வேண்டாத வம்பை விலை கொடுத்து வாங்கும் மத்திய அரசு! தலைவர் கலைஞர் பதில்கள்

வேண்டாத வம்பை விலை கொடுத்து வாங்கும் மத்திய அரசு! தலைவர் கலைஞர் பதில்கள்

கேள்வி :- இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு  இறுதித் தேர்வில்  வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்தது என்றும்,  பாடப் புத்தகங்களில் வராத கேள்விகள் இடம் பெற்றதாகவும்,  இளம் மாணவர்கள் பெரிதும் அவதிக்கு ஆளானார்கள் என்றும் ஏடுகளில் எல்லாம் செய்தி வந்திருக்கிறதே?

கலைஞர் :- உண்மையில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டிய பிரச்சினை இது.   தற்போது ப்ளஸ் 2 பொதுத் தேர்வில் மொழிப் பாடங்கள் முடிந்து,  உயர் கல்வியை நிர்ணயிக்கும்  முக்கியப் பாடத் தேர்வுகள்  நடந்து வருகின்றன.  இந்த ஆண்டு, இதுவரை நடைபெற்ற தேர்வுகளில்  வேதியியல், கணிதம் ஆகிய கேள்வித்தாள் மிகக் கடினமாக இருந்ததால்,  மாணவர்கள் மாத்திரமல்ல,  அவர்களின் எதிர்காலத்தை எண்ணிக் கவலைப் பட்டுக் கொண்டிருக்கின்ற  அவர்களின் பெற்றோர்களும்  மிகுந்த வேதனைக்கு ஆட்பட்டிருக்கிறார் கள்.   ப்ளஸ்  2 தேர்வெழுதிய  இரண்டு மாணவிகள்  மன அழுத் தத்தால்  தற்கொலை செய்துகொண்டு மாண்டிருக்கிறார்கள்.  வேதியியல் மற்றும் கணிதத் தில் முழு மதிப்பெண் பெறுவோர் எண்ணிக்கை பெரிய அளவில் குறையும் என்றும் செய்திகள் வருகின்றன. சி.பி.எஸ்.ஈ. மாணவர்களுக்கும்  கணிதத் தேர்வு  இந்த முறை மிகவும் கடினமாக இருந்துள்ளது.  மாணவர்களின் இந்தப் பிரச்சினை  நாடாளுமன்றத்தில் எதிரொலித்ததால்,  அங்கே சி.பி.எஸ்.இ. தரப்பில் நிபுணர் குழு அமைக்கப்பட் டுள்ளதாம். அந்தக் குழு, பெற்றோர், மாணவர்கள், கல்வியாளர்களின் கருத்துகளைக் கேட்டு, அதற் கேற்ப விடைத்தாள் திருத்தத்தில் முக்கிய முடிவு கள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அதைப் போலவே தமிழகத்திலும்  ப்ளஸ் 2 தேர்வில் வேதியியல், கணக்கு வினாத்தாள் கடுமையாக இருந்துள்ள சூழ்நிலையில், அதற்கு நல்ல தீர்வு காண வேண்டுமென்று மாணவர்களும், பெற்றோர் களும் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். எனவே  தமிழ கத்திலே உள்ள பள்ளிக் கல்வித் துறை  இந்தப் பிரச் சினை குறித்து உடனடியாக ஆலோசித்து, மாண வர்கள் ஆறுதல் அடையும் வண்ணம் உரிய முடி வினை எடுத்து அறிவிக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.

 


கேள்வி :-  சிறு சேமிப்பு போன்ற திட்டங் களில் முதலீடு செய்பவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டி விகிதத்தை மத்திய அரசு குறைத் திருப்பதைப் பற்றி?

