கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் விடுக்கும் உலக மகளிர் நாள் வாழ்த்துச் செய்தி!

கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் விடுக்கும் உலக மகளிர் நாள் வாழ்த்துச் செய்தி!

மகளிர் சமுதாயத்தின் எழுச்சிக்கு அடையாளமாக “உலக மகளிர் நாள் விழா” 8-3-2016 அன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.


அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் நெசவாலைகளில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான மகளிர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டுமணிநேர வேலை முதலியவற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போராடத் தொடங்கிய நாள், 1857ஆம் ஆண்டின் மார்ச்சுத் திங்கள் 8ஆம் நாள்! பின்னர் அந்நாளே, “உலக மகளிர் நாள்” என ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு, மகளிர் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை மேலும்  வளர்த்திட மேதினியெங்கும்  பயன்படுகிறது.


திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் தமிழகத்தைப் பொறுத்தவரை கல்வி, அரசியல், சமூக, பொருளாதார நிலைகளில் பெண்கள் முன்னேற்றங்கள் கண்டிடத்  தேவையான பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தப்பட்டன என்பதைத்  தமிழகம் நன்கறியும்!


பெண்களின் கல்வி வளர்ச்சிக்காக 8ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 5000 ரூபாய் நிதி உதவி வழங்கும் மூவலூர் மூதாட்டியார் திருமண நிதியுதவித் திட்டத்தை 1989இல் தொடங்கியது கழக ஆட்சி!


பெண்கள் 10ஆம் வகுப்பு வரை படிப்பதை ஊக்கப்படுத்திட வேண்டும் என்பதற்காக 10ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு 1996ஆம் ஆண்டு முதல் 10,000 ரூபாய் நிதி உதவி வழங்கியது கழக ஆட்சி! ஆனால், 2001இல் பொறுப்பேற்ற அ.தி.மு.க. அரசு இத்திட்டத்தை முற்றிலும் முடக்கி விட்டது. 2006இல் பொறுப்பேற்ற பின் இத்திட்ட நிதி உதவியை 15,000 ரூபாய் என்றும், 2008இல் 20,000 ரூபாய் என்றும், 2010இல் 25,000 என்றும் படிப்படியாக உயர்த்தி கிராமப்புறங்களைச் சேர்ந்த இலட்சக்கணக்கான பெண்கள் பயன்பெற வழிவகுத்தது கழக ஆட்சி!


மேலும், அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மகளிர் மறுமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்டம் ஆகிய திருமண உதவித் திட்டங்களின் நிதி உதவியையும் படிப்படியாக 25,000 ரூபாய் வரை உயர்த்தி, இலட்சக்கணக்கான ஏழை மகளிர் நலம்பெற வழிவகுத்தது கழக ஆட்சி!


ஆதிதிராவிட பெண்களுக்கு 1 கோடி ரூபாய்ச் செலவில் விமானப் பணிப்பெண் பயிற்சி வழங்கும் புதிய திட்டத்தை 2009ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தியது கழக ஆட்சி!


அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதல் மருத்துவர்களும், செவிலியர்களும் நியமிக்கப்பட்டு 24 மணி நேர மகப்பேறு உதவிகள் - கிராமப்புற மகளிர்க்குக் கிடைத்திடச் செய்தது கழக ஆட்சி!


கிராமப்புற ஏழை மகளிர் கல்லூரிப் படிப்பைத் தொடர்வதற்கு வசதியாக 1969ஆம் ஆண்டில்,  பேரூராட்சிப் பகுதிகளில்கூட அரசு சார்பில் பெண்களுக்கான கலை, அறிவியல் கல்லூரிகள் பலவற்றைத் தொடங்கியது கழக ஆட்சி!


ஏழை மகளிர்க்குப் பட்டப்படிப்பு வரை தடையின்றிக் கல்வி வழங்கிட 1989இல் ஈ.வெ.ரா.நாகம்மையார் நினைவு ஏழை மகளிர் இலவசப் பட்டப்படிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்தியது கழக ஆட்சி! அத்திட்டத்தின் பயன்களை 2008-2009 முதல் முதுகலைப் பட்டப்படிப்பு வரை நீட்டித்து பல்லாயிரக்கணக்கான ஏழை மகளிர் உயர்கல்வி பெற ஆவன செய்ததும் கழக ஆட்சியே!


