சட்டப்பேரவைக்கு உச்ச நீதி மன்றம் தந்த பாராட்டு (?) (கலைஞர் பதில்கள் - 13.2.2016)

சட்டப்பேரவைக்கு உச்ச நீதி மன்றம் தந்த பாராட்டு (?) (கலைஞர் பதில்கள் - 13.2.2016)

கேள்வி:- அ.தி.மு.க. ஆட்சியின் சர்வாதிகாரத்தைக் கண்டிப்பதில் உச்ச கட்டமாக இந்திய உச்சநீதி மன்றமே 6 தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களின் “சஸ்பென்ட்" உத்தரவை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியிருக்கிறதே?

 

கலைஞர் :- ஆட்சி வேறுஆளுங்கட்சி வேறு;  சட்டப்பேரவை வேறுஆனால் தேர்தலில் பெரும்பான்மை பெற்றுவிட்ட ஒரே காரணத்தினால்எங்கும் எதிலும் தாங்கள் வைத்ததே சட்டம் என்ற  அளவுக்கு ஆளுங்கட்சியினர் தொடர்ந்து அடாவடியாக நடந்து கொண்டதைத்தான் நாம் கடந்த ஐந்தாண்டு காலமாக மிகுந்த கவலையுடன் கண்டு வருகிறோம். பேரவையில் யாரை வேண்டுமென்றாலும்எப்போது வேண்டுமென்றாலும் வெளியேற்றுவார்கள்யார் மீது வேண்டுமென்றாலும் அவதூறு வழக்கு போடுவார்கள்யார் மீது வேண்டுமானாலும் உரிமைப் பிரச்சினை கொண்டு வந்து நிறைவேற்றுவார்கள். “அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகிவிடும்" அல்லவாஅதுபோலத்தான் உச்ச நீதி மன்றத் தீர்ப்பு வெளிவந்துள்ளது. தமிழகத்திலே உள்ள ஜனநாயக ஆர்வலர்கள் அனைவருக்கும் உவப்பினை அளித்திடும் தீர்ப்பு இது. எத்தனையோ வழக்குகளில் இந்த அரசுக்கு எதிராக நீதிமன்றங்கள் கண்டனங்களைத் தெரிவித்திருக்கின்றன. அதற்கெல்லாம் முத்தாய்ப்பாகவும் மேலாகவும் தமிழகச் சட்டப்பேரவையின் தீர்மானத்தை ரத்து செய்து அமைந்திருக்கும்  இந்தத் தீர்ப்புமக்களாட்சி மாண்புகளை முற்றிலுமாகப் புறக்கணித்து நடைபெறும் பேரவைக்கு நல்ல படிப்பினை என்பதுதான் எனது கருத்தாகும். சில ஆண்டுகளுக்கு முன்பே இந்த மாதிரித் தீர்ப்பு வந்து இந்த ஆட்சியாளர்களை திருத்தியிருக்க வேண்டும். சட்டப் பிரச்சினைகள் எப்படி இருந்தாலும்தற்போது வந்திருப்பது அனைவராலும் வரவேற்கத்தக்க தீர்ப்பு. “சஸ்பென்ட்" உத்தரவால் பாதிக்கப்பட்டுதற்போது அதிலிருந்து மீண்டு வந்த ஆறு தே.மு.தி.க. சட்டமன்றஉறுப்பினர்களுக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

கேள்வி :- தமிழகத்திற்கு வருகை தந்த இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிய தோடு,நம்பிக்கையூட்டும் பல கருத்துகளையும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறாரே?  

