மயிலாடுதுறையில் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை

மயிலாடுதுறையில் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை

மயிலாடுதுறை தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலே க. அன்பழகனையும், பூம்புகார் தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினுடைய வேட்பாளர் ஷாஜகானுக்கு ஏணி சின்னத்திலும் சீர்காழி தொகுதியில் கிள்ளை ரவிந்திரனுக்கு உதயசூரியன் சின்னத்திலும் வாக்களித்து வெற்றிபெறச்செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
 
இன்று நான் காலையிலே இருந்து வழியெல்லாம் பல்லாயிரக்கணக்கான  தமிழ்ப்பெருங்குடி மக்களைச் சந்தித்து அவர்களுடைய ஆதரவை தி.மு.கழகத்திற்கும், தோழமைக் கட்சிகளுக்கும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்ற பெரும் பொறுப்பை  ஏற்றுக் கொண்டிருக்கிறேன்.
 
இங்கே பேசியவர்கள் எல்லாம் தி.மு.கழக ஆட்சியிலே ஏற்பட்ட நன்மைகளை, சமுதாயத்திற்கு ஏற்பட்ட ஆதாயங்களை யெல்லாம் எடுத்துச் சொன்னார்கள். 
 
இன்றைக்கு நாட்டில்  கடந்த ஐந்தாண்டு காலமாக நடைபெறுகின்ற அ.தி.மு.க. ஆட்சியில் உள்ள கோளாறுகளை நீங்கள் அனுபவத்திலே உணர்ந்திருக்கிறீர்கள். இவைகள் எல்லாம் நீங்கி நாம் உண்மையான சுதந்திரத்தை அனுபவகிக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்க வேண்டுமேயானால் அதற்கு அந்த வாய்ப்பை உருவாக்குபவர்கள் இளைஞர்கள்தான் என்பதை நான் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
 
இது இளைஞர்களுடைய காலம், அவர்கள் எண்ணியது நடக்கும், நான் நேற்றைக்குகூட நடைபெற்றக் கூட்டத்தில் இளைஞர்கள், தமிழ்ப் பணியாற்ற, சமுதாயப் பணியாற்ற முன் வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன்.  அந்தப் பணிகள் சிறப்பாக நடைபெறவேண்டுமேயானால் நீங்கள் தி.மு.கழகத்தினுடைய வரலாறு என்ன?  என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையில் நான் தி.மு.கழகத்திலே 1949-ஆம் ஆண்டுக்குப் பிறகு எவ்வளவு கஷ்ட நஷ்டங்களை, எவ்வளவு தியாகங்களைச் செய்கின்ற ஒரு இயக்கத்தில் என்னை இணைத்துக் கொண்டு தமிழ்நாட்டு மக்களுடைய நலன்களைக்  பேணிப்  பாதுகாக்கின்றப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன் என்பதை நீங்கள் அறிவீர்கள்.  நான் 13-வது முறையாக தேர்தலிலே இப்போது உங்களையெல்லாம் சந்திக்கிறேன், வெற்றிபெறுவேன் என்று சொன்னார்கள்.  அப்படிச் சொன்னதற்கு காரணம், அவர்கள் என்மீது கொண்டுள்ள அன்பின் காரணமாகத்தான், என்மீது கொண்டுள்ள அக்கறையின் காரணமாகத்தான் என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.  
 
