அவசர கதியில் அடிக்கல் நாட்டு விழாக்களும், அரைகுறையான வெள்ள நிவாரணப் பணிகளும்! தலைவர் கலைஞர் கடிதம்

அவசர கதியில் அடிக்கல் நாட்டு விழாக்களும், அரைகுறையான வெள்ள நிவாரணப் பணிகளும்! தலைவர் கலைஞர் கடிதம்

தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள்  நடைமுறைக்கு வந்து விட்டன.  ஆனால் அதற்குள் தன் நினைவுக்கு வந்த திட்டங்களுக்கெல்லாம் முதல் அமைச்சர் ஜெயலலிதா அன்றாடம் அடிக்கல் நாட்டியிருக்கிறார். தேர்தல் இரண்டு மாதங்களில் வரப் போகிறது என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், அரசின்   திட்டங்களுக்கு அவசரம் அவசரமாக அடிக்கல் நாட்டி விளம்பரப்படுத்திக் கொள்கின்ற ஒரே முதலமைச்சர், தமிழகத்தின் முதல் அமைச்சராகத்தான் இருக்க முடியும்!  

 

20-2-2016 அன்று தமிழகச் சட்டப்பேரவையில் இடைக்கால நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலளிக்கப் பட்டு பேரவை முடிவுற்றது.  நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் மிகக் குறுகிய காலமான நான்கு நாட்கள் மட்டுமே நடைபெற்ற போதே, ஒவ்வொரு நாளும்  முதல மைச்சர் ஜெயலலிதா வழக்கம் போல 110வது விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவிப் பது தொடர்ந்தது. பேரவை ஜனவரி 20ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்ட பிறகு, செயல்படு வதைப் போல வெளி உலகுக்குக் காட்டிக் கொள்வதற்காக, திறப்பு விழாக்களும், அடிக்கல் நாட்டு விழாக்களும் அன்றாடம் தொடர்ந்து கொண்டே இருந்தன.  அந்தக் காணொலிக் காட்சி களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்து விட்டன.

 

25-2-2016 அன்று “உங்கள் சொந்த இல்லம்” திட்டத்தின்கீழ் சீருடைப் பணியாளர்களுக்காகக்  கட்டப்பட்ட வீடுகளை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்திருக்கிறார். இந்தத் திட்டம் அறிவித்தது எப்போது தெரியுமா? 3-5-2012 அன்று முதலமைச்சர் தமிழகச் சட்டப்பேரவையில் “உங்கள் சொந்த இல்லம்” திட்டத் தின் கீழ் 36 ஆயிரம் வீடுகள் காவலர்களுக்காகக் கட்டப் படும் என்றும், அதற்கான விலையை காவல் துறையினர் விருப் பத்திற்கேற்ப ரொக்கமாகவோ மாதத் தவணை யிலோ செலுத்தலாம் என்றும் அறிவித்தார்.  நான்காண்டு கள் முடிந்து போன பின்னரும் கூட, அறிவித்த 36 ஆயிரம் வீடுகளில், இப்போது ஜெயலலிதா திறந்து வைத்திருப்பது வெறும் 2,673 வீடுகள்தான்.  அந்த வீடுகளைப் பெற்றவர்களிடமும் உடனடியாகத் தொகையைக் கட்ட வேண்டுமென்று வற்புறுத்தப்படுகிறார்களாம். 

         

27-2-2016 அன்று பொதுப்பணித் துறை சார்பில்  120 கோடியே 48 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கும் 626 கோடி 93 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான பொதுப்பணித் துறையின் திட்டங்களுக்கும் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியிருக்கிறார்.

 

அதே 27ஆம் தேதியன்று தலைமைச் செயலகத் தில்  இராமநாதபுரம் மாவட்டம்  - உப்பூரில் 12,778 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படவுள்ள அனல் மின் திட்டத்திற்கு ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.   உப்பூர் மின் நிலையம், 4-8-2011 அன்று நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. ஆட்சி அமைந்த தொடக்கத்தில்  அறிவிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு, ஆட்சி முடியப் போகும் நேரத்தில் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியிருக்கிறார்.  அப்போது திட்ட மதிப்பு 9,600 கோடி ரூபாய். ஏற்பட்ட தாமதத்தினால் தற்போதைய செலவு  12,778 கோடி ரூபாய்.   கூடுதல் செலவு  3,178 கோடி ரூபாய்.

 

அதே நிகழ்ச்சியில் 119 கோடியே 22 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார். 27ஆம் தேதி ஜெயலலிதா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதிலும், செய்தித் துறை 1-3-2016 அன்றுதான் இதுபற்றிய செய்தி வெளியீட் டினைச் செய்தது.

