முழுப் பூசணியை இலைச் சோற்றில் மறைப்பதா? கலைஞர் பதில்கள்

முழுப் பூசணியை இலைச் சோற்றில் மறைப்பதா? கலைஞர் பதில்கள்

கேள்வி :- தே.மு.தி.க. உறுப்பினர்கள் ஆறு பேரை "சஸ்பென்ட்" செய்து  தமிழகச் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பது பற்றி? 

கலைஞர் :- "கிடக்கிறது எல்லாம்  கிடக்கட் டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை" என்பதைப் போல, தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தே.மு.தி.க. சட்டமன்ற உறுப் பினர்கள் ஆறு பேரின் இடை நீக்கத் தீர்மானத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் 12-2-2016 அன்று தீர்ப்பளித்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.   தற்போதுள்ள ஆளுங்கட்சியினர் கடந்த காலத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக இருந்த போது, பேரவையில் நடந்து கொண்டதை விட சட்டப் பேரவையில் தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர்கள், மோசமாக நடந்து கொள்ள வில்லை.  எது எப்படியோ,  அவர்கள் மீது  சட்டப்பேரவை எடுத்த நடவடிக்கை செல்லாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்த பிறகு, அ.தி.மு.க. ஆட்சியின் கடைசிப் பேரவைக் கூட்டம் இன்னும் நான்கு நாட்களே நடைபெறும் என்ற நிலையில், மக்கள் கொடுத்த வரிப் பணத்தை அரசு வீணாக்கும் வகையில், உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது அவசியம்தானா?     இன்னும் சொல்லப்போனால் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும், அந்த ஆறு சட்டப்பேரவை உறுப்பினர்களுடைய அறைகளைத் திறந்து விடாமல் தற்போது பொறுப்பிலே இருக்கும் பேரவைச் செயலாளர் பிடிவாதமாக இருந்ததாக வும், சீராய்வு மனு தாக்கல் செய்ய டெல்லி சென்ற அவரிடம் அரசு வக்கீல், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் அவர்களுடைய அறைகளைத் தராமல் இருப்பது தவறாக ஆகிவிடும், உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளாக நேரிடும்  என்று கடுமையாக எச்சரித்த பிறகுதான், அவர்களுடைய அறைகளைத் திறந்து விட்டார் களாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவை  உறுப்பினர்கள் மீது இப்படியெல்லாம்  பழி தீர்த்துக் கொள்ள முயற்சி செய்வது என்பது ஆட்சியின ருக்கு நல்ல பெயரைத் தராது; மேலும் ஆட்சியின ரின் ஆரோக்கியமற்ற மன நிலையையே வெளிப் படுத்தும். இன்னும் சொல்லப்போனால், பெங்களூரில் நடைபெற்ற ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு சார்பில் ஆஜரான சிறப்பு வழக்கறி ஞர்களில் ஒருவரான சதீண் கிர்ஜிக்கு சம்பளம் தரப்படவில்லை என்று அவர் கர்நாடக உயர் நீதி மன்றத்தில் வழக்கே தொடர்ந்து, அதற்கு விளக்கம் அளிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப் பட்ட இடைக்கால நிதி நிலை அறிக்கையில், தமிழக அரசுக்கு  சுமார் இரண்டரை லட்சம் கோடி  ரூபாய் கடன் எனக் குறிப்பிட்டிருக்கின்ற நிலையில், ஆறு சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான வழக்கில்  தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்து வீண் வேலையை மேற்கொள்வது என்பது,  உச்ச நீதிமன்ற ஆணையைப் புறக்கணிப்ப தாகவும், சட்டப்பேரவை நாகரிகத்தைப் பின்னுக்குத் தள்ளுவதாகவும் அமைந்து விடக் கூடும் என்று பொதுமக்கள் கருத வாய்ப்பு ஏற்படும் அல்லவா?

  

கேள்வி :- திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா கடந்த திங்கள் கிழமை 15-2-2016 அன்று நடைபெற்றது.  அதற்கான அழைப்பிதழில் திருவள்ளுவர் ஆண்டையே தவறாக அச்சடித்துக் கொடுத்திருக் கிறார்களே?