நம்முடைய மக்கள் வாழவேண்டுமேயானால் நம்முடைய தமிழ்நாடு வாழ வேண்டுமேயானால், தமிழ்நாட்டிலே சொந்தமாக சிந்திக்கக்கூடிய தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்றவர்களிடம் பாடம் கற்றவர்கள், ஆட்சிப் பொறுப்பில்  இருந்தால்தான் அவர்களால் ஒரு நல்ல நிலையை தமிழ்நாட்டிலே உருவாக்க முடியும்.  உங்களையெல்லாம் நான் மேலும் கேட்டுக் கொள்கிறேன், இந்தக் கூட்டத்தில் ஏராளமான இளைஞர்கள் இருக்கிறீர்கள், இளைஞர்கள்தான் இந்த நாட்டின் எதிர்காலம். நீங்கள் தான் இந்த நாட்டை வாழ வைக்க வேண்டியவர்கள், நீங்கள்தான் இந்த சமுதாயத்தை வாழ வைக்க வேண்டியவர்கள், ஆகவே இளைஞர்கள்  அமைதியாக இருந்து இந்தக் கூட்டத்தை சிறப்போடு நடத்தித் தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். (மேடையின் முன் தொடர்ந்து ஆரவாரம், முழக்கங்கள் எழுப்பியவாறு இருந்தார்கள்) இளைஞர்களால் ஆகாதது ஏதும் இல்லை.  இளைஞர்கள்தான் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும். இளைஞர்கள் தான் ஒரு நாட்டை உருவாக்க முடியும், வாழ வைக்க முடியும் என்ற நம்பிக்கையும்  இளைஞர்களுக்குத்தான் உண்டு.  எனவே நாங்கள்  இளைஞர்களை நம்பித் தான் இந்த இயக்கத்தை நடத்திக் கொண்டி ருக்கிறோம்.
 
என்னைப் பொறுத்தவரையில் நான் ஒரு காலத்திலே இளைஞனாக இருந்து இன்றைக்கு வயோதிக பருவத்திலே இருப்பவன், (கைதட்டல்) 92 வயதை தாண்டியவன்.  இன்னமும் நான் மக்களுக்காகப் பாடுபடுகிறேன் என்றால், இளைஞர்களை தயார்படுத்துவதற்காகத்தான் இந்தப் பணியை நான் ஆற்றுகிறேன். ஏனென்றால் அவர்கள் இல்லாமல் எந்தக் காரியத்தையும் வெற்றிகரமாக நாம் நடத்த முடியாது.  எனவேதான் அந்த இளைஞர்களாக இருக்கிற நீங்கள், இங்கு வந்து அமர்ந்திருக்கிற நீங்கள் அமைதியாக இருந்து இந்தக் கூட்டத்தை நடத்திக் கொடுப்பீர்களேயானால், இளைஞர்களால் எல்லாம் ஆகும், இளைஞர்களால் முடியாதது எதுவும் இல்லை என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. (பலத்த கைதட்டல், ஆரவாரம்)
 
உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன், தி.மு.கழகம் ஒரு  அரசியல் கட்சி என்று சொல்வதை விட, ஒரு சமுதாய இயக்கம் என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். தி.மு.கழகத்தினுடைய கொள்கைகள் சாதி, மதம் இவைகளுக்கு அப்பாற்பட்டு எல்லோரும் நம்மவர்கள்தான் என்ற நிலையிலே இன்றைக்கு இயங்குகிற இயக்கம் தி.மு.கழகம். எல்லோரையும் அரவணைத்துச் செல்கின்ற இயக்கம் தான் தி.மு.கழகம். அந்தக் கழகத்தினுடைய இந்தப் பெருங்கூட்டம் இன்று மாயவரத்திலே - மயிலாடுதுறையிலே நடைபெறுகின்றது என்றால் நான் உள்ளபடியே சொல்கிறேன். (தொடர்ந்து திரண்டிருந்த கூட்டத்தினர் ஆரவாரம் செய்தவாறு இருந்தனர்)
 
கொஞ்சம் அமைதியாக இருந்தால்தான்  சில கருத்துக்களை உங்களுக்குச் சொல்ல முடியும்! தயவு செய்து இளைஞர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நீங்களும் பேசி, நானும் பேசினால் யார் பேசியதும் புரியாமல் போய் விடும்.ஆகவே இளைஞர் சமுதாயம்தான் ஒரு நாட்டை வாழ வைக்கக் கூடிய இனிய சமுதாயம்.  அந்த பெரும்பொறுப்பை இங்கே உள்ள இளைஞர்கள் நிறைவேற்றித் தர வேண்டும். நேற்றைக்கு நான் பேசியக் கூட்டங்களில் எல்லாம் குறிப்பாக பாண்டிச்சேரியிலே நான் பேசியபோது இளைஞர்களுடைய முக்கியத்துவம் என்ன என்பதை எடுத்துச் சொன்னேன். அதையே இன்றைக்கும் சொல்கிறேன் இளைஞர்கள் இல்லாமல் எந்த காரியமும் நடைபெறாது, இளைஞர்களால் தான் ஒரு நாட்டை முன்னேற்ற முடியும்.  (மீண்டும் நீண்ட நேரம் முழக்கங்களையும், ஆரவாரங்களையும் எழுப்பிக் கொண்டே இருந்தனர்)
கடந்த ஐந்தாண்டு காலமாக ஒரு ஆட்சி, ஆட்சி என்றப் பெயரால் காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சியினால் ஏற்பட்டுள்ள அவலங்கள் என்ன என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.  வருகிற வழியிலே விவசாயப் பெருங்குடி மக்கள் கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்தேன், அந்த விவசாயப் பெருங்குடி மக்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து, அதை செய்வதற்கு இந்த ஆட்சி தயாராக இல்லை.  
 
