என்றுதான் ஒழியுமோ இந்தச் சாதிக் கொடுமை? தலைவர் கலைஞர் பதில்கள்

என்றுதான் ஒழியுமோ இந்தச் சாதிக் கொடுமை? தலைவர் கலைஞர் பதில்கள்

கேள்வி :- தமிழகத்தில் சாதிப் படுகொலைகள் அதிகம் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையமே குற்றஞ்சாட்டியிருக்கிறதே?

கலைஞர் :- தந்தை பெரியார் அவர்களின் காலத்திலிருந்து சாதிப் பாகுபாடுசாதி வெறிசாதிப் பெயரால் பகை ஆகியவற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனாலும் தமிழகத்திலே சாதிக் கொடுமைகளும்,வன்முறைகளும்  நின்றபாடில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு கூடதிருப்பூர் மாவட்டம்,உடுமலைப்பேட்டைக்கு அருகில் குமரலிங்கம் கிராமத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் சங்கர்,தான் காதலித்து மணந்த கவுசல்யா என்ற பெண்ணுடன் நடந்து சென்ற போது படுகொலை செய்யப்பட்டுள்ளார். இரண்டாண்டுகளுக்கு முன்பு தர்மபுரியில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றபோது 11-11-2012 அன்றே நான் கண்டித்து கருத்துக் கூறியிருந்தேன். தற்போது தேசிய மனித உரிமைகள் ஆணையம்உடுமலைப்பேட்டை சம்பவம் பற்றி தானாக முன்வந்து புகாரைப் பதிவு செய்துள்ளது.கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமிதிண்டுக்கல்,நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்ததாகவும் செய்தி வந்துள்ளது.  இதிலே குற்றவாளிகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பதோடு,  சமுதாயத்தில் இதுபோன்ற சம்பவம் இனியும் நடக்காமல் இருக்கஅரசாங்கம் உரிய நடைமுறைகளை வகுத்துப் பின்பற்றி மக்களிடையே சாதிக் கொடுமை  நீங்கிட வழிவகுத்திட வேண்டும்.   அனைத்துச் சாதி மக்களிடையே  ஒற்றுமையையும்நல்லிணக்கத்தையும்மனிதநேய மனப்பான்மையையும் உருவாக்கிட அனைத்துத் தரப்பிலும்  ஆக்கப் பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

கேள்வி :- 20-3-2016 அன்று திருச்சியில் நடைபெறும் திராவிடர் கழகசமூக நீதி மாநாட்டில்  நீங்கள் கலந்து கொள்கிறீர்களா?

கலைஞர் :- கடந்த மாதமே திராவிடர் கழகத் தலைவர்இளவல் வீரமணி அவர்கள் என்னை நேரில் சந்தித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஒப்புதல் பெற்றிருந்தார்.  மீண்டும் 14-3-2016 அன்றிரவு என்னைச் சந்தித்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அவசியம் வரவேண்டுமென்று கூறியதோடுஎன் வீட்டின் முன் இருந்த செய்தியாளர்களிடம் அதை உறுதிப்படுத்தி விட்டுச் சென்றார்.  ஆனால் எனது உடல் நிலை தற்போது பயணத்திற்கு உகந்ததாக இல்லை. அதிலும் நேற்று காலையில் என்னைச் சந்தித்த குடும்ப மருத்துவர் கோபால் அவர்கள்தற்போது பயணம் எதையும் மேற்கொள்ள வேண்டாமென்று வலியுறுத்தினார்.  அதற்குப் பிறகுதான் திருச்சி மாவட்டக் கழகச் செயலாளர் நேருவை அழைத்து நிலைமையைக் கூறியதோடு,  ஆ.ராஜாவையும் பெரியார் திடலுக்கே அனுப்பிவீரமணியை நேரில் சந்தித்து சம்மதிக்கச் செய்துஎனக்குப் பதிலாக,கழகப் பொருளாளர் மு.க.ஸ்டாலினை அந்த நிகழ்ச்சியிலே கலந்துகொள்ளும்படி கூறியிருக்கிறேன். அதனால்நான் அந்த நிகழ்ச்சியிலே கலந்து கொள்ளாததைப்பொறுத்தருளுமாறு திராவிடர் கழகத் தோழர்களையும்திருச்சி பகுதியைச் சேர்ந்த தி.மு. கழக உடன்பிறப்புகளையும் கேட்டுக் கொள்கிறேன். அனைவரையும் தேர்தல் பிரச்சாரத்தின் போது நேரில் சந்திக்கின்றேன்.