கலைஞர் :- 19-3-2016 தேதிய "டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில நாளேட்டில், "Big dent in Small Savings as Govt. slashes PPF. NSC Rates”   என்ற தலைப்பில்  "The Government on Friday announced  a steep cut  in interest rates  on small savings schemes  such as Public Provident Fund (PPF), National Savings Certificate (NSC) and Kisan Vikas Patras - which will fetch up to  90  basis points lower returns  during the  April-June quarter” என்று தொடங்கி, முதல் பக்கத்திலும் 20ஆம் பக்கத்திலும் செய்தி வெளியிட்டுள்ளது.  பப்ளிக் பிராவிடண்ட் பண்ட் எனப்படும்  பொது நிவாரண நிதிக்கு இதுவரை வட்டி  8.7 சதவிகிதம் என்று இருந்தது,  தற்போது 8.1 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்திற்கு இதுவரை 9.3 சதவிகிதம் என்று வழங்கப்பட்டு வந்த வட்டி விகிதம் தற்போது 8.6  சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. `சுகன்ய சம்ருதி திட்டம்’ எனப்படும்  `தங்க மகள்’ திட்டத் திற்கு இதுவரை  9.2 சதவிகிதம் என்றிருந்த வட்டி விகிதம் 8.6 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. `கிசான் விகாஸ் பத்திரம்’ எனப்படும் விவசாயி களுக்கான சேமிப்புத் திட்டத்திற்கு இதுவரை 8.7 சதவிகிதமாக இருந்துவந்த வட்டிவிகிதம்  7.8 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. தேசிய சிறு சேமிப்புத் திட்டத்தில் (ஐந்தாண்டுகள்) செய்யப்படும் முதலீடுகளுக்கு இதுவரை  8.5 சதவிகிதமாக இருந்த வட்டி விகிதம்  8.1 சதவிகிதமாகக் குறைக்கப்பட் டுள்ளது. இதைப் போலவே அஞ்சல் நிலையங்களில் செய்யப்படும்  வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங் களும் குறைக்கப்பட்டுள்ளன. இந்தச் சேமிப்புத் திட்டங்கள் அனைத்தும்  நீண்ட நெடுங்காலமாக நடைமுறையில் இருந்து வந்தவையாகும். இந்தச் சேமிப்புத் திட்டங்களை அறிமுகம் செய்த தன் நோக்கமே;  ஏழையெளிய, நடுத்தர வர்க்கத் தைச் சார்ந்த மக்கள் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான். இந்தச் சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியைக் குறைப்பதால்,  இத்த னைக் காலமும்  சேமிக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொண்டிருந்த ஏழை யெளிய நடுத்தர வர்க்கத்தி னரின் ஆர்வம் குறையும். அதனால் இழப்பு அவர் களுக்கு மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் பொருளா தாரமான நமது இந்திய நாட்டிற்கும் பெரும் இழப்பு ஏற்படும்.

 


கேள்வி :-  அ.தி.மு.க. ஆட்சியில்  கரும்பு உற்பத்தி  உயர்ந்திருக்கிறதா?

கலைஞர் :- 2011ஆம் ஆண்டு  அ.தி.மு.க.  சார்பில் வைக்கப்பட்ட தேர்தல் அறிக்கையில், "கரும்பு உற்பத்தி  475.5 லட்சம் மெட்ரிக் டன்னில் இருந்து  1000 இலட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த் தப்படும்" என்று அறிவித்தார்கள். எவ்வளவு உயர்த்தி இருக்கிறார்கள் தெரியுமா?  2012-13ஆம் ஆண்டு, அ.தி.மு.க. ஆட்சியில், தமிழ்நாட்டில் கரும்பு உற்பத்தி 340 இலட்சம் மெட்ரிக் டன் களாகும். 2013-14ஆம் ஆண்டு, அ.தி.மு.க. ஆட்சியில்,  தமிழ்நாட்டில் கரும்பு உற்பத்தி அதைவிட அதிகமாக உயர்ந்து (?) 324 இலட்சம் மெட்ரிக் டன்களாகும்.  எப்படி கரும்பு உற்பத்தி? கரும்பு உற்பத்திதான் அதிகரிக்க வில்லை;  கரும்புக்குத் தரவேண்டிய நிலுவையை யாவது தந்தார்களா? ஆனால் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் மட்டும், "ஆலை அதிபர்கள் பணப் பட்டுவாடாவை நிலுவையில் வைக்க அனுமதிக்கப் படமாட்டாது"" என்று கூறி, கரும்பு  விவசாயிகளை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார் கள்!   ஆட்சிக்கு வந்ததும்  அ.தி.மு.க.வினர் அனைத்தையும் வசதியாக மறந்து விட்டார்கள்.

