பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை.

பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் ஆற்றிய உரை.

வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே 10 மணிக்கெல்லாம் பிரதமர் மோடி ஜெயலலிதாவுக்கு வாழ்த்துச் செய்தி சொன்னது மிகப்பெரிய மோசடி!

570 கோடி ரூபாய் எதற்காக வங்கியிலிருந்து மாற்றப்பட்டது? கண்டெய்னர் சீலிடப்பட்டதா? 
இந்தியா முழுவதும் புயல் வீசக்கூடிய போராட்டத்தை நடத்தி விளக்கம் கேட்போம்?

தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் தி.மு.கழகம் வெற்றி பெற்றுவிடும் என்பதால் தேர்தலையே ரத்து செய்துவிட்டீர்கள்! அயோக்கியத்தனமானஒரு தேர்தல் ஆணையத்தை வைத்துக்கொண்டு தேர்தலை நடத்துவதா?

சென்னை மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெறுகிற எழுச்சிமிக்க இந்த மாபெரும் மக்கள் திரளைத் திரட்டி, என்னுடைய 93-வது பிறந்த நாள் விழா - மாபெரும் பொதுக்கூட்டத்தை எழுச்சியோடு நடத்திக்கொண்டிருக்கின்ற மாவட்டக் கழகத்தினுடையச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. அவர்களே, முன்னிலை ஏற்றுள்ள கழகப் பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களே, என்றும் என் இனிய நண்பராக - நான் போற்றும் கழகத்தின் தலைவர்களிலே ஒருவராக விளங்குகின்ற பொதுச் செயலாளர் இனமான பேராசிரியர் அவர்களே, கழகத்தின் முதன்மைச் செயலாளர் தம்பி துரைமுருகன் அவர்களே, கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, சுப்புலட்சமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி ஆகிய கழக மாமணிகளே, வரவேற்புரையாற்றிய மதன்மோகன் அவர்களே, நன்றியுரை ஆற்ற இருக்கின்ற அன்புதுரை அவர்களே, மேடையிலே வீற்றிருக்கின்ற கழகத்தின் ஆதரவாளர்களே, முன்னோடிகளே, பெரும்திரளாக குழுமி யிருக்கின்ற என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே,

இன்று மாலை நேரம் நம்முடைய மகத்தான சொற்பொழிவாளர்களால் பெருமைபெற்றிருக்கிறது. இந்த விழாவிலே என்னை பாராட்டுவதற் காகவும் நான் இன்னும் சில காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்துவதற்காகவும், நீங்களெல்லாம் இங்கே குழுமியிருப்பதை பார்க்கும்போது, இந்த நாட்டில் இனியும் இவ்வளவு பிற்போக்குத் தன்மை ஏற்பட்டுள்ளதா, கொண்ட கொள்கைகளையெல்லாம் குழித் தோண்டிப் புதைத்துவிட்டு, இந்த நாட்டுத் தமிழர்கள், இவ்வளவுக்கும் பிறகும் இதை எல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு, இன்னும் நான் நீண்ட காலம் வாழ வேண்டுமா? என்ற கேள்விதான் என்னை துளைத்தெடுக்கிறது.

ஆனால் என்னுடைய கெழுதகை நண்பர்கள், தம்பிமார்கள், தங்கைமார்கள், இவர்களெல்லாம் விரும்புகின்ற அந்தக் காலம், நீண்ட காலம் நான் இன்னும் வாழ வேண்டும் என்று விரும்பினால், நீண்ட காலம் வாழ்வதற்கு நீங்கள் என்னென்ன செய்ய வேண்டும்? எத்தகைய பணிகளை ஏற்க வேண்டும். அண்ணா சொன்னதைப் போல எப்படி கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு இவைகளை போற்றவேண்டும் என்பனவற்றை தயவு செய்து எண்ணிப்பார்த்து அந்த கடமையும், கண்ணியமும், கட்டுப்பாடும் நம்முடைய கழகத்தை நடத்துவதற்கு உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு, நீங்கள் உறுதுணை யாக இருந்து, கழகத்தை வளர்க்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன். கழகம் ஏன் வளர வேண்டும்? இது ஒரு அரசியல் இயக்கமாக மாத்திரம் இருந்திருந்தால் எத்தனை இடங்களை பிடித்தோம்? எவ்வளவு பேர் எம்.எல்.ஏ. க்களாக ஆனோம்? எவ்வளவு பேருக்கு எம்.பி. பதவி கிடைத்தது?என்ற அந்த எண்ணிக்கையோடு நாம் அவைகளை விட்டுவிடலாம்.