 

கலைஞர் :- தமிழகச் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் குறித்துஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்திரு.நஜிம் ஜைதி தலைமையில் சென்னையில் 11-2-2016 அன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுவரவேற்கத்தக்க பல முடிவுகள் அதிலே எடுக்கப்பட்டுள்ளன. இதுவரை நடைபெற்ற எந்த மாநிலப் பொதுத் தேர்தல்களிலும் இல்லாத அளவுக்கு,  இந்தத் தேர்தலில் சுமார் ஐம்பது இலட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதை ஆதாரப்பூர்வமாக திராவிட முன்னேற்றக் கழகமும்தமிழகத்திலே உள்ள மற்ற எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து எடுத்து விளக்கியதை ஏற்றுக்கொண்ட தலைமைத் தேர்தல் ஆணையர்,  போலி வாக்காளர்களைக் கண்டுபிடிக்க வருகிற 15ஆம் தேதி முதல்  29ஆம் தேதி வரை வீடு வீடாக  வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்கும் பணி நடைபெறும் என்று இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் கூறியிருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். மேலும் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது குறித்துப் பரிசீலித்து முடிவு செய்யப்படும் என்றும்,  கடந்த தேர்தலைப் போல, 144 தடை உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்ற அரசியல் கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம்  கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்றும்வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்பாக ஆன்லைனில் வரும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  20 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும் என்றும் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர்  கூறியிருப்பதும் பாராட்டத்தக்க அம்சங்களாகும். மேலும் மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியில் உள்ள அதிகாரிகளை இட மாற்றம் செய்ய வேண்டுமென்றும்,  108 ஆம்புலன்ஸ் மூலம் பணம் விநியோகம் செய்யப்படுவதைத் தடுக்க வேண்டுமென்றும் அனைத்துக் கட்சிகளின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகளையும் தேர்தல் ஆணையம் உரிய முறையில் பரிசீலிக்குமென்று நம்புகிறேன். உறுதியளித்துள்ளபடிஅனைத்து நடவடிக்கைகளையும் உரிய காலத்திற்குள் முறையாக மேற்கொண்டு,நேர்மையான தேர்தலை நடத்துவார்கள் என எதிர்பார்ப்போமாக!

 

தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்த  தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ)வின்  ஒருங்கிணைப்பாளர் இளமாறன் செய்தியாளர்களிடம் கூறும்போது,  தேர்தலில் ஆசிரியர்களுக்கு கல்விப் பணி பாதிக்காமல் தேர்தல் பணிகளை வழங்கவேண்டும்.  தொடர்ச்சியாக ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தகுந்த பாதுகாப்பும்அடிப்படைவசதிகளும் செய்து தரப்பட வேண்டும். வயதான ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை தலைமைத் தேர்தல் ஆணையரிடம் வலியுறுத்தியதாகவும்,  தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளது என்றும் தெரிவித்திருப்பதும் ஆறுதல் தருகின்ற செய்தியாகும்.

 

கேள்வி:- ராணுவத்தில் பணியாற்ற வேண்டுமென்ற விருப்பத்துடன் பணியில் சேர்ந்து சியாச்சின் பனிச் சரிவில் சிக்கி மாண்டு போன லான்ஸ் நாயக்அனுமந்தப்பா பற்றி?

 

கலைஞர் :- மிகப் பெரிய அதிர்ச்சிக்கு உரிய செய்தி அது. நமக்குப் பக்கத்து மாநிலமான கர்நாடகாவைச் சேர்ந்த மாவீரன் அனுமந்தப்பா. காஷ்மீரில் உள்ள சியாச்சின் பனிமலையில் பாதுகாப்புப் பணியிலே ஈடுபட்டிருந்த நேரத்தில் 9 வீரர்களும்ஒரு இளநிலை அதிகாரியும் கடந்த 3ஆம் தேதியன்று பனிச் சரிவில் சிக்கிஇதில் அனைவரும் உயிரிழந்து விட்டதாக முதலில் கருதப்பட்டது.  மறைந்தவர்களில் நான்கு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், 6நாட்கள் கழித்துஅதிசயிக்கத்தக்க நிகழ்வாக  பனிக்கட்டிகளுக்கு இடையே  25 அடி ஆழத்தில் புதையுண்டிருந்த  கர்நாடகாவைச் சேர்ந்த  அனுமந்தப்பா மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தார். தற்போது அவரும்  மறைந்து விட்டார். நாட்டின் பாதுகாப்புக்காக பணியில் சேர்ந்து இளம் வயதிலேயே அகால மரணம் அடைந்து விட்ட அத்தனை வீரர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலையும்அவர்களுடைய குடும்பத்தாருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

கேள்வி :- ஜெயலலிதாவின்  ஐந்தாண்டு கால ஆட்சி?