1973இல் இந்தியாவிலேயே முதன்முறையாகக் காவல்துறையில் மகளிரை பணிநியமனம் செய்தது கழக ஆட்சி!


ஏழை விதவைப் பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தை 1975ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்திச் செயல்படுத்தியது கழக ஆட்சி!


விதவைப் பெண்களுக்கும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும்,

18 வயதிற்கு மேற்பட்ட மகன் இருந்தாலும், முதியோர் உதவித் திட்டத்தின் கீழ் உதவித் தொகை வழங்கிட 1998இல் ஆணையிட்டு நடைமுறைப்படுத்தியது கழக ஆட்சி!


தருமபுரியில் 1989ஆம் ஆண்டில் மகளிர் திட்டத்தைத் தொடங்கி, அதன் மூலம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என்னும் அமைப்புகள் தோன்றிடவும், அவற்றின் வாயிலாக இலட்சக்கணக்கான கிராமப்புற மகளிரின் பொருளாதாரம் தொடர்ந்து உயர்ந்திடவும் வழிவகுத்தது கழக ஆட்சி!


1998இல் மகளிர் சிறு வணிகக் கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன்மூலம் பூ விற்கும் மகளிர், காய்கறி விற்கும் மகளிர் உட்படப் பல்வேறு சிறு வணிகங்களில் ஈடுபட்ட ஏழை மகளிரின் பொருளாதார நலன்களையும் மேம்படுத்தியது கழக ஆட்சி!


பள்ளிகளில் கற்பிக்கும் ஆசிரியர்களில் இரண்டாம் வகுப்பு வரை முற்றிலும் பெண்களையே ஆசிரியைகளாக நியமிக்க வேண்டும் என 1989இல் ஆணையிட்டு, நடைமுறைப்படுத்தியது கழக ஆட்சி!


பெண்கள் வேலைவாய்ப்புகள் பெற்று பொருளாதார முன்னேற்றம் காண்பதற்காக நிலையான களம் அமைக்கும் வகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக 1996-ல் பெண்களுக்கு அரசுப் பணிகளில் 30 விழுக்காடு இடஒதுக்கீடு தந்தது கழக ஆட்சி!


சமூக நிலைகளில் பெண்களுக்கு உரிய சிறப்புகள் கிட்டிட வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக 1990இல் பெண்களுக்குப் பரம்பரைச் சொத்தில் சம உரிமை அளித்திடும் தனிச்சட்டம் கண்டது கழக ஆட்சி!

 

அரசின் தொழில்மனைகள் ஒதுக்கீட்டில் பெண்களுக்கு 10 விழுக்காடு மனைகளை ஒதுக்கிட வகை செய்து, பெண்கள் தொழில்முனைவோராகிட ஊக்கம் தந்தது கழக ஆட்சி!


மகளிர் தொழில் முனைவோர்க்கு 50 ஆயிரம் ரூபாய் மானியத்துடன் கடன் உதவி வழங்கியதும் கழக ஆட்சியே!


திருக்கோவில்களின் அறங்காவலர் குழுவில் மகளிர் ஒருவர் கட்டாயம் இடம் பெற வேண்டும் எனச் சட்டம் கண்டது கழக ஆட்சி!


1989ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஏழை கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து உட்கொள்ளவும், வேலைக்குச் செல்ல முடியாமையால் அவர்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்புகளைச் சரிக்கட்டவும், கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டத்தை 2006ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தியது கழக ஆட்சி!


50 வயது கடந்தும் திருமணம் ஆகாமல் வறுமையில் வாடும் ஏழை மகளிர்க்கு மாதம் 500 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது கழக ஆட்சி!


இந்தியாவிலேயே முதல்முறையாக 1996ஆம் ஆண்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்து; கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முதல் மேயர் பதவி வரை ஏறத்தாழ 40,000 மகளிர் உள்ளாட்சி அமைப்புகளில் பதவிகளைப் பெற்று, ஜனநாயகக் கடமை ஆற்றிடும் வாய்ப்பை உருவாக்கித் தந்தது கழக ஆட்சி!


