சூரிய மின் சக்தி ஒப்பந்தத்தில் மறைக்கப்பட்ட உண்மை மக்களுக்குத் தெரியவேண்டும்! தலைவர் கலைஞர் அறிக்கை

சூரிய மின் சக்தி ஒப்பந்தத்தில் மறைக்கப்பட்ட உண்மை மக்களுக்குத் தெரியவேண்டும்! தலைவர் கலைஞர் அறிக்கை

“அரசுடன் அதானி குழுமம், சூரிய மின்சக்தி நிலையம் ஒன்று 1400 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க ஒப்பந்தம் ஒன்று செய்து கொண்டிருக்கிறதாமே?” என்ற ஒரு கேள்விக்கு, 16-6-2015 அன்று நான் பதில் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான அதானிக்குச் சொந்தமான குழுமம், தமிழகத்தில் 1400 கோடி ரூபாய் மதிப்பில் 200 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளி வந்துள்ளது. இந்த 200 மெகாவாட்டையும் ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிப்பதற்கான பேச்சு வார்த்தைகளும் அ.தி.மு.க. அரசுடன் நடைபெற்று வருகிறதாம். வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவித்த வழக்கு மேல் முறையீட்டில் ஜெயலலிதா பெற்றிருக்கும் தற்காலிக நிவாரணத்திற்கும், அதானியின் இந்தச் சூரிய மின் சக்தி நிலைய ஒப்பந்தத்திற்கும் ஏதோ சம்மந்தம் இருப்பதாக யாரோ சிலர் கூறினால், அதில் உண்மை என்ன என்பது நமக்குத் தெரியாது!” என்று தெரிவித்திருந்தேன். அதனைத் தொடர்ந்து, பா.ம.க. நிறுவனர், டாக்டர் ராமதாஸ் அவர்கள் 17ஆம் தேதி விடுத்த அறிக்கையில், சூரிய ஒளி மின்சாரத்தில், அதானி நிறுவனத்துக்காக விதி மீறல் நடைபெற்றதாக விரிவாகத் தெரிவித்திருந் தார். சூரிய ஒளி மின் நிலையங்களை அமைப்பதற்கான செலவு குறைந்து விட்டதால் நடப்பாண்டில் சூரிய ஒளி மின்சாரத்தின் கொள்முதல் விலை ரூ. 5.86 ஆக குறைந்து விட்டது. அடுத்த ஆண்டில் இது யூனிட் ஐந்து ரூபாய் அளவுக்குக் குறைய வாய்ப்புள்ளது. இந்த நிலையில் அதானி நிறுவனத்துடன் ஒரு யூனிட்டுக்கு 2 ரூபாய் கூடுதலாக ரூ. 7.01 என்ற விலைக்கு மின்சாரம் வாங்க அரசு ஒப்பந்தம் செய்து கொள்கிறது என்றெல்லாம் டாக்டர் ராமதாஸ் விரிவாகத் தெரிவித்திருந்தார். உடன்குடி அனல் மின் நிலையம் குறித்து அ.தி.மு.க. அரசு டெண்டர் கோரியது. அதில் சதர்ன் சென்ட்ரல் சீனா பவர் எனர்ஜி டிசைனிங் இன்ஸ்ட்யூட் திரேசே கன்சார்டியம் உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தங்கள் நிறுவனம் குறைந்த தொகையைக் குறிப்பிட்டு ஒப்பந்தப் புள்ளியைத் தாக்கல் செய்த போதிலும், தங்கள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும், டெண்டருக்கு தடை விதிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்ட போது, உயர் நீதி மன்ற நீதிபதி திரு சத்யநாராயணா அவர்கள் கடந்த மாதம் புதிய டெண்டர் விட இடைக்காலத் தடை விதித்தார். வழக்கு முடியும் வரை புதிய டெண்டர் விடக் கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் உடன்குடி அனல் மின் நிலையம் அமைக்க இரண்டாவது முறையாக ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் “டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேட்டில் “ஹனயni ழுசடிரயீ பயபள வைள டிறn ஹனஎடிஉயவந” என்ற தலைப்பில் வந்துள்ள செய்தியில், அடானி குழுமத்திற்காக ஆஜரான வழக்கறிஞர் கபிலன் மனோகரன் என்பவர், தமிழகத்திலே அடானி குழுமம் சோலார் மின் உற்பத்தி திட்டங்களை அமைக்க நிலங்களை வாங்குவதில் குறைந்த பட்சம் ஒரு டஜன் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதை வெளிப்படுத்தப் போவதாக பயமுறுத்தியதை அடுத்து, அடானி குழுமம் சென்னை உயர் நீதி மன்றத்தில், வழக்கறிஞர் கபிலன் மனோகரன் அவவாறு எதையும் வெளிப்படுத்தக் கூடாது என்று தடையாணை பெற்றிருக்கிறார்கள் என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. நீதிபதி கே.