தமிழக காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய சான்றிதழ்? தலைவர் கலைஞர் கேள்வி பதில்

தமிழக காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய சான்றிதழ்? தலைவர் கலைஞர் கேள்வி பதில்

கேள்வி :- ஆளுநர் உரையில் பதிலளிக்கும் போது முதலமைச்சர் ஜெயலலிதா சட்டம் ஒழுங்கு பற்றியும், காவல் துறையினரின் திறமைகள் பற்றியும் பெருமையாகப் பேசியிருக்கிறாரே?

கலைஞர் :- காவல் துறைக்குப் பொறுப் பேற்றிருப்பவர் முதலமைச்சர்; அவர் அந்தத் துறை பற்றிப் பெருமையாகப் பேசாமல் என்ன செய்வார்?   ஆனால் அந்தத் துறையின் பெருமை பற்றி உதாரணம் தேடி அலைய வேண்டியதில்லை. "தமிழகக் காவல் துறை மீது நம்பிக்கை இல்லை"என்று முன்பொரு முறை அறிவித்த உயர் நீதிமன்றம், நேற்றுகூட கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.  நெய்வேலி அருகே  ஐந்து பேர் ஒரு இளம் பெண்ணைக் கடத்திச் சென்று பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொலை செய்த வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன், நாகமுத்து ஆகியோர் கூறும்போது, "இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு கடலூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.  இந்த வழக்கில்  தற்போது மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  இந்த வழக்கில் உள்ள கோப்புகளை ஆராய்ந்து பார்த்தோம்.  போலீசார் சரியாக விசாரணை நடத்தவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது.  போலீசார் இத்தகைய வழக்கில் ஏன் மெத்தனமாக உள்ளனர்? இது வேதனை அளிக்கிறது.  டி.என்.ஏ. சோதனைகூட நடத்தவில்லை.  அடையாள அணி வகுப்பும் நடத்தவில்லை.  சாட்சிகளிடம் சரியான வாக்குமூலம் வாங்கவில்லை.  அவர்கள் என்ன வாக்குமூலம் அளித்தார்கள் என்று பதிவு செய்யவில்லை.  போலீசார் சிறிதளவுகூட புலன் விசாரணை செய்யவில்லை.   முறையாக விசாரிக்காமல் பணியாற்றுகிறார்கள்.   இதனால் இந்த வழக்கில் என்ன உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றே எங்களுக்குத் தெரியவில்லை.  போலீசாருக்கு திறமை இல்லை.  திறன் குறைவாக உள்ளது.  ஏன் போலீஸ் டி.ஜி.பி.யை நேரில் அழைக்கக் கூடாது?  இது போன்ற வழக்குகளில் கைதிகள் தொடர்ந்து விடுதலையாகி வருகிறார்கள்.  இதற்கு போலீசார் உரிய விளக்கம் அளிக்க வேண்டும்"என்றெல்லாம் தமிழகக் காவல் துறையினரின் திறமைகள் பற்றி (!) கடுமையான கருத்து வழங்கி யிருக்கிறார்கள்.  "ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்"என்பார்களே, அதுபோல் தமிழகக் காவல் துறையின் தனிப் பெரும் திறமைக்கு (?)  இதுவே தக்க உதாரணமாகத் திகழ்கிறது.


கேள்வி :- உடுமலைப்பேட்டையில்  அ.தி.மு.க. சார்பில் 68 தம்பதிகளுக்கு நடத்தப்பட்ட  இலவசத் திருமண விழாவில், தம்பதிகளின் நெற்றிப் பொட்டில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப் படம் பொறித்த ஸ்டிக்கரை  ஒட்டியது பற்றி?