கலைஞர் :- திருவள்ளுவர் பல்கலைக் கழகத் தின் விழாவல்லவா அது? அதனால்தான் தவறாக அச்சடித்திருக்கிறார்கள். தற்போது நடைபெறுவது திருவள்ளுவர் ஆண்டு 2047 ஆகும். ஆனால் அழைப்பிதழில் 2046 என்று அச்சடிக்கப்பட்டுள்ளது.  ஆளுநர், அமைச்சர் போன்றவர்கள் கலந்து கொள்ளும் விழாவிலேயே இந்த அடிப்படைத்  தவறு நடைபெற்றுள்ளது. ஆளுங்கட்சி  உள்நோக்கத் தோடு அவசர அவசரமாக துணை வேந்தர்களை நியமித்தால் இப்படியெல்லாம்தான் பிழைகள் நடக்கும்!   வெட்கக் கேடு! திருவள்ளுவர் பல்கலைக் கழகத்திலேயே  இப்படித் திருகுதாள வேலையா என்று கேட்கத்தான் தோன்றுகிறது!

 

கேள்வி :- பொதுவாக நிதி நிலை அறிக்கை படிக்கும்போது, புத்தகத்திலே உள்ள வார்த்தை களைத்தான் படிப்பார்கள்.  ஆனால் நிதியமைச் சர் பன்னீர்செல்வம் இடைக்கால நிதி நிலை அறிக்கையைப் படிக்கும்போது, அந்த அறிக்கை யிலே இல்லாத வார்த்தைகளான, "அம்மா அவர்களின் தலைமையிலான ஆட்சியில்" என்று படித்தாரே?


கலைஞர் :- அவருடைய வேதனை அவருக்கு!    அப்படிப் படிக்காவிட்டால் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற நிலை!   வேறு ஏதேனும் சோதனைக்கு ஆளாக நேரிடுமோ என்ற அச்சம்!அம்மா போட்டியிட்ட தொகுதியில், அந்தக் கட்சி சார்பில் போட்டியிட விருப்ப மனுக் கொடுத்த அ.தி.மு.க. உறுப்பினர் ஒருவருக்கு ஏற்பட்ட கதி அவருக்குத் தெரியாமலா இருக்கும்?      

 

கேள்வி :- பல்வேறு திட்டங்களைத் துவக்கி வைக்க நேரில் வராமல் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்த முதலமைச்சர் ஜெயலலிதா, மரக் கன்றுகளை நடுகின்ற திட்டத்தைத் துவக்கி வைக்க மட்டும் நேரில் வந்திருக்கிறாரே?


கலைஞர் :- அந்தத் திட்டத்தினை துவக்கி வைக்கின்றார் என்ற பெயரில் தங்களுக்கு வேண்டிய, தங்களுக்குச் சாதகமாகச் செய்திகளை வெளியிடும் ஏடுகளுக்கு, வரும் பொதுத் தேர்தலையொட்டி முழுப் பக்க விளம்பரத்தைக் கொடுப்பதற்கு ஒரு வாய்ப்பை உண்டாக்கிக் கொள்ளலாமே என்பதற்காகத்தானாம்! இதுபோன்ற விளம்பரங்களை நிகழ்ச்சி நடப்பதற்கு முன்பு ஏடுகளிலே கொடுப்பதுதான் வழக்கம்.  அப்போது தான் அந்த விளம்பரங்களைப் பார்த்து விட்டு, அப்படிப் பார்த்தவர்களில் சிலராவது நிகழ்ச்சிகளிலே கலந்து கொள்ள இயலும்.  ஆனால் அ.தி.மு.க. ஆட்சியிலே நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்பு முழுப் பக்க விளம்பரம் கொடுப்பதோடு,  நிகழ்ச்சி முடிந்த பிறகும், திட்டத்தைத் துவக்கி வைத்தார்கள் என்ற பெயரில் முழுப் பக்க விளம்பரத்தை சில நாளேடுகளுக்குக் கொடுத்துப் புதுப் பழக்கத்தை உருவாக்கி உள்ளார்கள்.  யாருடைய பணம்?  மக்கள் கொடுத்த வரிப் பணம்தானே?  இன்னொரு வேடிக்கை?  மற்றொரு முழுப் பக்க விளம்பரம், பாலங்களைத் திறந்து வைக்கின்ற நிகழ்ச்சி. அந்த முழுப் பக்க விளம்பரத்தில் எத்தனை மணிக்கு அந்த நிகழ்ச்சி நடைபெறும் என்றே குறிப்பிடப்பட வில்லை?  இன்னும் இரண்டு மாதங்களில் தேர்தலுக்காக அரசு  நிர்வாகத்தில் எப்படிப்பட்ட வேடிக்கைகள் எல்லாம் நடக்குமோ?  அரசின் இந்த விளம்பரங்கள் தலைமைச் செயலாளர் பெயரில் வந்திருப்பதால், இது குறித்த விசாரணை பின்னர்  வருகிற போது அவர்தானே பதில் கூற வேண்டும்?

