தே.மு.தி.க. உறுப்பினர்கள் ஆறு பேரை "சஸ்பென்ட்" செய்து தமிழகச் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்த உச்ச நீதிம

தே.மு.தி.க. உறுப்பினர்கள் ஆறு பேரை "சஸ்பென்ட்" செய்து தமிழகச் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்த உச்ச நீதிம

கலைஞர் :- "கிடக்கிறது எல்லாம் கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை" என்பதைப் போல, தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரின் இடை நீக்கத் தீர்மானத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் 12-2-2016 அன்று தீர்ப்பளித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது. தற்போதுள்ள ஆளுங்கட்சியினர் கடந்த காலத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருந்த போது, பேரவையில் நடந்து கொண்டதை விட சட்டப் பேரவையில் தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள், மோசமாக நடந்து கொள்ள வில்லை. எது எப்படியோ, அவர்கள் மீது சட்டப்பேரவை எடுத்த நடவடிக்கை செல்லாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்த பிறகு, அ.தி.மு.க. ஆட்சியின் கடைசிப் பேரவைக் கூட்டம் இன்னும் நான்கு நாட்களே நடைபெறும் என்ற நிலையில், மக்கள் கொடுத்த வரிப் பணத்தை அரசு வீணாக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது அவசியம்தானா? இன்னும் சொல்லப்போனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும், அந்த ஆறு சட்டப்பேரவை உறுப்பினர்களுடைய அறைகளைத் திறந்து விடாமல் தற்போது பொறுப்பிலே இருக்கும் பேரவைச் செயலாளர் பிடிவாதமாக இருந்ததாகவும், சீராய்வு மனு தாக்கல் செய்ய டெல்லி சென்ற அவரிடம் அரசு வக்கீல், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் அவர்களுடைய அறைகளைத் தராமல் இருப்பது தவறாக ஆகிவிடும், உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும் என்று கடுமையாக எச்சரித்த பிறகுதான், அவர்களுடைய அறைகளைத் திறந்து விட்டார் களாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை உறுப்பினர்கள் மீது இப்படியெல்லாம் பழி தீர்த்துக் கொள்ள முயற்சி செய்வது என்பது ஆட்சியினருக்கு நல்ல பெயரைத் தராது; மேலும் ஆட்சியின ரின் ஆரோக்கியமற்ற மன நிலையையே வெளிப் படுத்தும். இன்னும் சொல்லப்போனால், பெங்களூரில் நடைபெற்ற ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறி ஞர்களில் ஒருவரான சதீண் கிர்ஜிக்கு சம்பளம் தரப்படவில்லை என்று அவர் கர்நாடக உயர் நீதி மன்றத்தில் வழக்கே தொடர்ந்து, அதற்கு விளக்கம் அளிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப் பட்ட இடைக்கால நிதி நிலை அறிக்கையில், தமிழக அரசுக்கு சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் கடன் எனக் குறிப்பிட்டிருக்கின்ற நிலையில், ஆறு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான வழக்கில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து வீண் வேலையை மேற்கொள்வது என்பது, உச்ச நீதிமன்ற ஆணையைப் புறக்கணிப்ப தாகவும், சட்டப்பேரவை நாகரிகத்தைப் பின்னுக்குத் தள்ளுவதாகவும் அமைந்து விடக் கூடும் என்று பொதுமக்கள் கருத வாய்ப்பு ஏற்படும் அல்லவா?