கழக ஆட்சி இன்றைக்கு நடைபெற வில்லை, ஆனால் அண்ணாவின் பெயரைக் கட்சிக்கு  வைத்துக்  கொண்டிருக்கும்  ஒரு கட்சியின் ஆட்சி  இங்கே நடந்து கொண்டிருக்கிறது.  அண்ணா குண சீலர், அண்ணா சமாதானப் பிரியர், அண்ணா எதையும் தாங்கும் இதயம் படைத்தவர், அந்த அண்ணாவின் பெயரால் நடைபெறுகின்ற ஆட்சி எந்த முறையில் நடைபெறுகிறது என்பதை தயவு செய்து நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இன்றைக்கு காலையிலும், மாலையிலும்  வந்திருக்கிற சில பத்திரிகைகளிலே பார்த்தால் முதலமைச்சராக தற்போது பொறுப்பிலே இல்லாவிட்டாலும், """"ஆக்டிங்’’ முதலமைச்சராக இருந்த  ஒருவர் செய்த அநியாயங்களை அந்தப் பத்திரிகைகள் பெரிய அளவில் வெளியிட்டிருக்கிறது.
 
அது மாத்திரமல்ல, அவரோடு  வேறு சில மந்திரிகளும் சேர்ந்து கொண்டு என்னென்ன காரியங்களை செய்தார்கள், செய்து கொண்டு இருக்கிறார்கள், எவ்வளவு பொருள் ஈட்டியிருக்கிறார்கள்  என்ற இந்த கணக்கு வழக்குகளும் அந்தப் பத்திரிகைகளிலே வெளியிடப்பட்டிருக்கிறது.
 
நான் கேட்கிறேன், இவைகளுக்கெல்லாம் என்ன நடவடிக்கை, யார் நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள், இதையெல்லாம் பார்த்து தமிழ்நாட்டு ஆளுநர் நடவடிக்கை எடுப்பாரா? அல்லது  டெல்லியிலே இருப்பவர்கள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை விரைவிலே தெரிந்து கொள்ளலாம்.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தேர்தலுக்காக வேட்பாளர்கள் ஆங்காங்கே தயாரான நிலையிலே நிறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில் என்ன நடக்கிறது, எவ்வளவு அபத்தங்கள் நடக்கின்றன? எவ்வளவு அநியாயங்கள் நடக்கின்றன? பத்திரிகைகளிலே வந்திருக்கிற செய்திகளைப் பார்த்தால் கோடிக்கணக்கான ரூபாய் பதுக்கப்பட்டு அவைகள் எல்லாம் தேர்தல் நேரத்திலே வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக சேகரிக்கப் பட்ட பணம் என்று சொல்லப்பட்டு அதை விசாரித்த வகையிலே இவைகள் எல்லாம் உண்மைதான் என்று நமக்கே தோன்றுகின்ற வகையில் அவ்வளவு பணம் கோடானுக் கோடிக் கணக்கிலே சேர்க்கப்பட்டிருக் கிறது.
 
