இந்திய மீனவர்களுக்கு சிறை; இலங்கை மீனவர்களுக்கு உதவியா? தலைவர் கலைஞர் அறிக்கை

இந்திய மீனவர்களுக்கு சிறை; இலங்கை மீனவர்களுக்கு உதவியா? தலைவர் கலைஞர் அறிக்கை

3-4-2016 அன்று "கொழும்பு கெஜட்" ஆவணத்திலும், தமிழகத்தில் வெளி வரும் ஒரு சில நாளேடுகளிலும் "India to give Mullaitivu fishermen boats and fishing equipment" என்ற தலைப்பில் வந்துள்ள செய்தியில், The Governments of India and Sri Lanka will be signing a Memorandum of Understanding (MoU) to supply 150 boats and fishing equipment to fishermen of Mullaitivu - அதாவது இலங்கை முல்லைத் தீவில் உள்ள இலங்கை மீனவர்களுக்காக 150 படகுகளையும், மீன்பிடி கருவிகளையும் இந்தியா வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்திய அரசும் இலங்கை அரசும் கையெழுத்திடவிருக்கின்றன என்ற செய்தி வந்துள்ளது.
 
 
மன்னார் பகுதி தமிழ் மீனவர்களுக்காக 2013இல் இந்தியா அளித்த 150 படகுகள், தமிழ் மீனவர்களுக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை என்றும், அமைச்சருக்கு வேண்டியவர்களுக்கே கிடைத்தது என்றும் இலங்கை தேசிய மீனவர் சம்மேளன பொறுப்பாளர் சதாசிவமே தெரிவித்திருக்கிறார். இதன் அடுத்த கட்டமாகத் தான் நான்கரை கோடி ரூபாய் மதிப்பிலான 150 படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை முல்லைத் தீவில் உள்ள 300 மீனவர்களுக்கு அன்பளிப்பாக வழங்க தற்போது இந்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான ஒப்பந்தம் தான் தற்போது கொழும்பில் கையெழுத்தாகியுள்ளது.
 
 
 
இந்தியாவிலே உள்ள தமிழக மீனவர்களின் அடுக்கடுக்கான துன்பங்களுக்கு நிரந்தரமாக முடிவு கட்டி முழுமையான தீர்வு காண முயற்சி எடுக்காத இந்திய அரசு, இலங்கை மீனவர்களுக்கு உதவுவதாகச் சொல்லி, படகுகளையும், கருவிகளையும் வழங்கிட முன் வந்திருப்பது தமிழக மக்களுக்கும், குறிப்பாக மீனவர்களுக்கும் மிகுந்த வேதனையை அளித்துள்ளது. இலங்கைச் சிறையிலே உள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கவும், அவர்களின் படகுகளை மீட்கவும், தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து துன்பத்திற்கு ஆளாக்கப்படுவதை நிறுத்தவும், தமிழகத் தலைவர்கள் பல முறை இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தும் எந்தப் பயனும் ஏற்படுவதில்லை. இலங்கை அரசாக நினைத்துக் கொண்டால் சில மீனவர்களை விடுவிப்பார்கள். ஆனால் அவர்களின் படகுகளைத் திரும்பத் தர மாட்டார்கள். இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்ட எத்தனையோ முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் தீர்வு காணப் படவில்லை. இலங்கை மீனவர்களிடம் இந்திய அரசு காட்டுகின்ற அக்கறையை தமிழக மீனவர்களிடமும் காட்டிட வேண்டுமென்று தான் நாம் திரும்பத் திரும்ப மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம். இலங்கைச் சிறையிலே அடைபட்டுள்ள அனைத்து தமிழக மீனவர்களும் விடுவிக்கப்பட வேண்டும்; அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும்; சவுதிக்கு பிழைக்கச் சென்று, திரும்ப வரவும் முடியாமல், அங்கே வாழவும் முடியாமல் இரண்டாண்டுகளுக்கு மேலாக அவதிப்படும் 63 மீனவர்கள் தாயகம் திரும்ப வேண்டும்; தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கைக் கடற்படையினர் எந்தவிதமான தாக்குதலையும் நடத்தக் கூடாது; இந்தப் பிரச்சினைகளுக்கு நல்ல முடிவினைக் காண்பதற்கு முன்பு இந்தியா இலங்கைக்கு எந்தவிதமான உதவியும் செய்திட முன் வரக் கூடாது என்பது தான் தமிழ் மக்களின் கோரிக்கை.
 
 
அதனை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டுமென்று மீண்டும் மீண்டும் தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்துகிறேன்.