உத்தரகாண்ட் முடிவு உகந்தது தானா? தலைவர் கலைஞர் அறிக்கை

உத்தரகாண்ட் முடிவு உகந்தது தானா? தலைவர் கலைஞர் அறிக்கை

மத்திய அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் உத்தரகாண்ட் மாநிலத்தில் 28-3-2016 அன்று முதல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் செய்யப் பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி தான் அந்த மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில், 32 தொகுதிகளில் காங்கிரசும், 31 தொகுதிகளில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றன. 3 சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள், மற்றும் இதரக் கட்சிகளைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவோடு காங்கிரஸ் கட்சி அந்த மாநிலத்தில் ஆட்சியை அமைத்தது.காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் விஜய் பகுகுணா முதல்வராகப் பொறுப்பேற்றார். உட்கட்சிக் குழப்பம் காரணமாக பகுகுணா பதவி விலகி 2014 பிப்ரவரி 1ஆம் தேதி ஹரீஷ் ராவத் முதல்வராகப் பதவியேற்றார். அதன்பின் 2014ஆம் ஆண்டு ஜுலையில் நடந்த இடைத் தேர்தலில் 3 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் பலம் 35 ஆக உயர்ந்தது. ஆனாலும் விஜய் பகுகுணாவுக்கும், ஹரீஷ் ராவத்துக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.கடந்த 18ஆம் தேதி விஜய் பகுகுணா தலைமையில் 9 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி, நிதி நிலை அறிக்கை மீது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று சட்டப் பேரவையில் வலியுறுத்தினர். இதை நிராகரித்த பேரவைத் தலைவர், குரல் வாக்கெடுப்பு மூலம் நிதி நிலை அறிக்கை நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார். 9 அதிருப்தி எம்.எல்.ஏக்கள் ஆளுநரைச் சந்தித்து, ஹரீஷ் ராவத் ஆட்சியைக் கலைக்கக் கோரி மனு அளித்தனர். ஆளுநர் மார்ச் 28ஆம் தேதியான இன்று சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு அரசிடம் கேட்டுக் கொண்டார்.இந்த நிலையில் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி 9 எம்.எல்.ஏக்களையும் நீக்குவது தொடர்பாக பதில் அளிக்குமாறு அவர்களுக்கு சபாநாயகர் கோவிந்த் சிங், நோட்டீஸ் அனுப்பினார். அவர்கள் 9 பேரும் நேற்று பிற்பகல் முதல் தகுதி நீக்கம் செய்யப் படுவதாகவும் பேரவைத் தலைவரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலச் சட்டப் பேரவையில் மொத்த இடம் 61 ஆக குறையும். ஒரு நியமன உறுப்பினர் உட்பட காங்கிரசுக்கு 27 எம்.எல்.ஏ.க்கள் உள்ள நிலையில், முற்போக்கு ஜன நாயக முன்னணியைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவு அளிக்க முன் வந்தனர். இதன் காரணமாக பேரவையில் காங்கிரஸ் எளிதாக பெரும் பான்மை பெற்றுவிடும் என்று கூறப்பட்டது.


இந்த நிலையில் தான் அசாமில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 26ஆம் தேதி இரவு டெல்லி திரும்பி, அன்றிரவே மத்திய அமைச்சரவை கூடி, 356வது சட்டப் பிரிவின்கீழ் உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசைக் கலைக்கப் பரிந்துரை செய்து, அந்தப் பரிந்துரையும் ஏற்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

பேரவையில் பெரும்பான்மையை 28ஆம் தேதியன்று நிரூபிக்கும்படி அரசுக்கு ஆளுநர் உத்தரவிட்டிருந்த நிலையில் ஒரே ஒரு நாள் பொறுத்திருந்து பார்க்கும் மனமின்றி, அவசரம் அவசரமாக 356வது சட்டப் பிரிவில் அந்த அரசைக் கலைக்க வேண்டிய அவசியம் என்ன? எஸ்.ஆர். பொம்மை வழக்கில் உச்ச நீதி மன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு வழங்கியிருக்கும் தீர்ப்பைப் பற்றிக் கவலைப்படாமல், ஜனநாயக விரோதமான இந்த முடிவை எடுக்க வேண்டியது தேவை தானா? பல்வேறு பிரச்சினைகளுக்கிடையே உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைப் பிரகடனப்படுத்துவது அரசியல் சட்ட ரீதியாக வேறு பல விளைவுகளை ஏற்படுத்தாதா? 356-வது பிரிவு நீக்கப்பட வேண்டும் என்று தி.மு. கழகம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சட்ட நிபுணர்களும் நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வரும் நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தைப் பற்றி அவசரமாக மேற்கொள்ளப்பட்டுள்ள முடிவு சரியானது தானா என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சிந்தித்துப் பார்ப்பார் என்பதற்காகவே தி.மு. கழகத்தின் சார்பில் இந்தக் கருத்தினைத் தெரிவிக்கிறேன்!