நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் தலைவர் கலைஞர் ஆற்றிய உரை

நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியில் தலைவர் கலைஞர் ஆற்றிய உரை

கல்வராயன் மலைப் பகுதியிலே இருந்து வருகை தந்துள்ள அன்புக்குரிய பெரியோர்களே, இனிய உடன்பிறப்புக்களே (பலத்த கைதட்டல்).  உங்கள் வருகையை முன்னிட்டு நடைபெறுகின்ற இந்த வரவேற்பு - மகிழ்ச்சிக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டு, உங்களோடு சேர்ந்து இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதில் மிகுந்த பெருமை அடைகிறேன்.  ஏனென்றால்,  நீங்கள் கூண்டுக்குள்ளே இருந்து வெளியே வந்திருக்கின்றீர்கள்.  உங்களைக் கூண்டிலே அடைத்தவர்கள் யார் என்பதை நான் இப்பொழுது விமர்சிக்கத் தேவையில்லை.  தம்பி ஸ்டாலின் இங்கே எடுத்துக்காட்டியதைப் போல, உங்களுடைய அல்லல் நிறைந்த - இன்னல் மிகுந்த சிறை வாழ்க்கை முடிவுற்று, என்னையும் என்னுடைய நண்பர்களையும், கழகத் தோழர்களையும் சந்திக்கின்ற நல்ல வாய்ப்பை நீங்களும் பெற்றிருக்கிறீர்கள்; உங்களையெல்லாம் சந்திக்கின்ற மகிழ்ச்சிகரமான வாய்ப்பை நானும் பெற்றிருக்கின்றேன்.   (பலத்த கைதட்டல்).

 

இங்கே எனக்கு முன்னால் பேசிய - உங்களையெல்லாம் வரவேற்றுப் பேசிய கழகத்தின் பொருளாளரும், “நமக்கு நாமே” பயணத்தின் மூலமாக உங்களைப் பற்றி அறிந்து, என்னிடத்திலே பல விவரங்களைச் சொன்னவருமான என்னுடைய அருமைத் தம்பி, மு.க.ஸ்டாலின் அவர்கள் (பலத்த கைதட்டல்) நீங்கள் பட்ட கஷ்டங்களை, இங்கே எடுத்துச் சொன்னார்.  சிறை வாழ்க்கை என்பது கொடுமையானதுதான்.   இன்னதென்றே புரியாமல் ஏன் சிறையிலே இருக்கிறோம் என்பதை அறியாமல்,  சிறையிலே இருப்பது என்பது, விடுதலையே கிடையாதா?  நாம் என்ன ஆவோம்?  என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமல், அல்லாடுவது என்பது உலகத்திலே, அதுவும் தமிழ்நாட்டு வாழ்க்கையிலே மிகப் பெரிய விபரீதமான ஒன்றாகும்.  அந்த விபரீதமான சிரமத்தை நீங்கள் சந்தித்துவிட்டு,  இடையிலே பல நாட்களுக்குப் பிறகு,  இன்று எங்களைப் பார்க்கின்ற வாய்ப்பை நீங்கள் பெற்றிருக்கின்றீர்கள்.  என்னைப் பார்க்கின்ற வாய்ப்பை நீங்கள் பெற்றிருக்கிறீர்கள் என்பதைவிட,   இவ்வளவு நாள் சிறைப்பட்டு, விடுதலை அடைந்து வெளியே வந்திருக்கின்ற உங்களையெல்லாம் பார்க்கின்ற வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன் (பலத்த கைதட்டல்) என்பதில்தான் எனக்கு மகிழ்ச்சியும், பெருமையும் ஆகும்.

 