 

கலைஞர் :- நேற்று 12-2-2016 மாலை ஏடுகளில் வந்த செய்திகளின் தலைப்புகளை மட்டும் பார்த்தால்

 

 • ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி  ரேஷன் கடை ஊழியர்கள் திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் - 18 ஆயிரம் கடைகள் அடைப்பு - கிராமங்கள் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம்.

   

 • தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேர் சஸ்பென்ட்  ரத்து - உச்ச நீதி மன்றம் அதிரடி தீர்ப்பு.

   

 • சென்னையில் இன்று அரசு ஊழியர்கள்  சாலை மறியல் - ஆயிரம் பேர் கைது.

   

 • ஒரு கோடி ரூபாய் போதை மாத்திரை பறிமுதல்.

   

 • வணிக வரித்துறை ஊழியர்கள் 6வது நாளாக ஸ்டிரைக்.

   

 • 3வது நாளாக போராட்டம் நீடிப்பு - மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவுஅங்கன்வாடி ஊழியர்கள் மறியல் - ஆயிரக் கணக்கானோர் கைது.

   

 • நிவாரண நிதி இன்னும் வரவில்லை - பொதுமக்கள் கடும் அதிருப்தி

   

 • திருக்கழுக்குன்றம் அருகே வெள்ள நிவாரணம் கேட்டு மறியல்.

   

 • காருக்குள் அழுகிய நிலையில் வாலிபர் சடலம்

   

 • வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு

   

 • நடக்காத கும்பாபிஷேகத்திற்கு ஜெ. பெயரில் கல்வெட்டு

   

 • ஜெயலலிதா பிறந்த நாள் விழா பேனரை அகற்றிய இன்ஸ்பெக்டரை திட்டி மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. நிர்வாகி.

   

 • அம்பத்தூரில் பெண்ணிடம் 15 சவரன் செயின் பறிப்பு.

   

 • தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம்  உயர்வு.

   

 • ஆவடி அருகே கத்தி முனையில் தம்பதியை மிரட்டி நான்கரை லட்சம் ரூபாய் நகைபணம் கொள்ளை.

   

  ஒரே நாள் மாலைப் பத்திரிகைகளில் மட்டும் இவ்வளவு வகைவகையான செய்திகள் என்றால்ஐந்தாண்டு கால ஆட்சிப் பட்டியலை (?)  எடுத்துக் கூற எத்தனை நாட்கள் வேண்டும் என்பதை முதல் அமைச்சர் ஜெயலலிதாவிடம் ஆலோசனை கேட்டுத்தான் சொல்ல முடியும்!

   

  கேள்வி:-  பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் உள்ள 66 ஆசிரியர் பணி இடங்களை நிரப்புகின்ற பணி அவசர அவசரமாக நடைபெறுகிறதாமே?