 


கேள்வி :- நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயரை,  "என்.எல்.சி. இந்தியா லிமிடெட்"  என்று மாற்றுவதற்கு  மத்திய அரசு  முடிவு செய்திருப்பது பற்றி?

கலைஞர் :-  மத்திய பா.ஜ.க. அரசின் தேவை யில்லாத வேலைகளில் இதுவும் ஒன்று.   நிறைவேற்ற வேண்டிய ஆக்கப்பூர்வமான  பணிகள் எவ்வளவோ இருக்க, வீண் வம்பினை விலைக்கு வாங்குகின்ற வேலையாகத்தான் இதுவும் இருக்க முடியும்.   எத்தனையோ ஆண்டுக் காலமாக  "நெய்வேலி"  என்ற அடைமொழியோடு  அழைக்கப்பட்டு வந்த இந்த நிறுவனத்தின் அழகான தமிழ்ப் பெயரை மாற்று வதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.   இந்தப் பெயரை மாற்றுவதற்கு, அங்கே பணி யாற்றும் தொழிலாளர்களின் ஒப்புதல் நிச்சயமாகக் கிடைக்காது என்றே நான் நம்புகிறேன்.   கல்லக்குடி என்ற தமிழ்ப் பெயரை, "டால்மியாபுரம்" என்று பெயர் மாற்ற முயற்சித்ததைப்  போன்ற பிரச்சினைதான் இதுவும்!  எனவே  மத்திய அரசு, குறிப்பாக பிரதமர்,  தேவையில்லாத இந்த முயற்சியில் ஈடுபட வேண்டா மென்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.    

 


கேள்வி :- வரும் பொதுத் தேர்தலை யொட்டி, பண நடமாட்டத்தைக் கவனிக்கிறோம் என்ற பெயரால்,  பறக்கும் படையினர்,  வணிகத்துக்காகப் பணம் எடுத்துச் செல்கின்ற வியாபாரி களையெல்லாம் சிரமப் படுத்துவதாக ஒரு செய்தி வந்துள்ளதே?

கலைஞர் :-  இந்தப் பிரச்சினை குறித்து  தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா,  தமிழகத் தலைமைத் தேர்தல் அதி காரியை நேரில் சந்தித்து முறையிட்டுக் கொண்டிருக் கிறார்.   பறக்கும் படையினர்,  சோதனையின்போது,  சிறிய, நடுத்தர வணிகர்கள் கொள்முதலுக்குக்  கொண்டு செல்லும்  பணம்,  பொதுமக்கள் சுபகாரிய நிகழ்ச்சிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைக்காகக் கொண்டு செல்லும் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்கிறார்களாம்.   உரிய ஆவணங்களைக் காட்டிய பிறகும், பணத்தைத் திருப்பிக் கொடுக்க அலைய விடுகிறார்களாம்.   தேர்தலுக்காகப்  பணம் எடுத்துச் செல்பவர்கள் காவல் துறை வண்டிகளிலும்,  ஆம்பு லன்ஸ் வண்டிகளிலும் ஏராளமான பணத்தை எடுத்துச் செல்வதை  இந்தப் பறக்கும் படையினர் கண்டு கொள்வது இல்லையாம்.   எனவே   தேர்தல் அதிகாரி கள்  இந்தப் பிரச்சினையில்  நியாய மாகவும், நேர்மையாகவும்  நடந்து கொள்ள வேண்டுமென்று அனைத் துத் தரப்பினரும்  எதிர்பார்க்கிறார்கள்.  

 

 
கேள்வி :-  உண்மையில்  அ.தி.மு.க. ஆட்சியில்  தொழில் வளர்ந்ததா?

