சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பதவிக்கு எட்டு கோடி ரூபாய் பேரம் ? தலைவர் கலைஞர் கேள்வி பதில்

சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பதவிக்கு எட்டு கோடி ரூபாய் பேரம் ? தலைவர் கலைஞர் கேள்வி பதில்

கேள்வி :- சென்னைப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பதவிக்கு எட்டு கோடி ரூபாய் பேரம் நடைபெறுவதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித் திருக்கிறாரே?

கலைஞர் : -  துணை வேந்தர் பதவிகளும், அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்கள் பதவிகளும் பல மாதங்களாகக்  காலியாக இருந்த நிலையில், பலரும் அதைச் சுட்டிக்காட்டியபோது, அது பற்றிக் கவலைப் படாதிருந்த அ.தி.மு.க. அரசு  விரைவில் தேர்தல் வருகிறது என்றதும் அவசர அவசரமாக உள்நோக்கத்துடன் இந்தப் பணி இடங்களைப் பூர்த்தி செய்வதில் அக்கறை காட்டுகிறது என்றும், அதிலே இலட்சக் கணக்கான ரூபாய் பேரம் பேசப்படுவதாகவும் அறிக்கைகளும், வழக்குகளும் வந்து கொண்டிருக்கின்ற நேரத்தில் அவசர அவசரமாக அந்த இடங்களில் சிலரை நியமிப்பதும், அவர்கள் அரசை விட வேகமாக அந்தப் பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதையும்  பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சித் தலைவர் விடுத்த அறிக்கை உண்மையாகத்தான் இருக்கும்  என்ற சந்தேகம்தான் எல்லோருக்கும் ஏற்படுகிறது.  தற்போது செய்தித் துறையில் மக்கள் தொடர்பு அதிகாரிகளையும், கல்வித் துறையில் ஆய்வக உதவியாளர்களையும் நியமிப்பதில் அரசு அதிவேகம் காட்டி வருகிறதாம்!  எதிர்காலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, விசாரணைக் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டால் இந்த ஊழலுக்குச் சொந்தக்காரர்கள் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். அவசர அவசரமாகப் பதவி ஏற்பவர்களும் பரிதவிக்கத்தான் நேரிடும்!


கேள்வி :-  அரசு அலுவலர் சங்கங்கள் சார்பில்  உண்ணாவிரதம்  இருக்கிறார்களே?

கலைஞர் :- முதலமைச்சர் ஜெயலலிதா,  அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை அழைத்துப் பேசாததைக் கண்டித்தும், அறுபது அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும்,  அரசு அலுவலர்கள் 8-2-2016 அன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.  அதில் பல ஆயிரம் ஊழியர்கள் மாநிலம் முழுவதிலுமிருந்து வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள். அரசால்  அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் சார்பில் கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக முதலமைச்சர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேச முயற்சி செய்து, அது நிறைவேறவில்லை என்றும், அவர்களின் கோரிக்கைகளை உடனடியாக அரசு நிறைவேற்றாவிட்டால், சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அங்கே தெரிவித்திருக்கிறார்கள். அரசு அலுவலர்களை நேரிலே சந்தித்து அவர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிப்பதை கௌரவக் குறைவாக கருதி வந்த அ.தி.மு.க. அரசு நேற்றையதினம் அழைத்துப் பேசி விட்டு,  இறுதியாக அவர்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதாகக் கூறியிருக்கிறார்கள். இடைக்கால நிதிநிலை அறிக்கையில் அறிவிப்புகள் வருமென்று காத்திருக்கிறார்கள். அரசு அலுவலர்களைப் போலவே, வணிக வரித் துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.  இதனால் இரண்டாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வணிக வரி வசூல் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.  முறையற்ற பதவி உயர்வுகளை ரத்து செய்ய வேண்டும், முறையான பதவி உயர்வினை உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்பன போன்ற   பதினைந்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 4-2-2016 அன்று சென்னையில் 500 பேர் உட்பட, தமிழகம் முழுவதும் 6000க்கு மேற்பட்ட வணிக வரித் துறைப் பணியாளர்கள் காலவரையற்ற  உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அறிவிக்கப் படாத வேலை நிறுத்தத்திலும் ஈடுபட்டார்கள்.  6-2-2016 அன்று இந்தத் துறையின் அமைச்சர் இவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி, மூன்று நாட்களுக்குள் அரசாணை வெளியிடப்படும் என்றும், உண்ணாவிரதத்தைக் கைவிட வேண்டுமென்றும் கூறியதற்கிணங்க,  உண்ணா விரதத்தைக் கை விட்ட போதிலும், அரசாணை வெளியிடும் வரை வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்திருக்கிறார்கள். 
அடுத்து, சத்துணவு, அங்கன்வாடி அலுவலர்கள் தங்களுக்கு பணிவரன்முறை வழங்க வேண்டும், வாழ்க்கைத் தரத்துக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி  இன்று முதல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருக்கிறார்கள்.   
அ.தி.மு.க. ஆட்சியில் அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும், சத்துணவு, அங்கன்வாடி அலுவ லர்களும், வணிக வரித் துறை அலுவலர்களும் என்ன பாடு படுகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள ஏடுகளைப் படித்தாலே போதும்! 