 

கேள்வி :- போராடி வருகின்ற அரசு ஊழியர் களின் கோரிக்கைகள் பற்றி இடைக் கால நிதி நிலை அறிக்கையிலும் எதுவும் சொல்லப்பட வில்லையே?


கலைஞர் :- அதனால்தான் நான் சில நாட்களுக்கு முன்பே கூறும்போது, போராடுகின்ற அனைத்துத் தரப்பினரும் இந்த ஆட்சியில் போராட்டம் நடத்தி எந்தப் பயனும் ஏற்படாது,  எனவே அவர்கள் குடும்பத்தைப் பாதுகாத்திடும் வகையில் போராட்டத்தைக் கைவிட வேண்டுமென்றும், அடுத்து வரும் ஆட்சியில் அவர்களின் குறைகள் கேட்கப்படும்; களைவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தேன்.  தற்போது வருகின்ற செய்தியில்,  போராடும் அரசு ஊழியர்கள் நேற்று பட்ஜெட் அறிவிப்பை எதிர்பார்த்து பிற்பகல் வரை எழிலக வளாகத்தில் காத்திருந்ததாகவும்,  ஆனால் அறிவிப்பு எதுவும் வராததால், அங்கு திரண்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் தலைமைச் செயலகம் நோக்கிச் சென்ற போது, போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி தரதரவென இழுத்துச் சென்று குண்டுகட்டாக வேனில் ஏற்றிக் கைது செய்ததாகவும் அதிர்ச்சியூட் டும் செய்திகள் வந்துள்ளன.  அரசு அலுவலர்கள் அரசின் ஒரு அங்கம் என்பதை மறந்து விட்டு, தமிழக அரசு அவர்களை, ஏதோ விரோதிகள் என எண்ணி, மிகவும் அலட்சியமாகவும், பகைமை யோடும்  நடத்துகிறது. அமைச்சர்கள் போராடுகின்ற வர்களுடன் பேசிவிட்டு, முதல் அமைச்சரிடம் கூறுவதாகச் சொல்லி விட்டுச் சென்று விடுகி றார்கள். தினந்தோறும் காணொலிக்  காட்சிகளுக்கு மட்டும் தவறாமல் நேரம் செலவிடுகின்ற முதலமைச் சர் ஜெயலலிதா உடனடியாக சட்டப்பேரவையில் உள்ள கட்சிகளின் குழுத் தலைவர்கள் முன்னிலை யில், போராடுகின்றவர்களின் பிரதிநிதிகளை  அழைத்துப் பேசி அமைதிப்படுத்தவும், பிரச்சினை களைத் தீர்க்கவும் முயற்சி செய்ய வேண்டும். அவர்களின் கோரிக்கைகளுக்குப் பரிவோடு செவி மடுத்து ஏற்கக் கூடியதைக் குறைந்தபட்சம் 110வது அறிக்கை வாயிலாகவாவது அறிவித்திட முதலமைச்சர்  முன் வர வேண்டும்.

 

கேள்வி :- முதலமைச்சர் ஜெயலலிதா, 13-2-2016 அன்று அறிவித்த 20 லிட்டர் குடிநீர்த் திட்டம் செயல்படுகிறதா?


கலைஞர் :- "சீனி சர்க்கரை சித்தப்பா; அதை ஏட்டில் எழுதி வைத்து நக்கப்பா" என்ற கதைதான்!   2014ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், சென்னை மாநகராட்சிப் பகுதியில் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மலிவு விலையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.  இந்தத் திட்டத்திற்கு இரண்டாண்டுகள் கழித்து இப்போது  தான் முதலமைச்சர் ஜெயலலிதா ஒப்புதல் வழங்கி, இலவசமாக குடிநீர் வழங்கப்படும் என்றும், சென்னையில் 100 மையங்கள் அமைக்கப்படும் என்றும் சொன்னார்கள்.   இதற்குத்தான் தற்போது  9 இடங்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாம்.  இன்னும் 91 இடங்கள் தேர்வு செய்யப்பட வுள்ளதாம்.   இது பற்றிச் சம்பந்தப்பட்ட அதிகாரி யிடம் கேட்டதற்கு, வரும் கோடையில் திட்டம் செயல்பாட்டிற்கு வர வாய்ப்பு இல்லை, சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளதால் அதன் பிறகுதான் பணிகள் தொடங்க முடியும் என்று கூறினாராம். இதுதான் "அம்மா" அறிவிப்பின் இலட்சணம்! "அம்மா" என்றாலே வெற்று அறிவிப்பு; வீண் தாமதம்தான்!