ஆனால் நம்முடைய இயக்கம் தொடங்கப்பட்டது, அந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் எண்ணிக்கையை மாத்திரம் அடிப்படையாக வைத்து அல்ல. நாம் இந்த இயக்கத்தை தந்தை பெரியார் அவர்கள் வழியில், பேரறிஞர் அண்ணா அவர்கள் நெறியில் தொடங்கி ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகாலமாக திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரிலே விளங்கி, இன்றைக்கும், ஏன் எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது (பலத்த கை தட்டல்) என்கின்ற அளவிற்கு வலிமைப் பெற்றிருக்கிறது என்றால், இப்படி வலிமை பெற்ற ஒரு இயக்கத்தை நாம் விட்டுவிடுவோமோ? அல்லது விட்டுவிட்டு வேறொரு இயக்கத்தின் கொள்கைகளைப் பின்பற்றவோ போவதில்லை. அப்படி போனாலும் அதை மக்கள் ஏற்றுக்கொள்வதாக இல்லை. ஏனென்றால் நாம் கம்யூனிஸ்டுகளுடைய இயக்கத்தை, நாம் பொதுவுடமை யாளர்களுடைய இயக்கத்தை, நாம் அத்தகைய சமதர்மவாதிகளுடைய இயக்கத்தை நடத்துவதற்காகத்தான் இந்த இயக்கத்தை தொடங்கினோம்.

ஏழை - எளிய மக்கள், இங்கே பேசிய நம்முடைய கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் குறிப்பிட்டதைபோல, தி.மு.கழக ஆட்சியிலேதான் கை ரிக்ஷாக்களை ஒழித்து, அதற்கு பதிலாக சைக்கிள் ரிக்ஷாக்களை வழங்கினோம்.

தி.மு.கழக ஆட்சியிலேதான் கைம்பெண்கள் உருவாவதைத் தடுக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டோம்.

தி.மு.கழக ஆட்சியிலேதான் பிச்சைக்காரர்களுக்குக் கூட மறுவாழ்வு அளிக்கின்ற அந்தத் திட்டத்தை நிறைவேற்றித் தந்திருக்கிறோம்.

தி.மு. கழக ஆட்சியலேதான் குடிசைகளையெல்லாம் கோபுரங்களாக ஆக்கினோம்.

தி.மு.கழக ஆட்சியிலேதான் ஏழை எளியவர்களே இருக்கக் கூடாது . எல்லோரும் சமத்துவம் பெற்ற மக்களாக வாழ வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தோம்.