கேள்வி:- அ.தி.மு.க. ஆட்சியில் தேசியநெடுஞ்சாலைகள் துறைகளைப் பற்றிய நடவடிக்கைகள் எவ்வாறு இருந்தன என்று விரிவாக "டைம்ஸ் ஆப் இந்தியா"  ஆங்கில இதழில் செய்தி வெளியாகியுள்ளதே?

கலைஞர் :-  அ.தி.மு.க. ஆட்சியில்முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின் பல்வேறு துறைகளின் பிற்போக்கான செயல்பாடுகள் பற்றி பக்கம் பக்கமாக நாளேடுகளிலும்வார இதழ்களிலும் வரும் செய்திகளைப் படித்திருப்பீர்கள். இதோ! "டைம்ஸ் ஆப் இந்தியா" நாளேட்டில்

14-3-2016 அன்று வெளிவந்த செய்தி!

“In the  past five years, only 30 km of roads were upgraded  to National Highways  in Tamil Nadu.  The National Highways Authority of India could have widened at least 10 times that in the past five years,  had the State Government supported them, NHAI officials say.”(தமிழ்நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில்   தேசிய நெடுஞ்சாலைகளில் 30 கிலோ மீட்டர் தூரம்மட்டுமே சீரமைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் ஒத்துழைப்பு முழுமையாகஇருந்திருக்குமேயானால்கடந்த ஐந்தாண்டுகளில் பத்து மடங்கு அளவுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தமிழக நெடுஞ்சாலைகளைச் சீரமைத்திருக்க முடியும்என்று தேசிய நெடுஞ் சாலைகள் துறைஆணையத்தின் அலுவலர்கள் தெரிவித்திருக்கிறார்கள்)

“We  could have added  at least 300 km  in these five years, if we had the support of the State Government, said a Senior Official from NHAI” (கடந்த ஐந்தாண்டுகளில் மாநில அரசாங்கத்தின் ஆதரவு இருந்திருக்குமானால்குறைந்தபட்சம் 300 கி.மீ. நீள அளவுக்குச் செப்பனிட்டுச் சேர்த்திருப்போம் என்று தேசிய நெடுஞ்சாலைகள் துறை ஆணையத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்)

2011ஆம் ஆண்டு அ.தி.மு.க. அரசுபொறுப்பேற்றவுடன் சட்டப் பேரவையில் வைத்த மானியக் கோரிக்கையில்தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறைதமிழகத்தில் 4,974 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள் இருப்பதாகத் தெரிவித்தது.  ஆனால் அண்மையில் வைத்த மானியக் கோரிக்கையில், 30 கி.மீ. கூடுதலாக அதாவது 5,004 கி.மீ. தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமே இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் அதிகாரிகள் கூறுகையில்சாலைகளை விரிவாக்கம் செய்யும்போதுநில ஆர்ஜிதம் செய்ய ஒத்துழைப்பு இல்லாமைகாவல் துறை பாதுகாப்புத் தராமை போன்றவையும்மாநிலத்தில் நிலவும் அபரிமிதமான லஞ்ச நடவடிக்கைகளும் சாலை அபிவிருத்தித் திட்டங்களைப் பாதித்துள்ளனஎன்றும் தெரிவித்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட ஒரு சில தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களைக் கூற வேண்டுமானால்சென்னை - திருப்பதி,திருச்சி - கரூர்,  திருச்சி - சிதம்பரம்,  விழுப்புரம் - பாண்டிச்சேரி - நாகப்பட்டினம்விக்ரவாண்டி - தஞ்சை - கன்யாகுமரி.   சென்னை - திருப்பதி சாலையில்ஆந்திர மாநிலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பணிகள் முடிந்த போதிலும்தமிழகத்தைச் சார்ந்த பகுதிகளில் பணிகள் நடைபெறாமல் உள்ளன என்றும் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் மிக முக்கியமான  சாலைகள் சீரமைப்பில்  அ.தி.மு.க. அரசு ஐந்தாண்டுகளில் காட்டிய ஆர்வத்திற்கு இது ஒரு சிறிய எடுத்துக்காட்டு!