 

கேள்வி :- இடைக்கால நிதி நிலை அறிக் கையில் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை  1,862 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்து வதற்கான விரிவான திட்ட அறிக்கை 2011ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டது என்றும்,  மத்திய அரசிற்கு திருத்திய கருத்துரு உடனடியாக அனுப்பப்படும் என்றும், இத்திட்டத்திற்கான ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கப்படும் என்றும் கூறப்பட்டிருக்கிறதே?


கலைஞர் :- இந்த அறிவிப்பு பற்றி அன்னூரில் ஆறாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும்  15 பேரிடம் கருத்துக் கேட்ட போது,  "இடைக்காலப் பட்ஜெட்டில் மத்திய அரசுக்கு திருத்தப்பட்ட கருத்துரு அனுப்பப்படும் என்றும்,  திட்டப்பணிகள்  விரைவில் துவங்கப்படும் என்றும் அறிவித் துள்ளார்.   இதே தகவலை கடந்த 2012,  2013 ஆகிய பட்ஜெட் கூட்டத் தொடரிலும் கூறியுள் ளனர்.  சொன்னதையே திரும்பத் திரும்பக் கூறி  போராட்டத்தைத் திசை திருப்ப நினைக்கிறார்கள்.  இது தமிழக அரசின் கண்துடைப்பு அறிவிப்பு.   திட்டம் தொடர்பாக கடந்த 2013ஆம் ஆண்டே மத்திய அரசு 3 விளக்கங்கள் கேட்டு மாநில அரசுக்குத் திருப்பி அனுப்பியது.  தமிழக அரசோ, 2016 வரை 3 ஆண்டுகளாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.  மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்த பின் அதே அறிக்கையை மீண்டும் படிப்பது மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.  எங்களின் ஒரே நோக்கம், சட்டமன்றக் கூட்டத் தொடரில் அத்திக்கடவு திட்டத்துக்கு தேவையான நிதி ஒதுக்க வேண்டும்.  திட்டம் நிறைவேற்றுவது குறித்து அரசிதழில் வெளியிடவேண்டும்.    இல்லாதபட்சத்தில் எங்களுடைய போராட்டம் மேலும் கடுமையாக இருக்கும்"  என்றெல்லாம் வேதனையோடு கூறியிருக்கிறார்கள்.  

 

கேள்வி :- "வரிகள் இல்லாத இடைக்கால பட்ஜெட்" என்று தினமணி முதல் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் செய்தி வெளியிட்டிருக்கிறதே?


கலைஞர் :- ஆளுங்கட்சியின் ஆதரவு  நாளேட்டில், அப்படித்தானே வெளியிடுவார்கள்!   கடந்த சில ஆண்டுகள் முன்பு வரை நடுநிலை நாளேடாகத் தான் "தினமணி" இருந்து வந்தது.  தற்போது என்ன காரணத்தாலோ, ஆளுங் கட்சியின் அடிவருடி ஏடாக மாறி அன்றாடம் புளுகு மூட்டைகளை அவிழ்த்துக் கொண்டிருக்கிறது.  நல்லவேளையாக "தி இந்து" தமிழ் நாளிதழ் "புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை" என்று தலைப்பிட் டிருக்கிறது. இடைக்கால நிதி நிலை அறிக்கை பற்றி விளக்கமளித்துள்ள நிதித் துறைச் செய லாளரே, "இது இடைக் கால பட்ஜெட் என்பதால்,  எவ்வித புதிய வரி விதிப்பும் மேற்கொள்ளப்பட வில்லை. அதேபோல புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்பும் வெளியாகவில்லை"" என்று தெரிவித் திருக்கிறார். ஆனாலும் "தினமணி" "வரியில்லாத  இடைக்கால பட்ஜெட்" என்று தலைப்பிட்டு, அதனை ஏதோ பெரிய முத்திரைச் சாதனை என்பது போல வெளியிட்டிருப்பது, முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைப்பதைப் போல இருக்கிறது.