இவைகளையெல்லாம் யார் தடுப்பது, இவைகளை  எல்லாம் யார் கேட்பது, நாம் தான் கேட்க வேண்டும், நாம்தான் இதைப்பற்றி யோசிக்க வேண்டும், இப்போது நடப்பது ஒரு காட்டாட்சி (பலத்த கைதட்டல்) ஜெயலலிதா பாஷையிலே சொல்ல வேண்டுமேயானால் ஒரு கண்காட்சி. காட்சியும் கண்காட்சியும் வேண்டாம்.  நமக்கு நல்லாட்சிதான் வேண்டும் (பலத்த கைதட்டல்) என்று நாம் இன்றைக்கு பாடுபட்டு கொண்டிருக்கிறோம்.  நல்லாட்சி என்பது என்ன?  மனித சமுதாயத்தில் அமைதி, பொறுமை, கண்ணியம், கட்டுப்பாடு, இவைகள் எல்லாம் காப்பாற்றப்படுகின்ற அளவிற்கு சமுதாயம் சீர்திருத்தப் படவேண்டும்.  
தி.மு.கழகத்தைப் பொறுத்தவரையில் நான் பல இடங்களிலே சொன்னதைப் போல இது ஒரு அரசியல் கட்சியல்ல, அரசியலாக இருந்தாலும்கூட, தி.மு.கழகம் ஒரு சமுதாயப் பேரியக்கம்.  சமுதாயத்தை சீர்திருத்த வேண்டும், சமுதாயத்திலே உள்ளவர்கள் நல்லவர்களாக, வல்லவர்களாக வாழ வேண்டும் என்பதற்காக ஏற்பட்ட இயக்கம் தி.மு.கழகம்.
 
 இந்த கழகத்தில் இருந்து கொண்டு, கலாம் விளைவித்து ஏதாவது செய்ய வேண்டுமென்று எண்ணினால் அவர்கள் தோற்றுத்தான் போவார்கள் என்பதை எடுத்துச்சொல்ல விரும்புகிறேன்.  (பலத்த கைதட்டல்) தி.மு.கழகத்தில் உறுப்பினர்களாக இருப்பவர்கள், அவர்கள் தங்களுடைய பணிகளை மக்களுக்காகச் செய்பவர்களாக இருக்க வேண்டும். சமுதாயத்திற்காக செயல்படுபவர்களாக இருக்க வேண்டும் அப்படி செய்தால்தான் இந்த இயக்கத்தை மக்கள் ஏற்றுக் கொள்வார்கள். இல்லையேல் மக்கள் மறந்து போய்விடுவார்கள்.  மக்கள் இயக்கத்தை நடத்த விடமாட்டார்கள். இதைப் புரிந்து கொண்டு நான் ஆரம்பத்திலே சொன்னதை மறந்து விடாமல்,  இளைஞர்களால்தான் ஒரு நாட்டைக் காப்பாற்ற முடியும், இளைஞர்கள் தான் இந்த நாட்டைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களுடைய முக்கியமான வேலை, தாங்கள் திருந்திக் கொண்டு மக்களையும் திருத்த வேண்டும்.
 
 இளைஞர்களால் திருத்த முடியாவிட்டால் மக்களை திருத்த முடியாது.  எனவே மக்களை திருத்துகின்ற பணியிலே தி.மு.கழகத்தில் உள்ள இளைஞர்கள் எல்லாம் வரிசை வரிசையாக, அணி அணியாக புறப்பட்டு வரவேண்டும் என்று அவர்களையெல்லாம் அழைக்கின்றேன்.  அத்தகைய சூழ்நிலை தமிழ்நாட்டிலே ஏற்பட்டால் தமிழகத்தை வளப்படுத்தக்கூடிய சூழ்நிலை ஏற்படுமேயானால், தமிழகத்திலே மண்டிக்கிடக்கின்ற கள்ளிச் செடிகளையெல்லாம் அழித்து ஒழித்து ஒரு புதுமையை ஏற்படுத்தவேண்டுமேயானால், அறிஞர் அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவைகளை ஏற்றுக்கொண்டு அந்த வழியிலே நடைபோட வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
 
தந்தை பெரியார் அவர்கள் தமிழ்நாட்டு மக்கள் வாழ வேண்டும் என்று சிந்தித்தார். தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் ஏகப்பட்ட சுதந்திரம் வேண்டும்  அவர்களுடைய ஜாதி வேற்றுமை களையப்பட வேண்டும்; அவர்களுடைய மனித நேயம் ஓங்க வேண்டும் என்று பெரியார் போன்றவர்கள் பாடுபட்டார்கள்.
 
