கடலூரில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை

கடலூரில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை

 கடலூரில் நடை பெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:-


கடலூர் மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர்களே! கழகத்தின் சார்பிலும் தோழமைக் கட்சிகளின் சார்பிலும் உதயசூரியன் உள்ளிட்ட அவரவர்  சின்னங்களிலே போட்டியிடுகின்ற  என்னுடைய  அன்புத் தம்பிமார்களே! என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!

கடலூர் மாவட்டக் கழகத்தின் செயலாளர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர்கள் சிறப்பாக  உரையாற்றி இங்கே போட்டியிடுகின்ற நண்பர்களையெல்லாம் அறிமுகம் செய்கின்ற பணியை நான் ஆற்றுவேன்  என்று  குறிப்பிட்டிருக்கின்றார்.
நேற்று முதல் தமிழ்நாட்டில்  தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலே பேசுகின்ற வாய்ப்பைப் பெற்று அங்கெல்லாம் நம்முடைய கழக வேட்பாளர்களும், தோழமைக்  கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெறுவதற்கான சூழ்நிலைகள் பிரகாசமாகத் தெரிவதை என்னால் காண முடிந்தது.   (கைதட்டல்) அதைப் போலவே இங்கேயும்   ஒளி பொருந்திய  கடலூர் கூட்டத்தை நான் பார்க்கின்றேன். (கைதட்டல்)
கடலூரில் நான் பேசுவது என்பது புதிதல்ல; தென்னாற்காடு மாவட்டம் என்ற பெயர் பெற்றிருந்த அந்தக் காலத்திலே இருந்து இந்த கருணாநிதி இது போன்ற கூட்டங்களில்  இங்கே உங்களை எல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பை பெற்றிருக்கின்றேன். கடலூர் என்றாலே எனக்கு என்னுடைய அருமை நண்பர் மறைந்த இளம்வழுதியினுடைய பெயர்தான் பசுமையாக என்னுடைய உள்ளத்திலே தோன்றும்.  அவரை இளம் வயதில் பறி கொடுத்து கடலூர் மக்களும் நானும் பட்ட துன்பம் சாதாரணமானது அல்ல. இன்றைக்கு அவருடைய மகன் இள. புகழேந்தி,  மாணவர் அணியைக் கட்டிக் காத்து, மாணவர் அணியின் சார்பிலே அவர் பல்வேறு தொண்டுகளை ஆற்றிக்கொண்டிருக்கிறார். அத்தகைய புகழேந்தியும் அவரோடு  சேர்ந்துள்ள நம்முடைய கழக உடன்பிறப்புகளும் இந்த தேர்தலிலே கடலூர் மாவட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக உங்களை எல்லாம் சந்திக்கின்ற வாய்ப்பை நான் பெற்றிருக்கின்றேன்.
குறிஞ்சிப்பாடியிலே தம்பி எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர்களும், புவனகிரியிலே துரை. கி.சரவணன் அவர்களும், நெய்வேலியில் சபா. ராஜேந்திரன் அவர்களும், விருத்தாசலத்தில் பாவாடை கோவிந்தசாமி அவர்களும், திட்டக்குடியில் வெ. கணேசன் அவர்களும், சிதம்பரத்தில் செந்தில்குமார் அவர்களும் போட்டியிடுகின்றார்கள்.  இவர்களுக்கு எல்லாம் உதயசூரியன் சின்னம்.  காட்டு மன்னார் கோவிலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் டாக்டர் மணிரத்தினம் போட்டியிடுகின்றார்.  அவருக்குக் கை சின்னம்.  தமிழ்நாடு விவசாயிகள்  தொழிலாளர் கட்சியின் சார்பில் தம்பி பொன். குமார் அவர்கள் பண்ருட்டியிலே போட்டியிடுகின்றார்.  அவருக்கும்  உதயசூரியன் சின்னம். இவர்களை எல்லாம் வெற்றிபெறச் செய்ய வேண்டியது உங்களுடைய கடமை, உங்களுடைய பொறுப்பு என்பதை நான் உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.  

