பேராசைப் பெருமாட்டியைப் பற்றி குட்டிக்கதை! தலைவர் கலைஞர்

பேராசைப் பெருமாட்டியைப் பற்றி குட்டிக்கதை! தலைவர் கலைஞர்

   சென்னையில் 14 திருமணங்களை நடத்தி வைத்த அ.தி.மு.க. தலைவி  வழக்கம் போல “குட்டிக் கதை”களைப் படித்திருக்கிறார்.   அந்தக் காலத்தில்  ஒவ்வொரு கூட்டத்திலும் இது போல குட்டிக் கதைகளைக் கூறும் மூதறிஞர் ராஜாஜி  என்று  இவருக்கு நினைப்பு போலும்!        “அடுத்தவர் மகிழ்ச்சியில் தன் மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது என்று வாழ்வதே இனிய இல்லறம்” என்று பேச்சைத் தொடங்கிய ஜெயலலிதா, தனது ஆட்சிக் காலத்தில் எத்தனை பேரின் மகிழ்ச்சியைக் கெடுத்து, மன வருத்தத்தைக் கொடுத்து,  அதிலே இன்பம் கண்டார் என்பதை;  வேலையை இழந்த மக்கள் நலப் பணியாளர்களிடமும், சாலைப் பணியாளர்களிடமும்,  இன்றைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், வணிக வரித் துறை அலுவலர்கள், செவிலியர்கள் ஆகியோரைக் கேட்டால் அனுபவித்து வரும் துன்பங்களை விளக்கமாகக் கூறுவார்கள்! விடிய விடியக் கூறுவார்கள்!   அது மாத்திரமல்ல;  மதுவிலக்குக் கொள்கைக்காக உயிரிழந்த சசிபெருமாள் அவர்களின்  குடும்பத்தினரையும்,  தற்கொலை செய்து கொண்டு மாண்ட முத்துக்குமாரசாமி, விஷ்ணுப்ரியா போன்ற அரசு அதிகாரிகளின் குடும்பத்தினரையும் கேட்டால் பட்ட வேதனைகளை  இன்னும் விரிவாகவே கூறுவார்கள்!        ஜெயலலிதா தனது பேச்சில் ஒரு அப்பா மகன் கதையைச் சொல்லியிருக்கிறார்.  அந்தக் கதையை அவர் சற்று மாற்றிக் கூறியிருக்க வேண்டும்.   ஒரு தந்தை தன் மகனை ஏணியில் மேலே வரச் சொல்லி, அவன் உயரே வரும்போது, ஏணியைத்  தட்டி விட்டு மகனை அடிபட வைத்தார் என்று கூறியிருக்கிறார்.   எந்தப் பாசக்காரத் தந்தையும் தன் மகன் கீழே விழுந்து அடிபடுவதை விரும்ப மாட்டார்.   அது குடும்பம் நடத்தும்,  பிள்ளை பெற்றவர்களுக்குத் தான் தெரியும்!        ஊரிலே உள்ள பிள்ளை களுக்கெல்லாம் முறையாக அரசியல் பாடத்தைக்  கற்றுக் கொடுத்த தந்தை, தன் மகனுக்கு மட்டும் அரசியலை  முறையாகக் கற்றுக் கொடுக்காமலா இருந்து விடுவார்?  அரசியலில் கீழே இருந்து கடுமையாக  உழைத்து, படிப்படியாக மேலே வந்தவர்களுக்கு இந்த உண்மை  புரியும்.   எப்படியோ அடித்த காற்றில் மேலே வந்து கோபுரக் கலசத்தில் ஒட்டிக் கொண்டவர்களுக்கு கதையைத் திரித்துச் சொல்லத் தான் தெரியும்.  உண்மையில் கதை என்ன தெரியுமா?        தந்தையும், மகனும்  அன்போடும், பாசத்தோடும் இருப்பதையும், அரசியலை  முறையாக நடத்துவதையும்  கவனித்து வந்த, எதிர்  வீட்டுப் பெருமாட்டிக்கு பொறாமை என்றால் அவ்வளவு பொறாமை.   அந்த அம்மையாருக்குப் பிள்ளையும் கிடையாது, குட்டியும் கிடையாது.   ஆனால் குடும்பமே எனக்கு இல்லை என்று சொல்லிக் கொண்டே ஊரிலே உள்ள சொத்துக்களை யெல்லாம் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்ளப் படாத பாடு படுவார்.   மலைப் பிரதேசங்களில் எல்லாம் தேயிலை எஸ்டேட்டுகளை வாங்கி வைத்துக் கொண்டு “நாடு ஆறு மாதம், காடு ஆறு மாதம்” என்பதைப் போல மாளிகையிலும் அரண்மனையிலும் ஓய்வெடுத்துக் கொண்டு காலம் தள்ளி வருபவருக்கு  எதிர் வீட்டில்  தந்தையும், மகனும்  பாசத்தோடு  இருப்பது பிடிக்குமா?  அல்லது பொறுக்குமா?     எப்போது தந்தை மகன் ஆகியோருக்குள் தகராறு வரும், நாம் குழம்பிய குட்டையில் மீன் பிடித்து மகிழ்ச்சியடையலாம் என்று எதிர்பார்த்துக்  காத்துக் கொண்டிருக்கிறார்.  மகன் தந்தையிடம் வந்து அரசியல் கற்றுக் கொடுக்க வேண்டுமென்று கேட்ட போது,  மிகவும் மகிழ்ச்சியடைந்த தந்தை தான் கற்ற அரசியல் நுணுக்கங்களை யெல்லாம் மகனுக்குப் பாசத்தோடு கற்றுக் கொடுக்கிறார்.   எதிர் வீட்டுப் பெருமாட்டியின் விருப்பத்தையும் மகனிடம் கூறுகிறார்.   “நீ அரசியல் ஏணியில் ஏறும்போது,  உன்னை அங்கிருந்து தள்ளி விட  சிலர் முயற்சி செய்வார்கள்.  எனவே கவனமாகப் பார்த்து ஏணியில் ஏறு” என்றும் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.    ஏணியில் இருந்து மகன் விழுந்து விடுவான் என்று எதிர்பார்த்துக் காத்திருந்த எதிர் வீட்டு  சீமாட்டி; மகன் மிகுந்த எச்சரிக்கையோடும், படிப்படியாகவும், கவனமாகவும் ஏணியில் ஏறி வருவதையும், மகன் பத்திரமாக ஏணிப் படிகளில் ஏறி மேலே வர வேண்டுமென்று எண்ணுகின்ற தந்தையையும் பார்த்து மிகப் பெரிய ஏமாற்றத்தைத் தழுவுகிறார் என்பது தான் உண்மைக் கதை.   எனவே மகனுக்கும், தந்தைக்கும் இடையே  பிளவு வரும், நாம் ரத்தம் குடிக்கலாம் என்று காத்திருக்கும் எதிர்வீட்டு  சீமாட்டி ஆப்பசைத்த குரங்கைப் போல்  ஏமாறப் போவது நிச்சயம்.    கதையில் வரும் பேராசைப் பெருமாட்டியைப் பற்றித் தான் நான் இங்கே விளக்கினேன்.  அது யாரோ என்று எண்ணிக் கொண்டு,   நீங்கள் யாரும் குழப்பம் அடையத் தேவையில்லை!