தி.மு.கழக ஆட்சியிலேதான் சாதி - மத பேதங்களை ஒழிக்க பாடுபட்டோம் - சட்டங்கள் இயற்றினோம். ஆகவே எந்த பொது நோக்கமானாலும், அவைகளை யெல்லாம் நிறைவேற்ற சாத்தியமாக்கக் கூடிய ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருந்தது. அதை வீழ்த்த வேண்டுமென்பதற்காக இன்றைக்கு ஏதேதோ சூழ்ச்சிகளைச் செய்கிறார்கள். அவர்களுடைய சூழ்ச்சிகள் எந்த அளவுக்குப் போயிருக்கின்ற என்றால், நான் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகிறேன். உங்களுக்குத் தெரியும். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, இந்தியாவின் பிரதமர் மோடி அவர்களே, காலை சுமார் பத்து மணிக்கெல்லாம், ஜெயலலிதா அம்மை யாருக்கு வாழ்த்துச் செய்தி கொடுக்கிறார் என்றால், இது எவ்வளவு சூது? எவ்வளவு பெரிய மோசடி? டெல்லியிலே உள்ள பிரதமர் மோடி அவர்களாலேயே நடத்தப்பட்டிருக்கிறது என்பதை நான் வெளிப்படையாக, பகிரங்கமாகக் குற்றஞ் சாட்டுகிறேன். இந்தக் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி அவர்களின் பதில் என்ன? இந்தக் குற்றச்சாட்டுக்கு டெல்லியிலே உள்ள மோடி கட்சிக்காரர் களுடைய விளக்கம் என்ன? எப்படி பத்து மணிக்கெல்லாம் முதல் இரண்டு சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, ஜெயலலிதா வின் வெற்றியைத் தெரிந்து கொண்டு வாழ்த்துத் தந்தி கொடுக்க முடிந்தது? அப்படியானால் வாக்குகளை நீங்கள் அதற்கு முன்பே எண்ணிப் பார்த்து விட்டீர்களா? இந்தக் கேள்விக்கு மாத்திரம் அவர்கள் பதில் சொன்னால் போதுமானது. பத்து மணிக்கெல்லாம் அம்மையார் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துத் தந்தி பறக்கிறது டெல்லியிலே இருந்து! அதன் உள் ரகசியம் என்ன?

நான் இவர்களிடம் மற்றொன்று கேட்க விரும்புவது - 570 கோடி ரூபாய் - மூன்று கன்டெய்னர்களில் பிடிபட்டது என்று சொல்கிறார்கள். அது யாருடையது என்றால், பதினெட்டு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றப்பட்டது என்று சொன்னார்கள். அவ்வளவு பெரிய தொகை, 570 கோடி ரூபாய் எதற்காக மாற்றப்பட்டது? என்ன பாதுகாப்பு போடப்பட்டது? கன்டெய்னர் சீலிடப்பட்டதா? என்ற இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளிக்கப்பட்டு விட்டதா? இந்தக் கேள்விகளை யெல்லாம் வாங்கி வைத்துக் கொண்டு, அதற்கெல்லாம் பதில் சொல்லாமல் இருக்கின்ற மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் அளிக்கப் போகின்ற தீர்ப்பு என்ன?

மக்கள் உடனடியாக தீர்ப்பு அளிக்காவிட்டாலும், ஒரு போராட்டம் மூலமாக இந்தியா முழுவதும் புயல் வீசக் கூடிய போராட்டமாக, ஒரு போராட்டத்தை நடத்தி, இதற்கு நாம் விளக்கம் கேட்க விருக்கிறோம். (கைதட்டல்) நிச்சயமாகக் கேட்போம். அதற்கு மத்தியிலே இருக்கின்ற அரசாங்கம், மோடி அரசாங்கம் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும். அப்படி பதில் சொல்லாவிட்டால், அவர்களே இந்தக் குற்றத்தை ஒப்புக் கொண்டவர்களாக ஆகி விடுவார்கள் என்று தான் பொருள்.