நாட்டில் நல்லாட்சி நடைபெற வேண்டும் என்று சொன்னால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நோக்கம் நாங்களே ஆளவேண்டும் என்று கருதுகின்றவர்கள் அல்ல.  திராவிட முன்னேற்றக் கழகம்  தேர்தலுக்காக இருக்கின்ற  ஒரு அரசியல் கட்சி அல்ல. இன்னும் சொல்லப் போனால் இது அரசியல் கட்சி மாத்திரம் அல்ல.  ஒரு சமுதாய புரட்சி இயக்கம், சமுதாயத்திலே அடிமட்டத்திலே இருக்கின்றவர்களைக் கைதூக்கி விடுகின்ற இயக்கம்;  பின்தங்கிய மக்களின்  முன்னேற்றத்திற்காகப் பாடுபடுகின்ற  பாட்டாளியின் இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம். இந்தக் கழகத்தை தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் சமுதாயத்திலே சாதி வேற்றுமை, சாதிக் கொடுமை இவைகள் எல்லாம் நீங்கி எல்லோரும் சமம் என்ற  ஒரு நிலையை உருவாக்க வேண்டும்  என்பதற்காக பல்லாண்டுகாலமாக பாடுபட்டு வருகின்ற இயக்கம். ஆனால் அதிலே  இடையிடையே தலையிட்டு அவர்களுடைய கொள்கைகளுக்கு பெரியாருடைய எண்ணங்களுக்கு, பேரறிஞர் அண்ணாவினுடைய கருத்துகளுக்கு மாறாக ஏதேதோ நாட்டில் நடைபெறுகின்றன,  என்னென்னமோ செய்கின்றார்கள். நான் வருகின்ற வழியிலே கேள்விப்பட்டேன் என்னுடைய நண்பர்களும் சொன்னார்கள், காலையிலும் மாலையிலும் வந்த பத்திரிக்கைகளிலும் பார்த்தேன். 

இன்றைக்கு நாட்டிலே கொள்ளையடிப்பவர்கள், திருடுபவர்கள், வஞ்சகம் செய்பவர்கள், பணம் சம்பாதிப்பதற்காக எதைவேண்டு மானாலும் செய்யக் கூடியவர்கள் நிறைந்து விட்டார்கள். அவர்களையெல்லாம் வீழ்த்தி ஒரு நல்ல சூழ்நிலையை உருவாக்க திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு பாடுபட்டு வருகின்றது.  இது ஒரு அரசியல்  இயக்கம் மாத்திரம் அல்ல, சமுதாய இயக்கமும் கூட. நாங்கள் இந்த நாட்டில் சாதி வேறுபாடு இருக்கக்கூடாது;   மத மாச்சரியங்களுக்கு இடம் இருக்கக்கூடாது;  எல்லோரும் சமம்; என்ற அந்த நிலையில் பாடுபட்டு வருகின்றோம்.  அதற்கு மாறாக எது நடந்தாலும் அவர்களை எல்லாம் தூக்கி எறிய வேண்டும் என்ற அந்த உத்வேகத்தோடு திராவிட முன்னேற்றக் கழகத்திலே நாங்கள் இன்றைக்கு பணியாற்றுகின்றோம்.  அப்படிப்பட்ட சூழ்நிலையில் எங்களுக்கு பொது மக்களாகிய நீங்கள் - திராவிட மக்களாகிய நீங்கள், தமிழ் மக்களாகிய  நீங்கள் - எங்களுடைய கைகளை பலப்படுத்த  துணை புரிய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளத்தான், தேர்தலிலே எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்க மாத்திரமல்ல; அதன் மூலம் எங்களை பலப்படுத்துங்கள்,  நாங்கள் பலப்பட்டால், தமிழ்  நாட்டிலே உள்ள சாதி பேதங்களை உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கின்ற சூழ்நிலைகளை எல்லாம்  அகற்ற  எங்களால் முடியும். அதற்கு எங்களுக்கு நீங்கள் ஆதரவு தாருங்கள் என்று கேட்டுத்தான் நாங்கள் பாடுபட்டு வருகின்றோம்.  பணியாற்றி வருகின்றோம்.  
அப்படிப்பட்ட எங்களுக்கு;  நீங்கள் எங்களை எல்லாம் உங்களுடைய சகோதரர்களாகக் கருதி,  உடன் பிறப்புகளாகக் கருதி எங்களை கைவிடாமல், எங்களுக்கு என்றென்றும் தோன்றாத் துணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளத்தான் கடலூருக்கு வந்திருக்கின்றேன். 

கடலூரில் எவ்வளவு நாசகாரியங்கள் நடைபெற்றன, வெள்ளத்தாலும், புயலாலும்  எந்த அளவிற்கு நீங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டீர்கள்.  எந்த அளவுக்கு கடலூர் மக்கள் கதியற்றவர்களாக  நின்று புலம்பினார்கள்.  அந்த நேரத்திலே ஆளுகின்ற பொறுப்பிலே உள்ள முதலமைச்சர்  உங்களை வந்து பார்த்தாரா? உங்களுக்கு தேவையான வற்றை செய்து கொடுத்தாரா? உங்களுடைய கண்ணீரைத் துடைக்க கை நீட்டினாரா? அவர்கள் கை நீட்டியது எல்லாம் அவர்கள்  கருணை வடிய  பேசியது எல்லாம் மேலும் மேலும் சம்பாதிக்க, பணம் திரட்ட, இந்த காரியங்களைத்தான் பார்த்தார்கள். 

