எல்லோரும் கேட்பது ஏழு பேரின் விடுதலையே! தலைவர் கலைஞர் கடிதம்

எல்லோரும் கேட்பது ஏழு பேரின் விடுதலையே! தலைவர் கலைஞர் கடிதம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர், இளந்தலைவர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி,  ஜெயக்குமார்,  ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய ஏழு பேருக்கு  விசாரணை நீதி மன்றம்  மரண தண்டனை விதித்தது.   பின்னர் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன்  ஆகியோரின்  தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.   இந்த  ஏழு பேரையும் விடுதலை செய்யக் கோரி உச்ச நீதி மன்றத்தில்  தொடரப்பட்ட வழக்கில் மரண தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆகியோரின் தண்டனையையும்  ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. 

 

இந்த வழக்கில் உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி பி சதாசிவம் கூறும்போது,  “எங்களது  தீர்ப்பில்,  மூன்று குற்றவாளிகளின் மரண தண்டனை  ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே குறிப் பிட்டுள்ளோம். அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக நாங்கள் எதுவும் கூற வில்லை.   சம்பந்தப்பட்ட மாநில அரசு வழக்கமான சட்ட நடைமுறைகளைப் பின் பற்றலாம்  என்று தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளோம்.   அந்த நடைமுறைகளின்படி  குற்றவாளிகள் முறைப்படி கோரிக்கை மனு அளிக்க வேண்டும்.   அதன் பின் மாநில அரசு சம்பந்தப்பட்ட விசாரணை நீதி மன்றத்திடம்  அறிக்கை கோர வேண்டும்.  அதன் பின்னரே உரிய முடிவெடுக்க வேண்டும்.   குற்றவாளிகள் விடுதலை செய்யப்படக் கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல.   எல்லாவற்றுக் கும் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன.  அவற்றைத்தான் பின்பற்ற வேண்டும்.  குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான  சட்ட நடைமுறைகளை அனைத்து மாநில அரசுகளும்  அறிந்து வைத்திருக்க வேண்டும்” என்று விரிவாக  நீதிபதி சதாசிவம்  கூறியிருக்கிறார்.   இதை வைத்துப் பார்க்கும்போது,  நம்முடைய மாநில அரசு தான் இந்தப் பிரச்சினையை சட்டப்படி முறையாக அணுகவில்லை என்று தெரிகிறது.

 

         2-12-2015 அன்று  உச்ச நீதி மன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில்,  மத்தியப் புலனாய்வுத்  துறை தொடுத்த வழக்கில்,  ஆயுள் சிறை  தண்டனை  அனுபவித்து வரும்  ராஜீவ் காந்தி கொலைக் கைதிகள்  ஏழு பேரையும்  விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுப்பதற்கான முதன்மையும் அதிகாரமும்  மத்திய அரசுக்கே உண்டு என்று தெரிவித்திருக்கிறது.   இந்தத் தீர்ப்புக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க.  அரசு  உடனடியாக அவர்களை விடுதலை செய்வது சம்மந்தமாக  எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.  கடந்த  நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அரசியல் ஆதாயத்திற்காக  இந்தப் பிரச்சினையைக் கையிலெடுத்ததைப் போலவே,   தற்போதும்  தேர்தல் வருகிறது என்றதும், இதன் காரணமாக வாக்குகளைக் கவரலாம் என்ற எண்ணத்தோடு அ.தி.மு.க. அரசு  மத்திய அரசுக்கு தலைமைச் செயலாளரைக் கொண்டு கடிதம் எழுதியிருக்கிறது.  அந்தக் கடிதத்தைக் கூட அன்றாடம் ஏதாவது ஒரு பிரச்சினைக்காக பிரதமருக்கு கடிதம் எழுதுகின்ற முதல் அமைச்சர் ஜெயலலிதா தன் பெயரிலே எழுதாமல், தலைமைச் செயலாளரைக் கொண்டு  அந்தக் கடிதத்தை எழுத வைத்துள்ளார் என்பதிலிருந்தே முக்கியமான இந்தப் பிரச்சினைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா எந்த அளவுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறதல்லவா?

 

தமிழக அரசு எதைச் செய்தாலும் அதை எதிர்க்க வேண்டுமென்று நினைக் காமல்,  தமிழகத் தலைமைச் செயலாளர் இந்த ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் என்ற செய்தி கேள்விப் பட்டதும் அன்று இரவே  அதனை வரவேற்று, மத்திய அரசுக்கு அந்தக் கடிதத்தின்படி அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று நான்  கேட்டுக் கொண்டேன். 