   

  கலைஞர் :- பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் கல்லூரிகளின்  பல்கலைக் கழக ஆசிரியர் சங்கக் கிளைகளின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பில் இந்தப் பிரச்சினை பற்றி எனக்கொரு கடிதமே எழுதியிருக்கிறார்கள். அதில் பச்சையப்பன் அறக்கட்டளையில் நடைபெறும் முறைகேடுகளையெல்லாம் தொகுத்து எழுதியதோடுஅறங்காவல்குழு உறுப்பினராக இருந்த ஒருவர் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்   உறுப்பினராக  நியமிக்கப்பட்டுஅவர் 2-2-2016 அன்று அங்கே பொறுப்பேற்ற பிறகும்,  பச்சையப்பன் அறக்கட்டளை நிதி அறங்காவலராகவும் தொடர்ந்து செயல்படுவதாகவும்,   17-2-2016 அன்று  66 ஆசிரியர் பணி இடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறவிருப்பதாகவும்ஒவ்வொரு பணி இடத் திற்கும் முப்பது இலட்ச ரூபாய்க்கு மேல் பேரம்  பேசப்பட்டு வருவதாகவும்,  பழம்பெருமை வாய்ந்த பச்சையப்பன் அறக்கட்டளையின் சொத்துக்கள் சிலரால் சூறையாடப்படுவதாகவும்அதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்றும்  பலர் கையெழுத்திட்டு மனு கொடுத்திருக்கிறார்கள்.  இந்தப் புகார்  குறித்து  தமிழக அரசுதான் முறையான விசாரணை நடத்திட வேண்டும்.  தவறுக்கு உடந்தையாக அரசு செயல்பட்டால்,வருங்காலத்தில் ஆட்சி மாற்றம் நேரும் போது  அந்த தவறுகள் களையப்படும்.

   

  கேள்வி:- அரியானா முதலமைச்சர் தமிழகத்திலே உள்ள தொழில் முதலீட்டாளர்களை அவருடைய மாநிலத்திலே தொழில் தொடங்க அழைப்பு விடுத்திருக்கிறாரே?

   

  கலைஞர் :- உண்மைதான்; 11-2-2016 அன்று “டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில நாளேட்டில் முதல் பக்கத்திலும்ஆறாவது பக்கத்திலும் இது பற்றிய செய்தி விரிவாக வந்துள்ளது. “தினகரன்" நாளேட்டிலும் இந்தச் செய்தி வந்துள்ளது.  Haryana Chief Minister, Manohar Lal Khattar announced on Wednesday that Companies which have significant operations in Tamil Nadu like Lucas-TVS Ltd.,  and Gati Ltd., have promised to invest  as much as 3,000 crore rupees in Haryana என்று “டைம்ஸ்" ஏடு முதல் பத்தியில் எழுதி யிருக்கின்றது. சென்னையில் செய்தியாளர்களிடம் அரியானா முதல்வர் கூறும்போது,  “தமிழ்நாட்டில் முதலீட்டாளர்களை ஈர்க்க வந்துள்ளோம். நாங்கள் வந்த பிறகு எங்களைத் தமிழகத்தைச் சேர்ந்த டி.வி.எஸ்.லூகாஸ் போன்ற நிறுவனங்கள்கல்வி நிறுவனங்கள் என 12 நிறுவனங்களின் பிரதிநிதிகள் சந்தித்து அரியானா மாநிலத்தில் முதலீடு செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர். இந்த நிறுவனங்கள் சுமார் 3,000 கோடி ரூபாய் அளவில் முதலீடுகளைச் செய்யவுள்ளன" என்றெல்லாம் கூறியிருக்கிறார்.

   

  பிற மாநில முதலமைச்சர்கள் தமிழகத்திற்கு வந்து இங்கேயுள்ள முதலீட்டாளர்களை அவர்களுடைய மாநிலத்திலே வந்து தொழில் தொடங்க அழைப்பு விடுப்பது இது முதல் முறையல்ல.