கேள்வி :- மின்வாரியத்தில்  7 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு எப்படி வந்தது என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை  ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் நாகல்சாமி கூறியிருக்கிறாரே?

கலைஞர் :-  தமிழ்நாடு மின் வாரியம்சொந்த மின் நிலையங்கள்மத்திய மின்நிலையங்கள்தனியார் மின் நிலையங்கள் ஆகியவற்றிலிருந்து  குறுகிய கால மற்றும் நீண்ட கால மின் கொள்முதல்  மூலம் மின் தேவையைப் பூர்த்தி செய்கிறது. மின்வாரியம்மின் கொள்முதல் செய்ய முடிவு செய்தவுடன்,  "டெண்டர்" கோரவும்,விலை நிர்ணயம் செய்யவும்தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம்முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும்.   மின் சட்டம், 62வது பிரிவின்கீழ்  ஆணையம்மின்சாரம் வாங்க அனுமதி  வழங்கும்.  ஆனால்தமிழ்நாடு மின் வாரியம்,  ஆணையத்தின் அனுமதி பெறாமலேயே தன்னிச்சையாகசட்டத்திற்குப் புறம்பாக  2011முதலே அதிக விலைக்கு மின் கொள்முதல் செய்து வருகிறது.  2012இல் தனியார் நிறுவனங்களிடம்குறுகிய காலத்திற்கு,  1,200 மெகாவாட் மின் கொள்முதல் செய்யமின் வாரியம் முடிவு செய்தது. அப்போதுமத்திய மின் நிலையங்களில் ஒரு யூனிட் மின் உற்பத்திச் செலவு 3 ரூபாய்க்குக் கீழே இருந்தது.   மின்வாரிய டெண்டரில் பங்கேற்ற  தமிழக நிறுவனங்கள்ஒரு யூனிட், 5.15 ரூபாய்க்கு வழங்க விலைப் புள்ளி வழங்கின. இந்த விலை அதிகம் எனக் கருதிய மின் வாரியம்அந்த டெண்டரை ரத்து செய்துமறு டெண்டர் கோரியது.  அதில்பழைய விலையை விட ஒரு யூனிட்  5.50 ரூபாய் என்ற அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கியது. இவ்வாறு குறுகிய கால ஒப்பந்தத்தில்  மட்டும்,  அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதால்,  வாரியத்திற்கு  5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள காயன்குளத்தில் என்.டி.பி.சி. நிறுவனத்திற்குச் சொந்தமான எரி வாயு மின் நிலையம் உள்ளது.  தமிழ்நாடு மின் வாரியம்,  ஆணையத்தின் அனுமதி இல்லாமல், 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்காகஅந்த மின் நிலையத்தில் இருந்துஓராண்டுக்குமிக அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது. இதனால் 2ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது.

அ.தி.மு.க. ஆட்சியில் தற்போது மின்வாரியம்,  ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனில் இருப்பதற்கு,   தனியாரிடமிருந்து  அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதுதான் காரணம். அப்படி வாங்கியதுஅதிக அளவுக்குக் கொள்ளை அடிப்பதற்குத்தான்  என்று மின்சார வாரிய ஊழியர்களே கவலையோடு பேசிக் கொள்கிறார்கள்.

கேள்வி :- பதிவுத் துறையில் ஆயிரம் காலிப் பணி இடங்களுக்கு 
29-2-2016 அன்று நேர்காணல் என்றும், 4 லட்சம் ரூபாய் வீதம் வசூல் என்றும் செய்தி வந்ததே?