நாம் அந்த கொள்கைகளையெல்லாம் நிறைவேற்றவும், அந்தக் கொள்கைகளுக்கு வலு சேர்க்கவும், நாம் நம்முடைய பணியைத் தொடரவேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன். அப்படி கேட்டுக் கொள்கின்ற நேரத்திலே இப்போது வந்திருக்கின்ற இந்தத் தேர்தலில் என்னென்ன காரியங்கள் நடைபெறுகின்றன என்பதை எண்ணிப் பார்த்தால், வாக்காளர்களை பணம் கொடுத்து அணுகுகிறார்கள். ஓட்டுக்களுக்கு பணம் கொடுப்பதற்காக பல்லாயிரக் கணக்கான ரூபாய்களை செலவிடுகிறார்கள். அப்படி செலவிடுவதற்காக தங்களுடைய வீட்டிலே  ஏராளமான  பொருள்களையெல்லாம் சேர்த்து வைக்கிறார்கள்.  அதுமாத்திரமல்ல, தி.மு.கழகத்தை வேறு சில கட்சிகளை அழித்து ஒழித்துவிட வேண்டும், பிறகு நான்தான் ராஜா என்ற முறையிலே வாழ வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அவர்கள் நடத்துகின்ற ராஜலீலைகள் சாதாரணமானதல்ல. இவைகளையெல்லாம் எதிர்த்து தோற்கடித்து நாம் நம்முடைய கலையை, நம்முடைய வீரத்தை, நம்முடைய நாகரீகத்தை காப்பாற்ற நாம் எடுக்கக்கூடிய முடிவுதான் தி.மு.கழகம், தோழமைக் கட்சிகள்;   இவர்கள் எல்லாம் சேர்ந்த இந்த இணைப்பு வெற்றி பெறவேண்டும் என்பதுதான்.  அந்த வெற்றியைப் பெற நீங்கள் பாடு பட வேண்டும். வெற்றியைப் பெறுவது வெறிக் கூச்சல்களால் முடியாது.  வெற்றியைப் பெறுவதற்கு வெறியாட்டம் போட்டால் முடியாது, வெற்றியைப் பெறுவதற்கு விடாத கூச்சல் போட்டால் முடியாது, வெற்றியைப்பெற வேண்டுமேயானால் அமைதி வேண்டும்.  புத்தர்  இருந்தார் - அமைதியாக இருந்தார் - அமைதியாக சிந்தித்தார் அந்த புத்தனுக்கு வெற்றி கிடைத்தது.
 
எல்லோருக்கும் வெற்றி கிடைக்கும், நிச்சயமாக கிடைக்கும். அப்படி கிடைக்கின்ற வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள அவர்கள் இன்றைக்கு கடைப்பிடிக்கின்ற இந்த கொள்கைகளை ஏழை எளிய மக்களுக்காக, பாட்டாளி மக்களுக்காக, பாடுகின்ற  மக்களுக்காக பயன்படுத்த வேண்டும்.
 
இந்தத் தொகுதியைப் பொறுத்தவரையில் நான் வருகின்ற வழியிலே பார்த்தேன், இது விவசாயிகளுடைய மாவட்டம்.  வேளாண்மைத் தொழிலிலே உள்ளவர்களுடைய மாவட்டம். இந்த மாவட்டத்தில் வாழுகின்ற மக்கள் மேலும் வளமாக வாழ வேண்டும் என்பதற்காகத்தான் தி.மு.கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையில் விவசாயிகளை உயர்த்த நாங்கள் எங்களுடைய தேர்தல் அறிக்கையிலே விவசாயிகளுக்காக பெரும்பாலான இடத்தை ஒதுக்கி இருக்கிறோம்.  
 