    

  தமிழககர்நாடக எல்லையில் உள்ள சாம்ராஜ் நகர் மாவட்டத்தில், 1,400 ஏக்கரில்  தொழில் மண்டலம் கர்நாடக அரசால் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முதலீட்டாளர்களை இழுக்கும் வகையில்கோவையில் “சாம்ராஜ் நகர் முதலீட்டாளர்கள் மாநாடு"  ஒன்று நடத்தப்பட்டது!  அந்த மாநாட்டில்,  கர்நாடக முதலமைச்சர்தொழில்துறை அமைச்சர் மற்றும்  கர்நாடக மாநில அரசின் உயர் அதிகாரிகள் எல்லாம் பங்கேற்றதோடு,  தொழிலதிபர்களுக்குப்  பல்வேறு வாக்குறுதிகளை எல்லாம் வாரி வழங்கினர். இதுபோலவே  ஆந்திராவில் தொழில் தொடங்க வாருங்கள் என்று அந்த மாநில முதலமைச்சரும்மத்திய பிரதேசத்தில் தொழில் தொடங்க வாருங்கள் என்று அந்த மாநில முதலமைச்சரும்மேற்கு வங்கத்திற்கு வாருங்கள் என்று மம்தா பானர்ஜி அவர்களும் ஏற்கனவே அழைப்பு விடுத்திருக்கிறார்கள். “யானை இளைத்தால் எலி கூட எட்டி உதைக்கும்" என்பது பழமொழி அல்லவா?  அதனால் அ.தி.மு.க. ஆட்சியில் நமது தமிழகத்தின் உண்மை நிலையை அந்த மாநில முதல்வர்கள் எல்லாம் உணர்ந்து இங்கே வந்து நமது தொழில் அதிபர்களை தங்கள் மாநிலத்திற்கு அழைக்கிறார்கள். ஆனால் நமது தமிழக முதலமைச்சர் எந்த மாநிலத்திற்காவது சென்று இவ்வாறு தொழிலதிபர்களை தமிழகத்திலே தொழில் தொடங்க வாருங்கள் என்று அழைப்பு விடுத்தது உண்டாவெறும் விளம்பரங்களைச் செய்து,  குத்தாட்டங்களை நடத்தி,  100 கோடி ரூபாய் செலவு செய்து முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவ தாகக் கூறி,  அந்த மாநாட்டில் 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முதலீடுகள் வந்திருப்பதாக அறிவித்துதமிழ்நாட்டு மக்களின் காதுகளில் பூ சுற்ற முயற்சித்ததைத் தவிர வேறு என்ன நடந்தது?

   

  கேள்வி :- விசைத்தறி நெசவாளர்கள் 16 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து கொண்டிருக்கிறார்களே?

   

  கலைஞர் :- அ.தி.மு.க. ஆட்சியில் பாதிக்கப்பட்ட பல்வேறு தரப்பினரில்இவர்களும் முக்கியமான தொரு பிரிவினர். கோவைதிருப்பூர்  மாவட்டங்களில் விசைத்தறி நெசவாளர்கள்  கடந்த 16 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள். அதன் காரணமாக  2 இலட்சம்  தொழிலாளர்கள் வருவாய் இழந்து வாழ்வாதாரத்தைப் பறி கொடுத்துக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. அடுத்து 14ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில்  ஜவுளி உற்பத்தியாளர்கள்  கூலி உயர்வு வழங்க முன் வந்தால் போராட்டத்தைத் திரும்பப் பெறுவோம் என்றும்இல்லாவிட்டால் வேலை நிறுத்தம் தொடரும் என்றும் விசைத்தறியாளர்கள் கூறியுள்ளார்கள்.  இந்தத் துறைக்கு என்று இந்த ஆட்சியில் அமைச்சர் ஒருவர் இருந்தால்அவர் இதிலே இனிமேலாவது தலையிட்டு பிரச்சினையை சுமூகமாக முடிக்க வேண்டும்.

   

  கேள்வி :- கேரள சட்டசபையில் நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்த உம்மன்சாண்டி,  முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கிறாரே

   

  கலைஞர் :- ஏடுகளில் அந்தச் செய்தி வெளிவந்துள்ளது. தமிழக ஆட்சியினர்  இதற்கு தக்க பதிலை, 16ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் வெளியிடவிருக்கும் நிதி நிலை அறிக்கையில் தெரிவிப்பார்கள் என்று நம்புகிறேன்.