கலைஞர் :- தேர்தல் அறிவிப்பு வரவிருந்த நிலையில் இந்தச் செய்தி வந்தது. அறிவிப்பு வருவதற்குள் சுருட்டியது வரை இலாபம் என்ற போக்கில் ஒவ்வொரு துறையிலும் இது சுனாமி வேகத்தில்  நடைபெற்றது.  அவசர அவசரமாக தேர்வாணையக் கழகத்தில் பல மாதங்களாக காலியாக இருந்த உறுப்பினர் பணி இடங்கள் நிரப்பப்பட்டன. அது போலவே  பல்வேறு பல்கலைக் கழகங்களில் காலியாக இருந்த துணை வேந்தர் பணி இடங்கள் நிரப்பப்பட்டன.எல்லாம் பல கோடிக்கணக்கில் விலை போயின என்றும் பேசப்பட்டது. செய்தித் துறையில் 40ஏ.பி.ஆர்.ஓ. பதவிகளை உருவாக்கி,வேண்டியவர்களையெல்லாம் அதிலே நியமனம் செய்திருக்கிறார்கள்.  ஏன்சட்டப்பேரவையிலே கூட காலி இடங்கள் இருப்பதாகக் கூறி ஒரு பதவிக்கு ஐந்து இலட்சம் ரூபாய் வீதம் வசூல் செய்துகொண்டு நியமனம் செய்திருக்கிறார்களாம். அந்த வரிசையில் தான் பதிவுத் துறையில் நேர்காணல் என்ற செய்தியும் வந்தது. பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்களின் ஊழல் பட்டியலில் முதல் இடம் பிடித்தவருக்கு தலைமைப் பொறியாளர் பதவியாம்! "வழக்கத்தில் உள்ள நடைமுறைகளை மீறிஅவசர கதியில் நியமன நடவடிக்கைகள் எடுக்கப்படுவது பல சந்தேகங்களை எழுப்புவதாக பலரும் புகார் தெரிவித்து உள்ளனர்" என்று "தினமலர்" நாளேடே முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும்,இப்படிப்பட்ட கடைசி நேர நியமனங்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் உருவாகாதா?

கேள்வி :- மத்திய பா.ஜ.க. ஆட்சியில்,பொறுப்பில் இருப்பவர்களில் சிலர்,சிறுபான்மையின மக்கள் மீது தொடர்ந்து வெறுப்பைக் காட்டுகிறார்களே?

கலைஞர்:- அது மதச்சார்பற்ற ஓர் அரசுக்கு நல்லதல்ல! ஓய்வுபெற்ற நீதிபதிகள் பி.பி. சாவந்த்ராஜிந்தர் சச்சார்பி.ஜி. கோல்சே பாட்டீல்,  ஹாஸ்பெட்  சுரேஷ்ஐ.பி.எஸ். அதிகாரி ஜுலியோ ரிபெய்ரோமுன்னாள் ஐ.ஜி. எஸ்.எம். முஷ்ரிப்மூத்த வழக்கறிஞர்கள் இக்பால் சாக்ளா,ஜனக் துவாரகாதாஸ் மற்றும் பலர்கையொப்பமிட்டு அனுப்பியுள்ள கடிதத்திலேயே இதுபற்றி விரிவாகத் தெரிவித்திருக்கிறார்கள்.அந்தக் கடிதத்தில், "மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களில் சிலர் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக நாட்டு மக்களில் ஒரு பகுதியினருக்கு எதிராக,  குறிப்பாக முஸ்லீம் சிறுபான்மையினர்,தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக அச்சுறுத்தும் விதத்தில் வெறுப்பை உமிழும் வண்ணம் பேசி வருகிறார்கள்.   மத்திய இணை அமைச்சர் ஒருவர்முஸ்லீம்களை எச்சரிக்கிறோம் என்று மிரட்டியும்அவர்களை ராட்சதர்கள்என்றும்ராவணனின் வழித்தோன்றல்கள் என்றும் கூறி இறுதி யுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். இது அரசமைப்புச் சட்டத்தின்14, 19, 21, 25 பிரிவுகளுக்கு எதிரானதாகும். எனவே உச்ச நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அந்தச் சான்றோர் அனைவரும் தெரிவித்திருக்கிறார்கள்.  இத்துடன் முஸ்லீம் மக்களுக்கு எதிராக மத்திய அமைச்சர்கள் கத்தரியாவி.கே. சிங்சாத்வி நிரஞ்சன் ஜோதி,  கிரிராஜ் சிங்முக்தார் அப்பாஸ் நக்விநாடாளுமன்ற உறுப்பினர்கள் யோகி ஆதித்யநாத் சாக்சி மகாராஜ்அமித் ஷாமற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் ஆகியோரின் வெறுப்பை உமிழும் பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்களையும் உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். இது அலட்சியப் படுத்தக்கூடிய கருத்தல்லமிகுந்த கவலைக்குரியது;  பிரதமர் உரிய நடவடிக்கை எடுப்பாரென்று எதிர்பார்க்கிறேன்.