ஆனால் நாங்கள் உங்களோடு தோழர்களாக நின்று எந்த நேரத்திலும் ஏழை எளிய மக்கள், சாதாரண சாமானிய மக்கள், அவர்கள்தான் எங்களுக்கு தோழர்கள் என்ற அந்த உணர்வோடு பாடுபட்டு வருகின்ற இயக்கத்திற்கு சொந்தக்காரர்கள் நாங்கள்.  நாங்கள் தியாகத்தை மதிப்பவர்கள், நாங்கள் எந்த நேரத்திலும் உங்களுக்காக உதவக் கூடியவர்கள். அதை மறந்துவிடாதீர்கள்.  
திராவிட முன்னேற்றக் கழகம் என்றால் திராவிட சமுதாயத்தினுடைய நன்மைகளுக்காக திராவிட சமுதாயம் முன்னேறுவதற்காக பாடுபடுகின்ற ஒரு இயக்கம்.  திராவிட என்ற அந்த சொல்லே சிலபேருக்கு பிடிப்பதில்லை.  ஆனால் அவர்களும் திராவிடர்கள்தான் என்பதை உணருகின்ற காலம் விரைவில் வரும்போது தான்,  அந்த திராவிடர்களுக்காக பாடுபடுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தை நீங்கள் ஆதரிக்க வேண்டும். 

இந்த கழகத்தின் சார்பிலே போட்டியிடுகின்ற நம்முடைய நண்பர்களை எல்லாம் நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.  உதயசூரியன் சின்னமானாலும், நம்முடைய  தோழமைக் கட்சிகளுடைய  சின்னங்களானாலும், அந்த சின்னங்கள் எல்லாம் வெற்றி பெற்றால்தான் எதிர் காலத்திலே இந்த சமுதாயத்தை சீரோடும், சிறப்போடும், செழிப்போடும் நாம் வாழவைக்க முடியும் என்று  உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கின்றேன்.

இன்றைக்கும், நாளைக்கும் நான் வெகு தூரம் பயணம் செய்து  தமிழ்நாட்டு மக்களை சந்திக்கின்ற பொறுப்பிலே இருக்கின்றேன்.  இந்தப் பொறுப்பை என்னுடைய மகன் தம்பி மு.க.ஸ்டாலின் (கைதட்டல்)  பகிர்ந்து கொண்டு நிறைவேற்றி வருகின்றார்.  அப்படி நிறைவேற்றி வருகின்ற  ஸ்டாலினுக்கு நானும் கை கொடுக்கிறேன்.  நீங்களும் கைகொடுத்து  வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.  

நான் வருகின்ற வழியிலே என்னுடைய நண்பர்களோடு பேசிக் கொண்டு வந்தேன்.
 ஒரு மாலைப் பத்திரிக்கையிலே என்ன எழுதப்பட்டிருக்கின்றது என்று பார்த்தேன்.  தமிழ்நாட்டிலே ஒரு நாலு, ஐந்து அமைச்சர்கள் சம்மந்தப்பட்ட விவகாரம் அது.  இன்றைய மாலைப் பத்திரிக்கையில் அப்பட்டமாக வெளிவந்திருக்கிறது.   ஒரு மந்திரி தன்னுடைய களியாட்டங்களுக்காக, தன்னுடைய ஆரவாரங்களுக்காக, தன்னுடைய சுகவாழ்வுக்காக என்ன என்ன காரியங்களைச் செய்தார் என்பதை அந்த பத்திரிக்கை சுட்டிக் காட்டியிருக்கிறது. 

அவர்களுடைய பெயரையெல்லாம் பச்சையாக அந்த பத்திரிகை வெளியிட்டிருக்கிறது.  நான் அந்த பெயர்களைக்கூட சொல்ல விரும்பவில்லை.  முதலமைச்சராக """"ஆக்டிங்’ முதலமைச்சராக இருந்தவர்.  அவர் எவ்வளவு உல்லாசங்களிலே  ஈடுபட்டார், அவர் எந்தளவுக்கு பணம் சம்பாதித்தார்,  பணம் சம்பாதிக்கின்ற வழிவகைகளையெல்லாம் கண்டுபிடித்தார்.  அதை அனுபவித்தார் என்பதெல்லாம் அந்த பத்திரிகையிலே வெளிப்படையாக எழுதியிருக்கின்றார்கள்.  

