முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் 110வது விதியின் கீழ் அறிக்கை படிக்க ஆரம்பித்து விட்டாரே?

முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் 110வது விதியின் கீழ் அறிக்கை படிக்க ஆரம்பித்து விட்டாரே?

16ஆம் தேதிதான் அரசின் சார்பில் இந்த ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கை பேரவையில் வைக்கப்பட்டது. முதலமைச்சர் ஜெயலலிதா 18-2-2016 அன்று  படித்த அறிக்கையை அந்த அறிக்கையிலேயே சேர்த்திருக்கலாம். தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றுவதாகத் தெரிவித்து  110வது விதியின் கீழ் இந்த அறிக்கையைப் படித்துள்ளார்.  அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில்

 

"58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசுப் பேருந்துகளில் பக்கத்து நகரங்கள்கிராமங்களுக்குச் சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும்" என்று தெரிவித்திருந்தார்கள்.  2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் அறிக்கையில் கூறியதை 2016ஆம் ஆண்டுஇன்னும் சில வாரங்களில் பொதுத் தேர்தல் வரப்போகிறது என்ற நிலையில்முதலமைச்சர் இந்தத் திட்டத்தை அறிவித்திருக்கிறார்.  அதுவும் கூட எப்படித் தெரியுமா?  60 வயதுக்கு மேற்பட்டவர்கள்,சென்னை மாநகரில் ஓடுகின்ற குளிர் சாதன வசதி இல்லாத பேருந்துகளில் மட்டும் பத்து முறை பயணம் செய்யலாமாம்! தேர்தல் அறிக்கையில் 58வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அரசுப் பேருந்துகளில் பக்கத்து நகரங்கள்கிராமங்களுக்குச் சென்று வர இலவச பஸ் பாஸ் வழங்கப்படும் என்று கூறிவிட்டுதற்போது ஐந்தாண்டுகளுக்குப் பிறகுசென்னையில் மட்டும் குளிர்சாதன வசதி இல்லாத பேருந்துகளில் மட்டும் 10 முறை பயணம் செய்யலாம் என்று அறிவித்திருக்கிறார்கள்.  இதுதான் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளை நிறை வேற்றுகின்ற நடவடிக்கை!  முதலமைச்சர் ஜெயலலிதா அதே அறிக்கையில், 2011ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் கூறியிருக்கிறார். அந்த அறிவிப்பு உண்மைக்கு மாறானது என்பதற்கு தேர்தல் அறிக்கையில் கூறியவற்றில் எந்தெந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதற்கு ஒருசில உதாரணங்களைக்  கூறுகிறேன்.

 

"வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிதண்ணீர் இலவசமாக வழங்கப் படும்" - திட்டம் வாய்மொழியாக அறிவிக்கப் பட்டுள்ளதே தவிரஎங்கேயும் இலவசமாக குடி தண்ணீர் இதுவரை வழங்கப்படவில்லை.

 

"அனைவருக்கும் குறைந்த விலையில் சூரிய வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள சூரிய சக்தி மின்சாரப் பயன்பாட்டோடு கூடிய நவீன பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்" என்று தேர்தல் அறிக்கையில் சொன்னார்களேஅனைவருக்கும் கட்டிக் கொடுத்து விட்டீர்களா?

 

வீடில்லா ஏழைக் குடும்பங்களுக்கு வீடு கட்ட 3 சென்ட் இடம் அளிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னார்களேவீடில்லா ஏழைக் குடும்பங்களுக்கெல்லாம் கொடுத்து விட்டீர்களா?

 

அனைத்துக் கிராமங்களுக்கும்,நகரங்களுக் கும்  இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சார இணைப்பு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழி வகை செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கை கூறுகிறது. அனைத்துக் கிராமங்களுக்கும் மும்முனை மின்சார இணைப்பு கொடுத்து விட்டீர்களா?

 

2012ஆம் ஆண்டுக்குள் அதாவது இரண்டு வருடங்களுக்குள் 151 நகராட்சி மற்றும் மாநகராட்சி களில்நகராட்சிக் கழிவைக் கொண்டு 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார்கள்.  என்ன ஆயிற்று அந்தத் திட்டம்

  

வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. கூறியிருந்ததே,  என்ன ஆயிற்று அந்தத் திட்டம்?

 

கிராமப்புறத் தெரு விளக்குகள் சூரிய ஒளி மின்சாரத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னார்களே?  என்ன ஆயிற்று அந்தத் திட்டம்?

 

இந்த சிறப்பு மின் திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டை பன்முக சமூகபொருளாதார வளம் பெற்ற மாநிலமாக மாற்றி 1,20,000 கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தை 5 ஆண்டுகளில் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்வோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள்.  மின் வாரியத்தின் கடன்தான் உயர்ந்ததே தவிரகூடுதல் வருமானம் எதுவும் இல்லை.

 

தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைக் குனிவில் இருந்து மீட்போம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள்.  தற்போது 2இலட்சத்து 47 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளார்கள்.  இதுதான் தலைக் குனிவில் இருந்து மீட்ட இலட்சணமா?  

 

ஒருசில திட்டங்களை மட்டும் எடுத்துக்காட்டுக்காகத் தெரிவித்தேன். ஆனால் பேரவையில் முதலமைச்சர்,  தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு விட்டதாக தவறான தகவலைத் தந்துள்ளார். "தினமலர்" நாளேடு இந்தச் செய்திக்கு வெளியிட் டுள்ள தலைப்பு என்ன தெரியுமா?  "முதல்வர் ஜெ. ஜோக்" என்பதுதான்!   முதலமைச்சரே  இப்படிப் பேரவைக்கு தவறான தகவலைச் சொல்லலாமா?  என்பதற்கு பேரவைத் தலைவர் என்ன பதில் கூறுகிறார்?