கேள்வி:- பல்வேறு புதிய தொழில்கள்அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கப் பட்டுள்ளன என்று ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் 193கோடியே 26 லட்சம் ரூபாய் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 180 கோடியே 41 லட்ச ரூபாய்க்கான திட்டங்களைத் தொடங்கி வைத்தும் உரையாற்றிய முதலமைச்சர் ஜெயலலிதா பேசியிருக்கிறாரே?

கலைஞர் :- பல்வேறு புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன என்று கூறும் ஜெயலலிதா,எந்தெந்தத் தொழில்கள் என்ற பட்டியலை தமிழக மக்கள் அறிந்து கொள்வதற்காகத் தருவாரா?

100 கோடி ரூபாய் மக்கள் வரிப் பணத்தைச் செலவழித்து நடத்திய முதலீட்டாளர் மாநாட்டில் 2 இலட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய்க்கான முதலீடுகளுக்குக் கையெழுத்திட்டுள்ளதாகச் சொன்னாரேஅதில் எத்தனை இலட்சம் ரூபாய் முதலீட்டுக்கான தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன என்ற சாதனைப்(!) பட்டியலைத் தமிழகத்துக்கு வழங்கிட முன்வருவாரா

பொதுத் தேர்தல் வருகிறது என்றதும் அவசரம் அவசரமாக 193 கோடி ரூபாய்க்கான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதாகச் சொல்லியிருக்கிறாரேஅந்தத் திட்டங்கள் எல்லாம் எப்போது தொடங்கிஎப்போது முடிக்கப்படும் என்று சொல்வாரா?  அன்றாடம் பல கோடி ரூபாய்க்கான திட்டங்களை எல்லாம் தொடங்கி வைப்பதாக அறிவித்தார்களே,அதற்காக முழுப் பக்க விளம்பரங்களை ஏடுகளுக்குக் கொடுத்தார்களேஉண்மையில் அந்தத் திட்டங்கள் எல்லாம் முடிவுற்று விட்டனவா?இன்னும் முடிவுறாமல்பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டங்கள் எல்லாம் முடிந்து விட்டதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றுவதற்காக தொடக்க விழாக்களை நடத்திக் கொண்டார்களா?  இல்லைஇந்தத் திட்டங்கள் எல்லாம் ஏற்கனவே பணி முடிவுற்ற திட்டங்கள் என்றால்இத்தனை நாட்களாக இந்தத் திட்டங்களையெல்லாம் தொடங்கி வைக்காமல் இருந்ததற்கு என்ன காரணம்?

மற்ற தொகுதிகளுக்கான திட்டங்களையெல்லாம் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்துக் கொண்டிருந்த முதலமைச்சர் ஜெயலலிதாதன்னுடைய சொந்தத் தொகுதியில் நடைபெறும் விழாவுக்கு மட்டும் நேரடியாகச் செல்லக் காரணம் என்னஇவர் அந்த ஒரு தொகுதிக்கு மட்டும்தான் முதல்வரா?அல்லது தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தொகுதிகளுக்கும் முதல்வராதன்னுடைய தொகுதிமற்றவர்கள் தொகுதிஆளுங்கட்சித் தொகுதிஎதிர்க்கட்சிகளின் தொகுதி என்ற பாகுபாடுகளையெல்லாம் கடந்து நடந்து கொள்ள வேண்டியவர் அல்லவா முதலமைச்சர்அந்த இலக்கணத்தையெல்லாம் ஜெயலலிதா புறக்கணித்து விட்டாரே?