 

உச்ச நீதி மன்றம் இறுதியாக அளித்துள்ள தீர்ப்பு,  தமிழ்நாளேடு ஒன்றின் தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பதைப் போல,  சட்டச் சிக்கல் மீதான விளக்கம் தானே தவிர, பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோரின் விடுதலையை முற்றிலுமாகத் தடுக்கக் கூடிய அம்சம் எதுவும், அந்தத் தீர்ப்பில் இல்லை என்று தான் வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள்.   சி.பி.ஐ. போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளால்  தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம்,  சி.பி.ஐ. அமைப்பைத்  தன்னுடைய அதிகாரத்தின் கீழே வைத்திருக்கின்ற மத்திய அரசுக்குத் தான் உள்ளது என்றும்,  அதன்படி தொடர்புடைய அரசு முடிவு செய்ய வேண்டுமென்கிற போது,  குறிப்பிட்ட இந்த வழக்கில் மத்திய அரசுக்குத் தான் அதிகாரம் உள்ளது என்பதும் தான் தற்போதைய உச்ச நீதி மன்றத் தீர்ப்பின் பொருளாகும்.   அதாவது மத்திய அரசின் அனுமதியுடன் விடுவிக்கப்பட வேண்டும் என்பது தான் இதன் மையநோக்கம்.  

 

ராஜீவ் காந்தி கொலை  வழக்கில்  துhக்குத் தண்டனை  விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் மிகவும்  தாமதமாக முடிவெடுத்ததாகக் கூறி,  அவர்களின் தண்டனையை ஆயுள் சிறையாக உச்ச நீதி மன்றம் தான்  குறைத்தது.  மேலும் இந்த வழக்கில் இந்த மூவருடன் சேர்த்து  ஆயுள் தண்டனை  அனுபவித்து  வந்த நளினி (முருகனின் மனைவி), ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர்  ஏற்கனவே சுமார் 20 ஆண்டுகளை  சிறையில் கழித்துள்ளதால், அவர்களை விடுதலை செய்வது குறித்து  தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும்  உச்ச நீதி மன்றம் தான் கூறியது.  உச்ச நீதி மன்றமே கூறிய காரணத்தால்,  7 பேரையும் விடுதலை செய்ய தமிழகச் சட்டப் பேரவையில் மாநில அரசு 2014ஆம் ஆண்டு  பெப்ரவரியில் தீர்மானம் நிறைவேற்றியது.  தீர்மானம் நிறைவேற்றியதும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய முடிவெடுத்ததும்  தவறு அல்ல.  அப்படிச்செய்த போது மத்திய அரசுக்குக் கட்டளையிடும் விதத்தில், குறிப்பிட்ட நாட்களுக்குள்  அதற்கு ஒப்புதல் தர வேண்டும் என்று, அப்போது நிபந்தனை  விதிப்பதைப் போல ஜெயலலிதா அரசு நடந்து கொண்டிருக்கத்  தேவையில்லை.  அப்படி இறுமாப்போடு தமிழக அரசு இறுக்கமாகக்  கருத்து தெரிவித்த காரணத்தால் தான், தமிழக அரசின் விடுதலை  நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மத்திய அரசு மேல் முறையீடு செய்திட நேரிட்டதென்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.    இப்போது கூட நளினி செய்தியாளர்களிடம் கூறும்போது, முதலமைச்சர் ஜெயலலிதா விரைவிலேயே அவர்களையெல்லாம் விடுதலை செய்வார் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார்.  அதிலிருந்தே அவர்களின் விடுதலை தாமதமாவதற்குக் காரணம்  தமிழக அரசு தான் என்பது தெளிவாகிறது. 2015 டிசம்பரில்  சென்னை உயர் நீதி மன்றத்தில் நளினி தொடுத்திருக்கும் வழக்கில் இதுவரை பதில் மனு  தாக்கல் செய்யாமல் தாமதித்து வரும் தமிழக அரசு    நளினியின் அந்தப் பேட்டிக்குப் பிறகு தான்  மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

 