அந்த பத்திரிகை என்ன எழுதியிருக்கிறார்களோ அதைப்பற்றி  அவர்கள் நடவடிக்கை எடுக்கிறார்களோ  இல்லையோ நான் அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கின்றேன்.  அரசாங்கத்திலே இன்றைக்கு இருப்பவர்கள் நேர்மையானவர்களாக இருந்தால், நீதிக்கு தலை வணங்குபவர்களாக இருந்தால்,  நாளைக்கே அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுத்து சிறைச்சாலையிலே போட வேண்டிய  அப்படிப்பட்டவர்கள் மந்திரிகளாக இருந்திருக்கின்றார்கள்.  அப்படிப்பட்டவர்கள் நமது மக்களோடு பழகிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.  சிறையிலே இருக்க வேண்டியவர்கள்  நாங்கள் இவ்வளவு  கோடி ரூபாய் சம்பாதித்தோம் என்று சொல்லுகின்ற  அளவிற்கு தைரியம் உள்ளவர்களாக, நெஞ்சழுத்தக்காரர்களாக இருக்கின்றார்கள்.   மந்திரியாக இருந்தவரும்,   """"ஆக்டிங்’’ மந்திரியாக இருந்தவரும்  எவ்வளவு கொள்ளையடித்தார்கள்  என்ற அந்த விவரத்தை வருமான வரித்துறை கண்டுபிடித்து அவர்களுடைய எத்தனையோ ரகசியங்கள்  வெளிப்படையாக மக்களுக்கு தெரிகின்ற அளவிற்கு பத்திரிகைகளிலே  செய்தியாக வெளியிட்டிருக்கிறார்கள்.  

செய்தியாக வெளியிட்டால் போதுமா?  அவர்கள் மீது நடவடிக்கை வேண்டாமா?  அந்த நடவடிக்கையை இன்றைக்கு இருக்கின்ற அரசு எடுக்க வேண்டாமா? ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் ஒவ்வொரு கட்சியும் நாங்கள் ஒரு குழு போடுவோம்;  அந்த குழுவைக் கொண்டு யார் யார் என்ன என்ன தவறுகளை செய்தார்கள் என்பதைக் கண்டுபிடித்து, அவர்கள் மீதெல்லாம் நடவடிக்கை எடுப்போம் என்று வாய்ச்சவடால் வீசிவிட்டால் மட்டும் போதுமா? என்பதை நீங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.  

ஒரு அமைச்சருக்கு தமிழ் நாட்டிலே  உல்லாசம் அனுபவித்தால்  போதாது என்று வெளிநாட்டிலே உள்ள தீவுக்கே  அழைத்துச் சென்று   உல்லாசம் அனுபவித்தால்  தான் அந்த அமைச்சருக்கு திருப்தியாம்!     இது நாடா அல்லது காடா என்பதை தயவுசெய்து எண்ணிப்பாருங்கள்.
இந்த நாட்டில் இன்றைக்கு மணற்கொள்ளை பெருகி இருக்கிறது.  அது மாத்திரமல்ல, அந்த மணற்கொள்ளை எதற்காக? இந்த தேர்தலிலே  பணத்தினை கொடுத்து வாக்குகளை வாங்குவதற்காக;   உங்கள் கைக்கு தரப்படுகின்ற பணம், நாளைக்கு வந்தால் அந்தப் பணம் கொள்ளையடித்தப் பணம் என்பதை மறந்து விடக்கூடாது. 

