கிடையே 1967ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையோடு ஆற்றிய அரும் பணிகள்தொடர்ப் பிரச்சாரம் காரணமாக தி.மு.கழகம் வெற்றி பெற்றுஅண்ணா அவர்கள் தலைமையில் ஆட்சி அமைந்தது.  ஆனால் 1969ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் நம்மையெல்லாம் விட்டு மறைந்த பிறகுநான் முதலமைச்சர் பொறுப்பையேற்ற போதும்,  கண் வலி தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. 

  

1971ஆம் ஆண்டில்,  இந்தியாவிலே உள்ள மிகச் சிறந்த கண் மருத்துவர்கள் வழங்கிய அறிவுரையின் பேரில் வெளிநாடு சென்று கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதென்ற முடிவுக்கு வந்து அமெரிக்கா சென்றேன்.   பால்டிமோர் நகரில் உள்ள "ஜான்ஹாப்கின்ஸ்"  மருத்துவ மனையில் புகழ் பெற்ற மருத்துவ நிபுணர் மாமுனி என்பவர் எனக்கு அறுவை சிகிச்சை செய்தார்.   அதன் காரணமாக எனக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த கண் வலி சற்று குறைந்த போதிலும்அவ்வப்போது அந்த வலி இன்னமும் தொடர்ந்து வந்த வண்ணமே உள்ளது. ஏன்அந்த வலி இன்றளவும் என்னை வேதனைப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அந்தக் கண்ணின் வலி அதிகமாஅல்லது அவ்வப்போது  என்னோடு தொடர்ந்து அரசியல் பயணம் நடத்தியோர் தந்த மன வலி அதிகமா?  என்ற கேள்விகளோடு என் கழகப் பணியும்பொதுப்பணியும் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. இந்த நிலையிலும்,  என் கண் வலி அதிகமாக இருக்கும் போதெல்லாம் டாக்டர் அகர்வால் அவர்களிடமும்அவர் மறைந்த பிறகு அவரது மகன் அமர் அகர்வால்  அவர்களிடமும் சிகிச்சை பெற்றுக் கொண்டு  அரசியல் பணிகளைத் தொடர்ந்து ஆற்றி வருகிறேன்.

 

எனக்கு வலிதொல்லை எவ்வளவு இருந்தாலும்நமது கழகத்திற்கும்தமிழகத்திலே வாழும் மக்களுக்கும் இன்னமும் பணியாற்ற வேண்டுமென்று என் உள்ளத்திலே எழுகின்ற  உணர்ச்சியினால் தான் நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன் என்பதை நீ உணர்ந்து கொள்ள வேண்டும்.      

 

இதற்கிடையேதான் 2016ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான பணிகள் தொடங்கிதற்போது  கழக உடன்பிறப்புகள் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.  ஒவ்வொரு நாளும்தலைமைக் கழகத்திலிருந்து எத்தனை பேர் விருப்ப மனுக்களைப் பெற்றுச் சென்றார்கள்,  எத்தனை பேர்  மனு தாக்கல் செய்தார்கள் என்று தகவல்கள் தரப்படுகின்றன.    அன்றாடம் காலையிலும்மாலையிலும் சுமார் 50 பேருக்குக் குறையாமல்குடும்பம் குடும்பமாக வந்து  ஆயிரம் ரூபாய்இரண்டாயிரம் ரூபாய் என்று தேர்தல் நிதி என்னிடம் வழங்கி வருவதை அவர்களின் பெயர்களோடு முரசொலியில் வெளியிடப்படுவதை   நீயே கண்டிருப்பாய்!   அவ்வாறு  சேர்ந்த நிதியே  இன்று வரை 26கோடியே  84 இலட்சத்து  30 ஆயிரத்து 936 ரூபாய் என்பது எனக்குள்ள கண் வலியை மறக்கவே செய்கிறது.  கழகம் மேலும் வலிவும் பொலிவும் பெற வேண்டும் என்பதற்காகத்தான் கண் வலியையும் பொருட்படுத்தாமல் நான் கடமையாற்றி வருகிறேன் என்பதை நீ நன்றாகவே உணர்ந்திருப்பாய். உணர்ந்து பார்ப்பதோடு  மட்டுமல்லாமல்,  ஒரு தொகுதிக்கு  பல பேர் விருப்ப மனுக்கள் தாக்கல் செய்திருக்கலாம். ஆனால் ஒருவரைத்தான் நமது கழகத்தின் சார்பில் ஒரு தொகுதியிலே நிறுத்த முடியும். மேலும் சில தொகுதிகளை தோழமைக் கட்சிகளுக்கு வழங்க நேரிடலாம். அந்தத் தொகுதிகளுக்கு விருப்ப மனுக்கள் தாக்கல் செய்தவர்கள் தலைமைக் கழகத்திலே கட்டிய தொகை மீண்டும் திரும்பத் தரப்பட்டு விடும் என்று தலைமைக் கழகத்தால்  அறிவிக்கப்பட்டுள்ளது.  இதையெல்லாம் நன்றாக சிந்தித்துப் பார்த்துகழகம் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். 

    

கண்ணின் வலியாகழகத்தின் வலிவாஎதில் கவனம் செலுத்துவதுஎன்ற நோக்கத்தோடு நான் பணியாற்றுவதைப் புரிந்து கொண்டு,  நீயும் கழகத்தின் வெற்றிக்காக எப்போதும் போல் ஓயாது உழைப்பாய் என்ற நம்பிக்கையோடும்உழைக்க வேண்டுமென்ற வேண்டுகோளோடும் இந்தக் கடிதத்தை நிறைவு செய்கிறேன்.