 

28-2-2016 அன்று டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் 193 கோடியே 26 இலட்சம் ரூபாய்  மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு முதல் முறையாகக் கோட்டையை விட்டு வெளியே வந்து ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

 

1-3-2016 அன்று  1354 கோடியே  78 இலட்சத்து 70 ஆயிரம்  ரூபாய் மதிப்பீட்டிலான பாலங்கள் மற்றும் சாலைப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாராம்.

 

நெடுஞ்சாலைத் துறை சார்பில் 1,354 கோடியே 78 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக் கப்படவுள்ள பாலங்கள், மேம்பாலங்கள், ரெயில்வே மேம்பாலங்களுக்கும் - நகராட்சி நிர்வாகம் மற்றும்  குடிநீர் வழங்கல் துறை சார்பில் 119 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கும் - தகவல் தொழில் நுட்பத் துறை சார்பில் 93 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கும் - பேரூராட்சிகளில் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 420 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கும் முதல மைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டியிருக்கிறார். 

 

“தினமலர்”  நாளிதழ் 2.3.2016இல்,  “முதல்வர் துவக்கி வைக்கும் நிகழ்ச்சிகள் குறித்த செய்தி வெளியீடுகள் அனைத்தையும், ஒரே நாளில்  செய்தித் துறை வெளி யிடாது. ஒன்றிரண்டை வெளியிட்டு விட்டு, மற்றவற்றை, முதல்வர் தலைமைச் செயலகம் வராத நாளில் வெளியிடு வது வழக்கம். சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், நேற்று செய்தித் துறை சார்பில்  அனைத்து நிகழ்ச்சிகளின் துவக்க விழா குறித்த செய்திகளும் பத்திரிகைகளுக்கு வழங்கப்பட்டன”  என்று  எழுதியுள்ள வாசகங்கள், அ.தி.மு.க. அரசின் செய்தித் துறை எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும்.

 

மேலும், கரூர் மற்றும் புதுக்கோட்டையில் புதிதாக அமையவுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு 458 கோடியே 92 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கல்லூரிக் கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைக் கட்டிடங் களுக்கு ஜெயலலிதா அடிக்கல் நாட்டியிருக்கிறார்.

 

கரூர் மருத்துவக் கல்லூரிக்கு 1-3-2016 அன்று ஜெயலலிதா அடிக்கல் நாட்டுகிறார்.  ஆனால் கரூர் நகராட்சியின் சிறப்புக் கூட்டம் மூலம் மருத்துவக் கல்லூரிக்கான இடம் ஒதுக்கீடு செய்து  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.   தமிழகச் சட்டசபையில்  2014ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில், கரூர் அரசு மருத்துவமனை 150 மாணவர்கள் சேர்க்கையுடன்  மருத்துவக் கல்லூரியாகத் தரம் உயர்த்தப்படும்  என்று ஜெயலலிதா உத்தரவிட்டார்.  கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கரூரில் புதிய மருத்துவக் கல்லூரி துவக்குவதற் காக 229 கோடியே 46 இலட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி முதல்வர் உத்தர விட்டார். அதையடுத்து கரூர் மருத்துவக் கல்லூரிக்கு வாங்கல் சாலையில் 25 ஏக்கர் நிலம் தனியார் மூலம் தானமாக வழங்க முன்வரப்பட்டது.  நகராட்சியின் கவுன்சில் கூட்டம் 29-2-2016 அன்று மாலை 5.30 மணிக்கு நடந்துள்ளது.  அதற்கு முன்பாக அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் விஜய பாஸ்கர் அங்கே வந்து கவுன்சிலர்கள் மத்தியில் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தி யிருக்கிறார்.  அதன் பிறகு நடந்த சிறப்புக் கூட்டத்தில் கரூர் நகராட்சி சணப்பிரட்டி கிராமத்தில் நகராட்சிக்குச் சொந்தமான 30.27 ஏக்கர் நிலத்தை மருத்துவமனை அமைக்க இடம் வழங்க, மருத்துவக் கல்லூரித் தலைவர் கோரியுள்ளார். நகராட்சிக்கு எவ்வகையிலும் இழப்பு ஏதுமின்றி கேட்புத் துறையான சுகாதாரத் துறைக்கு அரசு எடுத்த முடிவின் அடிப்படையில் வழங்க, மன்றத்தில் அனுமதி வழங்கப்படுகிறது என்று தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது.