கலைஞர் :- தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச வேட்டி சேலையிலேகூட  ஜெயலலிதாவின் ஸ்டிக்கர் ஒட்டிக் கொடுப்பதை, புகைப்படத்தோடு வெளியிட்டிருக்கிறார்களே என்ற ஒரு கேள்விக்கு 
7-1-2016 அன்று நான் அளித்த பதிலில், தப்பித் தவறி 2016ஆம் ஆண்டு தேர்தலில், அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், சாலையில் போவோர், வருவோரையெல்லாம் பிடித்து நிறுத்தி, அவர்கள் முதுகிலே ஜெயலலிதாவின் ஸ்டிக்கரை ஒட்டி அனுப்பி விடுவார்கள் என்று எழுதியிருந்தேன் அல்லவா?  அதை நிரூபிக்கும் வகையில்தான், தேர்தலுக்கு முன்பாகவே இவ்வாறு நெற்றிப்பொட்டில் ஜெயலலிதாவின் உருவப்படம் பொறித்த ஸ்டிக்கரை ஒட்டி பொருத்தம் பார்த்திருக்கக் கூடும்! ஆட்சிக்கு வந்தவுடன் பள்ளிப் பாட நூல்களில் இருந்த  அய்யன் திருவள்ளுவர் படத்தை ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கத் தொடங்கி, இன்று ஜெயலலிதா படம் பொறித்த ஸ்டிக்கரை நெற்றிப் பொட்டில் ஒட்டி மகிழ்ச்சி அடையும் அளவுக்கு ஸ்டிக்கர் கலாச்சாரம்  சென்று விட்டது!


கேள்வி :- ஓமந்தூரார்  தோட்டத்தில்  61 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கலையரங்கத்தை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைப்பதாகச் செய்தி வந்துள்ளதே?


கலைஞர் :-  தி.மு. கழக ஆட்சியில் அந்த அரங்கம் புதுப்பிக்கப்பட்டு "கலைவாணர்  அரங்கம்"என்று பெயரிடப்பட்டு என்னால்தான் திறந்து வைக்கப்பட்டது.  தொடர்ந்து கலைவாணர் பெயரில்தான் அந்த அரங்கம் அழைக்கப்பட்டு இயங்கி வந்தது.   மீண்டும்  கழக ஆட்சியில் அந்தக் கலையரங்கினை புதிதாக விரிவாக்கம் செய்ய வேண்டுமென்று திட்டமிட்டு அதற்கான பணிகள் எல்லாம் நடைபெற்றன.   தற்போது  அந்த அரங்கம்தான் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட உள்ளது. ஆனால் அது பற்றி வந்துள்ள செய்தியில், புதிய கலை அரங்கம் என்று தான் உள்ளதே தவிர, கலைவாணர் பெயர் அந்த அரங்கத்திற்கு மீண்டும் இருக்குமா என்று தெரியாத நிலையில் செய்திகள் வந்துள்ளன.   ஒருவேளை கலைவாணரின் பெயரினை மறைக்கின்ற முயற்சியில் ஜெயலலிதா அரசு ஈடுபட்டுள்ளதா என்பது அந்த அரங்கம் திறந்த பிறகு தான் தெரியும். வள்ளுவர், தொல்காப்பியர், செம்மொழி, பாவேந்தர் பாரதிதாசன் - போன்ற புகழ்ப் பெயர்களை யெல்லாம்  மறைத்த மாபெரும் (?) வரலாற்றைப் படைத்திருப்பவர்கள்  அன்றோ அ.தி.மு.க. ஆட்சியினர்!


கேள்வி :- திருவண்ணாமலையில் கூட்ட நெரிசலால் கோயில் குளத்தில் மூழ்கி நான்கு பேர் பலியாகியிருக்கிறார்களே?

கலைஞர் :- அ.தி.மு.க. அரசின் அலட்சியம்,  அக்கறையின்மை காரணமாக திருவண்ணாமலையில் இந்த நான்கு உயிர்கள் அநியாயமாகப்  பலியாகியுள்ளன. அரசு நிர்வாகம் உரிய முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டிருந்தால், இந்த உயிர்கள் இப்படிப் போய் இருக்காது.   அரசு முன் கூட்டியே தேவையான நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டு, தற்போது கீழே பணியாற்றும் அலுவலர்கள் மீது பழியைப் போட முனைந்துள்ளது என்பது தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கும்  முயற்சியை ஒத்ததாகும்.