மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை நிறைவேற அதிமுக அரசு முன் வர வேண்டும்! தலைவர் கலைஞர் அறிக்கை !

மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கை நிறைவேற அதிமுக அரசு முன் வர வேண்டும்! தலைவர் கலைஞர் அறிக்கை !

   அ.தி.மு.க. ஆட்சிக்கு  எதிர்க் கட்சிகளின் மீது  எந்த அளவுக்கு கோபமும், வெறுப்பும் இருக்கிறதோ, அதை விட அதிகமாக  அவர்கள் ஆட்சிக்கு வந்தது முதல் விவசாயிகள் ஆனாலும், நெசவாளர்கள் ஆனாலும், மீனவர்கள் ஆனாலும்;  மக்கள் நலப் பணியாளர்கள் ஆனாலும், சாலைப் பணியாளர்கள் ஆனாலும்,  சத்துணவுப் பணியாளர்கள் ஆனாலும்,  அரசு அலுவலர்கள் ஆனாலும், ஆசிரியர்கள் ஆனாலும்,  மாற்றுத் திறனாளிகள் ஆனாலும், தொழிலாளர்கள் ஆனாலும்  அவர்களிடம் எல்லாம்  ஒரு "அலர்ஜி".    அந்த வரிசையில் மாற்றுத் திறனாளிகளையும் வைத்து,  இந்த ஆட்சியினர் தொடக்கம் முதல் படாதபாடு படுத்தி வருகிறார்கள்.   நேற்று மாலை   ஐம்பது மாற்றுத் திறனாளிகள் என்னைச் சந்தித்து, கோரிக்கை தந்து தங்கள் துயரங்களை யெல்லாம் வெளிப்படுத்தினார்கள்.



        தி.மு. கழக ஆட்சியில் சென்னை பொது மருத்துவ மனையில் மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்று காலையில் ஏடுகளில் படித்ததும்,  காலை உணவைக் கூட அருந்த மறுத்து,  நேராக அவர்கள் உண்ணா விரதம் இருக்கும் இடத்திற்கே சென்று, உண்ணாவிரதத்தைத் திரும்பப் பெறக் கேட்டுக் கொண்டவன் நான்.   அதையெல்லாம் நேற்றையதினம் மாற்றுத் திறனாளிகள் நினைவூட்டி, தற்போது நான்கு நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்த போதிலும், தங்களை யாரும் வந்து பார்க்கக் கூட இல்லை  என்றும், மாறாகக் காவல் துறையினர் வந்து கடுமையாகத் தாக்கியதாகவும் தெரிவித்தார்கள்.



        தற்போது  என்னை வந்து சந்தித்தவர்கள்,  பூவிருந்தவல்லியில்  பார்வை யற்றோருக்கான அரசு மேல் நிலைப் பள்ளியில் அமைந்துள்ள  சிறப்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்கள்.   அவ்வாறு பயிற்சி பெற்ற 75 மாற்றுத் திறனாளிகள்  இன்னமும் பணி அமர்த்தப்படாத நிலையில் உள்ளார்களாம்.   தற்போது  இந்தப் பயிற்சி மையம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாம்.  அவர்களின் கோரிக்கைகளை  அ.தி.மு.க. அரசிடம் பல முறை எடுத்து வைத்தும்  இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லையாம்.   அவர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்து தங்கள் கோரிக்கையை  12 வாரங்களில் பரிசீலனை செய்யும்படி உத்தரவு வழங்கப் பட்ட போதிலும்  அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.



        மாற்றுத் திறனாளிகளின்  இந்தக் கோரிக்கைகளை  இதுவரை அ.தி.மு.க.  அரசு  கவனிக்காமல் இருந்தாலும், அவசர முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினையை  இப்போதாவது கவனித்து ஆவன செய்திட  முன் வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.