கலைஞர் :-  ஒரு சிறிய உதாரணம் கூறுகிறேன், கேளுங்கள்.  ஒவ்வொரு ஆண்டும்,  தொழில் வளர்ச் சிக்காக,  "சிட்கோ"  நிறுவனத்தின் சார்பில்,  "இரும்பு, மற்றும் எஃகு மூலப் பொருள்கள்  நேரடி விற்பனையின் மூலமாக வழங்கப்படும்.   எவ்வளவு விற்பனை என்று பார்த்தாலே இந்த ஆட்சியில் தொழில் வளர்ந்ததா என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.  2011-2012ஆம் ஆண்டில் "சிட்கோ"  விற்பனை செய்த இரும்பு மற்றும் எஃகு மூலப் பொருள்களின் அளவு  4,426 மெட்ரிக் டன்களாகும்.   2012-2013ஆம் ஆண்டு இது  3220 மெட்ரிக் டன்களாகக் குறைந்து,  2013-2014ஆம் ஆண்டு  1804 மெட்ரிக் டன்களாகக் குறைந்துள்ளது.   இவ்வாறு இரும்பு மற்றும் எஃகு மூலப் பொருள்கள் விற்பனை குறைந்து வந்திருப்பது எதைக் காட்டுகிறது என்றால், தமிழகத்திலே அரசுக்குத் தொழில் வளர்ச்சியில் அக்கறை இல்லை என்பதை யும், தொழில் தொடங்குவதில் தொழில் முனைவோ ருக்கு அரசின் நெருக்கடிகளால் ஆர்வம்  இல்லை என்பதையும்தான் வெளிப்படுத்துகின்றது. கழுதை தேய்ந்து கட்டெறும்பாக ஆன கதைதான்! இந்தப் புள்ளி விவரம் நானாகத் தருவது அல்ல.  தமிழக அரசின், புள்ளியியல் துறை கடந்த மாதம் வெளியிட்ட புத்தகத்தில் உள்ள விவரம் இது. பொதுவாக இந்தப் புத்தகம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்திலேயே  கழக ஆட்சியிலே வழங்கப் பட்டு விடும்.  ஆனால் இந்த அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த ஆண்டுக்குரிய புத்தகம் (2015), இந்த ஆண்டு (2016) பெப்ரவரியில்தான் வெளிவந்திருக்கிறது.   ஆனால் இன்று வரை இது விற்பனைக்கு வரவில்லை.

 


கேள்வி :- செம்மொழிகளாக அறிவிக்கப் பட்டுள்ள  தமிழ், கன்னடம், மலையாளம், ஒரியா ஆகியவற்றுக்கு  மத்தியப் பல்கலைக் கழகங்களில் ஆய்வு இருக்கை அமைக்க  பல்கலைக் கழக  மானியக் குழு  (யு.ஜி.சி.)  முடிவு செய்துள்ள தாமே?

கலைஞர் :- குறிப்பிட்ட தகுதிகள் பெற்றுள்ள மொழிகள், செம்மொழிப் பட்டியலில்  இணைக்கப்படு மென்று  2004ஆம்  ஆண்டு மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகம் அறிவித்தது.   இதன்படி 2004ஆம் ஆண்டே தமிழ் செம்மொழியாக அறிவிக் கப்பட்டது.  அதன் தொடர்ச்சியாக,  2005இல் சமஸ் கிருதம்,  2008ஆம் ஆண்டு கன்னடம்,  தெலுங்கு,  2013ஆம் ஆண்டு மலையாளம்,  2014ஆம் ஆண்டு  ஒரியா ஆகியவை  செம்மொழிப் பட்டியலில் சேர்க் கப்பட்டன.  இந்த மொழிகளுக்குத்தான்  மத்தியப் பல்கலைக் கழகங்களில் ஆய்வு இருக்கை அமைக்க  தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.  தமிழுக்கான இந்த இருக்கை  திருவாரூரில் உள்ள மத்தியப் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட உள்ளது.  ஒவ்வொரு இருக்கையும்  ஆண்டுக்கு ஒன்றரைக் கோடி ரூபாய் செலவில் அமையும்.  இருக்கைக்கான நிதியை ஐந்தாண்டுகளுக்கு  தொடர்ந்து யு.ஜி.சி. வழங்கும்.  தாமதமாகி விட்டாலும், இந்த முடிவு வரவேற்கத்தக்கதே!

