அவினாசி-அத்திக்கடவு திட்டத்திற்காக உண்ணாவிரதம் இருப்போர் கைவிட வேண்டும் !

அவினாசி-அத்திக்கடவு திட்டத்திற்காக உண்ணாவிரதம் இருப்போர் கைவிட வேண்டும் !

2011ஆம் ஆண்டு தி.மு. கழகத் தேர்தல் அறிக்கையிலேயே அத்திக்கடவு - அவினாசி வெள்ளக் கால்வாய்த் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிர முயற்சிகளை மேற்கொள்வோம் என்று அறிவித்தோம். ஆனால் அப்போது தி.மு. கழகம் ஆட்சிக்கு வர முடியவில்லை. இந்த ஆண்டு தேர்தல் அறிக்கையில் மீண்டும் அந்தத் திட்டத்தைச் சேர்ப்பதாக உள்ளோம். எனவே இந்தத் திட்டத்திற்காக காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கும் மக்கள் அதனைக் கைவிட்டு, திட்டம் நிறைவேறும் காலம் நெருங்கி வருவதால் இன்னும் சில நாட்கள் பொறுமையாக இருக்க வேண்டுமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


அவினாசி - அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். 30 டி.எம்.சிக்கும் அதிகமாக தண்ணீர் வீணாகக் கடலில் செல்வதைத் தடுத்து, அத்திக்கடவு என்னும் இடத்தில் கால்வாய்கள் அமைக்கும் இத்திட்டத்தால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள எட்டுக்கும் மேற்பட்ட சட்டமன்றத் தொகுதிகள் பயனடையும்.

 


30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் இந்தத் திட்டத்தினால் பாசன வசதி பெறும். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டு மென்று கோரி, தற்போது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அந்தப் பகுதி மக்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். உண்மையிலேயே இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற அக்கறை இந்த ஆட்சியினருக்கு இருந்திருக்கு மானால் கடந்த ஐந்தாண்டு காலமாக இதைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்திருப் பார்களா? அந்தப் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. அமைச்சர்களும் இந்தத் திட்டம் பற்றி இதுவரை அக்கறை செலுத்தவில்லை. கழக அரசு கொண்டு வந்த கருமேனியாறு - நம்பியாறு - தாமிரபரணி நதி நீர் இணைப்புத் திட்டத்தைப் பற்றியே அக்கறை காட்டாதவர்கள், அவினாசி - அத்திக் கடவு திட்டத்தைப் பற்றியா கவலைப்பட்டிருக்க போகிறார்கள். எப்படியோ ஐந்தாண்டுகள் கழிந்து இந்த ஆட்சி முடிவுறும் நிலை வந்து விட்டது. வரவிருக்கும் புதிய ஆட்சியில் தான் இனிமேல் இத்திட்டத்தை நிறைவேற்றிட முடியும்.