 

வாங்கல் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று இதுவரை சொல்லப்பட்டு வந்தது, திடீரென்று இடம் மாற்றப்பட்டு, நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் மருத்துவக் கல்லூரி வரக் காரணம் என்ன?  அதுவும் அதற்கான கருத்துருவை அனுப்ப நகர்மன்றத் தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதே சூழ்நிலையில்,  அவசர அவசரமாக  அடிக்கல் நாட்டப்பட்டதன் காரணம் என்ன?  முதலில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது வாங்கல் சாலையில் மருத்துவக் கல்லூரி கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டதாக வும்,  தற்போது அவர் பதவியிலே இல்லாததால், அந்தத் திட்டத்தை அப்படியே சுருட்டி முடக்கி விட்டு, தற்போது சணப்பிரட்டி பகுதியில் மருத்துவக் கல்லூரியை அமைக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.  இந்தச் செய்தி உண்மைதானா?  அதனால்தான் மருத்துவக் கல்லூரிக்கு, அறிவித்து இரண்டாண்டுகள் கழித்து,  1-3-2016 அன்று அவசர அவசரமாக அடிக்கல் நாட்டப்பட்டதா?

 

அ.தி.மு.க. அரசின் பதவிக் காலம் முடியும் நிலையில்  முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு அறிவிப்புகளையும் திட்டப் பணிகளையும் அவசர அவசரமாகத் தொடங்கியும், திறந்து வைத்தும் இருக்கிறார். ஐந்தே நாட்களில் ஜெயலலிதா அடிக்கல் நாட்டிய திட்டங்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 15 ஆயிரத்து 192 கோடியே  68 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புக்கான திட்டங் களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறார்.  இந்தத் திட்டங்கள் எல்லாம் எப்போது நடைமுறைக்கு வரும்? இதற்கான தொகை நிதி நிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதா?  பேரவையின் அனுமதி கிடைத்துள்ளதா? மக்களை ஏமாற்றுவதற்காக போகிற போக்கில் அறிவிக்கப்பட்ட திட்டங்களா?

 

பெருமழையால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பெற்ற கடன்களுக்காக வங்கிகளுக்குச் செலுத்தப்பட வேண்டிய வட்டியில் 3 சதவிகிதம் வட்டி மானியம் வழங்க முதலமைச்சர் ஜெய லலிதா உத்தரவிட்டுள்ளார்.  இந்த உத்தரவை ஜெயலலிதா 1-3-2016 அன்று வெளியிட்டிருக்கிறார். பெருமழை பெய்தது 2015ஆம் ஆண்டு நவம்பர் இறுதியிலும், டிசம்பர் மாதத் துவக்கத்திலுமாகும்.  இதற்குப் பிறகு  மூன்று மாத காலமாக இந்த அறிவிப்பை வெளியிடாமல் இருந்ததற் கான காரணம் என்ன?  இடைக்கால நிதி நிலை அறிக்கையில் கூறியிருக்கலாம் அல்லவா? மழை யினால் பாதிக் கப்பட்ட சிறு குறு தொழில் நிறு வனங்களுக்கு வட்டி மானியம் அளிக்க வேண்டு மென்று எதிர்க் கட்சிகள் கேட்ட போதே அறிவித் திருக்கலாம் அல் லவா?  இடைக் கால நிதி நிலை அறிக்கைக்குப் பிறகு ஒவ்வொரு நாளும்  110வது விதியின் கீழ் அறிக்கை படித்தார்களே, அப்போது கூடச் சொல்லவில்லையே ஏன்? அப்போதெல்லாம் சொல்லியிருந்தால்,  அந்தச் சலுகையை உரியவர் களுக்கு  வழங்கியிருக்க  வேண்டும்.  இப்போது அறிவித்தால், “தேர்தல் பற்றிய அறிவிப்பு வந்து விட்டது; என்ன செய்ய?” என்று பதில்  கூறி தப்பித்துக் கொள்ளலாம் அல்லவா?

 

இந்த அறிவிப்போடு மேலும் சில அறிவிப்புகளையும் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்காக

1-3-2016 அன்று ஜெயலலிதா செய்திருக்கிறார்.   அந்த அறிவிப்புகளைச் செய்ய ஏன் இந்தக் கால தாமதம்? துறை மூலமாக இதற்கான கோப்பு முதலமைச்சரின் ஒப்புதலுக்காக வந்து அதிலே கையெழுத்திடவே  இவ்வளவு கால தாமதமா?  