இன்றைக்கு காலையிலே, கழகப் பணிகளை முடித்துவிட்டு,   நான் புறப்படும்போது,  தம்பி ஸ்டாலின் என்னிடத்திலே இன்று மாலை நடைபெறும் இந்த நிகழ்ச்சியைப் பற்றி எடுத்துச் சொன்னார். நான் பல நாட்களாக தேர்தலுக்கான தயாரிப்புப் பணிகளிலே ஈடுபட்டு,  அதன் காரணமாக உடல் நலிவோடு இருந்த சூழ்நிலையிலும்,  என்ன விஷயம்? யாரைப் பார்க்க என்னை அழைக்கிறாய்?  என்று கேட்டபோது, “உங்களை எல்லாம் பார்க்க” என்று அவர் சொன்னதுதான் தாமதம், உடனடியாக உங்களை எல்லாம் பார்க்க வேண்டும் என்கின்ற ஆசை ததும்பி வழிய,  குறித்த நேரத்திலே வரவேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டு, உங்களை எல்லாம் இப்பொழுது சந்திக்கின்றேன்.    நீங்கள் இப்பொழுது விடுதலை பெற்றிருக்கின்றீர்கள். யாரிடமிருந்து என்றால்,  சமுதாயத்திலே பிறரை அடக்கி ஆள வேண்டும் என்று எண்ணுகின்றவர் களுடைய கையிலே சிக்கி,  அவர்களிடமிருந்து நீங்கள் விடுதலை பெற்றிருக்கிறீர்கள். இப்படிப்பட்ட விடுதலை,  இன்று நேற்றல்ல, பல்லாண்டுக் காலமாக,  நீங்கள் கேட்டது இன்று கிடைத்தது இந்த விடுதலை.  ஆனால், இதுபோன்ற நிகழ்ச்சிகள் ஒரு நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கலாமா என்ற கேள்விக்கு பதில் கிடைக்க வேண்டுமேயானால்,   அந்த பதிலை நாம் இன்னும் போராடித்தான் பெற வேண்டியவர்களாக இருக்கின்றோம்.  ஏனென்றால், ஒரு பாவமும் அறியாத உங்களை சிறையிலே போட்டு, இத்தனை நாட்கள் வாட்டியதற்குப் பிறகும், விடுவிக்க முடியாது என்று சொன்னது அரசாங்கம்.   எந்த அரசாங்கம்?  அம்மையார் ஜெயலலிதாவினுடைய அரசாங்கம். இவர்களை எல்லாம் விடுதலை செய்ய இயலாது.  காரணம்,  இவர்கள் வேறு மாநிலச் சிறையிலே இருப்பவர்கள்.  ஆகவே இயலாது என்று சொல்லித் தட்டிக் கழித்தார்கள்.  ஆனால்,  ஏன் முடியாது?  முடியும், செய்து காட்டுகிறோம்,  விடுவித்துக் காட்டுகிறோம் பார் என்று நாங்கள் விடுத்த அறைகூவலினால்தான் (பலத்த கைதட்டல்) இன்றைக்கு உங்களை எல்லாம் நான் மகிழ்ச்சியோடு காணுகின்ற இந்த சூழ்நிலை உருவாகி இருக்கின்றது.  விடுதலை பெற்றிருக்கின்றீர்கள்,  வீட்டுக்குச் சென்றிருக்கின்றீர்கள், வாழ்த்துக்களை பெறுவீர்கள்,  அண்டை வீட்டார், அயலார், பக்கத்து வீட்டார், எதிர் வீட்டார் அத்தனை பேரும்,  உங்களை வாழ்த்த இருக்கின்றார்கள்.  உங்களை எல்லாம் காண காத்திருப்பார்கள்.  அவர்கள் எல்லாம் எப்படி காத்திருக்கிருக்கிறார்களோ,  அதைப்போல காத்திருந்தவர்களிலே நானும் ஒருவன் (பலத்த கைதட்டல்) என்பதை இங்கே எடுத்துச் சொல்லி விடுதலை பெற்று வந்திருக்கும் உங்களை மனமார,  நெஞ்சார, இதயமார, வாயார வாழ்த்தி நான் “நீங்கள் வாழ்க, வாழ்க, இன்னும் பல்லாண்டுக் காலம் வாழ்க” என்று வாழ்த்தி, இந்த வாழ்த்துக்களுக்கு உரியவர்களாக நீங்கள் சிறையிலே இருந்து வந்திருப்பதை நினைவு கூர்ந்து, எப்படியெல்லாம் தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடைபெறுகிறது என்பதை நானும் எண்ணிப் பார்த்து,  உங்களையும் எண்ணிப் பார்க்கச் செய்து,  இதுபோன்ற கொடுமைகளை அனுமதிக்கலாமா?  அனுமதிக்க முடியுமா?  நல்லதா?  கெட்டதா?  என்பதை அறிகின்ற அந்த ஆராய்ச்சி, அறிவு நமக்கு வேண்டாமா?  அந்த அறிவைப் பயன்படுத்த  அனைவரும் முன்வர வேண்டுமல்லவா?   என்ற இந்த நாட்களையும் நினைத்து, இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் ஒரே விடையாக, நாட்டில் நல்லாட்சி நடைபெற வேண்டும்,  நல்லாட்சியிலேதான் நல்லவர்களுக்கு தீமை வராது;  நல்லாட்சியிலேதான் நல்லவர்களுக்கு இப்படிப்பட்ட கொடுமைகள் நேராது;  அப்படிப்பட்ட கொடுமைகள் நேராமல் இருக்க, நல்லாட்சி ஒன்று உதயமாக வேண்டும்; அந்த நல்லாட்சியை வருக, வருக என்று வரவேற்போம் என்று கூறி,  இந்த இனிய மாலை நேரத்திலே என்னை அழைத்து உங்கள் மகிழ்ச்சியிலே என்னையும் திளைக்கச் செய்ததற்காக, நான் என்னுடைய அன்பான வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவித்து, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கு எல்லாம் என்னுடைய நன்றியையும், வணக்கத்தையும் கூறி, இந்த அளவில் விடைபெற்றுக் கொள்கின்றேன்