அடுத்து தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தல்கள்! இந்த இரண்டு தொகுதி களிலும் முதலில் ஏதோ காரணங்களைச் சொல்லி தேர்தல் சில நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் இப்போது திடீரென்று, அந்த இரண்டு தொகுதி களிலும் தேர்தலே ரத்து செய்யப்பட்டு விட்டதாகச் சொல்கிறார்கள். ஒத்தி வைக்கப்பட்டதற்கும், பிறகு ரத்து செய்யப்பட்டதற்கும் உள்ள வேறுபாடு என்ன? ஒத்தி வைக்கப்படுவதென்றால், குறிப்பிட்ட சில நாட்களில் மறுபடியும் அந்தத் தேர்தல் நடைபெறும், நடத்துவோம் என்று தான் பொருள். இப்போது ஒத்தி வைக்கப்பட்டு விட்டதை ரத்தே செய்து விட்டோம் என்று சொல்வதற்கு காரணம், அந்தத் தேர்தல்கள் நடந்தால் அ.தி.மு.க. மாநிலங்களவை தேர்தலில் நான்கு இடங்களில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து கொண்டுதான், ஒத்தி வைக்கப்பட்ட இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல்களை ரத்து செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கிறார்கள்.

ஆகவே அரசியல் நிபுணர்கள் கணித்துப் பார்த்து உண்மையை உலகத்துக்கு உணர்த்த வேண்டும். அப்படி உணர்த்துகின்ற கடமையை நாங்கள் செய்வதற்காகத் தான், நம்முடைய பேராசிரியர் அவர்கள் இங்கே குறிப்பிட்டதைப் போல, இதைக் கட்டளையாக யாரும் எடுத்துக் கொள்ளாமல், இதை ஒரு அறிவிப்பாக எடுத்துக் கொண்டு, நம்முடைய தோழர்கள், நம்முடைய கிளைக் கழகங்கள், வட்டக் கழகங்கள், நம்முடைய செயல்வீரர்கள் அத்தனை பேரும் ஒன்று கூடி யோசித்து, இந்த இரண்டு தொகுதிகளிலும் ஏன் தேர்தல்களை நடத்தவில்லை என்ற இந்தக் கேள்வியை ஓங்கி ஓங்கி ஒலிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றால், திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று விடும் என்ற அந்தப் பயத்திலே தான் தேர்தலை ஒத்தி வைத்திருக்கிறார்கள். அது மாத்திரமல்ல; அதன் பின்னர் அந்தத் தேர்தல்களை ரத்தே செய்திருக்கிறார்கள். தேர்தல்களை திடீரென்று ரத்து செய்ய இவர்கள் யார்? உண்மை உணராமல் செயல்பட இவர்களுக்கு யார் அந்த அதிகாரத்தைக் கொடுத்தது? கேட்டால் சில தவறுகள் நடைபெற்று விட்டன, சில பேர்வழிகளால் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது, அது எல்லாம் எங்களுக்குத் தெரிந்து விட்டது, எனவே தேர்தல் ஒத்தி வைத்திருக்கிறோம் என்று முதலில் சொன்னார்கள். அதற்குப் பிறகு திடீரென்று அவ்வாறு ஒத்தி வைத்த தேர்தல்களை ரத்து செய்ய இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? ஒத்தி வைக்கப்பட்ட தேர்தல்களை ரத்து செய்தவர்களுக்கு புத்தி புகட்டுகின்ற அளவுக்கு நாம் பாடம் கற்பிக்க வேண்டும். அந்தப் பாடம் தான், அந்தத் தேர்தல் களில் நாம் பெறுகின்ற வெற்றியாக இருக்க முடியும். அதற்கான திட்டங்களை அந்தப் பகுதிகளிலே உள்ள தோழர்கள், நம்முடைய செயல்வீரர்கள் இப்போதே யோசித்து, அதற்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இதற்குக் காரணமான தேர்தல் கமிஷனுக்கு நாம் புத்தி கற்பிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