 


கேள்வி :- காவல் துறையில் நிரப்பப்படா மல்  ஏராளமான பணி இடங்கள் காலியாக உள்ளதாகக் கூறப்படுகிறதே?

கலைஞர் :- இது தொடர்பாக திருச்சி மாவட் டத்தைச் சேர்ந்த தங்கவேலு என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில்,  "தமிழகக் காவல் துறையில் மொத்தம் 19 ஆயிரத்து 157 காலிப் பணியிடங்கள்  உள்ளன.  இந்த விவரத்தை  தகவல் அறியும்  உரிமைச் சட்டம் மூலம் கேட்டுப் பெற்றுள்ளேன்.  போதுமான எண் ணிக்கையில் போலீசாரை நியமிக்க தமிழக அரசு இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க வில்லை. காவல் துறையில் உள்ள காலிப் பணி யிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்"" என்று கோரியிருக்கிறார்.  இதனை விசாரித்த உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் அவர்களும்,  நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் அவர்களும், ``சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தவுடன் காவல் துறையில் காலியாக உள்ள இந்த 19,157 பணி இடங்களை நிரப்ப வேண்டும்’’ என்று தமிழக அரசுக்கு  உத்தரவிட்டிருக்கிறார்கள்.   எந்தத் துறையில் எத்தனைக் காலிப் பணியிடங்கள் இருந்தால் நமக்கென்ன;  காலியாக இருந்த தமது பைகளை நிரப்பிக் கொண்டால் போதும் என்ற கவலையில் அல்லவா  ஆட்சியாளர்கள்  காலத் தைக் கழித்து விட்டார்கள்!

 


கேள்வி :-  குவைத்தில்  தவிக்கும்  11 மீனவர் களை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளதே?

கலைஞர் :-  இந்தப் பிரச்சினை பற்றி  இரண்டு நாட்களுக்கு முன்புதான் ஏடுகளில் செய்தி விரிவாக  வந்துள்ளது.  உடனடியாக தமிழக முதல மைச்சர் ஜெயலலிதா வழக்கம் போல,  பிரதமருக் குக் கடிதம் எழுதி விட்டார்.  அவ்வளவுதான்.  அரசின் பணி முடிந்து விட்டது. இலங்கையில் ஆனாலும், குவைத்தில் ஆனாலும்  பிழைப்புக்காகச் செல்லும் மீனவர்கள்  தொடர்ந்து இதுபோன்ற ஆபத்துகளில் சிக்கி அல்லல்படுகிறார்களே,  அவர் களுக்கு நிரந்தரமாகப் பிழைக்க  வழி செய்வது ஓர் அரசின் கடமை அல்லவா? நானும் திரும்பத் திரும்ப  இதைச் சொல்லி வருகிறேன்.  ஆனால் தமிழக அரசோ கேளாக்காதினராய்,  ஒவ்வொரு முறையும்  பிரதமருக்கு ஒரு கடிதத்தை எழுதி விட்டு பிறகு அதைப் பற்றி கவலைப்படுவதில்லை. 

  குவைத் போலீசாரால்  11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.     இவர்கள் கடந்த ஆண்டு 2015 ஜூலை மாதத்தில்  மீன்பிடித் தொழிலுக்காகச் சென்றவர்கள்.  இவர்களை அழைத்துச் சென்ற முதலாளிகள் உரிய ஊதியம் தராத நிலையில்  தாயகம் திரும்ப முடியாமல் அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய  பாஸ் போர்ட்களை முதலாளிகள் வாங்கி வைத்துக் கொண்டு தரவும் மறுக்கிறார்களாம்.   இந்தப் பிரச்சினை பற்றி உடனடியாக அந்த நாட்டு  அரசுடன்  உரிய முறையில்  பேசினாலே, அந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டு தமிழகம் திரும்ப இயலும். அ.தி.மு.க. ஆட்சியிலே இருப்பவர்கள் அதற்கான முயற்சிகளிலே ஈடுபடாவிட்டாலும், மத்திய அரசு  உரிய முறையில் குவைத் அரசோடு பேசி, 11 மீனவர்களும் உடனடியாகத் தாயகம் திரும்பிட வழிவகை காண வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.