விவசாயிகளுக்கு என்று தனி பட்ஜெட் தி.மு.கழகம் சார்பிலே போடப்படும் என்று அறிவித்திருக்கிறோம். (பலத்த கைதட்டல்) அப்படி போடப்படுகின்ற  பட்ஜெட்டில் விவசாயிகளுடைய வாழ்வு ஏற்றம் பெற, மேலோங்க அவர்களுடைய தொல்லைகள் தீர, அவர்களுடைய கவலைகள் தீர, அவர்களுக்கு இருக்கின்ற வேதனைகள் எல்லாம் களைய நாம் எண்ணற்ற திட்டங்களை தீட்டிக் கொண்டிருக்கிறோம்.  தேர்தல் அறிக்கை என்பது சாதாரணமானதல்ல.  மக்களுடைய உணர்வுகளை பிரதிபலிக்கின்ற ஒரு அறிக்கைதான் தி.மு.கழகத்தினுடைய தேர்தல் அறிக்கை. அந்த அறிக்கையைத்தான் நாங்கள் தயாரித்திருக்கிறோம். அந்த அறிக்கையை தி.மு.கழகத்தின் சார்பிலே தந்தாலும்கூட அது உங்களுடைய அறிக்கை.  நீங்கள் தயாரித்த அறிக்கை, நீங்கள் என்னென்ன வேண்டும் என்று கேட்டிருக்கிறீர்களோ அவைகளையெல்லாம் விசாரித்து, அவைகளையெல்லாம் பொருட்படுத்தி, அவைகளைப்பற்றியெல்லாம் பரிசீலனை செய்து நீங்கள் வைத்த கோரிக்கைகளையெல்லாம் இணைத்திருக்கிறோம். அந்த இணைப்புதான் தி.மு.க. தேர்தல் அறிக்கை . அந்த அறிக்கையை வெற்றிகரமாக செயல்படுத்துவோம், அந்த அறிக்கையை விரைவில் செயல்படுத்துவோம், அந்த அறிக்கையின்படி விவசாயிகளுடைய நெல்லுக்கு, விவசாயிகளுடைய கரும்புக்கு, அவர்கள் எதிர்பர்த்த  விலை தரப்படும் என்பதை சொல்லிக் கொள்கிறேன். (பலத்த கைதட்டல்)
 
இன்றைக்கு தமிழ்நாட்டிலே இருக்கின்ற பெரிய பிரச்சினை மது விலக்கு.  அந்த மதுவிலக்கு பிரச்சினையைப் பொறுத்தவரையில் தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மதுவிலக்குதான்.  (பலத்த கைதட்டல்) ஏனென்றால் மது அருந்துகின்ற காரணத்தால் எத்தனை மனிதர்கள் இன்றைக்கு வீணாகப் போகிறார்கள்.  எத்தனை வாலிபர்களுடைய உயிர் போயிருக்கிறது. எத்தனை பெண்களுடைய கற்புக்கு இந்த மதுவினால் சோதனை ஏற்பட்டிருக்கிறது? இதையெல்லாம் களையத்தான் மது வேண்டாம் என்று அன்று உத்தமர் காந்தியடிகள் சொன்ன அந்த கொள்கையை நாங்கள் 1974-ஆம் ஆண்டிலேயே தி.மு.கழக ஆட்சியிலேயே  மது விலக்கைக் கொண்டு வந்தோம்.  சில பேர் கேட்கிறார்கள்?  மது விலக்கைக்  கொண்டு வந்தீர்கள், மறுபடியும் மதுவை வியாபாரம் செய்தீர்களே அது எப்படி நியாயம்? என்று கேட்கிறார்கள்.  ஆமாம். நான் இல்லை என்று சொல்ல வில்லை, மது விலக்கை தற்காலிகமாக -  ஒரு ஸ்டாப் என்பார்களே அதைப் போல ஒரு மூன்று நான்கு ஆண்டிற்கு மது விலக்கை ஒத்தி வைத்து நாங்கள் தமிழ்நாட்டிலே அரசுக்கு  வரவேண்டிய வரவு, செலவு;  அதைக் கணக்குப் பார்த்து  ஏற்படுகின்ற நஷ்டத்தை ஈடுகட்ட, மது விலக்கு திட்டத்தை ஓரிரு ஆண்டு காலம் ஒத்தி வைத்தது உண்மை.  அப்படி ஒத்தி வைக்கப்பப்பட்ட அந்த திட்டத்தை மீண்டும் 1974-ஆம் ஆண்டு அமலுக்கு கொண்டு வந்து மதுவிலக்கை அமல்படுத்தினோம்.  யாரும் இனிமேல் கடைகளிலே மது விற்கக்கூடாது என்று சட்டத்தை வேகமாக ஆக்கி திட்டவட்டமாக அறிவித்து அதற்குரிய தண்டனைகளையெல்லாம் தந்து மதுவிலக்கு திட்டத்தை 1974-ஆம் ஆண்டு தீவிரமாக ஆக்கியது தி.மு.கழக அரசு.
 