 

தமிழ்நாட்டில் மிகப் பெரிய மழை பெய்து, வெள்ளம் பெருக்கெடுத்தோடி பல நூறு பேர்  உயிரிழக்கவும், பல இலட்சம் குடும்பங்கள் உடமையிழக்கவுமான பதற்ற நிலை உருவாகி, அதற்கான நிவாரணத் தொகை இன்னும் முழுமையாக வழங்கப்படவில்லை என்ற குற்றச் சாட்டு எல்லாத் திசைகளிலிருந்தும்  வருகிறது.  உதாரணமாக இன்றைய (6-3-2016) “தினமலர்” நாளிதழிலேயே  “நிவாரணம் கிடைக்கல :  நான்கு இலட்சம் குடும்பங்கள் புலம்பல்” என்ற தலைப்பில் முதல் பக்கத்திலேயே சென்னை, திருவொற்றியூர், மற்றும் மணலி பகுதிகளில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர், நிவாரணத் தொகை கிடைக்காததைக் கண்டித்து திருவொற்றியூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட செய்தி புகைப்படத்தோடு வந்துள்ளது. அந்தச் செய்தி யில், ஜனவரி 11க்குள் அனைவருக்கும் நிவாரணத் தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்ததாகவும், ஆனால் இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் நான்கு இலட்சம் குடும்பங்களுக்கு மேல் நிவாரணம் கிடைக்கவில்லை என்றும் எழுதியிருக்கிறார்கள்.  சென்னையிலேயே இப்படிப்பட்ட கதி என்றால், பாதிப்புக் குள்ளான மற்ற மாவட்டங்களின் நிலை எப்படிப் பட்டதோ?

 

பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள் மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு  கூட்டுறவு வங்கிகளில், வட்டியில்லாமல் 5000 ரூபாய் கடன் வழங்கப்படும் என்று அறிவித்து அதற்காக சிறப்பு முகாம்கள் எல்லாம் நடந்தன.  இந்தக் கடன்கள் ஆளுங்கட்சியினருக்கு மட்டும் சுமார் 100 கோடி  ரூபாய் அளவுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும், அப்படி வழங்கப் பட்ட காரணத்தால், கூட்டுறவு வங்கிகள் திவால் நிலைக்கு வந்து விட்டன  என்றும் செய்தி வந்துள்ளது.

 

விவசாயிகளின் வேதனை  நிலைமை பற்றியோ விளக்கவே வேண்டியதில்லை. விவசாயிகள் சங்கத் தலைவர், திரு. அய்யாக்கண்ணு அளித்திருக்கும் பேட்டியிலே கூட, “விவசாயப் பிரதிநிதிகளை முதல்வர்  ஜெயலலிதா சந்திக்கவே மறுக்கிறார்.  மத்திய அரசு வழங்கிய வறட்சி நிவாரணம் ரூ. 1774 கோடியை தென்னை, மா, எலுமிச்சை விவசாயிகளுக்கு வழங்கவும் மறுக்கிறார். இந்தப் போக்கைக் கண்டித்தும் விவசாயி களின் வேளாண் கடன்களைத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் மார்ச் ஒன்றாம் தேதி ஜெயலலிதா வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தோம். இதன் பிறகாவது பேச்சுவார்த்தை நடத்துவார் என்று பார்த்தால் எங்கள் மீது அடக்குமுறைகளை ஏவி விடுகிறார். தீவிரவாதிகளைப் போல எங்களை நடத்துகிறார்.  இந்த அரசு விவசாயிகளை துச்சமாக நினைக்கிறது. ஊருக்குச் சோறு போடும் எங்களை இந்த அம்மையார் மண்ணைத் தின்ன வைத்துவிட்டார்” என்று மனம் நொந்து போய் கூறியிருக்கிறார்.

 

இவ்வாறு இந்த ஆட்சியில் எந்தத் தரப்பினரையும் வாழ விடாமல் தொடர்ந்து வாட்டி வதைப்பதோடு, பசிக்கு ரொட்டித் துண்டு கேட்ட மக்களிடம் போய், “கேக் வாங்கிக் கொள்ளுங்கள்” என்றுரைத்த கொடுங் கோலனைப் போல;  அடிக்கல் நாட்டு நிகழ்ச்சிகள் என்றும், நிறை வேற்ற முடியாத, நிறைவேற்ற நேரம் இல்லாத பல்வேறு அறிவிப்புகளையும் நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக ஜெய லலிதா கடைசி நேரத்தில் செய்திருக்கிறார்.   இந்த விவரங்களையெல்லாம் உடன்பிறப்பே, நீ ஆங்காங்கு பொதுமக்களிடம் உரைத்து, உணர்த்திட வேண்டும்.   தேர்தல் பணிகளில் முதலில் ஆற்ற வேண்டிய பணி, பொதுமக்களுக்கு உண்மைகளை தெரியப்படுத்த வேண்டும் என்பதுதான்! அந்தப் பணிகளை நீ ஆக்க பூர்வமாக ஆற்றி வருவாய் என்பதை நான் நன்கறிவேன்.  இருந்தாலும் அந்தச் செய்திகளோடு இந்த உண்மை களையும் மக்களுக்குத் தெளிவாக்கிடுக!