கே. சசிதரன் அவர்கள் முன்னால் இந்த வழக்கு விசாரணைக் காக வந்த போது, வழக்கறிஞர் கபிலன் மனோகரன் எந்தக் காரணத்தைக் கொண்டும், அடானி குழுமத்தினரால் அவரிடம் தெரிவிக்கப்பட்ட விவரங்களை வெளியிடக் கூடாது என்று கூறியதோடு, மார்ச் 14ஆம் தேதிக்கு வழக்கினை ஒத்தி வைத்திருக்கிறார். அடானி குழுமத்தினர், தாங்கள் கமுதியில் நிறுவவிருக்கும் 648 மெகா வாட் சூரிய ஒளி மின் திட்டத்திற்காக வாங்குவதாக உள்ள 1,800 ஏக்கர் நிலங்களின் பத்திரங்களைச் சரி பார்ப்பதற்காக வழக்கறிஞர் கபிலன் மனோகரனை நியமனம் செய்ததோடு, 70 இலட்சம் ரூபாயை வழக்கறிஞர் கட்டணமாகவும் தந்துள்ளது. வழக்கறிஞர் கபிலனிடம் அடானி குழுமம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி, ஏக்கர் ஒன்றுக்கு 6000 ரூபாயை மூன்று கட்டமாகத் தர வேண்டும். வழக்கறிஞர் கட்டணத்தை கபிலன் தன்னிச்சையாக ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் என்று உயர்த்திக் கொண்டு, 4-1-2016 தேதிய கடிதத்தின்படி மேலும் 1 கோடியே 43 இலட்சம் ரூபாய் தர வேண்டுமென்று கேட்டுள்ளார். இ-மெயில் மூலமாக அவர் அனுப்பிய கடிதத்திலும் அதானி குழுமத்தின் அதிகாரிகள் அவரிடம் கூறிய தகவல்களை வெளிப்படுத்துவேன் என்றும் மிரட்டியிருக்கிறார். வழக்கறிஞர் கபிலன் மனோகரன் அனுப்பிய அந்த இ-மெயில் கடிதத்தில், அடானி குழுமத்துக்காக நிலம் வாங்கியதில், பல்வேறு முறைகேடுகள் செய்யப் பட்டிருப்பதாகவும், இப்போதுள்ள சட்ட விதிமுறைகள்படி முறையாக எதுவுமே நடைபெறவில்லை என்றும், மின்வாரியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமே பல்வேறு மோசடி ஆவணங்களின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது என்றும், இவ்வாறு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பல்வேறு வங்கி களில் அடானி குழுமத்துக்காக சுமார் 4,300 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டிருப்பதாகவும், மேலும் பல முறைகேடுகளையும் தெரிவித்திருக்கிறார். மேலும், எவ்வளவு அரசியல் அழுத்தம் கொடுத்தாலும் அடானி குழுமம் செய்திருக்கக் கூடிய சட்ட விரோத நடவடிக்கைகளை மூடி மறைத்திட இயலாது என்றும், ஒரு விசாரணை என்று வரும்போது, சட்ட விரோத நடவடிக்கைகள் மற்றும் மோசடிச் செயல்கள் எல்லாம் வெளி உலகத்திற்குத் தெரிய வரும் என்றும் மிகவும் ஆணித்தரமாக அவருடைய கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். வழக்கறிஞர் கபிலன் மனோகரன் வெளியிட்டுள்ள இந்த விவரங்களையெல்லாம் பார்க்கும்போது, அடானி குழுமத்திற்கு இந்தத் திட்டத்தை அ.தி.மு.க. அரசு எப்படிக் கொடுத்தது என்பதற்கான பின்னணியைப் புரிந்து கொள்ள முடியும். மேலும் “பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது” என்பதற்கொப்ப உண்மை வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியிருக்கிறது. இவற்றையெல்லாம் வெளிப்படையாகத் தெரிவித்துத் தான், நீதியரசர் சசிதரன் அவர்கள் வழக்கினை விசாரித்து இடைக்கால உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். அ.தி.மு.க. அரசு அடானி குழுமத்தோடு அவசர அவசரமாக இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொண்டு அந்தக் குழுமத்திற்கு சட்ட விதிகளுக்குப் புறம்பாக, சட்ட விரோதமாக, மோசடியாக இந்த மின் திட்டத்தை எந்தவிதமான ஒப்பந்தப் புள்ளிகளும் கோராமல் அளித்திருக்கிறது என்பதை இந்த வழக்கிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே இந்தத் திட்டத்தை அடானி குழுமத்திற்கு அ.தி.மு.க. அரசு அளித்தது பற்றி சட்டப்படியான குற்ற விசாரணை நடைபெற்று, மறைக்கப்பட்டிருக்கும் உண்மைகள் மக்களுக்குத் தெளிவு படுத்தப்பட வேண்டுமென்பது தான் அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்பாகவும் விருப்பமும் ஆக இருக்கிறது!