அதற்குப் பிறகு வந்த ஆட்சி அ.தி.மு.க. ஆட்சி. அந்த ஆட்சியிலே ஊருக்கு ஊர்  சாராயம்.  கள். பிராந்தி. என்ற முறையிலே மது பெருக ஆரம்பித்தது.  இன்னும் சொல்லப் போனால் சர்க்காரே மது வியாபாரத்தில் ஈடுபட்டது. ஜெயலலிதா அவர்களுடைய  உடன்பிறவாச் சொந்தங்களே மது வியாபாரம் செய்ய ஆரம்பித்தார்கள்.  இல்லை என்று மறுக்க முடியாது.  ஆனால் இன்றைக்கு நான் பார்த்தேன் மெல்ல மெல்ல, படிப்படியாக நாங்கள் மதுவிலக்கை கொண்டு வருவோம் என்கிறார்கள். அது என்ன படி படி? எனக்கு புரியவில்லை.  படி படி என்றால் எப்போது மரக்கால் மரக்காலாக செய்யப்போகிறார்கள்?  இப்போது படிப்படியாக மதுவிலக்காம்.  அதை நாங்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை, ஒரே அடியாக மதுவிலக்கு.  யாரும் மது அருந்தக்கூடாது, அது அருந்தினால் தண்டனை, மது அருந்தி நம்முடைய வீட்டிலே உள்ள குழந்தை குட்டிகளையெல்லாம் கொலை செய்தோ, அல்லது அவர்களே கொலைக்கு ஆளாகிற நிலை ஏற்படுவதை பார்க்கிறோம்.  
 
மது அருந்துவதைவிட விஷத்தை அருந்தலாமே என்று சொல்லுகின்ற அளவிற்கு மது பழக்கத்தினால் தமிழ் நாட்டு மக்கள் கெட்டுப்போய்விட்டார்கள். அதை மறப்போம், அதை தடுப்போம், (பலத்த கைதட்டல் - ஆரவாரம்) என்னுடைய இந்த முழக்கத்தை ஆதரித்து கைதட்டுகின்ற இளைஞர்களை பார்க்கிறேன், முதலில் வாலிபர்கள், இளைஞர்கள்தான் திருந்த வேண்டும். அவர்கள்தான் இந்தக் காரியத்தை செய்ய வேண்டும் ஆகவே இனி தமிழ்நாட்டிலே தி.மு.கழக ஆட்சி ஏற்பட்டால் முதல் கையெழுத்து - முதல் நாள் நான் போடுகின்ற கையெழுத்து மதுவிலக்குத் திட்டம்தான்.   (கைதட்டல்)  எனவே அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று இளைஞர்களையெல்லாம் கேட்டுக் கொண்டு, வாலிபர்களையெல்லாம் கேட்டுக் கொண்டு நாம் மதுவிலக்கில் தீவிரமாக இருப்போம், மனிதர்களை வாழ வைக்க மதுவிலக்கு, அதுதான் இந்த உலகத்தை வாழவைக்கும்.  
 
 ஆகவே மதுவை ஒழிப்போம். மதியை வளர்ப்போம். மனதை பண்படுத்துவோம். அடக்கத்தைக் கற்போம். தி.மு.கழகத்தை ஒரு சமுதாய இயக்கமாக ஏற்போம். நம்முடைய தோழமைக் கட்சிகளாக இருக்கின்ற இந்திய யூனியன் முல்லிம் லீக் கட்சியாக இருந்தாலும் சரி, காங்கிரஸ் கட்சியாக இருந்தாலும் சரி, இந்தக் கட்சிகளையெல்லாம் ஒருங்கிணைத்து தமிழ்நாட்டை வளப்படுத்துவோம். தமிழ்நாட்டை மேலும், மேலும் உயர்த்துவதற்குப் பாடுபடுவோம் என்று கேட்டுக் கொண்டு நீங்கள் காட்டிய அமைதிக்கும், ஆர்வத்திற்கும்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.