ஆட்சி மாற்றமே, விவசாயிகளின் அல்லல் தீர நல்ல வழி! தலைவர் கலைஞர் அறிக்கை

ஆட்சி மாற்றமே, விவசாயிகளின் அல்லல் தீர நல்ல வழி! தலைவர் கலைஞர் அறிக்கை

அ.தி.மு.க. ஆட்சியில் கடந்த ஐந்தாண்டு காலமாக விவசாயிகள் அனுபவித்து வரும் அல்லல்களுக்கும், அலைக்கழிப்புகளுக்கும் அளவே இல்லை. விவசாயிகள் வாங்கியிருந்த 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவு விவசாயக் கடன்கள் அனைத்தும் 2006ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி தமிழகத்தில் பொறுப்பேற்ற அன்றே தள்ளுபடி செய்ய ஆணையிடப்பட்டு, அதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 22 இலட்சத்து 40 ஆயிரத்து 739 விவசாயக் குடும்பங்கள் பயனடைந்து நிம்மதி பெற்றன.

விவசாயிகளுக்கான பயிர்க் கடன் வட்டி அ.தி.மு.க. ஆட்சியில் 2005-2006 இல் 9 சதவிகிதம் என்றிருந்ததை, விவசாயிகளின் நலன் கருதி 2006-2007இல் தி.மு.கழக ஆட்சியில் 7 சதவிகிதமாகக் குறைத்து, 6,31,283 பேருக்கு 1,,250 கோடியே 62 இலட்சம் ரூபாயும் - 2007-2008இல் 5 சதவிகிதமாகக் குறைத்து, 6,48,397 பேருக்கு 1,393 கோடியே 97 இலட்சம் ரூபாயும் - 2008-2009இல் 4 சதவிகிதமாகக் குறைத்து 6,91,192 பேருக்கு 1,570 கோடியே 99 இலட்ச ரூபாயும் - 2009-2010இல் பயிர்க்கடன் வட்டியையே ரத்து செய்து 8,98,540 பேருக்கு 2,169 கோடியே 48 இலட்ச ரூபாயும் - 2010-2011இல் 8,01,960 பேருக்கு 2,453 கோடி ரூபாயும் என 2006ஆம் ஆண்டுக்குப் பின் தி.மு. கழக ஆட்சியில் வட்டியைப் படிப்படியாகக் குறைத்தும், வட்டியே இல்லாமலும் 36 இலட்சத்து 71 ஆயிரத்து 372 விவசாயிகளுக்கு 8,838 கோடியே 29 இலட்ச ரூபாய் பயிர்க் கடன்கள் வழங்கப்பட்டதை தமிழ்நாட்டு விவசாயிகள் மறக்க வில்லை; இன்றைக்கும் நன்றிப் பெருக்கோடு நினைவு கூர்கிறார்கள்!இவை மட்டும் தானா? தி.மு. கழக ஆட்சியில் விவசாயிகளுக்குச் செய்த எண்ணற்ற சலுகைகளை இன்னும் நான் கூறிக் கொண்டே போகலாம். ஆனால் அனைத்தையும் பெற்றுக் கொண்ட விவசாயிகள், ஜெயலலிதாவின் பழைய வரலாற்றை மறந்து, 2011ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் விவசாயிகளுக்கு மேலும் சலுகைகளை வழங்குவார் என்று கற்பனை செய்து கொண்டு வாக்களித்தனர். ஆனால் அதன் கொடுமையான விளைவுகளைக் கடந்த ஐந்தாண்டு காலமாக அனுபவித்துக் கொண்டு வருகிறார்கள்.கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த பாலன் என்ற விவசாயி டிராக்டர் கடன் தவணை பாக்கி வைத்தார் என்பதற்காக காவல் துறையினராலும், குண்டர் களாலும் கடுமையாகத் தாக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அரியலுhர் அருகே அழகர் என்ற விவசாயி கடனைக் கட்ட முடியாத நிலையில் பூச்சி மருந்தை வாங்கிக் குடித்து விட்டு இறந்தார் என்ற செய்தி வந்ததும் 13-3-2016 அன்று நான் விடுத்த அறிக்கையில், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும், விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விவசாயிகளைப் போற்றிப் பாதுகாக்கும் ஆட்சி மலரும் என்றும் தெரிவித்திருந்தேன். அதற்குப் பிறகும் உசிலம்பட்டி அருகே அ.தி.மு.க.வைச் சேர்ந்த பால்ராஜ் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தஞ்சை மாவட்டத்திலேயே கும்பகோணத்தை அடுத்த கொத்தங்குடி கிராமத்தில் தனசேகர் என்ற மற்றொரு விவசாயி தற்கொலை செய்து கொண்டு இறந்திருக்கிறார்.நேற்றையதினம் (27-3-2016) வந்துள்ள செய்திப்படி, விவசாயக் கடன் வசூல் மற்றும் ஜப்தி நடவடிக்கையை நிறுத்தி வைக்க வலியுறுத்தி, விவசாயிகள் கடலிலே இறங்கிப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். விவசாயிகள் பெற்றுள்ள வங்கிக் கடன்களை ரத்து செய்ய வேண்டும்; டிராக்டர் உள்ளிட்ட வாகனங் களையும், விவசாய இயந்திரங்களையும் ஜப்தி செய்வதை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயச் சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் சென்னையிலே இந்தப் போராட்டம் நடைபெற்று புகைப்படத்தோடு அந்தச் செய்தி நாளேடுகளில் வந்துள்ளது. பல விவசாய சங்கங்களைச் சேர்ந்த 150 விவசாயிகள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சென்னை வந்து பங்கேற்ற தகவல் காவல் துறையினருக்குத் தெரிந்து, போராட்டம் நடத்திய விவசாயிகளைக் கைது செய்து, மாலை வரை அடைத்து வைத்துப் பின்னர் விடுவித்திருக்கிறார்கள்.விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் தலைவர் திரு. தெய்வ சிகாமணி அவர்கள் கூறும்போது, “அரசு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், விவசாயிகள் பெற்ற கடனை ஈவு இரக்கமின்றி வசூல் செய்கின்றன. தஞ்சாவூர் விவசாயி பாலன் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு முதலமைச்சர் வருத்தம் தெரிவிக்கவில்லை. விவசாயி அழகர் தற்கொலைக்கு அனுதாபம் கூடத் தெரிவிக்கவில்லை. நிதி உதவியும் செய்யவில்லை. கடந்த 2011 சட்டசபைத் தேர்தல் அறிக்கையில், “விவசாயிகள் வருமானம் மூன்று மடங்காக உயர்த்தப்படும்” என்று அ.தி.மு.க. கூறியது. ஆனால், விவசாயி களின் கடன் தான் மூன்று மடங்கு அதிகமாகியுள்ளது. ஐந்தாண்டு அ.தி.மு.க. ஆட்சியில் 2,423 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஏப்ரல் 5ஆம் தேதி மாநில அளவில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்” என்று மனவேதனையோடு திரு. தெய்வசிகாமணி தெரிவித்திருக்கிறார்.


தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் டெல்லிக்கு தமிழக விவசாயிகள் சென்று அங்கும் போராட்டம் நடத்தி யிருக்கிறார்கள். விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் திரு. பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடைபெற்ற அந்தப் போராட்டத்தில் மாநிலங்களவை தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினர் கே.பி. ராமலிங்கம், மற்றும் பல கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.விவசாயிகளின் போராட்டம் பற்றியும், தாக்கப்பட்டது பற்றியும், தற்கொலை பற்றியும் தொடர்ந்து செய்திகள் வந்த போதிலும், அதைப்பற்றியெல்லாம் அக்கறை காட்ட தமிழகத்திலே அரசு என்று ஒன்றிருக்கிறதா? முதலமைச்சர் என்று ஒருவர் இருக்கிறாரா? அந்தத் துறை அமைச்சர் என்ன தான் செய்கிறார்? என்ற கேள்விகளுக்கு யாருக்கும் பதில் தான் கிடைக்கவில்லை. தற்போதைய நிலையில் விவசாயிகளின் நியாயமான இந்தப் போராட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு எப்போதும் போல் உண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் விவசாயிகளும் இந்த ஆட்சியில் எத்தகைய போராட்டம் நடத்தினாலும், கல்லில் இருந்து நார் உரிக்க முடியாது என்பதைப் புரிந்து கொண்டு, உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் பள்ளம் மட்டுமே கொண்டுள்ள இந்த ஆட்சியினரை மூட்டை கட்டி வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அவர்களுக்கு ஏற்கனவே பல வகைகளிலும் உதவிய, மீண்டும் எல்லா வகைகளிலும் உதவிடத் தயாராக இருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை, அனைவரும் ஒருங்கிணைந்து தமிழகத்தில் மறுபடியும் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன். அப்போது தான், விவசாயிகளின் வாழ்வு விடிந்து, வேதனைகளும் முடியும்