ஆகவே கொள்ளை யடித்தவர்கள், இன்னமும் கொள்ளையடிக்கத் துணிந்தவர்கள் தமிழ்நாட்டிலே ஆட்சிக் கட்டிலிலே அமர்ந்திருக்கின்றார்கள், அவர்கள் மீது யாரும் இதுவரையிலே செய்த தவறுகளுக்காக எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்க அஞ்சுகின்றார்கள், காரணம், இவர்களே  நடவடிக்கைக்கு உள்ளாகக்கூடிய அளவிற்கு  குற்றங்களை விளைத்தவர்கள் தான் இந்த நாட்டை ஆண்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு காலத்திலே பெருந்தலைவர் காமராஜர் ஆண்டார், பக்தவச்சலம் ஆண்டார், அண்ணா  ஆண்டார்,   நாங்கள் ஆண்டோம். ஆனால் இன்றைக்கு ஜெயலலிதா ஆட்சியில் லஞ்சம் - லாவண்யம் இதுதான் பெருகியிருக்கின்றது. அவர்களுக்கு பணம் சம்பாதிப்பதை தவிர, வேறு எதுவும் தெரியாது.  அவர்களுக்கு மக்களை ஏமாற்றுவதைத் தவிர,  வேறு  காரியம் எதையும் கற்றதில்லை.    இந்தக் காலத்திலே  இவர்களுடைய சக்தியை எப்படியெல்லம் தடுக்க வேண்டும் என்பதை யோசித்து  அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்று சாதாரண, சாமானிய, ஏழை எளிய மக்களை யெல்லாம் நான் கேட்டுக் கொள்கின்றேன்.  உங்களையெல்லாம் கேட்டுக் கொள்ள எனக்கு உரிமையிருக்கிறது.  ஏனென்றால்  நானும் உங்களோடு சேர்ந்து கஷ்டப்பட்டவன் தான், (கைதட்டல்) நானும் உங்களுக்காக பாடுபட்டவன் தான். (கைதட்டல்)  பாடுபட்டுக் கொண்டிருப் பவன்தான்.   (கைதட்டல்)   இன்னும் பாடுபடப்போகிறவன் தான். (கைதட்டல்) எனவே உங்களுக்காக பாடுபடுகின்ற, உங்களுக்காக உழைக்கின்ற, உங்களுக்காக அனுதினமும் பேசிக் கொண்டிருக்கின்ற,  உங்களுக்காகவே கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்ற உங்கள் தம்பிகளிலே ஒருவன் நான் என்பதை மறந்து விடாதீர்கள்.  உங்கள் பிள்ளைகளிலே  ஒருவன் நான் என்பதை மறந்து விடாதீர்கள்.

நான் சொல்வது ஏதோ பிரச்சாரத்திற்கு வந்தோம்.  எதையோ பேசினோம் என்பதற்காக அல்ல.
 உணர்ச்சியோடு பேசுகிறேன்.   (கைதட்டல்)  உள் உணர்வை வெளிப்படுத்தி பேசுகிறேன். (கைதட்டல்)  என்னுடைய ஆர்வத்தை வெளியிடுகின்றேன்.  இந்த நாடு வாழ வேண்டும்.  இந்த மக்கள் வாழ வேண்டும்.  என்னுடைய மக்கள் எல்லோரும் அனுதினமும் அண்ணா, தம்பி என்று அழைக்கின்ற அந்த மக்களுக்கு எந்த வித துன்ப துயரங்களும்  வரக்கூடாது.  அவர்களை காப்பாற்ற வேண்டும்.   அப்படி காப்பாற்றுகின்ற பொறுப்பை தமிழ்நாட்டிலே உள்ள ஒரு சில கட்சிகள் தான் இன்றைக்கு ஏற்றிருக்கின்றன.  அந்த கட்சிகளிலே ஒன்றுதான் திராவிட முன்னேற்றக் கழகம். 

அந்த கழகத்தை நீங்கள் வெற்றி பெறச் செய்தால் திராவிடர்கள் உயர்வார்கள்.  திராவிடர்கள் உயர்ந்தால், திராவிட நாடு உயரும், திராவிட நாடு உயர்ந்தால், திராவிட மக்களுக்கு  நல்ல வாழ்வு கிடைக்கும். அந்த வாழ்வு கிடைப்பதற்கு அருள் கூர்ந்து நீங்கள் எல்லாம்  அனுதினமும் பாடுபடுங்கள் என்று கேட்டுக் கொள்கின்றேன்.  

இப்பொழுது உங்களுடைய வாக்குகளை எங்களுக்கு கொடுங்கள் என்று நான் கேட்பதற்கு காரணம் ஓட்டு வேட்டை அல்ல.  ஓட்டு வேட்டை என்ற பெயரால் தமிழ்நாட்டு மக்களுடைய வரிப் பணத்தையெல்லாம் வாரி சுருட்டிக் கொண்டிருக்கின்ற சில வன்கணாளர்கள்,  வஞ்சகர்கள் ஆகியோருக்குப்  பாடம் கற்பிக்க  நீங்கள் உங்களுடைய வெற்றி முழக்கத்தை இன்று முதலே தொடங்குங்கள் என்று கேட்டுக் கொண்டு, உங்களுடைய அன்பான வரவேற்பிற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்து, வெல்க உதய  சூரியன், வாழ்க உதயசூரியன், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வெற்றியைத் தாருங்கள்.  காங்கிரஸ் இயக்கத்திற்கு - இந்த கூட்டணிக்கு வெற்றியைத் தாருங்கள்,  கை சின்னத்திற்கு வெற்றியைத் தாருங்கள், உதயசூரியனுக்கு வெற்றியைத் தாருங்கள்  என்று கேட்டு விடைபெறுகிறேன்.
இவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள்  உரையாற்றினார்.