தனியார் துறையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும்! தலைவர் கலைஞர் வலியுறுத்தல்

தனியார் துறையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும்! தலைவர் கலைஞர் வலியுறுத்தல்


        தனியார் துறையில் இயங்கும் பெரிய நிறுவனங்கள்,  மருத்துவ மனைகள்,  பள்ளிகள், அறக்கட்டளைகள்   போன்றவற்றில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கும்  இட ஒதுக்கீடு  வழங்க வேண்டும்  என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர்  ஆணையம்,  மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருப்பதாக செய்தி வந்துள்ளது. இதுகுறித்து  பிற்படுத்தப்பட்டோர்  ஆணைய உறுப்பினர் திரு ஷகீல் உஸ்மான்  அன்சாரி அவர்கள் டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, "அரசு வேலைவாய்ப்புகள்  கணிசமாக குறைந்துவிட்ட சூழ்நிலையில்,  தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.   எனவே,  தனியார் நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடி இனத்தவருக்கு  மட்டுமன்றி,  இதர பிற்படுத்தப்பட்டோருக்கும்  27 சதவிகித  இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.        இந்தக் கோரிக்கையைத்தான் திராவிட முன்னேற்றக் கழகமும், சமூக நீதிக்காகத் தொடர்ந்து  பாடுபட்டு வருபவர்களும் பல ஆண்டுகளாக எடுத்துரைத்து   வருகிறார்கள்.  உண்மையில் கூறப் போனால்,  திராவிட முன்னேற்றக் கழகம் 2014ஆம் ஆண்டு வெளியிட்ட  தேர்தல் அறிக்கையில்,  "பொதுத் துறை நிறுவனங்களில் வழங்கப் படும் வேலை வாய்ப்புகள் வெறும்  ஒரு சதவீதம் மட்டுமே என்பது மிக மிகக் குறைவானதாகும்.  மேலும், பொதுத் துறை நிறுவனங்கள், படிப்படியாக தனியார் மயமாக்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, இனிமேல்  கட்டாயம் தனியார்  துறையிலும் இட ஒதுக்கீட்டு முறை  பின்பற்றப்பட வேண்டும். அப்படி வழங்குவது மட்டுமே  சமூக நீதியின் நியாயமான,  முழுமையான வெளிப்பாடாகும்.  இத்தகைய இட ஒதுக்கீடுகள்  நீண்ட காலமாக  அமெரிக்க ஐக்கிய குடியரசில்  “Affirmative Action”  நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தனியார் துறையிலும் பிற்படுத்தப் பட்டோருக்கும், மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கும்  இடஒதுக்கீட்டு முறையைக்  கட்டாயம் பின்பற்ற வேண்டுமென  மத்திய அரசை தி.மு. கழகம் வலியுறுத்தும்" என்று கூறப்பட்டுள்ளது.மேலும், கழகத்தின் சார்பில்   நடைபெற்ற  பல்வேறு மாநாடுகளில் பொது நிறுவனங்களில் இட ஒதுக்கீடு  தரப்பட வேண்டும் என்பதற்காகத் தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறோம்.  இந்த நிலையில் தனியார் நடத்தும்  பெரிய நிறுவனங்கள்,  மருத்துவமனைகள்,  பள்ளிகள், அறக்கட்டளைகள்   போன்றவற்றில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கும்  இட ஒதுக்கீடு  வழங்க வேண்டும்  என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர்  ஆணையம்,  மத்திய அரசுக்குப் பரிந்துரைத்திருப்பதாக வந்துள்ள செய்தி வரவேற்கத் தக்க ஒன்றாகும்.   நடைமுறைக்கேற்ற இந்தப் பரிந்துரையினை  மத்திய பா.ஜ.க. அரசு,  குறிப்பாக இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் ஏற்று, முன்னெடுத்துச் செல்வதற்கான   முயற்சியில் ஈடுபட வேண்டு மென்று  சமூக நீதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவன்  என்ற முறையில்,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்தியப்  பிரதமரை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.