போலி வாக்காளர்களைக் களைய தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - தலைவர் கலைஞர் மீண்டும் வலியுறுத்தல்.

போலி வாக்காளர்களைக் களைய தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - தலைவர் கலைஞர் மீண்டும் வலியுறுத்தல்.

       தமிழ்நாட்டில்  வாக்காளர்  பட்டியலில்  போலி வாக்காளர்களை எந்த அளவுக்குச்   சேர்த்திருக்கிறார்கள் என்பது  பற்றிக்  கடந்த சில மாதங்களாக  அனைத்து எதிர்க்கட்சிகளும்  ஆதாரப் பூர்வமாகப் புள்ளி விபரங்களோடு   எடுத்துச் சொல்லி வருகிறார்கள்.   திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் இது பற்றிய பல புகார் மனுக்கள் தேர்தல் ஆணையரிடம் தரப்பட்டுள்ளன.   கடந்த 24-1-2016 அன்று  நான் விடுத்த விளக்கமான  அறிக்கையிலும்,  எந்த அளவுக்குத்   தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களைப் பெருவாரியாகச் சேர்த்து  மிகப் பெரிய மோசடி நடைபெற்றுள்ளது என்பதை எடுத்துக் காட்டி,  இந்தியத் தேர்தல் ஆணையம் சட்ட ரீதியான அவசர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டோன்.   தகுதியில்லாத  வாக்காளர்களைப் பெருமளவில் சேர்த்த  மோசடிகள் பற்றி “டைம்ஸ் ஆப் இந்தியா”“,  “இந்தியன் எக்ஸ்பிரஸ்”“  போன்ற நாளேடுகளில் வந்த செய்திகளையும் எடுத்துக்காட்டியிருந்தேன்.     குறிப்பாக “டைம்ஸ் ஆப் இந்தியா”“ 21-1-2016 தேதியன்று “2016இல்  தமிழ்நாட்டில் ஒரு கோடி அதிக வாக்காளர்கள்”“ என்ற தலைப்பிலே  வெளியிட்ட செய்தியில்,  “தமிழகத்தின் மொத்த மக்கள் தொகையான 7.77  கோடியில்,  தற்போது  20-1-2016 அன்று வெளியிடப்பட்டுள்ள  இறுதி வாக்காளர் பட்டியலின்படி,  வாக்காளர்களின் எண்ணிக்கை  5.79 கோடி - அதாவது மொத்த மக்கள் தொகையில் 75.56 சதவிகிதம் பேர்.   மிகையான இந்தப் புள்ளி விவரம் யாரும் நம்பக் கூடியதாக இல்லை.   மக்கள் தொகையில் 70.40 சதவிகிதத்தினரே வாக்காளர்களாக இருந்திருக்க வேண்டும்.  ஆனால் 75.56 சதவிகிதம் பேர் அதாவது 5.16 சதவிகிதம் பேர் மிகை வாக்காளர்களாகச் சேர்க்கப்பட்டிருப்பது ஆச்சரியமாகவும், பெருத்த மோசடியாகவும் உள்ளது.  சுமார் 40 லட்சம் பேர் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்”“  என்றே புள்ளி விவரத்தோடு “டைம்ஸ் ஆப் இந்தியா” ஏடு  எழுதியிருந்தது.        நான் விடுத்த அறிக்கையின் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும்  கழகத் தோழர்கள் வாக்காளர் பட்டியலை நேரடியாகப் பரிசீலித்து கள விசாரணைகளைத் தொடங்கினர்.   மாநிலங்களவை கழகக் குழுத் தலைவர் கனிமொழியும்   டெல்லியில் இந்தியத் தலைமைத்  தேர்தல் ஆணையரைச் சந்தித்து விவரங்களையெல்லாம் எடுத்துக் கூறியிருக்கிறார்.  அதனை யொட்டி தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஒரு சில இடங்களில் நேரில் சோதனையிட்டு,  வாக்காளர் பட்டியல் மோசடி பற்றி தி.மு. கழகத்தின் சார்பில் எடுத்துக் கூறப்பட்ட  புகார்கள் உண்மையே  என்பதைப் புரிந்து கொண்டுள்ளனர்.        சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப் பேரவைத்  தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை இறுதி செய்தல் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை   சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலர் நடத்தியிருக்கிறார்.  அந்தக் கூட்டத்தில் சென்னையில்  மொத்தம்  1 லட்சத்து  85 ஆயிரத்து  169 தகுதியில்லாத வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.    குறிப்பாக சென்னையில் மட்டும்   1 லட்சத்து 10 ஆயிரத்து 717 பேர்,  இறந்தவர்களின் பெயர்கள், வாக்காளர்  பட்டியலில் ஏற்கனவே சேர்க்கப் பட்டுள்ளார்கள்.   நாம் தந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் வாக்காளர் பட்டியலில் ஏற்கனவே  சேர்க்கப்பட்டு தற்போது போலி வாக்காளர்கள் தான்  என்று கண்டுபிடிக்கப்பட்டு நீக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மாத்திரம்  1 இலட்சத்து 85 ஆயிரம் பேர் என்றால்,  இன்னமும் நீக்கப்படாமல் உள்ள போலி வாக்காளர்கள் எவ்வளவு பேர் என்பதைத்  தீவிரமாக கண்டு பிடித்து உண்மையான ஜனநாயக அடிப்படையில் தேர்தலை நடத்த  நுhறு சதவிகிதம் உறுதி செய்யப்பட  வேண்டாமா?   இதைப்  போலவே  மாநிலத்தில்  ஒவ்வொரு தொகுதியிலும் ஆளுங்கட்சியினரின் அத்துமீறலின் காரணமாக போலி வாக்காளர்கள்     சேர்க்கப்பட்டுள்ளார்கள்.  குறிப்பாக சென்னையிலே எடுத்துக் கொண்டால்  மைலாப்பூர் தொகுதியில் மட்டும்  16,798 வாக்குகள்  -  விருகம்பாக்கத்தில்   17,831 வாக்குகள்  -  அண்ணா நகரில்  14,830 வாக்குகள் -  தியாகராயநகரில் 13,823 வாக்குகள் - பெரம்பூரில்  13,323 வாக்குகள்  என்ற அளவுக்கு போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்  என்பதைக் காணத் திகைப்பாக இருக்கிறது.   தேர்தல் ஆணையத்தாலேயே நாம் தந்த புகார்களின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டு  தற்போது அந்த வாக்குகளை நீக்குவதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.   இதே போல தமிழகத்திலே உள்ள மற்ற தொகுதிகளிலும்  உள்ள போலி வாக்காளர்களும் முழுமையான சரி பார்த்தலின் மூலம்  கண்டுபிடிக்கப்பட்டு, அந்த வாக்காளர்களை  நேர்மையான தேர்தல் நடைபெற வேண்டும் என்ற நோக்கில்  உடனடியாக களையப்பட வேண்டும். 

 

 தேர்தல் வருவதற்கு இன்னும்  இரண்டு மாதங்களே  உள்ள நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையம்  இந்தப் பிரச்சினையிலே முறையாக உரிய  கவனம் செலுத்தி, போலி வாக்காளர்கள் நீக்கப்பட அனைத்து முயற்சிகளிலும் முனைப்புடன் ஈடுபட  வேண்டும் என்றும்; ஆங்காங்கே  கழகத் தோழர்கள், தேர்தல் ஆணையத்தின் முயற்சிகளுக்குத் தேவையான  ஒத்துழைப்பை நல்கிட வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.