தமிழக அரசு எந்த நோக்கத்தோடு  மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியது என்று நமக்கு மட்டுமல்ல; “இந்து” ஆங்கில நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்ட போது அதுபற்றி திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறது. 
3-3-2016 தேதிய “இந்து” 
“In political terms,  questions are likely to be raised by the Opposition as to why the AIADMK Government did not attempt the Constitutional route  of advising  the Governor  to  remit the life sentences under Article 161  of the Constitution (Power of Pardon, Remission etc.) .   The Constitution Bench had approvingly cited earlier judgments that  held that this power of the Governor  and the President’s corresponding power  under Article 72 were constitutional remedies that “Will remain untouched”.    (இந்திய அரசியல் சட்டத்தின் 161வது பிரிவின்படி மாநில அரசு ஆளுநரை அணுகி ஆயுள் தண்டனையைக் குறைத்து மன்னிப்பு வழங்குவதற்கான அரசியல் சட்ட வழிமுறையை அ.தி.மு.க. அரசு ஏன் பின்பற்றவில்லை என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழக்கூடும்.   அரசியல் சட்டத்தின்  72வது பிரிவில் குறிப்பிடப் பட்டுள்ள ஆளுநர் மற்றும் குடியரசு தலைவரின் அதிகாரம் இது போன்ற பிரச்சினைகளில்  அரசியல் சட்ட ரீதியாக பரிகாரம் காணப் பயன்படுத்தப்படக் கூடியதாகும்.  அந்த அதிகாரம் அரசியல் சட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கிறது.

 

“இந்து”  செய்தியாளர் இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது மாத்திரமல்ல;  குற்றவாளிகளில் ஒருவரான நளினியின் வழக்கறிஞர் திரு. எம். ராதாகிருஷ்ணன் கூறும்போது,

“M. Radhakrishnan, a defence lawyer, has termed as a “pretence” the Tamil Nadu Government’s letter to the Centre,  seeking  its views  on its decision to free all the convicts in the Rajiv Gandhi assassination case.   Mr. Radhakrishnan is the lawyer  for Nalini, whose death sentence was commuted to life by the State Government  in 2000.

He said:  “The State Government  can release all the life convicts today under Article 161 of the Constitution.   The power  under Article 161  is unfettered.  The Constitution Bench of the Supreme Court is categorical that this power is untouchable by the  court.   There is no need to obtain  any permission or any views from the Central Government  for releasing the life convicts.  The State Government  is well within its right to release them immediately  under Article 161.”

“The letter simply says they are going to seek a review of the  Constitution Bench’s judgment, which is unnecessary.  The State Government is playing with the  lives of these seven life convicts.  This is highly regrettable.” 

நளினியின் வழக்கறிஞர் திரு. ராதாகிருஷ்ணன், தமிழக அரசு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பது பாசாங்கு காட்டுவதாகும்.  மாநில அரசு இந்திய அரசியல் சட்டத்தின்  161வது பிரிவின்படி ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க அதிகாரம் படைத்ததாகும்.    உச்ச நீதி மன்றத்தின் அரசியல் சாசன அமர்வு  இந்த அதிகாரம் நீதி மன்றத்தால்  கேள்வி கேட்கப்படக் கூடியதல்ல என்றே அழுத்தந்திருத்தமாகக் கூறியிருக்கிறது.  எனவே  இந்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க மத்திய அரசின் அனுமதியோ, கருத்துரையோ தேவையில்லை.   தமிழக அரசு ஆயுள் தண்டனைக் கைதிகள் ஏழு பேரின் உயிர்களோடு விளையாடிக் கொண்டிருக்கிறது.  இது பெரிதும் வருந்தத் தக்கதாகும் என்று ஜெயலலிதா  கூறியிருக்கிறார்.  

இந்தக் கருத்தைத் தான் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  எதிரொலிக்கும் வகையில்,  “ராஜீவ் காந்தி கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை  விடுவிக்கக் கோரி  மத்திய அரசுக்கு  தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.   ஆளுங்கட்சிக்கு (அ.தி.மு.க. வுக்கு)  தேர்தல் நேரத்தில் தான்  தமிழர்களின் உணர்வுகள்  தெரிகிறது.  தேர்தலுக்காகத்  தமிழர்களின் உணர்வுகளைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்கின்றனர்.  இது ஜெயலலிதா நடத்தும் நாடகம்.  கால அவகாசம் எவ்வளவோ இருந்தும் அப்போது  இந்த முடிவை எடுக்கவில்லை.   இந்த விஷயம் மனிதாபிமானத்துடன்  அணுக வேண்டிய ஒன்று”  என்று  தெரிவித்திருக்கிறார்.   இதே கருத்தை தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும்,  வேறு சில கட்சிகளின் தலைவர்களும் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தப் பிரச்சினையில் ஜெயலலிதாவின்  உள்நோக்கத்தை “டைம்ஸ் ஆப் இண்டியா” நாளிதழ் “Parties  will be  careful  not to play into the hands of AIADMK – With remission move, Jaya may divide Cong. and DMK – Tries to gain Political Dividends”என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.  அதாவது “அ.இ.அ.தி.மு.க. வின் இந்த முயற்சியில் அரசியல்  கட்சிகள் மாட்டிக் கொள்ளாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் - ஜெயா; காங்கிரஸ் கட்சிக்கும் தி.மு.க. வுக்கும்  இடையே  பிளவு ஏற்டுத்த முயற்சிக்கலாம் - அதன் மூலம் அரசியல் இலாபம் அடைய எண்ணுகிறார்”  என்ற தலைப்பில் டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில்,    மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தின் வாயிலாக ஜெயலலிதா என்ன நினைக்கிறார் என்பதைத் தொகுத்து எழுதியுள்ளது.