கேள்வி :- எல்லோருக்கும் பொதுவாக இருக்க வேண்டிய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆளுங் கட்சிக்காரர்களைப் போல நடந்து கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறதே?


கலைஞர் :- முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலே தண்டனை பெற்று சிறையிலே இருந்தபோது, அவரது விடுதலைக்காக ஆளுங்கட்சியினர் நடத்திய யாகங்களில் சில மாவட்ட ஆட்சித்  தலைவர்கள் நேராகவே சென்று கலந்து கொண்டார்கள்.  அதைத் தொடர்ந்து  கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர்,"அம்மாவின் ஆணைக்கிணங்க சேலம் மாவட்டத்தில் அதிக மழை பெய்துள்ளது"என்று பகுத்தறிவே அற்றவராய்ப் பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்தார். தற்போது மதுரை மாவட்ட ஆட்சியரைப் பற்றி, ஆளுங்கட்சியைச் சேர்ந்த  சட்டமன்ற உறுப்பினர் ஒருவரே மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் விளிக்கும் போது, "மாவட்டக் கொள்கைப் பரப்புச் செயலாளர்,  எங்களின் போர்ப்படை தளபதியே"என்றெல்லாம் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும்போது மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பது புரியவே செய்கிறது. மேலும் ஆட்சிக்கும், ஆளுங்கட்சிக்கும் இடையே உள்ள  எல்லைக் கோடு  சிறிது சிறிதாக மீறப்பட்டு மறைக்கப்பட்டு ஜனநாயக மரபுகள் மங்கி வருகின்றனவோ என்ற கவலையே ஏற்படுகிறது.


கேள்வி :- ஊழல் புகார் மீதான விசாரணை குறித்த அரசாணை பிறப்பிக்கப்பட்டதற்காக  தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப் பட்டதாக செய்தி வந்திருக்கிறதே?


கலைஞர் :- கடந்த 5-2-2016 அன்றே இது பற்றி நான் "கேள்வி-பதில்"பகுதியில் விரிவாகச் சொல்லியிருக்கிறேன். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மீதான லஞ்சப் புகார்களை விசாரணை செய்ய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற அரசாணையை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2015ஆம் ஆண்டிலேயே வழக்கறிஞர் புகழேந்தி மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார். அவரது மனுவில்,  "குற்றச் செயல் புரிபவர்கள் மீது ஊழல் புகார் வந்தால் அனைவரும் சமம் என்ற அடிப்படையில் உடனடியாக விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்"என்று கேட்டுக் கொண்டிருந்தார். அந்த மனு தலைமை நீதிபதி அடங்கிய டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தபோது, அரசு வழக்கறிஞர் இது தொடர்பாக  தமிழக அரசு உரிய அரசாணையைப் பிறப்பிக்கும் என்று உத்தரவாதம் கொடுத்தார்.  அந்த நிலையில்தான் கடந்த 2-2-2016 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், அரசு ஊழியர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது ஊழல் புகார் வந்தால்,  வழக்கு தொடர அரசின் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த வழக்கு  தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் 5-2-2016 அன்று விசாரணைக்கு வந்த போது, வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் அரசாணையை நீதிபதிகளிடம் கொடுத்து வாதிட்டிருக்கிறார்.   இதைத் தொடர்ந்து தான் வழக்கறிஞர் புகழேந்தி  தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத் தலைமைச் செயலாளர் வேண்டுமென்றே உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், உயர் நீதிமன்றத்தில் கொடுத்த உத்தரவாதத்திற்கும் முரணாக புதிய அரசாணையை வெளியிட்டிருப்பதாகக் கூறி, தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.


கேள்வி :- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய மாநிலச் செயலாளர், அ.தி.மு.க.வை விமர்சிக்கும் அதே நேரத்தில் தி.மு. கழக ஆட்சியையும் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறாரே?

கலைஞர் :- இரண்டு திராவிடக் கட்சிகளுடைய ஆட்சியில் ஏழையெளிய மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றும், அவர்களின் முன்னேற்றத்திற்காக எதுவும் செய்யவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். 1967ஆம் ஆண்டு தி.மு.க.வுடனும்,  1977ஆம் ஆண்டு அ.தி.மு.க.வுடனும்,  1980ஆம் ஆண்டு  அ.தி.மு.க.வுடனும், 1989ஆம் ஆண்டு தி.மு.க.வுடனும், 2001ஆம் ஆண்டு அ.தி.மு.க.வுடனும், 2006ஆம் ஆண்டு தி.மு.க.வுடனும்,  2011ஆம் ஆண்டு  அ.தி.மு.க.வுடனும் மாறி மாறி கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற போது இப்படியெல்லாம் குறை சொல்லத் தோன்றவில்லை. ஆனால் தற்போது அவருக்கு மட்டும் தி.மு.க. மீது என்னவோ கோபம்?  அ.தி.மு.க.வை நேரடியாக  விமர்சனம் செய்ய அவர்களுக்கு அச்சம்.  தி.மு.க.வை எப்படி விமர்சித்தாலும் ஜனநாயகத்தில் இது சகஜம்தானே என எடுத்துக் கொள்ளும் என்று அவர்களுக்கு நம்பிக்கை!