தேர்தல் கமிஷன் என்றால் ஏதோ புனிதமானது, ஏதோ தர்ம நியாயங் களுக்குக் கட்டுப்பட்டது, அதை யாரும் அசைக்க முடியாது என்றெல்லாம் பேசுகின்றவர்களின் பேச்சுக்கு இப்போது மதிப்பில்லாமல் போய் விட்டது. தேர்தல் கமிஷன்களிலும் ஒரு சிலர் அயோக்கியர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு வேறு எடுத்துக்காட்டுத் தேவையில்லை. தேர்தல் கமிஷனிலே உள்ளவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு எப்படி குந்தகம் செய்யலாம் என்பதை ஒவ்வொரு நாளும் சிந்தித்து, சிந்தித்து அதை நிறைவேற்றியிருக்கிறார்கள். எனவே அவர்களை நம்பி திராவிட முன்னேற்றக் கழகத்திலே உள்ள நாம் ஏமாந்து விடக் கூடாது. நமக்கு நாமே (கைதட்டல்) என்ற அந்த உறுதியோடு நடைபெற இருக்கின்ற அந்தத் தேர்தல்களையும் சந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு, அதையும் ஒத்தி வைத்து விட்டால் ஜனநாயகம் என்ன ஆவது, எப்படி சீரழிய இருக்கிறது என்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஜனநாயகத்தில் நடைபெறும் சீர்கேடுகளை, ஜனநாயகத்திற்கு ஏற்படுகின்ற உடைசல்களை, ஜனநாயகத்திற்கு விளைகின்ற இத்தகைய குந்தகங்களை, ஜனநாயகத்தில் இப்படி மூடி மறைக்கின்ற இந்தச் செயல்களை தி.மு. கழகத்தை ஒழித்துக் கட்ட வேண்டுமென்ற திரைமறைவு சூழ்ச்சிகளைச் செய்கின்ற தேர்தல் ஆணையத்திற்கு தகுந்த பாடம் நாம் கற்பிக்க வேண்டும். இதைத் தவிர வேறு மார்க்கமில்லை. தேர்தல் ஆணையம் என்பது பெரியார் அவர்கள் அடிக்கடிப் பயன்படுத்துகின்ற தடித்த வார்த்தையிலே சொல்ல வேண்டுமேயானால், """"அயோக்கியதனமானது தேர்தல் ஆணையம்"" என்று திட்டவட்டமாகச் சொல்லலாம். அயோக்கியத்தனமான ஒரு தேர்தல் ஆணையத்தை வைத்துக் கொண்டு தேர்தலை நடத்துகிறார்கள். அந்தத் தேர்தலை எதிர்பாருங்கள் என்று சொல்கிறார்கள். அந்தத் தேர்தலுக்கும் தேதி குறிக்க மறுக்கிறார்கள். அந்தத் தேர்தலையும் வரவிடாமல் பார்த்துக் கொள்கிறார்கள். எப்படியும் அவர்களே வெற்றி பெற வேண்டும், அதற்கு என்ன வழி என்று பார்க்கிறார்கள். அப்படி கருதினால், அந்தக் கருத்துக்கு அவர்களுடைய எண்ணத்திலே மண்ணைப் போட்டு தமிழர்களாகிய நாம், நமக்கு தன் மானம் உண்டு, நமக்கு வீரம் உண்டு, நமக்கு வெற்றி பெறுகின்ற மார்க்கம் எப்படி என்று தெரியும், நம்முடைய தினவெடுத்த தோள்களுக்கு வேலை கொடுக்க, அந்தத் தேர்தல்கள் வரும்போது நம்முடைய கழகத் தோழர்கள், தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் உள்ள நம்முடைய தோழர்கள் எல்லாம் கட்டுப்பாட்டோடு, கடமை உணர்வோடுப் பணியாற்றி அங்கே வெற்றி பெற வழி வகுக்க வேண்டும், வெற்றி பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, அந்த வெற்றி தான், அந்த இடைத் தேர்தல்களில் பெறுகின்ற வெற்றி தான் திராவிட முன்னேற்றக் கழகம் தற்போது பெற்றுள்ள இடங்களை மேலும் மேலும் உறுதிப்படுத்துவதாக அமையும், அமையும் என்று உங்களுக்கெல்லாம் கூறி, அந்தப் பணியைத் தேர்ந்தெடுங்கள் என்று கேட்டுக் கொண்டு, இந்த அளவில் என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.