சத்துணவுத் திட்டத்தில் பணிபுரியும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு மூன்று முறை ஊதிய விகிதத்தை உயர்த்தித் தந்து, அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தியது கழக ஆட்சி!  அத்துடன் அல்லாமல், சத்துணவுப் பணியாளர்களை நிரந்தரப் பகுதிநேரப் பணியாளர்களாக உயர்த்தியது;  சத்துணவுப் பெண் பணியாளர்களுக்கு மூன்று மாதங்கள் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு வழங்கியது;  அவர்களுக்கு குடும்பநல நிதித் திட்டம் அனுமதித்தது;  அவர்கள் ஓய்வு பெறும் வயதை 55-லிருந்து 58-ஆக உயர்த்தியது;  அவர்களுக்கு கோடை விடுமுறை காலத்திற்கும் ஊதியம் வழங்கியது உட்பட சத்துணவுத் திட்டத்தில் பணிபுரியும் மகளிரின் நலன் பேணுவதில் தனிக்கவனம் செலுத்தியது கழக ஆட்சி!


இவையல்லாமல் ஏழைத் தாய்மார்களின் இதயம் குளிர ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டம்; ஏழைத்தாய்மார்களின் பொது அறிவு வளர்ச்சிக்கும், பொழுதுபோக்கிற்கும் உதவிட இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கும் திட்டம்; ஏழைத்தாய்மார்களின் உடல்நலம் காத்திட எரிவாயு இணைப்புடன் இலவச எரிவாயு அடுப்புகளை வழங்கும் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி, மகளிர் சமுதாயம் கல்வி, அறிவியல், அரசியல் சமூக, பொருளாதார நிலைகளில் முன்னேற்றம் கண்டு; அவர்கள் வாழ்வு வளம் பெறுவதற்குப் பல வகையிலும் வழிவகுத்த பெருமை கழக ஆட்சிக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் தான் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்.


ஆனால், பெண் முதலமைச்சராக அமைந்து அரசாளும் தமிழகத்தில் உரிமைக்காகப் போராடிய அரசு ஊழியர்களில், பெண் ஊழியர்களையும் நள்ளிரவு நேரத்திலும், அவர்களின் வீடு புகுந்து கைது செய்து, சிறையில் அடைத்து, நிரந்தரமாக அவர்களை வேலை நீக்கம் செய்து அழுத கண்ணீரோடு, நீதிமன்றங்களின் படிகள் ஏறி, உரிமைகள் பெற்று மீண்டும் பணி வாய்ப்புகள் பெறக்கூடிய நிலைக்கு அவர்களை அன்று கொடுமைப்படுத்தியது மட்டுமல்லாமல், இன்றும் மகளிர் பெருவாரியாக உள்ள அரசு ஊழியர்களையும், சத்துணவுத் திட்டப் பணியாளர்களையும் தெருவில் இறங்கிப் போராட வைத்துள்ள அ.தி.மு.க. அரசு போல் அல்லாமல்,  பெண்களுக்காக, - பெண்கள் முன்னேற்றத்திற்காக, என்றென்றும் பாடுபடும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகமே என்பதை நினைவுபடுத்தி, நாடாளுமன்றத்திலும், மாநிலங்களின் சட்டப் பேரவைகளிலும் மகளிர்க்கு  33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கிடும்  சட்டம்,  தி.மு. கழகமும் பங்கு பெற்ற  அய்க்கிய முற்போக்குக் கூட்டணி  அரசால் அறிமுகம் செய்யப்பட்டு இன்னும் முழுமை பெற்று நடைமுறைக்கு வராமலிருக்கும்  நிலையினை மாற்றி,  முக்கியமான   அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைத்திட முன் வர வேண்டும் என இந்த நேரத்தில் மீண்டும் வலியுறுத்தி,  “உலக மகளிர் நாள்” விழா கொண்டாடப்படும் நேரத்தில், தமிழக மகளிர் சமுதாயத்திற்கு எனது  நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, வாழ்க மகளிர்!  வாழ்க மகளிர்!  என வாழ்த்தி மகிழ்கிறேன்.