 4-3-2016 அன்று “இந்து” இதழ் இதற்காக எழுதியுள்ள தலையங்கத்திலேயே,“The decision of the AIADMK  Government in Tamil Nadu  to release the seven life convicts is a politically partisan attempt to corner Chief Minister Jayalalithaa’s electoral rivals and place the National parties in a spot ahead of the Assembly Elections.   The AIADMK regime could have explored the scope for a constitutional remedy such as invoking the Governor’s clemency power under Article 161.  Instead, it has chosen a legally discredited route for political gains” (ஜெயலலிதா தன்னுடைய அரசியல் எதிரிகளை சிக்கலுக்கு உள்ளாக்கவும், தேசிய கட்சிகளுக்கு  பிரச்சினையை ஏற்படுத்தவும் அரசியல் ரீதியாக குறுகிய மனப்பான்மையோடு  இந்தப் பிரச்சினையைக் கையாண்டிருக்கிறார்.  அ.தி.மு.க. அரசு  இந்திய அரசியல் சட்டத்தின் 161வது பிரிவின்படி ஆளுநரின் மன்னிப்பு அதிகாரத்தைப் பயன்படுத்துவதைப் பற்றி ஆய்வு செய்திருக்கலாம்.  அதற்குப் பதிலாக, அரசியல் ஆதாயங்களுக்காக சட்டப்படி தவறான வழிமுறையை ஜெயலலிதா தேர்ந்தெடுத்திருக்கிறார்)  என்று தெளிவாகவும், திட்டவட்டமாகவும் ஜெயலலிதாவின் உள் நோக்கத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ளது.   இதைப் போலவே  “தினமணி” நாளேடும் தனது தலையங்கத்தில் “இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்” என்ற விவிலியத்தின் கருத்தை மையமாக வைத்து எழுதியிருக்கிறது.

23-10-2008 அன்று தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த போது,  முதலமைச்சர் ஜெயலலிதா “விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, நளினி உள்ளிட்ட ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை முதல்வர் கருணாநிதி மரண தண்டனையிலிருந்து தப்புவிக்க முயற்சி செய்கிறார்.  கருணாநிதி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான  பேச்சுகள் தமிழகத்தில் பகிரங்கமாக நடைபெறுகின்றன.  அவர் இதையெல்லாம்  தடுத்து  நடவடிக்கை எடுப்பதில்லை.  என் ஆட்சியாக இருந்தால் நான் கடுமையாக நடவடிக்கை எடுத்திருப்பேன்” என்று ஜெயலலிதா சொன்னதையும், 

19-2-2014 அன்று அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்ற போது, “பேரறிவாளன் உட்பட ஏழு பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது.  ஏழு பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்கவேண்டும்” என்று நான் கூறியதையும் நடுநிலையாளர்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

 தமிழக அரசு சார்பில் இந்தப் பிரச்சினை குறித்து மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தின் உள்நோக்கம் எதுவாக இருந்த போதிலும்,   மிகவும் தாமதமாகிவிட்ட இந்த கட்டத்திலாவது இவர்களை விடுதலை செய்வது குறித்து,  மத்திய அரசு மனிதாபிமானத்துடன் அணுகிட வேண்டும்.  மத்திய அரசின் உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்கள் நேற்று மக்களவையில் கூறும்போது,  தமிழக அரசின் முடிவை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  24 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்து வாடிக்கொண்டிருப்பவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் யாருக்கு உள்ளது, மத்திய அரசுக்கு உள்ளதா, மாநில அரசுக்கு உள்ளதா, நீதி மன்றத்திற்கு உள்ளதா என்றெல்லாம் இன்னமும் வாதிட்டுப் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிராமல், அவர்கள் ஏழு பேரையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு அல்லது 161வது பிரிவின்படி தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மீண்டும் ஒரு முறை கேட்டுக் கொள்கிறேன்.